சர்ச்சையில் சரத் பொன்சேகா!!(கட்டுரை)

Read Time:13 Minute, 6 Second

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிறுத்தப்படுவாரா என்று ஊகங்கள் உலாவிக் கொண்டிருந்த போது, அமைச்சர் சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அவர், “சங்கக்கார நல்ல மனிதர்; திறமையான கிரிக்கெட் வீரர் தான். ஆனால், அவருக்கு அரசியல் தெரியாது; நானே, அரசியலுக்கு வந்து, ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான், அரசியலைக் கற்றுக் கொண்டேன்” என்று பதிலளித்திருந்தார்.

இவ்வாறு கூறியிருந்தாலும், அவர் இப்போதும் கூட, அரசியலைச் சரிவரக் கற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

போரில் வெற்றி ஈட்டிக் கொடுத்த இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்ட போது, எந்த அரசியல் அனுபவமும் அவருக்கு இருக்கவில்லை. அவரிடம் இருந்ததெல்லாம் இராணுவ அனுபவம் மாத்திரமே.

அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றியைப் பெற்றிருந்தாலும் கூட, எல்லாவற்றையும் குழப்பியடித்திருப்பார் என்பதை, பின்னர் வந்த காலப்பகுதியில் நன்றாகவே உணர வைத்திருக்கிறார்.
இராணுவத்துக்குள் இருந்தபோது, சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வந்த சரத் பொன்சேகா, அரசியலிலும் கூட அவ்வாறான ஒருவராகத் தான் நீடித்து வருகிறார்.

2010 ஜனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பின்னர், சிறைவாசம்; அதிலிருந்து வெளியே வந்த பின்னர், ஜனநாயகக் கட்சியை உருவாக்கித் தேர்தல்களில் போட்டியிட்டார்.

ஜனநாயகக் கட்சி கிட்டத்தட்ட அழிவுக் கட்டத்தை எட்டிய போது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டார். சரத் பொன்சேகாவை வைத்து, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ‘ஆட்டம்’ காண்பிப்பது தான், ஐ.தே. கவின் திட்டமாக இருந்தது.

படையினரைப் பழிவாங்குகிறது அரசாங்கம் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முறியடிக்கவும், அத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவும் தான், சரத் பொன்சேகாவை ஐ.தே.க, தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

அவருக்கு அரசாங்கத்தில், முக்கிய அமைச்சுப் பதவி தரப்படும் என்று வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவிகள் சரத் பொன்சேகாவால் குறிவைக்கப்பட்டன. ஆனால், இந்த இரண்டு அமைச்சுகளுமே அவருக்குக் கைவசமாகவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சர் பதவியை, யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவி, ஏற்கெனவே ருவன் விஜேவர்த்தனவிடம் இருக்கிறது. அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்ப வழி வாரிசாக இருக்கிறார். எனவே அவரை நீக்க முடியாது.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் என்ற பதவியை உருவாக்கி, அவரிடம் கொடுத்தால், பாதுகாப்பு அமைச்சுக்குள் தலையீடுகளைச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார் என்பதால், அந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை.

கடைசியில் அவருக்கு, தென் மாகாண மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சுத் தான் கிடைத்தது. காலப்போக்கில் சட்டம், ஒழுங்கு அமைச்சு அடுத்தடுத்துக் கைமாறிய போது, அந்த அமைச்சை எப்படியாவது பெற்றுக்கொண்டு விட வேண்டும் என்று, முடிந்தவரைக்கும் முயற்சித்தார். ஐ.தே.கவுக்குள்ளேயும் எதிர்ப்புகள் இருந்தாலும், அவரைச் சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு, கட்சித் தலைமை தீவிரமாக முயற்சித்தது.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி சற்றும் விட்டுக்கொடுக்க மறுத்து விட்டார். சரத் பொன்சேகாவிடம் சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை கொடுக்க முடியாது என்று ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்த விவகாரம், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கும் அளவுக்குக் கூடச் சென்றது.

கடைசியாக, சரத் பொன்சேகாவுக்கு வன வாழ் உயிரினங்கள் அமைச்சுத்தான் கிட்டியது. இது சரத் பொன்சேகாவுக்கு கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

சரத் பொன்சேகாவிடம் சட்டம், ஒழுங்கு அமைச்சைக் கொடுத்தால், அவர் இராணுவப் பாணியில் உத்தரவிட்டு, பெரும் குழப்பத்தை விளைவிப்பார் என்று, மூத்த பொலிஸ் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் ஆலோசனை கூறியிருந்தார்கள்.

தற்போதைய அரசாங்கத்தில் இருந்தாலும், அவர் பல வேளைகளில், அரசியல் சூழலைப் புரிந்து கொள்ளாமல் செயற்படுவதும் பேசுவதும், கூட்டுப்பொறுப்பைக் கவனத்தில் கொள்ளாமல் விடுவதும் அவரைச் சிக்கல்களில் மாட்டி வந்திருக்கிறது.

அரசியலில் சரத் பொன்சேகாவுக்கு எதிரிகள் அதிகம். ஐ.தே.கவுக்குள் விஜேதாஸ ராஜபக்‌ஷ போன்ற பலர் இருக்கிறார்கள். எதிரணியில் இன்னும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். எனவே, சரத் பொன்சேகாவுக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும், போட்டுத் தாக்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதிலும் அவருக்கு, ‘நாக்கில் தான் சனி’. இதனால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

அண்மையில், சரத் பொன்சேகாவுக்கு பாதாள உலக குழுவினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கு ஆதாரமான சில படங்களும் வெளியிடப்பட்டன. அதை அவர், முற்றாக மறுத்திருந்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அண்மையில் அவர், பொலிஸ் விசேட அதிரடிப்படை பற்றி வெளியிட்ட கருத்து, பலத்த சர்ச்சையாக மாறியிருக்கிறது.

“முன்னர் விசேட அதிரடிப்படை மதிப்புக்குரிய அமைப்பாக இருந்தது. இப்போது அது மூளை சுகவீனமானவர்களின் புகலிடமாக மாறி விட்டது” என்று அவர் கூறிய கருத்து, அதிரடிப்படையினர் மத்தியில் கடும் கோபத்தைக் கிளறியிருக்கிறது.

போரில் உடல் உறுப்புகளை இழந்த, விசேட அதிரடிப்படை வீரர்களின் அமைப்பு, இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்திருப்பதுடன், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தப் பின்னணியில் தான், கடந்த புதன்கிழமை ஓர் அதிரடி நடவடிக்கையாக, விசேட அதிரடிப் படையினரால், சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும், போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர், சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமாக இருக்கும் பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்கள் என்று முன்னர் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்.

கைது செய்யப்பட்ட போது அவரிடம், பெருந்தொகையான போதைப்பொருட்கள் எதுவும் இருக்கவில்லை. எட்டு கிராமுக்கு உட்பட்ட ஹெரோயினும், இரண்டு கிராம் ஐஸ் போதைப் பொருளும் தான் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒன்றில் இவர் சிறியளவிலான போதைப்பொருள் வியாபாரியாக இருக்கலாம். அல்லது, அதனை நுகர்பவராக இருக்கலாம். சரத் பொன்சேகாவைப் பழிவாங்குவதற்காக போடப்படும் நாடகமாகவும் கூட, இது இருக்கலாம்.

ஏற்கெனவே, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவும் கூட, சரத் பொன்சேகா பற்றி ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார். “இராணுவத்துக்குள் தலையீடு செய்கிறார்; எனக்குத் தெரியாமல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்; இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் விவகாரம் குறித்தும் பேசுகிறார்” என்று இராணுவத் தளபதி முறையிட்டிருந்தார்.

தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, முன்னர், சரத் பொன்சேகாவுக்கு மிகவும் நம்பகரமான ஒருவராக இருந்தவர். சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட பின்னர், இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

அதற்குப் பின்னர், அவர் வெளிநாட்டுக்குச் சென்று, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்தடுத்த நாளே, கொழும்பு வந்து இறங்கினார். அப்படிப்பட்டவர் இன்று சரத் பொன்சேகாவுக்கு எதிராக மாறியிருக்கிறார்.

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராகப் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது, அவர் மீறல்களில் ஈடுபட்டார் என்பது தனக்கும் தெரியும் என, சரத் பொன்சேகாவும் கூறியிருந்தார். அந்தக் கட்டத்தில் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு, இராணுவத் தளபதி ஆதரவாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.

சிங்க றெஜிமென்டைச் சேர்ந்த, தொண்டர் படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் பியால் விக்கிரமரத்னவை, அடுத்த இராணுவத் தளபதியாக்குவதற்கு, சரத் பொன்சேகா முயற்சித்தார். இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவுக்கு ஜனாதிபதி சேவை நீடிப்பை வழங்கியதால், அவரது அந்த முயற்சியும் கை கூடவில்லை. இதுவும் சரத் பொன்சேகாவுக்குக் கடுப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இராணுவத்துக்கு உள்ளேயே முட்டுப்பட்டுக் கொண்டிருந்த சரத் பொன்சேகா, விசேட அதிரடிப்படையினரை விமர்சிக்கப் போய், இன்னும் வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

அரசியலைக் கற்றுக் கொள்ள அவருக்கு ஐந்து, ஆறு ஆண்டுகள் போதவில்லை. ஏன், எட்டு ஆண்டுகளாகியும் அவர் அதில் தேறவில்லை. இன்னமும் அவர், அரசியலில் கற்க வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜயன் சர்கார் Exclusive தகவல்கள்! (சினிமா செய்தி)
Next post ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா..!!