தென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு!!(கட்டுரை)

Read Time:11 Minute, 23 Second

ஜூலை 8 முதல் 11 வரை தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், இருதரப்பு, பிராந்திய, உலக விவகாரங்களைப் பற்றி விவாதிப்பார் என எண்ணப்படுகின்றது.

மேலும், இச்சந்திப்பானது, பிரதமர் மோடி 2015 மே மாதம் தென்கொரியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தில், இந்தியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடம்பெறும் எனவும் நம்பப்படுகின்றது.

இரு நாடுகளுக்கு இடையிலும் தொடர்ச்சியாக அமைந்துள்ள மூலோபாய உறவானது மேலும் வலுவடையும் இந்நிலையில், தென்கொரிய ஜனாதிபதியின் இவ்விஜயம், குறித்த மூலோபாய வட்டாரத்தில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

இந்திய – தென்கொரிய உறவுகள், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள போதிலும், கொரியத் தீபகற்பத்தில் உள்ள பூகோள அரசியல் மாற்றங்கள் மற்றும் இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்ட சர்வதேச அரசியல் நிலைமைகளின் பின்னணியிலேயே குறித்த விஜயம் அமைய இருப்பது, பேச்சுவார்த்தைகள் மூலோபாய அம்சத்தின் அடிப்படையில் இந்தியா, தென்கொரியா ஆகிய இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில், இரு சக்திகளாலும் வடிவமைக்கப்பட்ட சர்வதேச ஒழுங்கொன்றின் ஒரு பகுதியாக இரு நாடுகளும் இருப்பதற்குப் பதிலாக, இரு நாடுகளும் பேணக்கூடிய ஒழுங்கு முறையொன்றைக் கையாள்வதன் மூலம் ஐ.அமெரிக்கா, பிராந்தியப் போட்டியாளர்கள் – முக்கியமாக சீனாவின் தொடர்ச்சியான எல்லைமீறலை கட்டுப்படுத்தும் வழிவகையை பின்பற்றுதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இது, இந்திய-பசிபிக், கொரியப் பிராந்தியத்தில் இரு – துணை வல்லரசாண்மையைக் கட்டியெழுப்புதல், அதன் மூலம், இந்திய – தென்கொரிய பாதுகாப்பு நிலைமைகளை பிராந்தியத்தில், குறிப்பாக சீனாவுக்கு எதிராகக் கட்டியெழுப்புதல் என்பவற்றின் அடிப்படையிலேயே தீமானிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இப்பத்தி, எவ்வாறாக இந்திய – பசிபிக் மற்றும் கொரியப் பிராந்தியத்தில் இந்திய – தென்கொரிய பேச்சுவார்த்தை செல்வாக்குச் செலுத்தப்போகின்றது என்பது பற்றி ஆராய்கின்றது.

கொரியத் தீபகற்பத்தைப் பொறுத்தவரை, அது சமீப காலங்களில் மிகவும் நிலையற்ற அரசியல், சர்வதேச அரசியல் காரணிகளால் ஆதிக்கம் பெற்றுள்ளது. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான கடுமையான போட்டி, பிராந்தியத்தை மோதலின் விளிம்பில் நடத்தியிருந்தது.

அமெரிக்க – வடகொரியா இப்போட்டி, இப்பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டின் துணை நிலையொன்றாகவும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தென்கொரியா, சீனாவுடன் இணைந்து, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருந்ததுடன், அந்நடவடிக்கைகள், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே சந்திப்பொன்றை ஏற்படுத்தக் காரணமானதுடன், கொரியத் தீபகற்பத்தில் ஓரளவுக்கு சமாதான நிலைகளைத் தோற்றுவித்திருந்தன.

ஆயினும், மறுபக்கத்தில் இது தென்கொரியாவைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியில் போட்டி நிலையையே தோற்றுவித்திருந்தது. சீனா, வடகொரியாவுடன் வர்த்தக உடன்படிக்கையில் ஈடுபடுதல்; அமெரிக்கா, தென்கொரியப் பாதுகாப்புக்கான செலவைக் குறைத்தல் என்பன, தென்கொரியப் பாதுகாப்பிலும் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகும்.

இந்நிலையிலேயே, கடந்த ஏப்ரல் மாதத்தில் வடகொரியாவுடன் இந்தியா இருதரப்பு உறவு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் வி.கே. சிங், இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக வடகொரியாவுக்குச் சென்றிருந்தார். நெருக்கடியின் போது, வடகொரியாவுடன் இந்தியாவின் ஈடுபாடு கவனமாக வடிவமைக்கப் -பட்டிருந்தமைதான், இந்தியா தனது வடகொரியாவுடனான உறவைப் புதுப்பிக்க உதவியாய் இருந்திருந்தது.

எவ்வாறாயினும் இது, இந்திய வெளிவிவாகாரக் கொள்கையின் ஒரு பகுதியாக, கொரியத் தீபகற்பத்துக்கு இந்தியா, அதன் சொந்த மூலோபாய நலன்களைக் கூடுதலாக அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடாகும்.

இந்நிலைப்பாட்டிலிருந்து தனது சொந்த நலன்களைப் பெறுதலே, தென்கொரியாவுக்கு இப்போதுள்ள நிலையில் சாத்தியமான விடயமாக இருப்பதே, குறித்த விஜயம் மூலம் தென்கொரிய ஜனாதிபதி, மேலதிக வர்த்தக உடன்படிக்கையை, இந்தியாவுடன் மேற்கொள்வதற்கான முனைப்பாக அமைகின்றது.

இந்திய பசுபிக் பிராந்தியத்தைப் பொறுத்தவரை, புவியியல், மூலோபாயத் தளமாக குறித்த பிராந்தியத்தைப் பேணுதல் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்பது ஒரு புறமிருக்க, அதன் பிரகாரம் பிராந்தியத்தில் சீனாவின் பொருளாதார மற்றும் மூலோபாய விரிவாக்கத்தை கட்டுப்படுத்தல், அமெரிக்கா மற்றும் இந்திய ஆகிய இரு நாடுகளுக்கும் பல்வேறு தேவைகளுக்காக காரணமாகும். இந்நிலையில் சீனாவை எதிர்க்கக்கூடிய பிரதான நாடாக, இந்தியாவின் பங்கு குறித்த பிராந்தியத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றது.

இது, அடிப்படையில் இந்தியா-சீனா உறவுகள் எப்போதுமே சுமுகமானவையாக அமையவில்லை என்பதன் அடிப்படையிலும், குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தொடர்பான மோதல்கள், இந்தியாவின் அணுவாயுதப் பயன்பாடு தொடர்பில் சீனாவின் எதிர்ப்பலைகள் என்பவற்றின் மத்தியில், குறித்த பிராந்தியத்தில் இரண்டாவது வல்லரசாக தன்னை மாற்றிக்கொள்ளவே இந்தியா விரும்புகின்றது. இதன் அடிப்படையிலேயே இவ்வாண்டு ஜூன் மாதம், இந்தியப் பிரதமர் மோடி, சிங்கப்பூரில் மேற்கொண்ட உரை அமைந்திருத்தமை அவதானிக்கத்தக்கது.

அதில் அவர், இந்தியா, பிராந்திய ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் அதேவேளை, சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய பசிபிக்கின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர், எந்த நாடும், பிற நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டைச் சிதைக்க இந்தியா அனுமதிக்காது எனவும், பிராந்தியத்தின் பாதுகாப்பு பொருளாதார வளர்ச்சி தொடர்பில், இந்தியா கரிசனையுடன் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இந்தியா அண்மையில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து, பொருளாதார ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டிருந்தது. அதன் பிரகாரம், குறித்த பிராந்தியத்தில் ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து தென்கொரியா, இந்தோனேஷியா, வியட்நாம் ஆகியவற்றின் வளர்ச்சி, பிராந்தியத்தில் குறித்த நாடுகளை ஒரு நடுத்தர வல்லரசாக்குதல் தொடர்பில் கவனம் செலுத்துதலை, குறித்த ஒப்பந்தம் முன்மொழிந்திருந்தது. இது சீனாவின் தனி வல்லரசாக இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் இருப்பதைத் தகர்க்கும் மூலோபாய அரசியல் முயற்சியாகும்.

இந்நிலையிலேயே தென்கொரியா, சீனாவுடன் நெருக்கத்தைப் பேணுதலைக் காட்டிலும், குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்குறித்த நாடுகளுடன் இணக்கமாக பொருளாதாரத்தை வளர்த்தல், தென்கொரியாவுக்கு வேண்டியதாகும்.

இவ்வாறாக பலதரப்பட்ட பூகோளவியல் அரசியலின் பின்னணியிலேயே தென்கொரிய ஜனாதிபதியின் குறித்த விஜயம் பார்க்கப்படவேண்டியதாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் !!(உலக செய்தி)
Next post சுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் !!(சினிமா செய்தி)