By 22 July 2018 0 Comments

பா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம்!!(கட்டுரை)

பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை, பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷா, பாட்னாவுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்திய அரசியல் வானில் உதிக்கப் போகும் புதிய கூட்டணிகள் எது என்பது, இன்னும் தெளிவாகாத நிலையில், இருக்கின்ற கூட்டணிக் கட்சிகளை இழந்து விடக்கூடாது என்ற, தாமதமான முயற்சியின் ஒரு பகுதியாக, இப்போது அமித்ஷா- நிதிஷ் குமார் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, நாட்டில் உள்ள பல கட்சிகள் எதிர்த்த போது ஆதரித்தவர் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார். அதுவே பிறகு பா.ஜ.கவின் நட்புக்கு ஆதாரமாக அமைந்தது.

பீஹாரில் மெகா கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் எதிர்ப்புக்கு உள்ளானார். லாலுவின் கூட்டணியிலிருந்து விலகிய பிறகு நிதிஷ் குமாருக்கு, பீஹாரில் பா.ஜ.க கூட்டணி, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள கை கொடுத்தது.

லாலுவை விட்டுப் பிரிந்த பிறகு, நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில், நிதிஷ் குமார்- பா.ஜ.க கூட்டணி, பீஹாரில் தோல்வியடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில், பீஹார் தேர்தல் வியூகத்துக்குத் தேவைப்படும் மிக முக்கியமான மாநிலம் ஆகும். 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளைக் கடந்த 2014 நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது என்றால், அந்த தொகுதிகள் பீஹார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் இருந்துதான் கிடைத்தன.

பீஹாரைப் பொறுத்தமட்டில் முதலமைச்சர் நிதிஷ் குமார், லாலு கூட்டணியை விட்டு வெளியேறிய நிலையில், அடுத்தடுத்து ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை பெற்றது, சிறையில் அடைக்கப்பட்டது எல்லாம் அம்மாநில மக்கள் மத்தியில் லாலு பிரசாத் யாதவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதேபோல், நிதிஷ் குமார் ‘மெகா கூட்டணிக்கு’ துரோகம் இழைத்து விட்டார் போன்ற பிரசாரம், பீஹார் மக்களிடையே எடுபட்டுள்ளது. இதன் காரணமாகவே அடுத்தடுத்து நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பா.ஜ.கவுக்கும் சரி, நிதிஷ் குமாரின் ஜனதாத் தளத்துக்கும் சரி, தேர்தல் வெற்றிகள் கிடைக்கவில்லை.

பா.ஜ.கவுடன் சேரும் கட்சிக்கு, தேர்தல் வெற்றி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பது, மற்ற மாநிலங்களில் பா.ஜ.கவை நோக்கி வரும் கூட்டணிக் கட்சிகளை மறு பரிசீலனை செய்ய வைத்தது.

2019 தேர்தல் கூட்டணிக்கு, பீஹார் ஒரு தலைவலியாக மாறிவிடக்கூடாது என்ற அச்சம், பா.ஜ.க தலைமைக்கு ஏற்பட்டது. ஆகவே, இந்தச் சூழல் ஆரோக்கியமானது அல்ல என்பதை, பா.ஜ.க தலைமை நன்கு புரிந்து கொண்டதன் விளைவே, தலைவலியை நீக்கப் பயன்படுத்தும் மருந்து போல, இந்த அமித்ஷா – நிதிஷ் குமார் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இவை ஒரு புறமிருக்க, இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க முதலமைச்சரும் சரி, மத்திய பிரதேசத்தில் உள்ள பா.ஜ.க முதலமைச்சரும் சரி, அகில இந்தியத் தலைமைக்கு, குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு நெருக்கமான தலைவர்கள் இல்லை. இருவருமே பா.ஜ.க வட்டாரத்தில், ‘போட்டித் தலைவர்கள்’ எனக் கருதப்படுபவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

அந்த அளவுக்கு, மாநில பா.ஜ.க முதலமைச்சர்களுக்கும் அகில இந்தியத் தலைமைக்கும் பனிப்போர் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இப்போது, மாநில அளவில் உள்ள பா.ஜ.க முதலமைச்சர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தம் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான், இராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சவுகான் ஆகியோரின் பனிப்போர் பற்றிக் கவலைப்படாமல், அந்த மாநிலங்களுக்குச் சென்று, புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்து, எதிர்காலத் தேர்தல் வெற்றியை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று வியூகம் அமைத்து, அம்மாநில முதலமைச்சர்களுடன் மேடையில் தோன்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும் விதத்தில், பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, இப்போதுதான் முதன் முறையாக, நெல் கொள்முதல் விலையைக் குவிண்டாலுக்கு 200 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறார்.

பா.ஜ.க, ஒரு பக்கம் மாநில முதலமைச்சர்களை அரவணைத்துக் கொண்டும் இன்னொரு பக்கம் மற்றக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அரவணைத்துச் செல்லவும் நினைக்கிறது. ஆகவே, பீஹாரில் நிதிஷ் குமார் திடீரென்று பா.ஜ.க எதிர்ப்புக் கருத்துகளை ஒலிக்கத் தொடங்கியதை, முளையிலேயே கிள்ளி எறிய, இந்தச் சந்திப்பு உதவியிருக்கிறது.

நிதிஷ்குமாரை அவசரமாகச் சரி செய்ய வேண்டிய இன்னொரு நிர்பந்தமும் பா.ஜ.க தலைமைக்கு ஏற்பட்டது. திடீரென்று நிதிஷ்குமார் பா.ஜ.க மீது கூறிய விமர்சனங்கள், பா.ஜ.க தலைமைக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. ஏனென்றால், அதிக எம்.பி தொகுதிகளைப் பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கும் வட மாநிலங்களில், பீஹார் மாநிலம் முக்கியமானதாகும்.

அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் ‘லாலுவின் மெகா கூட்டணிக்கே’ திரும்பி விட்டால், பீஹார் மாநிலத்தில் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை உணர்ந்த பா.ஜ.க தலைமை, காய்களை நகர்த்தியிருக்கிறது.

சந்திப்பு முடிந்த பிறகு, “ஜனதா தளமும் (நிதிஷ் குமார் கட்சி) நாங்களும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம்” என்று பா.ஜ.கவின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா பேட்டியளித்துள்ளார். இதனால் பா.ஜ.கவுக்கும் நிதிஷ்குமாருக்கும் நிம்மதி.

ஏனென்றால், அமித்ஷா- நிதிஷ் குமார் சந்திப்பில், தொகுதிப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று விட்டன என்ற சமிக்ஞைகள்தான் தெரிகின்றன. நிதிஷ்குமாரும், பா.ஜ.கவுடன் முதலில் தொகுதிப் பங்கீட்டை முடித்து விட வேண்டும் என்பதும் அதன்பிறகு, பா.ஜ.கவுடன் நட்புறவைத் தொடரலாம் என்றே கருதியதாகத் தெரிகிறது.

இந்த முயற்சிக்கான முன்னோட்டம், கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது என்று கூடச் சொல்லலாம். அங்கு அமைந்த பா.ஜ.க தலைமையிலான எடியூரப்பாவின் அரசாங்கத்தின் மீது, நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடியாது என்று தெரிந்ததும், இராஜினாமாச் செய்து, ஜனதா தளத்தின் சார்பில், குமாரசாமி கர்நாடக மாநில முதலமைச்சரானார்.

அமைச்சரவை நியமனத்தில் யார் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பதில், காங்கிரஸ் கட்சி மிகுந்த தாமதம் செய்தது. அப்போது காங்கிரஸின் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்தத் தாமதம் காங்கிரஸுக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும் இைடயிலான, 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி, பங்கீடு நடைபெற்றதால் ஏற்பட்டது என்ற செய்திகளை, காங்கிரஸ் கட்சி மறுக்கவில்லை; மதசார்பற்ற ஜனதா தளமும் மறுக்கவில்லை.

ஆகவே, கர்நாடகாவில் காங்கிரஸும், மதச் சார்பற்ற ஜனதாத் தளமும் செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தை பா.ஜ.கவும் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளமும் பீஹாரில் செய்து கொண்டு விட்டன என்பதே இந்தச் சந்திப்பின் ஓற்றைப் பயனாகும்.

இந்த வரிசையில் தமிழ்நாட்டுக்கு வந்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா, “ஊழலை ஒழிக்க முன்வரும் கட்சிகளுடன் கூட்டணி” என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதுவும் மாநில சட்டமன்றத்தில்
அ.தி.மு.க அரசாங்கத்தின் சார்பில், ஊழலை ஒழிக்க ‘லோக் அயுக்தா’ சட்டத்தை நிறைவேற்றிய தினத்தில், அமித்ஷா சென்னையில் அவ்வாறு பேசினார்.

‘தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது’ என்ற ரீதியிலும் பேசினார். அந்தக் கருத்துக்கு, அ.தி.மு.க அமைச்சர்களிடமிருந்து மாற்றுக் கருத்துகள் வெளிவந்த நிலையில்,“அ.தி.மு.கவை ஊழல் அரசாங்கம் என்று அமித்ஷா கூறவில்லை. அது, வாக்குக்கு பணம் கொடுக்கும் தமிழகத்தில் உள்ள கலாசாரத்தைச் சுட்டிக்காட்டி ஊழல் என்று பேசினார்” என்று, மாநிலத்தில் உள்ள பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான இல கணேசன் பேட்டியளித்தார்.

அமித்ஷாவின் பேச்சுக்கு, இல கணேசன் அளித்த பேட்டி, தமிழகத்தில்
அ.தி.மு.கவுடன் அணி சேரும் முயற்சியையும் பா.ஜ.க கைவிடவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது. ரஜினியை வைத்து, தனி அணியா, ரஜினி அ.தி.மு.க எல்லாவற்றையும் சேர்த்து ஓர் அணியா, தி.மு.க ஏற்றுக் கொண்டால் அக்கட்சியுடன் கூட்டணியா என்ற மும்முனைப் பந்தயத்தில் பா.ஜ.க தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அமித்ஷாவின் பேச்சு எதிரொலிக்கிறது.

எது எப்படியிருந்தாலும், தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.கவின் வியூகத்தில் பதற்றம் மிகுந்த பயணம் தெரிகிறது.

எந்தக் கட்சியையும் இழந்து விடக்கூடாது என்று பா.ஜ.க நினைப்பதும் புரிகிறது.Post a Comment

Protected by WP Anti Spam