வெற்றிப் பேச்சும் வெற்றுப் பேச்சும்!!(கட்டுரை)

Read Time:12 Minute, 40 Second

“பாரியதொரு யுத்தம் முடிவுக்கு வந்து, சமாதானம் நிலைத்து, தேசிய நல்லிணக்கமும் ஒற்றுமையும் பலப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு நாட்டில், மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது…” என்றவாறாக நீள்கிறது, ஐ.நா சபையின் 73ஆவது பொதுச் சபையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை.

2015ஆம் ஆண்டு தொடக்கம், நடப்பு ஆண்டு (2018) வரை, தொடர்ச்சியாக நான்கு தடவைகள், பொதுச் சபையில் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். கடந்த காலங்களில் ஆற்றிய உரைகளோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு உரை, சற்று வித்தியாசமானது.

வெளிநாட்டுத் தலையீட்டை ஏற்கத் தயாரில்லை

வெளிநாட்டுத் தலையீட்டை ஏற்கத் தயாரில்லை என, ஜனாதிபதி மைத்திரி, வெளிப்படையாகக் கூறிவிட்டார். ஆனால், இலங்கை இனப்பிரச்சினையை உள்நாட்டுக்குள் தீர்க்க முடியாது; இது, உள்நாட்டுப் பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி விட்டது. அதனாலேயே, எல்லை தாண்டி, இலங்கை விவகாரத்துக்குள், இந்தியா நேரடியாக மூக்கை நுழைத்தது.

தமிழ் மக்களினது நீண்ட கால அரசியல் அபிலாஷைகளுக்கு, ‘மூக்குப்பொடி’ போலவே, ‘இலங்கை – இந்திய ஒப்பந்தம்’ அமைந்திருந்தாலும், அன்றைய ஐ.தே.க தலைமையிலான ஜே.ஆர் அரசாங்கத்தைச் சற்றுப் பணியவைத்தே, இந்தியா இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டது.

இவையெல்லாம் நடைபெற்று, மூன்று தசாப்தங்கள் சென்று விட்டன. இச்சம்பவங்கள் நடைபெற்ற போது, பிறந்த குழந்தைகளுக்குத் தற்போது வயது, 31 ஆகி விட்டது.

ஆயுதப் போராட்டக் காலங்களில், புலிகளினது கை மேலோங்கியிருந்த காலங்களில், இதே பிராந்திய வல்லரசுகளினதும் சர்வதேச நாடுகளினதும் தலையீட்டாலும், ஒருங்கிணைந்த பலப்பிரயோகத்தாலும் மட்டுமே, இலங்கை அரசாங்கத்தால் புலிகளின் பலம் முடக்கப்பட்டது; ஒடுக்கப்பட்டது.

இந்நிலையில், வெளிநாட்டுத் தலையீடு தங்களுக்குத் தேவையான போது, நன்கு உத்தமமாக, உச்சமாகப் பயன்படுத்திக் கொண்ட பெரும்பான்மையின அரசாங்கங்கள், அதே வெளிநாட்டுத் தலையீட்டால், தமிழ் மக்கள் சொற்ப அளவில் கூட நன்மைகளை அடைந்து விடக் கூடாது என்பதில், குறியாக உள்ளன.

நம்மவர்களால், நமது பிரச்சினையை, நீதியாக, நியாயமாகத் தீர்க்கக் கூடிய உயர்வான மனநிலை இல்லை என்பதாலேயே, சர்வதேசத்தின் காலில் தமிழினம் மண்டியிட்டு நிற்கின்றது.

நாமே தீர்க்கக் கூடிய பிரச்சினை என்றால், 70 ஆண்டு காலமாகத் தீர்த்துவைக்க மூடியாமற் போனமைக்கு என்ன காரணம்? பேரினவாதத்தின், ‘ஒரே இனம்; ஒரே மொழி’, ‘இலங்கை சிங்கள பௌத்த நாடு’ போன்ற இனவாதச் சிந்தனைக் கோட்டையைத் தகர்த்துக் கொண்டு, மூவினங்களும் சமத்துவமாக வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் கூடிய ஆற்றல், விருப்பம் உடைய, பெரும்பான்மையினத் தலைவர்கள் இன்னமும் இலங்கை நாட்டில் பிறக்கவில்லை.

அவ்வாறாகப் பிறந்து வளர்ந்தாலும், மதவாதமும் இனவாதமும் அவர்களை முற்றிலும் பிழையாகவே வழி நடத்தும். அந்த வழித் தடத்திலேயே அவர்களும் பயணிப்பார்கள். இதுவே நம் நாட்டின் கறை படிந்த வரலாறும் தலைவிதியும் ஆகும்.

புத்த பகவான் போதித்த பௌத்த சிந்தனைக்கு அமைய, ஒருவரின் உடலில் ஒரு முள் பாய்ந்திருப்பின், அதனால் ஏற்படும் வேதனையைப் போலவே, அந்த முள் பாய்ந்ததாக ஏற்பட்ட சிந்தனையும் கூட, வேதனையை ஏற்படுத்துவதாக அமைகின்றது. இவ்வாறான வேதனை, எமது நாட்டு மக்களுக்கே எற்பட்டுள்ளது என, ஜெனீவாவில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதுபோலவே, தமிழ் மக்களுக்கும் யுத்தம் கொடுத்த வன்போக்கான வன்முறைகளையும் யுத்தத்துக்கு பின்னர் நடைபெறும் மென்போக்கான வன்முறைகளையும் தாங்கி, தமிழினம் நலிவடைந்து, கூனிக்குறுகி, உயிர் வாழ்கின்ற நிலை ஏற்பட்டு விட்டதே என்ற சிந்தனையும் ஞாபகமும், வேதனையை ஏற்படுத்தும் வேதனைகளாக அமைகின்றன.

இலங்கைக்கு எதிரிகள் இல்லை

“நான் அறிந்த வகையில், இத்தருணத்தில் இலங்கையாகிய எமது நாட்டுக்கு, உலகில் எந்தவோர் எதிரியும் இல்லை” என, ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இக்கூற்று, சரியாக இருக்கலாம். ஆனால், இலங்கையராகிய எமக்கு, எதிரிகள் நாட்டுக்கு வெளியில் இல்லை. ஆனால், இலங்கை நாட்டுக்கு உள்ளே, இலங்கையராகிய நாங்கள், எங்களுக்குள் எதிரிகளாகவே வாழ்கின்றோம்; வாழப் பழக்கப்படுத்தப்பட்டு உள்ளோம்.

இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்பவர்கள் என்றால், யுத்தம் ஓய்ந்த கடந்த ஒன்பது வருடங்களில், வடமராட்சி கிழக்கில் தமிழ் மீனவர்களது படகுகள், வலைகளை எரிப்பது ஏன்?

முல்லைத்தீவு, கோம்பாவிலில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களது காணிகளை, விடுவிக்க முடியாமல் இருப்பது ஏன்?

வெலிஓயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட மணலாற்று மண்ணை, அபகரிக்கும் திட்டம் தொடர்ந்து நடைபெறுவது ஏன்?

அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல் உள்ளது ஏன்?

மொத்தத்தில், அரசியல் தீர்வு பின் நோக்கிச் செல்வது ஏன்?

உண்மையில், போரற்ற சூழ்நிலையிலும், இனங்களுக்கு இடையில், சந்தேகம், பீதி, அவநம்பிக்கை, எரிச்சல், பொறாமை என்பனவற்றை அடியோடு களைந்து, உன்னதமான, உயர்வான நட்பைப் பலமாகக் கட்டி எழுப்ப வேண்டுமாயின், இலங்கையராகிய நாம், இன்னும் வெகுதூரம் இணைந்து பயணிக்க வேண்டியுள்ளது.

மீண்டுமொரு யுத்தம் ஏற்படாது தடுத்தல்

“கடந்த மூன்றரை வருடங்களில் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், மீண்டுமொரு யுத்தம் ஏற்படாது தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகளை, இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி உள்ளது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மீண்டுமொரு யுத்தம் ஏற்படாது தடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் இயலுமைகளையும் கொண்டு, இலங்கை அரசாங்கம் உள்ளது. ஆனால், ஆயுதப் போராட்டம் ஏற்பட்டதற்கான காரணங்ளை இனம் கண்டு, அதற்கு ஏற்ற வகையில் காரியங்களை ஆற்ற, விருப்பம் அற்றவர்களாக உள்ளனர்.

“யுத்தம் முடிவுக்கு வந்து, பத்து ஆண்டுகள் முடிவடையும் சந்தர்ப்பத்தில், அனைத்து உலக நாடுகளிடமும், எமது நாட்டைப் புதிய எண்ணத்துடனும் புதிய கண்ணோட்டத்துடனும் நோக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதையே, கடந்த 70 வருடங்களாக, அரசாங்க‍ங்களிடம், தமிழ் மக்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றார்கள். தமிழ் மக்களைத் தனித்த, தேசிய இனமாகக் கருதி, அவர்களது அரசியல் அபிலாஷைகளை மதித்து, அவர்களது எண்ணங்களை மதித்து, நேர்மையான கண்ணோட்டத்துடன், பிரச்சினைக்குப் பரிகாரம் காணுமாறு கோரி வருகின்றார்கள்.

ஆனால், நல்லாட்சி, நல்லிணக்கம் என்ற புதிய கண்ணோட்டத்துடன் அல்லது தோரணையுடன், தமிழர் பகுதிகளில் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள், தமிழர் பிரதேசங்களில் பெரும்பான்மையின அரச ஊழியர்கள் நியமனங்கள், அமைதியின்மையை உருவாக்க குழுக்களை ஏவிவிடுதல், காலங்காலமாக தமிழர் தொழில் செய்த கடற்பிராந்தியங்களில், பெரும்பான்மையின மீனவர்களைத் தொழில் செய்ய ஊக்குவித்தல்,தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய இடம் என, தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்படும் நிலத்தில் பௌத்த அடையாளங்களைத் திணிக்கும் செயற்பாடுகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இலங்கையைப் புதிய கண்ணோட்டத்துடன் நோக்குமாறு ஐ.நாவிடம் கோருபவர்கள், தமிழ் மக்களைப் பழைய கண்ணோட்டத்துடன் ஏன் நோக்குகின்றார்கள்? பிரச்சினைகள் உருவாகக் காரணிகளான பழைய செயற்பாடுகளைத் தொடர்வதன் நோக்கம் என்ன? யுத்தத்தின் வெற்றிக்கு பொறுப்புக் கோருபவர்கள், ஏன் நிலையான தீர்வை அடைவதற்குப் பொறுப்புக் கூறப் பின்னடிக்கின்றார்கள்?

வெற்றியாளர்கள், சூழ்நிலைகள் மீது குறை கூறுவது இல்லை. அதற்கான மூலவேர்களைக் கண்டறிகின்றார்கள்; திருத்துகின்றார்கள்; திருந்துகின்றார்கள்.

நம் நாட்டில், இன விடுதலைக்கான போர், தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய அழிவைச் சொல்லில் அளவிட முடியாது. விரும்பத்தகாத சில பல சம்பவங்கள், சிங்கள – தமிழ் உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. ஆனால், அதைச் சரி செய்யக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?

வாய்த்த பொன்னான வாய்ப்பை, நல்லாட்சி அரசாங்கம் தட்டிக் கழிப்பின், இலங்கையே இருண்டு விடும். நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. முக்கிய பிரச்சினையான, இனப்பிரச்சினைக்கு ஆட்சியாளர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மிகக் குறைவு.

ஐ.நாவில், ஜனாதிபதி பேசிய பேச்சு, பெரும்பான்மையினக் கடும்போக்காளர்களுக்கும் பேரினவாத ஆட்சியாளர்களுக்கும் வெற்றிப் பேச்சாக அமையலாம். ஆனால், மறுபக்கத்தில், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு, ‘வெற்றுப் பேச்சு’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியக்க வைக்கும் Israel நாட்டின் 18 உண்மைகள்!!(வீடியோ)
Next post செரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்!!(மருத்துவம்)