Your time starts now…!!(மருத்துவம்)

Read Time:11 Minute, 51 Second

நூறு பேர் மலையேறத் தொடங்கினாலும் உச்சியைத் தொடுகிறவன் ஒருவனே’ என்பது திபெத்தின் பிரபலமான ஒரு பொன்மொழி. திண்ணியராக இருந்தால் எண்ணியது எய்தலாம் என்கிறார் வள்ளுவர்.

ஆமாம்… மன உறுதியே வெற்றிக்கான சூத்திரம்!

நீங்கள் சாதிக்க விரும்பியதை அடையும் வரை அதைப்பற்றிய எண்ணங்கள் மட்டுமே, எப்போதும் நீறுபூத்த நெருப்பு போல உங்கள் மனதில் கனன்றுகொண்டே இருக்கும். சில நாட்களோ, அல்லது சில வாரங்கள் வரையிலுமோ கூட அதே உத்வேகத்துடன் இருப்பீர்கள். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல உங்களுடைய ஆரம்ப நிலை உந்துதல் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும். செய்ய நினைத்த வேலையை கொஞ்சம், கொஞ்சமாக தள்ளிப்போட ஆரம்பிப்பீர்கள். பின்னர், அந்த வேலை செய்வதையே கடினமாக பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள். ‘உங்கள் குறிக்கோளின் மீது உறுதியாக இருந்தால் இந்த போராட்டம் இருக்காது’ என்கிறார்கள் உளவியலாளர்கள்.

ஒரு விளையாட்டு வீரனைப் பாருங்கள்… ஒரு வெற்றியிலேயே தங்கிவிடுவதில்லை. ஓர் அரசியல்வாதியை எடுத்துக்கொண்டால், தான் தோல்வியடைவோம் என்று தெரிந்தாலும், ‘இந்த முறை எல்லா இடத்திலும் நாங்கள் ஜெயிப்பது உறுதி’ என்று பேட்டி தருவார். ஒரு வெற்றியோடும் அவர் திருப்தியடைவதில்லை. அடுத்தடுத்த வெற்றிகளை குவிப்பதிலேயே இவர்களின் கவனம் இருக்கும். நாம் ஒவ்வொருவரும் இவர்களிடமிருக்கும் மன உறுதியை நாமும் கற்றுக் கொள்ள வேண்டும்.

மன உறுதி என்றால் என்ன?

நீண்டகால இலக்குகளை அடைய விடா முயற்சி மற்றும் ஆர்வம் வேண்டும். ஒன்றன் மீதுள்ள பேரார்வம், ஆற்றலையும், உற்சாகத்தையும் கொடுக்கக்கூடியது. ஆனால் விடாமுயற்சியோ, ஏற்றத்தாழ்வுகளை சமமாக கடந்துச்செல்லக்கூடிய பக்குவத்தைக் கொடுக்கிறது.

பென்சில்வேனியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியையான ஏஞ்சலா டக்ஸ்வொர்த் வளர் இளம் பருவத்தினர், மாணவர்கள், ராணுவ படைவீரர்கள் மற்றும் ஒத்தவயதுள்ள தனிப்பட்ட மனிதர்கள் என பலதரப்பு மனிதர்களிடம், பல்வேறு கோணங்களில் மன உறுதி பற்றிய மிகப்பெரிய ஆய்வினை செய்துள்ளார். ஆய்வின் முடிவில் Grit என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். விடாமுயற்சியும், பேரார்வமும் ஒரு மனிதனின் மனஉறுதியை எப்படி வளர்க்கிறது மற்றும் மன உறுதியின் பேராற்றலையும் விவரிக்கிறது இந்த புத்தகம்.

செயல்திறனோடு கூடிய முயற்சி சேருமிடத்தில், திறமை வளர்கிறது. இப்போது அந்தத் திறமையோடு முயற்சியும் சேரும்போது வெற்றி தானாக வந்தடைகிறது. அதாவது திறமை ஒரு பங்கு என்றால், முயற்சி இரண்டு பங்காக கணக்கிடுகிறார். முயற்சியற்ற செயல் திறமை பெற தகுதியற்றதாகும் அதேவேளையில், முயற்சியற்ற திறமை சாதனையை அடைவது சாத்தியமாகாது” என்கிறார்.

‘போட்டித் தேர்வுகளில் மாணவர்களுடைய ஐ.க்யூவைப் பொறுத்து செயல்திறன் வெளிப்படுவதில்லை. மாறாக, அவர்களுடைய மன உறுதி மற்றும் தொடர் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகிறது. அதேபோல் தங்களுடைய சக வீரர்களைவிட, மன உறுதியோடு பயிற்சியில் பங்குபெறும் வீரர்களால் மட்டுமே ராணுவ பயிற்சியை வெற்றிகரமாக முடிக்க முடிகிறது.

மேலும், மன உறுதி உள்ள மனிதர்களால் மட்டுமே பணியிடம், தொழில், மணவாழ்க்கை என எல்லாவற்றிலும் வெற்றிபெற முடிகிறது. மன உறுதியே மனிதனுக்கான ஆணிவேர்’ என்பதை ஆய்வின்மூலம் உறுதிபடுத்தும் டக்ஸ்வொர்த் மன உறுதியை வளர்த்து க்கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் பட்டியலிடுகிறார்.

ஆர்வத்தை தேடுசிறு வயதில் எந்த விஷயத்தில் அதிக நேரத்தை செலவழித்தேன்? எது என்னை தூக்கம் பசி மறந்து ஈடுபட வைத்தது? கணக்குப்பார்க்காமல் எதற்காக பணத்தை செலவழித்தேன்? என கேள்விகள் கேட்பதன் மூலம், முதலில் உங்களுக்குள் இருக்கும் ஒன்றன் மீதான ஆர்வத்தை தேடிக் கண்டுபிடியுங்கள். அல்லது உங்கள் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதுவும் முடியாவிட்டால், உங்களுக்கு நீங்களே ஆளுமைச் சோதனைகளை வைத்துக்கொண்டு விடை காணலாம்.

தொடர் பயிற்சி

ஆர்வத்தை கண்டுபிடித்துவிட்டால், எதில் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்களோ, அதற்கான இடைவிடாது ஆழ்ந்த பயிற்சியை தொடந்து செய்யுங்கள். தொடர் பயிற்சியில் ஈடுபடும்போது, தானாகவே பயனற்ற வேலைகளில் ஈடுபடுவதை நிறுத்தி விடுவீர்கள். தேவையில்லாத பொழுதுபோக்கு, வெட்டிப் பேச்சுகள் என அனைத்தையும் விட்டு விலகி ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக மாற்றிவிடுவீர்கள். நம்முடைய பலவீனம், பலம் என கண்டறிந்து, ஒவ்வொரு நிமிடத்தையும் ஆர்வமுள்ள துறையில் கவனத்தோடு பயிற்சியையும் மேற்கொள்ளும்போது, போகப்போக அதில் கைதேர்ந்த வல்லுனராகிவிடுவீர்கள்.

உயர்ந்த எண்ணம்

டக்ஸ்வொர்த், ‘16 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், மன உறுதி மிக்கவர்கள், மற்றவர்களை விட அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. தன்னுடைய ஆர்வத்தை கண்டறிந்து அதை தனக்கானதாக மட்டும் பயன்படுத்துவதோடு இவர்களின் தேடல் நின்றுவிடுவதில்லை. தன்னுடைய திறமையை தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு எவ்விதம் பயன்படுத்த முடியும் என்பதிலும், தன்னுடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக அமைத்துக்கொள்வதிலும் உயர்ந்த எண்ணம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

நம்பிக்கை

மன உறுதி மிக்கவர்கள் நம்பிக்கை மிகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள், ஓரிடத்தில் வெறுமனே அமர்ந்து கொண்டு நல்லவை தன்னைத்தேடி வரும் என்று எதிர்பார்த்து காத்திருப்பதில்லை. வெறுமனே அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. அதற்குப்பதிலாக, தன் சொந்த முயற்சிகளை தீவிரமாக செயல்படுத்துவதன் மூலம், தன் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள்.

“நாளை சிறப்பாக இருக்கும்” என்று நம்புவது குருட்டு நம்பிக்கை. “நாளைய பொழுதை சிறப்பாக்குவேன்” என்று நம்புவது தன் திறமைமீது வைக்கும் நம்பிக்கை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. நம்பிக்கை இல்லையென்றால், சவால்களைத் தவிர்க்கவும், கையறு நிலையில் குறிக்கோளை அடைவதற்கு முன்பே பாதியில் கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். புத்திக்கூர்மை, செயல்திறன் போன்ற அடிப்படை குணங்கள் மற்றும் அர்ப்பணிப்பு, கடின உழைப்பின் மூலம் திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை பெற முடியும்.

‘எனக்குத் தெரியாது, என்னால் அது முடியாது’ என்று சொல்வதற்குப் பதில், ‘நான் அதை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன், அதை செய்து பார்க்கிறேன்’ என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் தன்னம்பிக்கை தானே வளரும்.

தனிக்குழு

சுற்றியுள்ளவர்களுடைய உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் ஒருவரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. உதாரணமாக, எதிரி்ல் இருப்பவருடைய உணர்ச்சிகள் தன்னிச்சையாக நம்மை ஆட்கொள்பவை. நம்மை அறியாமலேயே அவர்களுடைய கருத்துக்கள், தோரணைகள், குரல் ஒலிகள், அசைவுகள் மற்றும் இயக்கங்களோடு ஒத்திசைந்து கொடுக்க ஆரம்பிப்போம். வெகுவிரைவிலேயே அவர்கள் நினைப்பதையே நாமும் நினைக்க ஆரம்பிப்போம். உளவியலாளர்கள் இதை ‘உணர்ச்சித்தொற்று’ (Emotional contagion) என்கிறார்கள்.

எனவே, வெற்றி நோக்கிய பயணத்தில், கூடியவரை நம்மை ஒத்த கருத்துக்கள், குறிக்கோள்கள், செயல்திட்டம் கொண்ட நபர்களே நம்மைச்சுற்றி இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் கூட ஒருவரின் நம்பிக்கைகள், நடத்தைகள் மற்றும் உணர்ச்சிகள் வைரஸ் போல நம்மை தொற்றிக் கொள்பவை.

நோயிலிருந்து நம்மை பாதுகாக்க எப்படி தடுப்பூசி போட்டுக் கொள்கிறோமோ அதுபோல் எதிர்மறை எண்ணங்கள், சோம்பேறித்தனம், மற்றும் நம்பிக்கையற்றவர்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதும் அவசியம்.சுறுசுறுப்பானவர்கள், நம்பிக்கையானவர்கள், நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் நம்மைச்சுற்றி இருந்தால் அவர்களின் நேர்மறை அலைகள் நம்முள்ளும் ஆற்றலை அதிகரிக்கச் செய்பவை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உன்ன ஒரு டீ போட சொன்னது குத்தமாடா..?(வீடியோ)
Next post நிம்மதியா டிவி பார்க்க முடியுதா செம்ம காமெடி சிரிக்காம பாருங்க !!( வீடியோ)