அட்டென்ஷன் ப்ளீஸ்!!(மருத்துவம்)

Read Time:16 Minute, 7 Second

எபோலா, சார்ஸ், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என சமீபகாலமாக புதிய புதிய பெயரில் நோய்கள் திடீரென தோன்றி திகில் கிளப்பி வருவதை நாம் அறிவோம். இந்த நோய்கள் உருவாவதெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இவற்றின் பின்னணியில் பயோ வார் என்கிற உயிரிப்போர்முறை இருக்கலாம் என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களுக்கு எழாமல் இல்லை.

இப்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் காய்ச்சலும் அந்த சந்தேகத்தினை உருவாக்கி உள்ளது. பழம்தின்னி வவ்வால்களால் பரவும் காய்ச்சல் என்று சொல்லப்பட்ட நிபா வைரஸ், பின்னர் ஆராய்ச்சியின் மூலம் ‘வவ்வால்கள் காரணம் அல்ல’ என்று மறுக்கப்பட்டது பயோ வார் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியைத் தேடிப் போனால் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் பகீர் ரகம்.

உயிரிப் போர் என்பது…

போர் என்பது ஆயுதங்களை மட்டுமே கொண்டு நிகழ்த்தப்படும் அழிவுச்செயலல்ல. கத்தியின்றி, ரத்தமின்றியும் நடத்த முடியும் என்பதற்கான நவீன உதாரணம்தான் பயோ வார்(Biowar). தொற்றுநோய்க்கிருமிகளான பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளைப் பயன்படுத்தி மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களை அழிப்பதுதான் பயோ வார் என்கிற உயிரிப் போரின் நோக்கம்.

நோயை உண்டாக்கும் நுண்கிருமிகள் ஓர் உயிரினத்துக்குள் சென்றவுடன் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்து பரவ ஆரம்பிக்கும். பிறகு, அந்த உயிரினத்திடமிருந்து மற்ற உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் வேகமாகப் பரவி அழித்துவிடும். கதிரியக்கப் போர், அணு ஆயுத போர் மற்றும் வேதியியல் போர் வகைகளோடு சேர்த்து நால்வகைப் பேரழிவு ஆயுதங்களுள் ஒன்றாக உயிரிப்போர் கருதப்படுகிறது.

தோன்றிய வரலாறு…

உயிரிப்போரானது, கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே அஸ்ஸீரியர்கள் தங்கள் எதிரிகளை அழிக்க, பூஞ்சைகள் மூலம் நஞ்சு வைத்ததாக தெரிகிறது. பிரிட்டிஷ்காரர்கள் பெரியம்மை நோயை உயிரி ஆயுதமாக 1763 மற்றும் 1789 களில் அமெரிக்கா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் போன்ற இடங்களில் உபயோகித்ததற்கான அடையாளம் வரலாற்றில் உள்ளது. 1900-களில் கிருமிக்கோட்பாடு மற்றும் பாக்டீரியா பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் உயிரி
ஆயுதங்களை போரில் கையாளும் முறையில் வேறு கட்டத்துக்கு எடுத்து சென்றது.

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில்தான் உயிரி ஆயுத திட்டம் உச்சத்தை அடைந்தது. ஐக்கிய அரசின் ‘போர்டன் டௌன்’ என்ற இடத்தில், பால் பில்டேஸ் என்ற நுண்ணுயிர் வல்லுநர் தலைமையில் ஒரு உயிரி ஆயுத திட்டத்தை தொடங்கியது. இதுவே பின்னாளில் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் Tularemia, Anthrax மற்றும் Brucellosis போன்ற கிருமிகளை ஆயுதமாக உபயோகப்படுத்த அடித்தளமிட்டது. இதே சமயத்தில் ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகள் தனித்தனியாக தங்களுக்கென உயிரி ஆயுதத் திட்டத்தை தொடங்கின.

அமெரிக்கா போரில் நுழைந்ததும், மேரிலாந்தில் ஜார்ஜ் மெர்க் என்பவரின் தலைமையில் ஒரு பெரிய ஆராய்ச்சி கழகத்தைத் தொடங்கியது. விரைவிலேயே Anthrax, Brucellosis மற்றும் Botulism போன்ற உயிரி ஆயுதங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு, ஆங்காங்கே ஆராய்ச்சிக் கழகங்களும் சோதனை மையங்களும் முளைத்தன.

இதேவேளையில், உயிரி ஆயுத ஆராய்ச்சியில் ஜப்பானின் ராணுவப் பிரிவு மனிதர் மீது ஆராய்ச்சி செய்து போரில் பயன்படுத்தக்கூடிய உயிரி ஆயுதங்களை தயாரிக்க ஆரம்பித்தது. ஜப்பானின் கண்டுபிடிப்பு, தரத்திலும், பயன்பாட்டிலும் அமெரிக்கா, பிரிட்டனைவிடச் சிறந்ததாக இருந்தது. சீனப்படையின் மீதும் பொதுமக்கள் மீதும் உயிரிப் போரை நடத்திய ஜப்பான் 1940-ல் நிங்போவின் மீது கொடூர பிளேக் நோயைக் கொண்ட உண்ணிகள் நிறைந்த செராமிக் குண்டுகளை வீசியது. இதில் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

உயிரிப்போர் சட்டவிரோதம்

இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து, இதுபோன்ற பல பேரிழப்புகளை சந்தித்த உலக நாடுகள் அதன் பின்னர், உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்துவதை உலகளவில் தடை செய்தன. மீறி பயன்படுத்துவது போர்க் குற்றமாகவும் அறிவித்தன. முதன்முதல் 1972 ல் நடந்த உலகநாடுகளின் உயிரி ஆயுதக் கூட்டத்தொடரில் தாக்குதலுக்கான உயிரியல் ஆயுதங்களின் உருவாக்கம், சேமிப்பு மற்றும் பயன்பாடு சட்டவிரோதமாக்கப்பட்டது.

அதன்பின், 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 170 நாடுகள் கையொப்பமிட்டு ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. உயிரி ஆயுதத்தாக்குதலில், ராணுவத்தினர் அல்லாத குடிமக்களிடையே உயிர் நாசம் ஏற்பட்டு, அதனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்ளாட்சி குலையும் நிலையை தவிர்ப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

இந்தியாவின் நிலைப்பாடு

நுண்ணுயிரி வல்லுநர்கள் மற்றும் தொற்றுநோய் வல்லுநர்கள் பலர் நம்நாட்டில் இருந்தாலும், இந்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்த எவ்வித முனைப்பையும் காட்டவோ அல்லது அதற்கென தனித்திட்டத்தையோ ஒருபோதும் செயல்படுத்தவில்லை. உயிரி ஆயுதக் கூட்டத்தொடரின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியா உயிரி ஆயுதத்தில் எவ்வித ஆராய்ச்சியிலும் ஈடுபடுகிறது என்று நிரூபிக்க எந்த விதமான சான்றுகளும் இல்லை. இதை தெளிவு படுத்தும் பொருட்டு, அக்டோபர் 2002-ல், அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் , ‘உயிரி ஆயுதம் மனித இனத்திற்கே பெருங்கேடு விளைவிக்கும் என்பதால், இந்தியா உயிரி ஆயுதங்களை ஒருபோதும் தயாரிக்காது’ என்று நம்நாட்டின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தி விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

நவீன காலத்தில் விலங்குகளிடமிருந்து, மனிதர்களுக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. வீட்டில் விலங்குகளை வளர்ப்பது அதிகரித்து வரும் இன்றைய சூழலில், மனிதருக்கும், செல்லப்பிராணிகளுக்குமான நேரடித் தொடர்பும் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று நோய்க்கிருமிகள் பரவுவது எளிதாகிறது.

சர்வதேச அளவில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள இந்த பதற்றமான காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது. நோய் தோன்றுவதும், அது மீண்டும் உயிர் பெறுவதும் மனிதனின் நடத்தை மற்றும் செயல்முறைகளோடு தொடர்புடையது என்பதால் எதிர்பாராத நோய்பரவலுக்கும், அதன்மூலம் இறப்புகள் அதிகரிப்பதும் இயல்பாக நடக்கிறது.

மேலும், உயிர்க்கொல்லி நோய்களைப் பரப்புவதற்கென்றே பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட நுண்ணுயிரிகளை கொடூரமான முறையில் மனிதன் பயன்படுத்த தொடங்கிவிட்டான். உயிரிப்போருக்கு, இயற்கையாகவே உள்ள நுண்ணுயிர்களும், உயிர்வேதியியல் தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்ட நுண்ணுயிர்களும் பயன்படுத்தப்படுகின்றன. எபோலா,

ரேபிஸ், காலரா, என்சிபாலிடிஸ், மாட்டம்மை, சின்னம்மை, குரங்கு அம்மை, சார்ஸ், லைம் நோய் போன்றவற்றை விலங்குகள் மூலமாக மனிதனிடத்தில் ஏவப்பட்ட உயிரிப்போரின் வரலாற்று உதாரணங்களாகச் சொல்லலாம். போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களுக்கு ஆகும் செலவு, நேரத்தைவிட உயிரிப்போருக்கு பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் ஆயுதங்களை தயாரிப்பதும் எளிது, அதை மனிதர்களிடத்தில் ஏவுவதும் எளிது என்பதால் கண்ணுக்குத் தெரியாமல், சத்தமே இல்லாமல் சர்வதேச அளவில் நடந்து கொண்டிருப்பதுதான் உண்மை. சமூக செயற்பாட்டு மருத்துவர் புகழேந்தியிடம் இதுபற்றிப் பேசினோம்…

‘‘21-ம் நூற்றாண்டின் உயிரிப்போர் வணிகரீதியானது. எதிரிகளை அழிப்பதற்காக மட்டுமின்றி நுண்ணுயிர்கள் மூலம், சிகிச்சையே கண்டுபிடிக்கப்படாத ஆட்கொல்லி நோய்களை முதலில் பரப்புகிறார்கள். பின்னர் அதற்கான மருந்து தன்னிடம் மட்டுமே உள்ளதாகச் சொல்லி தங்கள் மருந்துகளை விற்பனை செய்வதற்கான வியாபார உத்தியாக வெளிநாட்டு மருந்துக் கம்பனிகள் செயல்படுகின்றன.

2001-ம் ஆண்டு முதன் முதலில் மேற்கு வங்கத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி அதிக அளவில் மரணங்கள் ஏற்பட்டன. அரசாங்கம் பின்னர்தான் அதை நிபா வைரஸ் என உறுதிப்படுத்தியது. உயிரிப்போரின் குணங்களாகப் பார்த்தால் எந்தவொரு சிகிச்சையும் இருக்காது; கொத்துக் கொத்தாக மரணங்கள் ஏற்படும்; மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது. இதனடிப்படையில் பார்த்தால் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட பிளேக், காலரா, பெரியம்மை, சின்னம்மை தொடங்கி தற்போதைய டெங்கு, நிபா, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்களை பயோ வாருக்கு ஒப்பிடலாம்.

சமீபத்தில் கேரளாவில்கூட நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 87 சதவீதத்தினர் இறந்து போயிருக்கிறார்கள். இதற்கு முன்பு தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இறந்துபோனவர்கள் ஏராளம். சரி, இதுபோன்ற உயிரைக் கொல்லும் தொற்றுநோய்கள் பரவும்போது அதைப் பரிசோதித்து இந்தக் கிருமியால்தான் பரவுகிறது என்பதை கண்டறிந்து உறுதி செய்யும் பரிசோதனைக் கூடங்கள் எல்லா மாநிலங்களிலும் கிடையாது.

தற்போது கேரள அரசு கூட, கர்நாடக மாநிலம் மணிப்பாலில் இருக்கும் சோதனைக்கூடத்திற்கு அனுப்பிதான் முதன்முதலில் நிபா வைரஸை உறுதி செய்தது. அதுவும் வௌவாலின் சிறுநீர் மற்றும் எச்சம் மூலம் மனிதனுக்குள் பரவி, மனிதனுக்கு மனிதன் தொற்றிக் கொள்வதாகச் சொன்னார்கள். பிறகு போபாலில் இருக்கும் National Institute of High Security Animal Diseases (NIHSAD) மையத்திலிருந்து வந்த விஞ்ஞானிகளும் மனிதனுக்கு,மனிதன் பரவும் நிபா வைரஸ் தொற்றை எச்சரித்துவிட்டுப் போனார்கள்.

ஆனால், மலேசிய நாட்டில் உறுதி செய்யப்பட்ட நிபா வைரஸ் காய்ச்சல் பன்றிகளை நேரிடையாக கையாள்பவர்களுக்கு மட்டும் வருவதாகவும், மனிதனுக்கு மனிதன் பரவுவதாகச் சொல்லவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்பு உள்துறை அமைச்சராக இருந்த கமல் பாண்டே ஓர் அறிக்கையில் குறிப்பிடும்போது இந்தியாவில் பயோவாருக்கான சாத்தியக்கூறுகளாக 3 நிகழ்வுகளைக் கூறுகிறார்.

சூரத்தில் வந்த பிளேக், மேற்குவங்காளத்தில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் மற்றும் டெல்லியில் வந்த டெங்கு காய்ச்சல்களை உதாரணங்களாக கூறினார். இதுமாதிரியான வைரஸ் காய்ச்சல் வகைகள் இந்தியாவிலேயே இல்லை என்றும் விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்தனர். இந்த வரிசையில் சமீபத்திய நிபா வைரஸ் காய்ச்சலை பயோவாராகச் சொல்லலாம். ஏனெனில், வௌவால் மூலமாக நிபா வைரஸ் பரவியதற்கான ஆதாரம் எதுவுமில்லை;

அடுத்து அதற்கான சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது காரணமறியாத மரண நிகழ்வுகள் இவற்றை வைத்து நிபா வைரஸ் தொற்றை ‘பயோ வாரோடு’ ஒப்பிட்டு சந்தேகப்படலாம்’’ என்கிறார். இனி புதிய நோய்கள் உருவாகும்போது அது உயிரிப் போராகவும் இருக்கலாம் என்ற கோணத்தில் அரசாங்கம் அணுக வேண்டியது அவசியம். பொதுமக்களும் புதிய நோய்கள் விஷயத்தில் உடனடி பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் பெற்றுக் கொண்டு தற்காத்துக் கொள்வதும் அவசியம். இதுதான் உயிரிப் போருக்கு எதிரான போராட்டத்தில் நம்முடைய உறுதியான நடவடிக்கையாக காப்பாற்றும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரிக்காம பாருங்க செம்ம காமெடி வீடியோ !!!
Next post 80-களின் நடிகைகள் அன்றும் இன்றும்!!(வீடியோ)