பிளாஸ்டிக் குப்பைக்கு தீர்வு! வந்தாச்சி, கேன்வாஸ் வாட்டர் பாட்டில்!!(மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 18 Second

சாலை எங்கும் குப்பைகள் ஒரு பக்கம். மறுபக்கம் வண்டிகளில் இருந்து உமிழும் புகை. இவை இரண்டுமே நம்முடைய சுற்றுப்புறச் சூழலை பாதித்து வருகிறது. என்னதான், குப்பை லாரிகள் குப்பையை அகற்றினாலும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் முக்கிய கடமை. ஆனா, பெரும்பாலானவர்கள் நமக்கென்னனு தான் இருக்காங்க. நம்முமடைய வேலையை அடுத்தவர் பார்த்துக் கொள்வாங்கன்னு நாம் தட்டிக் கழிச்சு வந்தா, நம்முடைய இடமே குப்பை மேடாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்’’ பெங்களூரைச் சேர்ந்த சுஹாசன் மற்றும் ஹரிகா தம்பதியினர். இவர்கள் ‘சேவ் குளோப்’ என்ற பெயரில் சுற்றுப்புறச் சூழலை பாதிக்காத பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
‘‘அடிப்படையில் நான் ஐ.டி துறையைச் சேர்ந்தவன். எம்.பி.ஏ முடிச்சிட்டு வெப் டிசைனிங் தொழில்ல ஈடுபட்டு வறேன். என் மனைவி ஹரிகாவும் எம்.பி.ஏ பட்டதாரிதான்’’ என்று பேச ஆரம்பித்தார் சுஹாசன்.

“ரெண்டு பேரும் பல விஷயங்களை பேசுவோம். அலசுவோம். அப்படிதான் ஏழு வருடங்களுக்கு முன்னாடி பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த சர்ச்சை எங்களுக்குள் எழுந்தது. பிளாஸ்டிக் கவர்கள் முதல் பாட்டில்கள் வரை எல்லாப் பொருட்களையும் மக்கள் சாலையில் வீசிவிட்டு செல்வதை நான் பார்த்திருக்கேன். கடல், ஆறு, ஏரி, குளம்னு நீர்நிலைப் பகுதிகளிலும் கூட பிளாஸ்டிக் குப்பைகள் நம்ம நாட்டில் தான் அதிகம் தேங்கி இருக்கு. இது பற்றிய புரிதல் அப்ப எங்களுக்கு இல்ல. பெரும்பாலானவர்கள் மாதிரி நாங்களும் அலட்சியமாதான் இருந்தோம். நமக்கென்ன என்று நாங்கள் அதை கண்டுக் கொள்ளவில்லை.

ஆனா, ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து பலரும் பேச ஆரம்பித்தனர். தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் என எல்லா
வற்றிலும் ‘கோ கிரீன்’, ‘குளோபல் வார்மிங்’ன்னு சர்ச்சை எழ ஆரம்பிச்சது. அதன் பிறகுதான் எங்களுக்கு அதனுடைய உண்மையான விபரீதம் புரிஞ்சது. இது குறித்த ஆராய்ச்சில இறங்கினேன். அப்பதான் பல விஷயங்கள் எனக்கு புரிஞ்சது. பிளாஸ்டிக் பொருட்கள் எவ்வளவு நாள் மண்ணில் புதைந்து இருந்தாலும் அது மக்காது.

இந்த மக்காத பிளாஸ்டிக் பொருட்களால மட்டும் பிரச்னை இல்ல. இவை கழிவு மாதிரி கடல்ல போய் தேங்கும் போது அது கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்ற உண்மை புரிந்த போது என் உச்சி மண்டையில் சம்மட்டியால் அரைந்தது போல் இருந்தது. அதுமட்டும் இல்லை, இந்த கழவின் காரணமாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பலநோய்கள் பாதிப்பு ஏற்படுவதையும் நான் உணர்ந்தேன். அதிக வெப்ப சலனத்தில் பிளாஸ்டிக்குக்கு உருகும் தன்மை உண்டு. பல சிக்கல்களுக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த நிலை தொடர்ந்தால், நம் நாடு வளம் இழந்து ஒரு கட்டத்தில் கொடிய நோயின் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதை தடுக்க ஏதாவது செய்யணும்னு முடிவு செய்தேன்.

மக்களுக்கு பல நிறுவனங்கள் விழிப்புணர்ச்சி ஊட்டினா மட்டும் போதாது. மாற்று ஏற்பாடுகளையும் முன் வைக்கணும் அப்பத்தான் இந்த நிலை மாறும்ன்னு நாங்க முடிவுசெய்தோம்…’’ என்ற சுஹாசன், ‘சேவ் குளோப்’ இதன் அடிப்படையில் தான் உருவானது என்கிறார்.
‘‘இப்ப புற்றுநோயால் பலர் பாதிக்கப்படறாங்க. அதற்கு முக்கிய காரணங்கள்ல பிளாஸ்டிக் பயன்பாடும் ஒன்று. நாம் சாலையில் சாப்பிடும் உணவில் பிளாஸ்டிக் கலந்திருக்கு. சாப்பிடும் தட்டுகளில் இலைக்கு பதில் பாலிதீன் கவரை தான் பயன்படுத்துறாங்க. அது மட்டும் இல்லை, நாம் கடையில் வாங்கும் உணவுப் பொருட்களையும் பிளாஸ்டிக் கவரில் தான் கட்டி தராங்க. சூடாக நாம் உணவினை பிளாஸ்டிக் கவரில் வைத்து சாப்பிடும் போது பிளாஸ்டிக் உருகி, அதில் உள்ள நச்சுக்களையும் சேர்த்து உணவுடன் நாம் உண்கிறோம்.

இது நாளடைவில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். இதற்கான மாற்று வாழை இலை மட்டுமே. அதே போல் நாம் பயணம் செய்யும் போதும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தான் பயன்படுத்துகிறோம்.கார், ரயில் எந்த பயணமாக இருந்தாலும் தண்ணீர் என்றால் பிளாஸ்டிக் பாட்டில்கள் தான் நினைவிற்கு வரும். இந்த பாட்டில்களும் மிகவும் தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அதை நாம் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி போடுகிறோம். அவ்வாறு தூக்கிப் போடப்படும் கழிவுப் பொருட்களாக மாறி நம்முடைய சுற்றுப்புறச் சூழலை மிகவும் பாதிக்கிறது. மேலும் காரில் பயணம் செய்யும் போது அதில் வைக்கப்படும் பாட்டில்களில் கார்பன்டை ஆக்சைட் வெளியாகும். இவ்வாறு பல வழிகளில் நாம் அன்றாடம் பிளாஸ்டிக்குடன் உறவாடிக் கொண்டு இருக்கிறோம்’’ என்றவர்

இதற்கான மாற்றினை குறித்து ஆய்வு செய்ய துவங்கினார்.
‘‘நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் இல்லை. அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அதனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்ன்னு தோணிச்சு. அதன் அடிப்படையில் பல ஆராய்ச்சிக்கு பிறகு 2011ல் இந்த நிறுவனத்தை தொடங்கினோம். பிளாஸ்டிக் விபரீதம் குறித்து சின்னச் சின்ன ஒர்க் ஷாப் நடத்தினோம். இதற்கான மாற்று ஏற்பாடா ஸ்பூன், பை, பாத்திரங்கள் எல்லாம் தயாரிச்சோம். பார்க்க பிளாஸ்டிக் மாதிரி தான் இருக்கும். தவிர மக்கிப் போகும் என்பதற்கும் ஆதாரம் கிடைக்கலை. அதனால கரும்புகூழைக் கொண்டு பொருட்களை தயாரிக்க முடிவு செய்தோம். இது எளிதில் மக்கக்கூடிய பொருள். சுற்றுப்புறச் சூழலும் பாதிக்காது. மறுசுழற்சியும் செய்யமுடியாது. இதுக்கு பதிலா அரிசி உமில பொருட்களை தயாரிச்சா மறு சுழற்சியும் செய்ய முடியும்னு தெரிஞ்சது. இப்படி பல கட்டங்கள்ல முயற்சி செய்து கடைசியா அரிசி உமில பொருட்களை தயாரிக்க ஆரம்பிச்சோம். பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளையும் தயாரிச்சோம்…’’ என்ற சுஹாசன், சாப்பிடக் கூடிய ஸ்பூன், போர்க், கத்தி, தண்ணீர் குடிக்கும் பாட்டில்களையும் புதிதாக உருவாக்கி இருக்கிறார்.

‘‘தாகம், ஈகோ ஃப்ரண்ட்லி வாட்டர் பாட்டில். வெளியே செல்பவர்கள், மலை ஏறுபவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என எல்லா தரப்பு மக்களும் பயன்படுத்த ஏதுவாக இருக்க வேண்டும் என்று யோசித்தோம். அப்படி உருவானது தான் தாகம் வாட்டர் பாட்டில். வேலைக்கு செல்பவர்கள் மட்டும் இல்லை வீட்டிலும் இதனை பயன்படுத்தலாம். ஒருவருக்கு, ஒரு பாட்டில் தண்ணீர் இரண்டு நாட்கள் வரை வரும். இந்த பாட்டில் முழுக்க முழுக்க கேன்வாஸ், பருத்தி துணியால் செய்யப்பட்டது. பாட்டில் உள்ளே வெளியே எல்லாமே கேன்வாஸ் துணி தான். எங்கும் பிளாஸ்டிக் வாடை கிடையாது. முதலில் இந்த வாட்டர் பாட்டிலை தண்ணீரில் ஒரு நாள் இரவு ஊற வைக்க வேண்டும். பிறகு உப்பு எலுமிச்சை அல்லது வினிகர் கொண்டு கழுவ வேண்டும். இது துணியினால் செய்யப்பட்டதால் சோப்பு அல்லது வாஷிங் பவுடர் பயன்படுத்த வேண்டாம். நாம் சரியாக அலசவில்லை என்றால் துணி நூலில் சோப்பு தங்கிடும், அதில் தண்ணீர் சேரும் போது நாம் சோப்புடன் கலந்த தண்ணீரை பருக வேண்டி இருக்கும். எலுமிச்சை, உப்பு மற்றும் வினிகர் நாம் சாப்பிடும் பொருள் என்பதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது’’ என்றவரிடம் துணியினால் செய்யப்பட்ட வாட்டர் பாட்டிலா? தண்ணீர் எப்படி தங்கும்… என்று கேள்விக்கு பதில் அளித்தார்.

‘‘வாட்டர் பாட்டிலை தண்ணீரில் ஊறவைக்கும் போது, தண்ணீர் கேன்வாஸ் துணியின் நூலுக்குள் இடையே சென்று அதனிடையே உள்ள இடைவேளையை குறைக்கும். இதனால் கேன்வாஸ் வழியாக தண்ணீர் அதிகம் வெளியேறாது. பாட்டிலில் தண்ணீர் நிரப்பியதும் 15 சதவிகிதம் தண்ணீர் மெல்லிய அளவில் வெளியேறும் என்பதால், மீதமுள்ள தண்ணீர் ஒருவருக்கு இரண்டு நாள் வரை தாங்கும். இதனை இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார்களில் கட்டிக் கொள்ளலாம். அதற்கான கிட்டும் நாங்க தருகிறோம். இந்த பாட்டில் உள்ள தண்ணீர் இயற்கையாவே, குளிர்ந்த நிலையில் இருக்கும் என்பதால், நாம் குளிர்சாதன தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. தண்ணீர் சொட்டுவது கூட மிகப் பெரிய தொந்தரவாக இருக்காது. அதனால் நாம் எங்கும் இதனை பயன்படுத்தலாம்.

இதற்கான பல ஆய்வு செய்த பிறகு தான் கேன்வாஸ் துணியை தேர்வு செய்தோம். காரணம் மற்றவையால், தண்ணீரை அதிக நேரம் சேமித்து வைக்க முடியவில்லை. பயன்படுத்துவதும் சுலபம், மேலும் நீண்ட நாட்கள் இதனை பயன்படுத்தலாம், பாதுகாப்பானது’’ என்றவர் ஸ்பூன், கத்தி, போர்க், காபி மக், உடைகள் என அனைத்திலும் இயற்கையை புகுத்தி வருகிறார்.‘‘பொதுவா இந்த பொருட்கள் எல்லாம் பிளாஸ்டிக், ஸ்டீல், போர்சிலின், பீங்கான் கொண்டுதான் தயாரிக்கப்படும். ஆனா, அதை சாப்பிட முடியாது. ஸ்பூனையோ, கத்தியையோ சாப்பிட முடியாது. இதுக்கு பதிலா ஸ்பூன், போர்க், கத்திகளையும் நாம உணவுடன் சேர்த்து சாப்பிட்டா எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கான விடைதான் எடிபில் (edible)ஸ்பூன். ஆரம்பத்தில் இருந்தே இது புழக்கத்துல இருக்கு.

ஆனா, பெரிய அளவுல யாரும் மார்க்கெட் செய்யலை. நாங்க செய்யறோம். கோதுமை மற்றும் சோளமாவை தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து தேவையான வடிவம் அமைத்து பேக் (bake) செய்யணும். வெந்த பிறகு, சாப்பிடும் தன்மைக்கு மாறிடும். இந்த ஸ்பூனால் சாப்பிட்ட பிறகு, ஸ்பூனையும் கடிச்சு சாப்பிடலாம்! ஒருவேளை தூக்கி எறிந்தாலும் அது மக்கிதான் போகும். இதில் காரம் மற்றும் இனிப்பு என இரண்டு வகை உள்ளது. தேங்காய் நாரினால் பூந்தொட்டியும் உள்ளது. அடுத்தகட்டமா மூங்கிலில் காபி குடிக்கும் மக் மற்றும் கப் தயாரிக்கிறோம். சணல் பேப்பரில் பைகளையும் தயாரிக்கிறோம்.

அடுத்த கட்டமாக வாழைநார், கத்தாலை, அன்னாசிப்பழம், மூங்கில், சணல் கொண்டு உடைகளை தயாரிக்கும் எண்ணம் உள்ளது. பருத்தி உடைன்னு சொல்றாங்க, ஆனால் அதில் சிறிதளவு பாலியஸ்டர் கலந்து தான் நெய்றாங்க. பாலியஸ்டர் ப்ரீ உடைகளை தயாரிப்பதற்கான ஆய்வு நடந்துகொண்டு இருக்கிறது. நம்மை சுற்றியுள்ள இயற்கை பொருட்களை கொண்டே நம்ம சூழலை மாசு இல்லாம மாத்தலாம்…’’ என்கிறார் சுஹாசன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்ல பொழுதுபோக்குகள் நலம் தரும்!!(மருத்துவம்)
Next post 50 வருடங்களாக புதைக்கபட்டிருந்த மர்ம Car | எதற்காக தெரியுமா ? (வீடியோ)