ஈராக்கில் மார்க்கெட்டில் குண்டு வெடித்தது; 20 பேர் உடல் சிதறி பலி
ஈராக்கில் அரசுக்கு எதிராகவும் அமெரிக்கா படைகளுக்கு எதிராகவும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சன்னி-ஷியா முஸ்லிம்கள் மோதலும் அதிகரித்துள்ளது. நேற்று டெல் அபார் நகரில் ஒருவன் தனது இடுப்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து அதை வெடிக்கச் செய்தான். இதில் 20பேர் உடல் சிதறி பலியானார்கள். 17 பேர் காயம் அடைந்தனர். நூற்றுக் கணக்கான கடைகள் தீயில் எரிந்தன.
இதே போல அன்பார் மாகாணத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையம் மீது 2 கார் குண்டுகள் மோதின. இதில் அந்த போலீஸ் நிலையம் தகர்ந்து தரைமட்டமானது. 2 போலீஸ் அதிகாரிகள் இதில் பலியானார்கள்.
நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடந்த கார் குண்டு தாக்குதல், துப்பாக்கிசூடு ஆகிய சம்பவங்களில் 43பேர் பலியானார்கள்.
இதற்கிடையே இன்னும் சில நாட்களில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈராக்கில் பெரிய அளவில் மேலும் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க உளவுதுறைக்கு தகவல் கிடைத்துள்ளது.