மிருகபலியும் பெரஹெரக்களில் யானைகளும்!!( கட்டுரை)

Read Time:13 Minute, 24 Second

இந்து ஆலயங்களில், சடங்குகளுக்காக மிருகங்களைப் பலிகொடுப்பதைத் தடைசெய்வதற்காக, இந்து சமய விவகார அமைச்சுச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்ற செய்தி, நேற்று முன்தினம் (11) எம்மை எட்டியிருந்தது.

இச்செய்தி வெளியானதும், இதை எப்படி ஆராய்வது என்பதில் குழப்பம் நிலவியதென்பது உண்மை தான். ஏனென்றால், இந்து ஆலயங்களில் மிருகபலிகளைத் தடைசெய்யுமாறு, இந்து அமைப்புகளும் இந்து ஆலயங்களில் சிலவும், தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வந்தன. ஆகவே, அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட்ட ஒரு விடயமாக இது அமைந்திருக்கிறது.

மறுபக்கமாக, மிருகபலிக்கான தடைகளை எதிர்த்து வந்த அமைப்புகளுக்கு, மாபெரும் அடியாக இது அமைந்திருக்கிறது. ஏனென்றால், அண்மைக்கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், மிருகபலிக்கு எதிரான நிலைப்பாட்டையே, அநேகமான நீதிமன்றங்களும் எடுத்திருந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. எனவே, மிருகபலியைத் தடைசெய்வதற்கான அரசியல் முடிவு எடுக்கப்பட்ட பின்னர், மிருகபலிக்கு ஆதரவான தரப்பினரின் பலம் குறைவடைந்திருக்கிறது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

நாகரிகமடைந்ததாகக் கூறிக்கொள்ளும் சமூகத்தில், முன்னைய கால மரபுகள் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட வேண்டுமா என்ற கேள்வியெழுப்பப்படலாம். பழையன கழிந்து, புதியன புகுதல் தானே, ஆரோக்கியமான சமூகத்தின் இயல்பாகக் கருதப்பட முடியும்?

அப்படியாக இருக்கும் போது, “காட்டுமிராண்டித்தனம்” என்று, சமூகத்தின் ஒரு தரப்பினர் கருதும் மிருகபலியை, எதற்காக அனுமதிக்க வேண்டுமென்ற கேள்வி, நியாயமாகத் தெரியக் கூடும். ஒரு காலத்தில், “ஏற்புடையவை” என்று கருதப்பட்ட ஏராளமான சடங்குகள், இன்று வழக்கொழிந்து போயிருக்கின்றன; இல்லாவிட்டால், வழக்கொழியச் செய்யப்பட்டிருக்கின்றன. உடன் கட்டை ஏறுதல், விதவைகளின் மறு திருமணத்துக்கான தடை, பெண்களின் உரிமைகள் அடக்கப்பட்டமை போன்றனவெல்லாம், முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ இல்லாமல் செய்யப்பட்டு, உலகம் முன்னேறியிருக்கிறது.

அப்படிப் பார்க்கும் போது, மிருகங்களைக் கொன்று, அவற்றைக் கடவுளுக்குக் காணிக்கையாக்கும் மிருகபலிகளையும் தடைசெய்வது, யதார்த்த ரீதியாகப் பார்க்கும் போது, சரியானதாகவே தெரியும். ஆனால், இவற்றின் பின்னணியையும் பார்ப்பது அவசியமாகிறது.

ஒரு பக்கத்தில் பார்க்கும் போது, மிருகபலியென்பது தேவையற்றது எனத் தோன்றினாலும், மிருகபலியால் என்ன தீமை ஏற்படுகிறது எனவும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. மிருகபலியை எதிர்ப்போர் தெரிவிக்கும் விமர்சனங்களில் முக்கியமானதாக, இறை வணக்கத்துக்காக, உயிரொன்றைக் கொல்வது தவறு என்கிறார்கள்.

அதேபோல், இந்து ஆலயங்கள் புனிதமானவை எனவும், அவற்றில் மிருகங்களைப் பலியிடுவது, ஆலயங்களின் புனிதத் தன்மையை இல்லாமல் செய்கிறது எனவும், இதன் மூலமாக, இந்து சமயத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது எனவும் சொல்கிறார்கள். இவ்விரண்டு விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் பற்றியும் ஆராய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இவையிரண்டும் ஓரளவுக்கு நியாயமான விமர்சனங்களாகத் தென்படுகின்றன.

இறை வணக்கத்துக்காக உயிரைக் கொல்வது தவறா என்று கேட்டால், தெளிவான பதிலொன்றை வழங்க முடியாது தான். தாங்கள் விரும்பும் இறைவனை, தங்களுக்குப் பிடித்த வகையில் வணங்குவதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும், அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். இறைவர்களின் சிலைகளுக்குப் பாலூற்றுவதும் பூமாலை அணிவிப்பதும் ஏனைய அபிஷேகங்களைச் செய்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றால், இறைவனின் நினைவாக, இறைவனை வழிபடுவதற்காக, மிருகபலி வழங்குவதில் என்ன தவறு என்ற கேள்வியை எழுப்ப முடியும். ஒருவர் எவ்வாறு வழிபட முடியுமென்பதை, இன்னொருவர் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?

மறுபக்கமாக, ஆலயங்களின் அல்லது சமயத்தின் புனிதத் தன்மை தொடர்பான குற்றச்சாட்டுகளை, சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், மிருகபலிக்கான தடைக்கு, இது தான் பிரதானமான காரணமாக இருக்கிறது என்பது தான் உண்மையானது. இலங்கையில் காணப்படும், ஆகம விதிப்படி இயங்குகின்ற ஆலயங்கள், மிருகபலியைத் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கையை, தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருக்கின்றன.

இந்து சமயத்தின் நற்பெயரை மிருகபலி கெடுக்கிறது என்பது தான், அவர்களது குற்றச்சாட்டாக இருக்கிறது. இதன் பின்னணியில் தான், மிருகபலியைத் தடைசெய்ய வேண்டுமெனக் கோரி, வழக்குகளெல்லாம் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்து சமயமென்பது, பரந்த ஒரு சமயமாக இருக்கிறது. இந்து சமயத்துக்குள்ளேயே, பல பிரிவுகள் இருக்கின்றன. ஆகவே, இந்து சமயத்தின் கீழ் காணப்படுகின்ற ஆலயங்கள் அனைத்தும், எவ்வாறு செயற்பட வேண்டுமென, பணபலம் படைத்த ஆலயங்கள் தீர்மானிக்க எண்ணுவதென்பது, எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பது கேள்விக்குரியது.

கிராமியத் தெய்வங்களை வழிபடும் மக்கள், தாங்கள் காலாகாலமாக வழிபட்டு வந்த முறையை மாற்ற வேண்டுமென, சட்டத்தின் மூலமாகவும் ஆட்சி அதிகாரத்தின் மூலமாகவும் அழுத்தம் வழங்குவது, ஒருபோதும் ஆரோக்கியமானதாக மாறிவிடாது.

இத்தனைக்கும், மிருகபலியென்பது, கிட்டத்தட்ட அருகிப் போய்விட்ட ஒரு சடங்காக மாறிவிட்டது. அநேகமான ஆலயங்களில் தற்போது மிருகபலி என்ற பெயரில் இடம்பெறுவது, மிருகங்களை உயிருடன் காணிக்கையாக ஆலயத்துக்கு வழங்கி, அம்மிருகங்களுக்குப் பணம் செலுத்தி, உயிருடன் அவற்றை இன்னொருவர் வாங்குவது தான். ஆரம்ப காலத்தில் காணப்பட்ட, மிருகங்களைக் கொன்று, அவற்றைப் பங்கிடும் மிருகபலியென்பது, கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்விட்டது.

மிருகபலியென்பது, காலக்கிரமத்தில் இல்லாது போக வேண்டிய ஒரு சடங்கு தான் என்பதில், எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. தொடர்ச்சியாக நாகரிகமடைந்துவரும் சமூகத்தில், சிறுவர்களும் பார்க்க, விலங்குகளைக் கொல்வதென்பது, என்ன பெயரில் நடைபெற்றாலும் நாகரிகமற்றதே. ஆனால் அதற்காக, சட்டங்கள் மூலமாகவும் விதிமுறைகள் மூலமாகவும் அந்நடவடிக்கையை மாற்ற முனைவதென்பது, ஆபத்தானது. அது தான், இங்கிருக்கின்ற முக்கிய விடயமாக இருக்கிறது.

இத்தனைக்கும், மிருகங்களின் நலன் பற்றியது தான் என, அமைச்சரவை இவ்விடயத்தை நியாயப்படுத்துமாயின், பௌத்தர்களின் பெரஹெரக்களில் பயன்படுத்தப்படும் யானைகளைப் பற்றிக் கவனஞ்செலுத்தப்படாமை ஏன் என்ற கேள்வி எழுகிறது. காலாகாலமாக வெளியிடப்பட்டுவரும் தகவல்களின் அடிப்படையில், அடைத்து வைக்கப்படும் யானைகள், பாரியளவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதனால் தான், பெரஹெரக்களில் கொண்டு செல்லப்பட்ட ஒரு சில யானைகள், மதம்பிடித்து, ஆபத்துகளை ஏற்படுத்திய வரலாறுகளையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். இப்படியிருக்கும் போது, பெரஹெரக்கள் பற்றிய கவனத்தை வெளிப்படுத்தாமை ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இதுபற்றிய வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டபோது, பெரஹெரக்களில் யானைகளைப் பயன்படுத்துவதும், இந்து ஆலயங்களில் மிருகபலி கொடுப்பதும் ஒன்றா, இரண்டையும் ஒப்பிடுவது கேலிக்குரியது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஒன்றில், யானைகள் பயன்படுத்தப்படுகின்றன, இன்னொன்றில், உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இரண்டும் ஒன்று தானா என்ற கேள்வி, மேலோட்டமாகப் பார்க்கும் போது நியாயமானது தான்.

ஆனால், இலங்கை முழுவதிலும், கொல்களங்கள் இருக்கின்றன. இலங்கையில் மாமிசம் உண்போர், இலங்கைச் சனத்தொகையில் கணிசமானளவு இருந்து வருகிறனர். விலங்குகளைச் சித்திரவதை செய்யாமல், அவற்றைக் கொன்று உண்பதை, தற்போதைய நிலையில், ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஒரு கட்டத்தில், உலகம் முழுவதிலும் நாகரிக முன்னேற்றம் ஏற்பட்டு, மாமிசம் உண்பது தவிர்க்கப்படக்கூடும்.

ஆனால், எதிர்வரும் சில தசாப்தங்களுக்கும் அம்மாற்றம் இடம்பெறப் போவதில்லை. எனவே, தினந்தோறும் கொல்லப்படும் விலங்குகள், மனிதர்களால் உண்ணப்படுகின்றன என்ற ரீதியில், மிருகபலி பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

மறுபக்கமாக, யானைகளைச் சித்திரவதை செய்து, அவற்றைச் சங்கிலிகளால் கட்டி, அவற்றின் வாழ்விடங்களிலிருந்து அவற்றை நீக்கி, அடைத்து வைப்பதென்பது, உணவுக்காக விலங்குகளைக் கொல்வதை விட மிக மோசமானது. எனவே, இரண்டையும் ஒப்பிட முடியாது என்பது உண்மையானாலும், விலங்குகளைச் சித்திரவதை செய்வது தான் மோசமானது என்பதை மறந்துவிடக்கூடாது.

எனவே தான், கிராமத்துப்புற மக்களின் வாழ்வியலோடு ஒன்றித்துக் காணப்படுகின்ற ஒரு சடங்கை, எவ்வித நியாயமான காரணங்களுமின்றி இல்லாமற்செய்வதற்கு எடுக்கப்பட்டிருக்கின்ற இந்த முடிவு, நிச்சயமாகவே கண்டிக்கப்பட வேண்டியது.

அத்தோடு, அரசாங்கம் கவனஞ்செலுத்த வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது, பணபலம், அதிகார பலம் போன்றவை இல்லாமலிருக்கின்ற கிராமத்துத் தெய்வ வழிபாட்டு முறை மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை, எந்த விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் ஓவியா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! (சினிமா செய்தி)
Next post அறிவியல் உலகை ஏழை மாணவர்களுக்கு திறந்துவிடும் தேவதை!(மகளிர் பக்கம்)