By 10 September 2018 0 Comments

பாடமும் படமும்!!(கட்டுரை)

நாட்டில் பொதுவாகவும் குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நெடுங்காலமாகப் பல நெருக்குவாரங்களும் அநியாயமிழைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அவற்றுக்கெல்லாம் நியாயம் தீர்ப்பதில், மெத்தனப் போக்கை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

“ஒவ்வொரு முக்கியமான சம்பவத்தில் இருந்தும், பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று, பொதுமக்களுக்கு வகுப்பு எடுக்கின்ற ஆட்சியாளர்கள், அவற்றில் இருந்து, அவர்கள் எதையாவது கற்றுக் கொண்ட மாதிரித் தெரியவில்லை.

ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, தம்முடைய ஆட்சிக் கதிரைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, முழுப் பலத்தையும் அதிகாரத்தையும் உச்சபட்சமாகப் பயன்படுத்துவது கண்கூடு. ஆனால், அதேபோல சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அவற்றை நிவர்த்தி செய்வதற்காக, கட்டுப்படுத்துவதற்காக, அதே ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்துகின்ற பண்பைக் காணக் கிடைக்கவில்லை.

முஸ்லிம் கட்சிகள், பெரும்பாலான அரசியல்வாதிகளின் நிலையும் இதுதான். பெருந்தேசியக் கட்சிகளும் ஆட்சியாளர்களும் மக்களை நம்பவைப்பதற்காக எவ்வாறு நாடகத்தனமாக ‘படம்’ காட்டுகின்றார்களோ, அதுபோலவே, முஸ்லிம் அரசியல்வாதிகளும் ‘எல்லாம் சரியாக நடக்கின்றது’ என்ற ஒரு பொய்யான பிரம்மையை, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு, கடைசியில் ஏமாற்றத்தைப் பரிசளிக்கின்றனர்.

சுருங்கக்கூறின், இலங்கையில் முஸ்லிம் கட்சிகளின் பலமும் திறமையும், இந்த நாட்டு மக்களின் விடிவுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு காலத்தில், வீணான மாயத் தோற்றம் அல்லது ‘படம்காட்டுவதில்’ வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

“கடந்த கால நிகழ்வுகளில் இருந்து, பாடம் கற்க வேண்டும்” என மக்களுக்குக் கூறுகின்றவர்கள், அவ்வாறு எதையும் கற்றுக் கொண்டதற்கான அத்தாட்சிகளைக் காண முடியவில்லை. இதனால், அதே மாதிரியான அசம்பாவிதங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கின்றது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “கடந்த காலத்தில், பொலிஸார் வெற்றிகளைக் கண்டுள்ளனர். சில பின்னடைவுகளையும் சந்தித்துள்ளனர். திகனவில் இடம்பெற்ற சம்பவம் கவலைக்குரியதாகும். அனைவரும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கின்றார்.

இதுபோன்ற கருத்துகளை, முஸ்லிம்கள் விடயத்தில் பிரதமர் மட்டுமன்றி வேறுபல அரசியல்வாதிகள், முன்னாள் ஆட்சியாளர்கள், விடுதலைப் புலிகளும் வேறுபட்ட காரணங்களுக்காக அவ்வப்போது கூறியிருந்தனர்.

இலங்கையில் 30 வருடங்களாக, யுத்தம் இடம்பெற்றது. இதில் மூவின மக்களும் பாதிக்கப்பட்டார்கள். எந்தவித காரணமும் இல்லாமல், குறிப்பாக முஸ்லிம்கள் அழிவுகளைச் சந்தித்தார்கள். ஆனால், இதிலிருந்து அரசாங்கங்கள் எவ்வகையான பாடத்தைக் கற்றுக் கொண்டன என்று, சிந்திக்க வேண்டியுள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்று, ஒன்று நியமிக்கப்பட்டு, அதன் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், யுத்தத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற அனுபவத்தின் மூலம், மஹிந்த அரசாங்கமோ, இன்றைய கூட்டு அரசாங்கமோ எதைக் கற்றுக் கொண்டுள்ளது?

அவ்வாறு கற்றுக் கொண்டிருந்தால், ஒருகாலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதற்கு ஒப்பான, இனத்துவ நெருக்குவாரங்களும் ஓரங்கட்டல்களும் முஸ்லிம்கள் மீது திணிக்கப்படுவதற்கு இடமளித்திருக்குமா என்ற கேள்வி எழுகின்றது.

1915ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையில் சிறியதும் பெரியதுமாகக் கலவரங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. மூவின மக்களும் இதனால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் பெருந்தேசியம், இனக் கலவரங்களில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

இந்தக் கலவரங்களால் தம்முடைய கதிரைக்கும் ஆட்சிக்கும் எவ்விதமான பாதிப்பு அல்லது அனுகூலம் கிடைக்குமென, கணக்குப்பார்த்தார்களே தவிர, நாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் என்ன நடக்கும் என்று சிந்தித்ததாகக் குறிப்பிடுவது கடினம். அவ்வாறு, பாடம் கற்றிருந்தால், பின்வந்த கலவரங்களுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.

திகண கலவரத்தில் இருந்து, பாடம் கற்க வேண்டும் என்று, பிரதமர் மட்டுமன்றி பல அரசியல்வாதிகள் கூறியுள்ளனர். உண்மைதான், அதிலிருந்து பாடங்களைக் கற்று, இவ்வாறான அசம்பாவிதங்கள், மீண்டும் ஏற்படாதவாறு தடுக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு, எல்லாப் பொதுமகனுக்கும் இருக்கின்றது என்பதில் மறுபேச்சில்லை.

ஆனால், 1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்தில் இருந்து, ஆட்சியாளர்கள் பாடம் கற்றிருந்தால் ஏன் அந்தப் பாடத்தைக் கொண்டு, அளுத்கம, பேருவளை கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை?

இன்று, ஒரு பெரிய மீட்பர் போலவும், மிகச் சிறந்த மாற்றுத் தெரிவாகவும் தன்னை முன்னிலைப்படுத்துகின்ற பொதுஜன பெரமுனவின் பிரதானி மஹிந்த ராஜபக்ஷவே, அப்போது ஜனாதிபதியாக இருந்தார்.

முழு அதிகாரங்களும் அவரது கையில் இருந்தது. முன்னைய கலவரங்களில் அல்லது இனமோதலில் பெற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில், அவர்களால் ஏன் அளுத்கம கலவரத்தை உடன் கட்டுப்படுத்த முடியாமல் போனது?

அளுத்கம கலவரத்தை, இன்றைய ஆட்சியாளர்கள்தான் திட்டமிட்டுச் செய்திருந்தார்கள் என்று மஹிந்த தரப்பு சொல்வது உண்மையென்று வைத்துக் கொண்டாலும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பிரபாகரனைப் பிடித்துப் பலியிட்டவர்களுக்கு, அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகளைக் கைது செய்து, சிறையில் அடைக்கும் தைரியம் எங்ஙனம் இல்லாது போனது, என்ற கேள்விகள் எழுகின்றன.
நல்லாட்சியாளர்கள், அளுத்கம கலவரத்தைப் பிரதான மூலதனமாக்கியே ஆட்சிபீடம் ஏறினார்கள். அப்படியென்றால், அதிலிருந்து அவர்கள் எதையாவது கற்றறிந்திருக்க வேண்டும். அவ்வாறு கற்றறிந்திருந்தால், அம்பாறை வன்முறைகளும் திகணக் கலவரத்தையும் ஏன் தடுக்க முடியாமல் போனது?

இல்லாத ஒரு கருத்தடை மாத்திரைக்காக, அம்பாறையில் பள்ளிவாசலும் கடைகளும் உடைக்கப்பட்ட போது, பிரதமரின் கீழிருந்த, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொலிஸ் நிலையம், ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே இருந்தும், ஸ்தலத்துக்கு வருவதற்கு நீண்டநேரம் எடுத்தது. இனமுறுகலின் ஆபத்துகள் குறித்து, அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவோருக்குக் கற்றுக் கொடுத்திருந்தால், இந்தத் தாமதம் ஏற்பட்டிருக்க மாட்டாது.

இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய சம்பவம், திகன மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில், கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரமாகும். முஸ்லிம்களை இலக்காக வைத்து, நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட இக்கலவரத்தால், முஸ்லிம்கள் பெருமளவான சொத்துகளையும் ஓருயிரையும் இழந்தனர்.

ஆனால், இத்தனைக்கும் வன்முறைக் கும்பல்கள் வீடுகளையும் கடைகளையும் அடித்து நொருக்கி, தீக்கிரையாக்கிய போது… பாதுகாப்புப் படையினர் அருகில்தான் நின்றனர் என்பது ஒளிப்படங்களாக வெளியாகின.

ஆனால், அளுத்கமவில் கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில், விரைந்து செயற்பட்டு திகணக் கலவரங்கள் உடன் நிறுத்தப்படவில்லை. முழுமையாக, கலவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, கிட்டத்தட்ட மூன்று நாட்கள் சென்றன.

இருப்பினும், சட்டத்தையும் ஒழுங்கையும் கண்டியில் நடைமுறைப்படுத்தும் விடயத்தில், தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதைப் பொறுப்பு வாய்ந்தவர்களே, அதன்பின்னர் ஏற்றுக் கொள்ளும் பாங்கில் கருத்துத் தெரிவித்தனர்.

இப்போது, திகண சம்பவத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று, பிரதமர் போன்றோர் கூறியுள்ளனர். அது, மிகவும் பொறுப்பு வாய்ந்ததும் உள்ளர்த்தங்களைக் கொண்டதுமான கருத்தாகும். அப்படியென்றால் முன்னைய கலவரங்களில் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதானே அர்த்தம்.

இத்தனை அனுபவங்களைக் கொண்ட நாட்டில், இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதும், எதையும் கற்றுக் கொண்டதற்கான அத்தாட்சிகளைக் காண முடியாதிருப்பதும் பெரும் கைச்சேதமாகும்.

இதேவேளை, ரதுபஸ்வெல போன்ற இடங்களில் வெகுஜனப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட சட்டம் ஒழுங்கின் உயர்ந்த பட்ச ஏற்பாடுகள், கொழும்பில் இடம்பெற்ற, ஜனபலய (மக்கள் பலம்) ஸ்தம்பிதப் போராட்டத்தை, எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆயத்தங்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றபோது, இதேவேகத்தில் ஏன் மேற்கொள்ளப்படவில்லை, என்ற வினா முஸ்லிம்கள் மனதில் ஏற்பட்டிருக்கின்றது.

கொழும்பையும் புறநகர் பகுதிகளையும் முடக்கி, ஸ்தம்பிதமடையச் செய்து ஆட்சியில் அதிர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டிலும் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடனும் கொழும்பில் ஒரு முற்றுகைப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போராட்டம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும், அரசாங்கத்தை கடுமையாகப் பயங்காட்டியுள்ளது என்றே தோன்றுகின்றது.

இந்நிலையில், ‘ஜனபலய’ இடம்பெறுவதற்கு முன்னதாகவே, கொழும்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் தலைநகரில் குவிக்கப்பட்டனர். பேரணியை எதிர்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில், வன்முறைகளில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, முழங்காலுக்கு கீழ் சுடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதுமட்டுமன்றி, கொழும்பில் ஆர்ப்பாட்டக் காரர்கள் முற்றுகையிட்டு அடாவடித்தனங்களை ஆரம்பித்திருந்த நிலையில், ‘பொதுச் சொத்துகளையும் அரச நிதியையும் தவறாகப் பயன்படுத்துவோருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற தொனியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவது கடமையாகும். அந்த வகையில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்பாடுகளும், பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளும் சாதூர்யமானவையே எனலாம்.

ஆனால், அளுத்கம கலவரம் இடம்பெற்ற போது, திகணவில் இனவாதிகள் பெரும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்த வேளையில், வன்முறையாளர்களைக் ‘காலின் கீழ்ப்பகுதியில் சுடுமாறு’ ஏன் ஒரு முன்மொழிவாவது முன்வைக்கப்படவில்லை, ஏன் அவ்வாறானவர்களுக்கு ‘உயரிய தண்டனை வழங்கப்படும்’ என ஆட்சியாளர்கள் அறிவிக்கவில்லை என்று முஸ்லிம்கள் மனதில் எழுகின்ற வினா, தவறென்று யாரும் சொல்ல முடியாது.

மறுபுறத்தில், இன்று நாமலும் மஹிந்த அணியினரும் மேற்கொள்கின்ற இந்த முயற்சிகளை எல்லாம், நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே மேற்கொண்டிருப்பதாகக் கூற முடியாது. ஆட்சியில் இருந்தபோது, இனவாதத்தை ஒழிப்பதற்காக, இவ்வாறான ஒரு முன்முயற்சியை அவர்கள் எடுக்கவில்லை.

அதேபோன்று, நாட்டில் இனவாதத்தை இல்லாதொழிப்பதற்காக, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, இவ்வாறான ஒரு பிரயத்தனத்தை அவர்கள் மேற்கொண்டார்களா, அல்லது இனவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னின்றார்களா என்பதற்கான விடையும் நமக்குத் தெரியும்.

ஆக, இங்கு எல்லாமே பெருந்தேசிய நலனுக்காகவும் ஆட்சியாளர்களின் நலன்களின் மோதலின் (conflict of interests) அடிப்படையிலுமே நடக்கின்றது என்றே கூற வேண்டியுள்ளது. நாடு பற்றியோ இனம், அரசியல் இணக்கப்பாடு பற்றியோ யாரும் உண்மைக்குண்மையாகக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆளுக்காள் படம் காட்டி, பயம்காட்டிக் கொண்டு காலத்தைக் கழிக்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு அநியாயங்கள், இழப்புகள் ஏற்படுத்தப்படுகின்ற போது, அதைக் கட்டுப்படுத்துவதற்காகக் காட்டப்படுகின்ற அக்கறையை விடவும், ஆட்சியதிகாரத்தின் ஸ்திரத்தன்மையை உலுக்க முனைவோருக்கு எதிராக, அதிகாரமும் சட்டம் ஒழுங்கும் உயர்ந்தபட்சமாகப் பிரயோகிக்கப்படுவதைக் காண்கின்றோம்.

அதுமட்டுமன்றி, நாட்டு மக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் என்ன நடந்தாலும் பரவாயில்லை. தமது மனக்கணக்கு பலிக்க வேண்டும் என்று இன்னும் ஒரு தரப்பு செயற்படுவதையும் காணமுடிகின்றது.

இத்தனை கலவரங்கள் நடந்து, மறக்கமுடியாத இழப்புகளைச் சந்தித்த பிறகும், இனமோதலில் இருந்தோ, முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரங்களில் இருந்தோ, இன்னும் நமது ஆட்சியாளர்களும் பெருந்தேசியமும் (சிலவேளைகளில் முஸ்லிம்களும் கூட) பாடம் கற்றுக் கொள்ளாமல், இன்னுமின்னும் ‘பாடம் கற்க வேண்டும்’ என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இது வளமான எதிர்காலத்துக்கு உகந்ததல்ல.

பாடம் கற்றுக் கொள்வதிலேயோ ‘படம் காட்டுவதிலேயோ’ முழுக் காலத்தையும் கழிக்கக் கூடாது. அனுபவங்களின் ஊடாக யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு, கற்றுக்கொண்ட பாடத்துக்கு அமைவாக நாட்டை வழிப்படுத்த வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam