ராஜீவ் – லலித் சந்திப்பு!!(கட்டுரை)

Read Time:18 Minute, 22 Second

லலித் அத்துலத்முதலி எனும் ஆட்சி நிபுணன்

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை, இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஊடாக வழங்கிய அழைப்பை, ஜே.ஆர் நேரடியாக மறுதலிக்காது ஏற்றுக்கொண்டார்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், தனக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியை, டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

இன்னொரு வழியில் பார்த்தால், ராஜீவின் அழைப்பை, ஜே.ஆர், மறுத்திருந்தார் என்றும் பொருள் கொள்ள முடியும். ராஜீவ் காந்தி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்திருந்த சூழ்நிலையில், இந்தியாவுடனான உறவைச் சுமுகமான உறவாக, புதிதாக வடிவமைக்கவே ஜே.ஆர் விரும்பியிருந்தார்.
ஆகவே, அந்த உறவில், தன்னுடைய நிலையைப் பலப்படுத்த அவர் விரும்பியிருக்கலாம். அதற்கான இராஜதந்திர நகர்வாகக் கூட, இதைப் பொருள் கொள்ளலாம்.

மேலும், லலித் அத்துலத்முதலி தேர்ந்ததொரு புலமையாளராக அறியப்பட்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே, கல்வியில் பெருஞ்சாதனையாளராகத் திகழ்ந்தவர். கொழும்பு றோயல் கல்லூரியில், அதிக பரிசில்களை வென்ற மாணவன் என்ற சாதனைக்கு, இன்றுவரை இவரே சொந்தக்காரர்.

றோயல் கல்லூரியில் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளமாணி, முதுமாணிப் பட்டக்கல்வியைப் பெற்றுக்கொண்டதுடன், பிரபல்யமிக்க ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவரான முதலாவது இலங்கையர் இவராவார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுமாணிக் கல்வியைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்காவின் புகழ்பூத்த ஹாவர்ட் பல்கலைக்கழகத்திலும் சட்டத்துறை முதுமாணிக் கற்கையை பூர்த்திசெய்தார்.

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர், இஸ்‌ரேலின் ஹீப்ரு பல்கலைக்கழகம், ஸ்கொட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகம், இந்தியாவின் அலஹபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியிருந்தார்.

இஸ்‌ரேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில்தான், இஸ்‌ரேலுடனான இவரது உறவு பலமடைந்தது என்று சிலர் கருத்துரைக்கிறார்கள்.

குறுகியகாலக் கற்பித்தல் பணியைத் தொடர்ந்து, இலங்கை வந்து சட்டத்தரணியாகப் பணியாற்றத் தொடங்கியவர், 1970களின் ஆரம்பத்தில், ஐக்கிய தேசியக் கட்சியினூடாக அரசியலில் நுழைந்தார்.

பெரும் புலமையாளராக, அரசியலில் நுழைந்த அத்துலத்முதலி, அரசியல்வாதியாக (politician) அல்லாது ஆட்சிநிபுணனாகவே (statesman) அறியப்பட்டார்.

ஆனால், அத்துலத்முதலியின் மறுமுகம் வித்தியாசமானதாக இருந்தது. யுத்தம் என்று வந்தபோது, அவர் மனவுணர்ச்சிகளுக்கு இடம் தரவில்லையென்றும், தேசிய பாதுகாப்பு அமைச்சராக, யுத்தத்தை இரக்க உணர்ச்சியற்ற திடத்துடன் முன்னெடுத்துச் சென்றார் என்றும், ப்ரூஸ் பலிங் தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்புக்கு, அத்துலத்முதலியை அனுப்பிவைக்க, ஜே.ஆர் எடுத்த முடிவுக்கு, அத்துலத்முதலியின் புலமை, மொழியாற்றல், சர்வதேச ரீதியிலான அங்கிகாரம், மதிப்பு என்பவற்றை முக்கிய காரணங்களாக அடையாளப்படுத்த முடியும்.

குறித்த சந்திப்புக்காக அத்துலத்முதலி, 1985 பெப்ரவரி ஒன்பதாம் திகதி இரவு, கொழும்பிலிருந்து பொம்பே ஊடாக டெல்லி சென்றிருந்தார்.

புதியதோர் ஆரம்பம்

ராஜீவ் காந்தி, அத்துலத்முதலி ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தை, ஏறத்தாழ இரண்டு மணி நேரமளவு நீடித்தது.

இந்தியாவுடனான புதிய அணுகுமுறையை, இந்திரா காந்தி காலத்தேய அணுகுமுறையிலிருந்து விலத்தி, இலங்கைக்குச் சாதகமான அணுகுமுறையாக மாற்றச் செய்வதுதான், அத்துலத்முதலியின் முன்பிருந்த பெரிய சவால் ஆகும்.

ராஜீவ் காந்தியின் மிகப் பெரும் தேர்தல் வெற்றிக்கான வாழ்த்துரையோடு, பேச்சுவார்த்தையைத் தொடங்கிய அத்துலத்முதலி, “இலங்கை விவகாரத்தில், இதுவரைகாலமும் இந்தியாவின் வற்புறுத்தல் தன்மையான போக்கு, இலங்கையின் பெரும்பான்மையின சிங்கள மக்களிடையே, இந்திய விரோத மனப்பான்மையையும் இந்திய ஆக்கிரமிப்பு அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது”, என்று குறிப்பிட்டார்.

அத்துலத்முதலியின் நோக்கமானது, இந்தியா, இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்பை, இலங்கை மீது செய்யாது என்ற உறுதிமொழியை ஜே.ஆர், இந்திரா காந்தியிடம் பெற்றுக் கொண்டதைப் போல, ராஜீவிடமிருந்தும் அந்த உறுதிமொழியைப் பெற்றுக்கொள்வதாக இருந்தது.

அதற்கேற்றாற் போல, ராஜீவ் காந்தியும் “இந்தியா ஒருபோதும், இலங்கை மீது ஆக்கிரமிப்புச் செய்யாது” என்று உறுதியளித்தார்.

1984 நவம்பரில், ராஜீவ் காந்தியைச் சந்தித்த ஜே.ஆர், புதியதோர் ஆரம்பம் பற்றிப் பேசியும் இணங்கியும் இருந்தார்.

இலங்கை விவகாரத்தில், பேச்சுவார்த்தைகளைப் புதிதாக ஆரம்பிப்பதற்கு, இதுவரை காலமும் இலங்கை விவகாரத்தை, இந்தியா சார்பாகக் கையாண்ட கோபால்சாமி பார்த்தசாரதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, அத்துலத்முதலி சார்பில் முன்வைக்கப்பட்டது.

சர்வகட்சி மாநாடு தோல்வியடைந்ததைப் பற்றிய தன்னுடைய கவலையை ராஜீவ் காந்தி பகிர்ந்த போது, அதற்குப் பதிலளித்த அத்துலத்முதலி, “அரசாங்கத்தால், சிங்கள மக்களை இந்த விடயத்தில் அணைத்துச் செல்ல முடியாது போயுள்ளது” என்று கூறினார்.

பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதன் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவும் ‘அனெக்சர் -சி’ முன்மொழிவுகளைக் கடுமையாக எதிர்த்தமையும் அந்த முன்மொழிவுகள் ஜே.ஆரின் விருப்பமின்றி, பார்த்தசாரதியால் திணிக்கப்பட்டமையும்தான், சர்வகட்சி மாநாடு, இந்த முடிவை எட்டக் காரணம் என்ற தொனியில் கருத்துரைத்தார்.

மேலும், “சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்று அடையப் பெறவேண்டுமானால், இந்தச் செயற்பாடு, மீண்டும் புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டும். சிங்கள மக்கள் பார்த்தசாரதியை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு சார்பான நபராகக் கருதுவதால், புதிய செயற்பாடுகள் ஆரம்பிக்கும் போது, பார்த்தசாரதி அதில் இல்லாதிருப்பது, உசிதம்” என்று, நாசூக்காக வேண்டிக் கொண்டார்.

ஏற்கெனவே பார்த்தசாரதிக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையிலான அணுகுமுறை வேறுபாடுகள், அவர்களது உறவைப் பலமிழக்கச் செய்திருந்த நிலையில், அத்துலத்முதலியின் இந்தக் கோரிக்கைக்கு இணங்குவதில், ராஜீவ் காந்திக்கு எந்தத் தயக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அத்துலத்முதலியின், புதிய ஆரம்பமொன்றுக்கான கோரிக்கைக்கு இணங்கிய ராஜீவ், இந்தியா பக்கசார்பின்றி, நடுநிலையுடன் செயற்படும் என்று உறுதியளித்ததுடன், இனி, பேச்சுவார்த்தைகள் இந்தியா சார்பில், புதிய வௌியுறவுச் செயலாளர் ரோமேஷ் பண்டாரியால் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். முதல் இரண்டு கோரிக்கைகளும் அத்துலத்முதலிக்கு சாதகமாக அமைந்தன.

மாவட்ட சபைகள் போதும்

அடுத்ததாக, அதிகாரப் பகிர்வு முறை பற்றி விவரமாக, ராஜீவ் காந்தியும் அத்துலத்முதலியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கேட்கும், பிராந்திய சபைகளை, இலங்கை அரசாங்கத்தால் வழங்க முடியாது என்று குறிப்பிட்ட அத்துலத்முதலி, தம்மாலியன்ற மிகச்சிறந்த அதிகாரப் பகிர்வுக் கூறு, மாவட்ட சபைகள்தான் என்று, தௌிவாகக் குறிப்பிட்டார். அதிகளவு அதிகாரங்களைப் பகிர்வதற்குத் தாம் தயார், எனினும், அதிகாரப் பகிர்வுக் கூறாக, மாவட்ட சபைகளை விட, பரந்த அமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில், அத்துலத்முதலி விடாப்பிடியாக இருந்தார்.

மாவட்ட சபைகளைத் தாண்டிய, பிராந்திய, மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வையே, இந்திரா காந்தி முன்னிறுத்தியிருந்தார்.

ஆனால், அத்துலத்முதலியின் மாவட்ட சபையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு, ராஜீவ் காந்தி இணங்கியதாகவும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டியதில்லை என்று ராஜீவ் காந்தி கருதியதாகவும் தங்களுடைய நூலில் கே.எம்.டி.சில்வாவும் ஹவட் றிக்கின்ஸும் குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு, அதிகளவு அதிகாரங்கள் மாவட்ட சபைகளுக்குப் பகிரப்படவேண்டும் என்பதில் ராஜீவ் காந்தியும் அத்துலத்முதலியும் உடன்பட்டாலும், சட்டவொழுங்கு அதிகாரங்கள், பகிரப்படவேண்டியதில்லை என்பதிலும் இருவரும் இணங்கியிருந்தனர்.

இந்தச் சட்டவொழுங்கு அதிகாரப் பகிர்வுதான், பஞ்சாப் மாநிலம் தொடர்பாக பிரச்சினைக்கான காரணங்களில் ஒன்று என்று, ராஜீவ் காந்தி கருதியதாக, டி சில்வாவும் றிக்கின்ஸும் கருத்துரைக்கின்றனர். இந்த விடயமும் அத்துலத்முதலிக்குச் சாதகமாகவே அமைந்தது.

இணக்கத்துக்கு மேல் இணக்கம்

அடுத்ததாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கான ஆதரவை, இந்தியா நிறுத்தவேண்டும் என்று, அத்துலத்முதலி கேட்டுக் கொண்டிருந்தார்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, பஞ்சாப் பிரிவினை அமைப்பான அகாலி தள்ளுக்கு ஒப்பிட்ட ராஜீவ் காந்தி, இந்திய அரசாங்கத்துடன், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இருந்த நேரடிச் செல்வாக்கு குறைக்கப்படும் என்ற உறுதிமொழியை, அத்துலத்முதலிக்கு வழங்கியதுடன், இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதுவும் அத்துலத்முதலிக்குச் சாதகமாகவே அமைந்து, அவருக்கு நிறைந்த மகிழ்வைத் தந்தது.

அடுத்ததாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழ் நாட்டிலிருந்து செயற்படுவதையும் அவற்றின் பயிற்சிமுகாம்கள் அங்கு இயங்குவதையும் விவரமான தகவல்கள், ஆதாரத்துடன் ராஜீவ் காந்தியிடம், அத்துலத்முதலி சமர்ப்பித்தார். இதன் நோக்கம், இந்தத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் பின்னணியில், இந்தியா இருக்கிறது என்பதை, இலங்கை அறியும் என்று சுட்டிக்காட்டுவதோடு, மறைமுகமாக, இத்தகைய ஆதரவுகளை, இந்தியா நிறுத்தவேண்டும் என்று அறிவுறுத்துவதாகும்.

இதைப்பற்றி, தான் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்ட ராஜீவ் காந்தி, இந்த விவகாரத்தில், தான் கரிசனை செலுத்துவதாக உறுதியளித்ததாக, ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார்.

இலங்கையிலிருந்து, தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் அகதிகள் பிரச்சினை பற்றித் தன்னுடைய கவலையை வௌியிட்ட ராஜீவ் காந்தி, “இது, தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, சுட்டுக்கொல்லப்படுவது பற்றிய தன்னுடைய கரிசனையையும் அத்துலத்முதலியிடம், ராஜீவ் முன்வைத்தார்.

இலங்கை-இந்தியா இடையேயான கடற்பரப்பில் இந்திய, இலங்கைக் கடற்படைகள் இணைந்த ரோந்துச் செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும் என்பது, ஜே.ஆரின் விருப்பமாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த முன்மொழிவை ராஜீவ் காந்தி முன்பு, அத்துலத்முதலி சமர்ப்பித்தார். அதனைத் தான் பரிசீலிப்பதாக, ராஜீவ் காந்தி உறுதியளித்தார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்மித்த நாடுகள் அனைத்துடனும் நல்லுறவைப் பேணத் தான் விரும்புவதாகத் தெரிவித்த ராஜீவ் காந்தி, ஜே.ஆர் ஜெயவர்தனவை, அவருக்கு வசதியாக பொழுதில், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு, தான் அழைப்பு விடுப்பதாக அத்துலத்முதலியிடம் குறிப்பிட்டார்.

அத்துலத்முதலியைப் பொறுத்தவரை, இந்தப் பேச்சுவார்த்தைகள், அவர் எதிர்பார்த்ததைவிடப் பெரிய வெற்றியாகவே அமைந்தது எனலாம். குறிப்பாக, மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றுக்கு, ராஜீவ் காந்தி இணங்கியமை, இலங்கை தொடர்பிலான இந்திய நிலைப்பாட்டில் ஏற்பட்ட, முக்கிய மாற்றமாக இலங்கை கருதியது.

இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த மாற்றம், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு மிகச் சாதகமாக அமைந்திருந்தது. அதன் பின்னர், இருதரப்பும் வௌியிட்ட அறிக்கைகள் வாயிலாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்த அதேதினம், இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் ஊடாகவும் இந்த மாற்றம் மிகத்தௌிவாக வௌிப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்நாட்டையே திருப்பி போட்ட அபிராமியின் கொடூர செயல் !!(வீடியோ)
Next post ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது? (அவ்வப்போது கிளாமர்)