கலப்பட ஐஸ்க்ரீம்… கணக்கில்லாத ஆபத்து!High Sugar… Bad cholesterol… Chemical flavours… கலப்பட ஐஸ்க்ரீம்… கணக்கில்லாத ஆபத்து!(மருத்துவம்)

Read Time:11 Minute, 17 Second

வயது வித்தியாசம் இன்றி எல்லோரையும் ஆசை கொள்ள வைக்கும் ஐஸ்க்ரீம், பலரது விருப்பமான தேர்வாக எப்போதும் இருக்கிறது. அதிலும் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய உணவுப்பட்டியலில் ஐஸ்க்ரீமுக்குத்தான் முதல் இடம். இத்தகைய ஐஸ்க்ரீம் தற்போது பல்வேறு வடிவங்களில், பலவிதமான சுவைகளில், கண்ணைக் கவரும் நிறங்களில் கடைகளில் கிடைக்கிறது. அதிக விருப்பமும், அதிக பயன்பாடும் கொண்டதாக மாறிவிட்ட ஐஸ்க்ரீம் நல்லதுதானா என்று உணவியல் நிபுணரான புவனேஸ்வரியிடம் கேட்டோம்…

ஐஸ்க்ரீம் என்ற உணவுவகையைப் பற்றிச் சொல்லுங்கள்…

‘‘நாம் உண்ணும் உணவுப் பொருட்களை திட, திரவ மற்றும் கூழ்ம நிலை உணவுகள் என்று வகைப்படுத்தலாம். ஐஸ்க்ரீமானது கூழ்ம நிலையிலுள்ள ஒருவகை இனிப்பு உணவுப் பண்டம். உடல் மெலிந்திருப்பவர்களுக்கும், ஆற்றல் குறைவாக உணர்கிறவர்களுக்கும் ஐஸ்க்ரீம் உதவி செய்யும் உணவுப்பொருளாகவே இருக்கிறது. அதனால், ஐஸ்க்ரீம் சாப்பிடுவது ஆரோக்கியக் கேடு என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. ஆனால், இன்று நமக்கு கிடைக்கும் ஐஸ்க்ரீம் எல்லாம் இத்தகைய தரத்துடன் தயாரிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி. அதுதான் பிரச்னையே!’’

தரமான ஐஸ்க்ரீம் எந்த வகையில் தயாரிக்கப்படும்?

‘‘பால் ஏட்டுடன் சர்க்கரைப்பாகு, பழங்கள், கொட்டைகள்(Nuts), தேன், முட்டை மற்றும் வெனிலா எசன்ஸ் போன்ற பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிப்பதுதான் தரமான ஐஸ்க்ரீம். ஆரம்ப காலங்களில் அப்படித்தான் தயாரிக்கத் தொடங்கினார்கள். பால் ஏட்டினை நன்கு அடித்து கலக்கினால் மிருதுவான க்ரீமாக மாறும். அந்த க்ரீமானது புளிக்க ஆரம்பித்த பிறகு (Yeast formation method) அதன் பரும அளவு (Volume) அதிகரிக்கும். இதுபோன்று இயற்கையான முறையிலும், சுகாதாரமான முறையிலும் அக்காலங்களில் ஐஸ்க்ரீம் தயாரித்தார்கள்.’’

தற்காலத்தில் ஐஸ்க்ரீம் தயாரிக்கப்படுவதில் என்ன சிக்கல்?

‘‘தற்போது நவீன முறையில் எந்திரங்களின் மூலம் காற்றை செலுத்தி, பால் ஏட்டிலிருந்து தயாரிக்கப்படும் (Air formation method) க்ரீமின் பரும அளவு 30 முதல் 50 சதவிகிதம் வரை அதிகமாக்கப்படுகிறது. மேலும் அதன் சுவை, நிறம் மற்றும் வணிக காரணங்களுக்காக அதில் சில வேதிப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கிறார்கள். இதனால் நமக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

ஐஸ்க்ரீமை வாயில் போட்டவுடன் கரைய வேண்டும் என்பதற்காக அதில் சில வேதிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதில் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதுதான் ஐஸ்க்ரீமின் சுவையை அதிகப்படுத்தி நம்மை திரும்பத் திரும்ப சாப்பிடத் தூண்டுகிறது.

பொட்டாசியம் கார்பைடு மற்றும் செயற்கையான நிறமிகளை சர்க்கரைப் பாகுடன் கலந்து அதை கெட்டியாக்கி அதன் பிறகு ஐஸ்க்ரீமில் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று சேர்க்கப்படும் வேதிப் பொருள்களால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.’’

குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்களே…

‘‘தற்போது குழந்தைகள் வெளியில் ஓடி ஆடி விளையாடாமல் வீட்டுக்குள்ளேயே டிவி, வீடியோகேம் போன்ற பொழுதுபோக்கு சாதனங்களில் தங்கள் நேரத்தை அதிகமாக செலவிடும் சூழல் உள்ளது.

இதுபோன்ற சூழலில் குழந்தைகளுக்கு அதிகளவு கொழுப்புச்சத்து நிறைந்த ஐஸ்க்ரீம்களை அதிகளவில் சாப்பிடக் கொடுப்பது அவர்களுடைய உடல்நலனுக்கு உகந்ததல்ல. அதிகளவு ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் இதுபோன்ற சூழலில் வளரும் குழந்தைகளின் உடல்பருமன் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இத்தகைய உடல்பருமன் பிரச்னைகளால் குழந்தைகளுக்கு இளம் வயதிலே சர்க்கரைநோய், இதயக் கோளாறு போன்ற பலவிதமான உடல்நல பிரச்னைகள் உண்டாகிறது. ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது நமது உடலில் இருக்கும் சுறுசுறுப்புத்தன்மை குறைந்து உடலில் ஒருவித மந்தத்தன்மை ஏற்படுவதோடு, சிலருக்கு வயிறு உப்பசம் (Bloating) ஏற்படவும் வாய்ப்புள்ளது. இன்னும் எத்தனையோ கலப்படங்களின் மூலமே இன்று ஐஸ்க்ரீம் தயாரிக்கப்பட்டு நம்மிடம் வருகிறது.’’

இன்னும் என்னென்ன உடல்நலனுக்கு தீங்கிழைக்கும் பொருட்கள் ஐஸ்க்ரீமில் இருக்கின்றன?

‘‘ஐஸ்க்ரீம் தயாரிக்கப் பயன்படுத்தும் பாலில் அது கெடாமல் இருப்பதற்காக சில வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகிறது. ஐஸ்க்ரீம் தயாரிக்கும்போது அதில் சேர்க்கப்படும் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் பொதுவாக அழகுசாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற ரசாயனங்கள் டி.என்.ஏ.வில் உள்ள மைட்டோகாண்ட்ரியத்தில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகின்றன என்று ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் பேராசிரியர் பீட்டர் பைபர் 2007-ம் ஆண்டு தெரிவித்திருக்கிறார்.

மேலும் இப்பொருள் நரம்பு சார்ந்த நோய்கள், புற்றுநோய் மற்றும் இளம் வயதிலேயே முதுமைத்தன்மை போன்ற பிரச்னைகள் உருவாக காரணமாக இருக்கிறது. எனவே, இதை உணவுப் பொருள்களில் சேர்க்கக்கூடாது என்று FDA தடை செய்துள்ளது.

மேலும் ஐஸ்க்ரீம் எளிதில் உருகாமல் இருப்பதற்காக அதில் Polysorbate-80 என்கிற வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இப்பொருள் சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இதனால் உடலில் அலர்ஜி ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல பரம்பரையாக வரக்கூடிய புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தூண்டும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

வெனிலா எசன்சுக்குப் பதிலாக ஒரு மலிவான மாற்றுப் பொருளாக Piperonal என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. National Library of Medicine-ன் Hazardous Substances Data Bank (HSDB) ஆனது. இதை மிதமான நச்சுத்தன்மையுடைய பொருளென்றும், மனித தோலில் எரிச்சல் உண்டாக்கும் பொருளென்றும் பட்டியலிட்டுள்ளது. Pineapple எசன்சுக்குப் பதிலாக Ethyl Acetate என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.

இது தோல் மற்றும் துணி உற்பத்தியின்போது அவற்றை சுத்தப்படுத்தும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் நீராவியானது நாள்பட்ட நுரையீரல், கல்லீரல் மற்றும் இதய சேதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாக காரணமாகிறது. செர்ரி எசன்சுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் Aldehyde C-17 என்கிற எரியக்கூடிய திரவப் பொருளானது சாயங்கள், பிளாஸ்டிக், ரப்பர் போன்றவை உற்பத்தி செய்யும்போது பயன்படுத்தப்படுகிறது.’’
இத்தகைய கலப்படத்தால் என்னென்ன கேடுகள் வருகின்றன?

‘‘அதிக சர்க்கரை, கெட்ட கொழுப்பு, பல்வேறு ரசாயனக் கலவைகளால் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம் பருமன் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கும். ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் பொட்டாசியம் கார்பைடு என்கிற வேதிப்பொருளால் அசதி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. சிலர் ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் முட்டைக்குப் பதிலாக Diethylene glycol (DEG) என்கிற பொருளைப் பயன்படுத்துகின்றனர்.

இது என்சின்களின் உறைவுத் தன்மைக்கு எதிராக செயல்படுகிற பொருளாகவும், Paint remover-ஆக பயன்படும் பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்தப் பொருளால் சிறுநீரகப்பை மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக்கூடும். இது போன்ற தீங்கான மூலப்பொருட்கள் நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அழிவிற்குக் காரணமாகிறது. மேலும் இதனால் அல்சர், புற்றுநோய், இதயவலி மற்றும் செரிமானப் பிரச்னைகளும் உண்டாகிறது.

எனவே, முடிந்தவரை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது சாப்பிடுவதாலும் பெரிய பிரச்னை இல்லை. கலப்படங்கள் நிறைந்ததாகவே இன்று சந்தைகளில் ஐஸ்க்ரீம் விற்கப்படுவதால் அடிக்கடி சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்கியக் கேட்டினையே உண்டாக்கும்!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வா ரயில் விடப்போலாம் வா!!(மகளிர் பக்கம்)
Next post Russia-வை பற்றின 15 உண்மைகள்!!(வீடியோ)