மெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு!!(மருத்துவம்)

Read Time:8 Minute, 30 Second

‘மெனோபாஸுக்குப் பிறகுதான் ஓவரா வெயிட் போட்ருச்சு…. அதுக்கு முன்னாடி வரைக்கும் ஸ்லிம்மாதான் இருந்தேன்’ – இப்படிச் சொல்கிற பெண்களை நிறைய பார்க்கலாம். மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு உடல் எடையில் திடீர் ஏற்றம் இருப்பது உண்மைதான். அதற்கான காரணங்கள், தீர்வுகள், வாழ்வியல் மாற்றங்கள் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மெனோபாஸ் பருவத்தில் பெண்களின் உடலில் மிக முக்கியமான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு கிடுகிடுவெனக் குறையும். ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்களைப் பல விதங்களிலும் பாதுகாக்கும் அரண். ஈஸ்ட்ரேஜென் குறைவதன் முதல் அறிகுறியாக அவர்களது உடலின் வளர்சிதை மாற்றம் மாறும். அதனால் உடல் எடையில் தாறுமாறான மாற்றங்கள் தெரியும்.

வயதாவதன் காரணத்தால் தசைகளின் அடர்த்தி குறைந்து கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உடல் கலோரிகளை எரிக்கும் ஆற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். மெனோபாஸ் பருவத்தில் உள்ளவர்கள், வழக்கமான உணவுகளை உண்டுகொண்டு, உடற்பயிற்சிகளின் அளவை அதிகரிக்காமலிருந்தால் எடை அதிகரிப்பைத் தவிர்க்க முடியாது. வழக்கமாக உடற்பயிற்சிகள் செய்கிறவர்கள்கூட மெனோபாஸை நெருங்கும்போது அதை நிறுத்திவிடுகிறார்கள். அது தவறு.

மெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு ஏன் கவனத்துக்குரியது?

உயரத்துக்கேற்ற எடை இல்லாமல் அளவுக்கதிகமாக கூடும்போது அது எந்த வயதிலுமே ஆபத்தானதுதான். குறிப்பாக மெனோபாசுக்குப் பிறகு அப்படி எடை அதிகரிப்பதன் விளைவாக இதய நோய்கள், சர்க்கரை நோய், சுவாசப்பிரச்னைகள், புற்றுநோய் போன்றவற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
தடுக்க என்ன செய்யலாம்?

உடலியக்கம் முக்கியம்

முடிந்த அளவுக்கு உடலுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வது மிகுந்த பலனளிக்கும். எடை தூக்கும் பயிற்சிகள் உடலை உறுதியாக்கி, கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். நடைப்பயிற்சி மிக நல்லது. வாரத்துக்கு 150 நிமிடங்கள் நடக்கலாம். 75 நிமிடங்கள் ஜாகிங் செய்யலாம்.

உணவில் கவனம்

30 வயதில் நீங்கள் சாப்பிட்ட மாதிரியே 50 வயதிலும் சாப்பிட்டு, எடை ஏறாமலிருக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. மெனோபாஸை நெருங்கும்போது உணவுத்திட்டத்தில் மாற்றம் வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழுதானியங்களின் அளவைக்கூட்டி, கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைக்க வேண்டும்.

காபி, டீ உட்பட எதிலும் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். மறைமுகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

சிலருக்கு நள்ளிரவில் பசிக்கும். அந்த நேரத்தில் என்ன சாப்பிடுவது எனத் தெரியாமல் சிப்ஸ், பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் எனக் கண்டதையும் சாப்பிடுவார்கள். அது தவறு. இரவு உணவு முடித்து 2 மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் பால் மற்றும் ஏதேனும் பழம் சாப்பிடுவது சிறந்தது.

ஆழ்ந்த உறக்கம் அவசியம்

மெனோபாசின் முக்கிய தொந்தரவுகளில் ஒன்று தூக்கமின்மை. தூக்கம் பாதிக்கப்படும்போது பலரும் எதையாவது கொறிக்கத் தொடங்குகிறார்கள் என்கிறது ஆய்வொன்று. பகல் தூக்கம் தவிர்ப்பதன் மூலம் இரவில் முழுமையான தூக்கம் பெறலாம். தூங்கும் அறையும் சூழலும் இதமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

மன அமைதியும் உதவும் எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு எடை அதிகரிக்கும். மன அழுத்தத்தின்போது கார்டிசால் ஹார்மோன் அதிகரிக்கும். வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர அது காரணமாகிவிடும். லேசான மன அழுத்தம் எட்டிப் பார்க்கும்போதே புத்தகம் வாசிப்பது, தோட்ட வேலை, வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றில் கவனத்தைத் திருப்பினால் அது அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

மருத்துவரிடம் பேசுங்கள்

மெனோபாஸ் பாதிப்புகளுடன் எடை அதிகரிப்பும் கட்டுக்கடங்காமல் போவதாக நினைத்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். ஹெச்.ஆர்.டி எனப்படுகிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி தேவையா என்பதை மருத்துவர் முடிவு செய்து உங்களுக்குப் பரிந்துரைப்பார்.

மெனோபாசுக்குப் பிறகான உடற்பயிற்சி வேறு எப்படியெல்லாம் உதவும்?

* எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
* ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் தவிர்க்கப்படும்.
* இதயநோய்களுக்கான அபாயம் குறையும்.
* சர்க்கரைநோய் ஆபத்து தவிர்க்கப் படும்.
* எலும்புகளும், மூட்டுகளும் பலம் பெறும்.
* செரிமானம் சீராக இருக்கும். குடலியக்கம் சீராக இருக்கும்.
* மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும்.
* மொத்தத்தில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

உடற்பயிற்சி செய்யும் முன்…

ஏற்கனவே உடற்பயிற்சிகள் செய்கிறவர் என்றால் மெனோபாஸ் தொந்தரவுகளை மருத்துவரிடம் தெரிவித்து அதே பயிற்சிகளைத் தொடரலாமா எனக் கேட்டுச் செய்யலாம். புதிதாகப் பயிற்சிகள் செய்யப்போகிறவர் என்றால் மருத்துவ ஆலோசனையின் பேரில் அவர் குறிப்பிடும் பயிற்சிகளை மட்டும் செய்யலாம். தனியாக உடற்பயிற்சி செய்வதில் சிலருக்கு அலுப்பு ஏற்படலாம். அப்படி இருப்பவர்கள் சக வயதில் உள்ளவர்களையும் உற்சாகப்படுத்தி அவருடன் இணைந்து உடற்பயிற்சிகளை செய்யலாம்.

எடை அதிகரிக்க பிற காரணங்கள்

* ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகான ஓய்வான வாழ்க்கை…. கடமைகளை முடித்துவிட்டதால் குறைந்துபோகிற உடலுழைப்பு.
* வயது. அதனால் வளர்சிதை மாற்றம் மந்தமாவது.
* குடும்பப் பின்னணி
* வெளியிடங்களில் அடிக்கடி சாப்பிடுவது.
* மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள்.
* புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ளும் கீமோதெரபி சிகிக்சை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமியார் வேடத்தில் நடிக்க தயங்கிய தேவயானி !!(சினிமா செய்தி)
Next post பிரயானிக்காக என்னை கொடுத்தேன்!!(வீடியோ)