தமிழர் அபிலாஷைகளையும் தீர்க்குமா ஜனநாயகத்துக்கான போராட்டம்?(கட்டுரை)

Read Time:12 Minute, 51 Second

ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கையில் இன்று வலுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கை தேசம், சர்வாதிகாரச் சிந்தனைகொண்டவர்களால் ஆளப்படுகிறதா என்கின்ற கேள்வி, பரவலாகவே அனைவரிடமும் எழுந்துள்ளது.

இறைமை என்கின்ற ஒற்றைச்சொல்லுக்குள், போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாகக் கூறிவந்த இலங்கை, இன்று சர்வதேசத்தின் கண்டனங்களுக்குள்ளாகும் போது, இறைமையிலும் மேலானது சர்வதேசத்தின் பார்வை என்பதை எண்ணத்தலைப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறி நிலை, அரசமைப்பு முறைமையை மாத்திரமல்ல, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையையும் மீள் பரிசீலனைக்குட்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.

நல்லாட்சி அரசாங்கம் என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் வாக்குகளையும் மிக அதிகளவில் பெற்று ஆட்சிபீடமேறிய மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானம், சரியா பிழையா என்பதற்கப்பால், அரசமைப்பின் மொழியாக்கங்களால் ஏற்படும் கருத்தியல் மாற்றங்களையும் தெளிவாகச் சுட்டிநிற்கின்றது.

ஏனெனில், வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த ஜனாதிபதி, இலங்கையில் சிங்கள மொழியிலான அரசமைப்பையே நடைமுறைப்படுத்துவதாகவும், ரணில் விக்கிரமசிங்க ஆங்கில மொழி மூலமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அரசமைப்பையே வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்குக் காட்டியதுடன், அதில் உள்ளதையே அவர் கூறி வருகின்றார் என, செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், புதிதாகக் கொண்டுவரப்படவிருந்ததென தமிழ் அரசியல்வாதிகளால் சொல்லப்பட்ட அரசமைப்பில் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்ற சொற்பிரயோகமும் சர்ச்சை நிறைந்ததாக அமையும் என்பது தெளிவு.

பிரதமரை நியமிப்பது என்ற விடயத்தில், இலங்கையின் அரசமைப்பானது விவாதப் பொருளாகியுள்ளது. ஏனெனில், நிறைவேற்று ஜனாதிபதிக்கிருந்த பிரதமரை நீக்குதல் என்ற அதிகாரம், 19ஆவது திருத்தத்தில் மாற்றமடைந்துள்ளது. அவ்வாறெனில் இவ்விடயம் ஏன் சர்ச்சையைக் கிளப்பகின்றது என்பதே தற்போதைய கேள்வியாகவுள்ளது.

இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்ன என்பதும், அதனூடாக தமிழ் மக்களுக்காகச் சாதிக்கக் கூடிய விடயங்கள் எதுவாகின்றன என்ற விடயத்தையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய தேவையுள்ளது. இறுதிக்கட்ட யுத்தம் நடத்தப்பட்ட விதம் குறித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, பல்வேறான குற்றச்சாட்டுகள் காணப்படும் நிலையில், அவரை மீண்டும் பிரதமராகக் கொண்டுவருவதற்கு எவ்வாறு அனுமதிக்க முடியும் என, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளைத் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்து வருகிறது.

இதற்குமப்பால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல மில்லியன் ரூபாய் பேரம் பேசப்படுவதாகவும், இரு தரப்புகளுமே தமது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, பிரதிநிதிகளை வளைத்துப்போடும் உபாயங்களைக் கையாண்டு வரும் நிலையும் உள்ளதாக, வெளிப்படையாகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகளும், இந்தச் சலுகை அரசியலுக்குள் சிக்குண்டு, சிலர் சின்னாபின்னமாகியும் சிலர் தக்கெனப் பிழைத்தும் காணப்படும் நிலை இதுவரையும் காணப்படும் நிலையில், 14ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இச்சூழல், தற்போதைய அரசியல் நிலைமை, தமிழ் மக்களுக்கு எவ்வாறான நன்மையைக் கொண்டு வரப்போகின்றது என்பது தொடர்பில் ஆராயப்படவேண்டும். நல்லாட்சி என்ற அரசாங்கத்தை நிறுவியதில் பெரும் பங்காற்றிய தமிழ் அரசியல்வாதிகள், அதனூடாகச் சாதித்தவை எவையும் இல்லாத நிலையிலேயே, அரசியல் குழப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

தமிழ் மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் சென்ற பிரதிநிதிகள், இன்று தீர்மானிக்கும் சக்தியாக மிளிர்கின்ற போதிலும் கூட, தமிழ் மக்கள் மத்தியில் அவர்களுக்குள்ள எதிர்ப்பு அல்லது விமர்சனம், தற்காலச் சூழலில் அதிகரித்துள்ளது எனலாம். அது, கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, கூட்டமைப்பு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவோ அல்லது தமது உரித்து, கருத்துச் சொல்லக்கூடிய உரிமை தமக்குள்ளது என்ற எண்ணப்பாட்டின் வெளிப்பாடேயாகும். இது, கூட்டமைப்பின் சரிவை ஒரு தளத்துக்கு மேல் கொண்டு சென்றுள்ளது எனலாம்.

வடக்கில் வேக வேகமாக ஆரம்பிக்கப்பட்ட புதிய அணிகள், கூட்டமைப்பின் பலத்தைச் சிதைக்கும் வண்ணம் இருக்கும் என்ற தோற்றப்பாடு காணப்பட்ட நிலையில், அரசியல் தளம்பல் நிலையானது, கூட்டமைப்பின் நிலைபேறு தன்மையை மீண்டும் நிலைநிறுத்தியிருக்கின்றது என்றே கருதவேண்டியுள்ளது.

யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் எதனையும் சாதிக்கமுடியாத நிலையில், 2015இல் இருந்து, தடவிக்கொடுக்கும் அரசியல் நிலைப்பாடே, மத்தியில் காணப்பட்டது.

இந் நிலையில் கூட்டமைப்பு மீதான பார்வை தமிழ் மக்களால் அதிகம் வைக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேசத்திடம் தமிழர்களின் நிலை தொடர்பாக எடுத்தியம்புவதற்கான காலச் சூழலும் இதுவே என்பது மறுப்பதற்கில்லை. ஜனாதிபதியும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எவ்வாறு வெளிநாட்டு இராஜதந்திரிகைளை இச்சந்தர்ப்பத்தில் அழைத்துப் பேசி வருகின்றனரோ, அதேபோன்றதான செயற்பாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்படுத்த வேண்டும். பலரும் இதைத் தெரிவித்தும் வருகின்றனர்.

ஏனெனில், கடந்த 3 ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கம் செய்தவற்றையும் தமிழர்களின் கோரிக்கைகளையும் பட்டியலிட்டுத் தெளிவுபடுத்தவேண்டிய தேவை உள்ள நிலையில், வெறுமனே “மஹிந்த வரவே கூடாது என்பதற்காக வாக்களிக்கப் போகின்றோம்” என்பதானது, எதனையும் செய்யாத ரணிலை மறைமுகமாக ஆதரிப்பதான தோற்றப்பாடாகவே உள்ளது.

எனினும், கூட்டமைப்பினர் தமது நிலைப்பாட்டைத் வெளிப்படுத்துவதில் ஏற்படுத்தி வந்த தாமதமே, பல்வேறு ஊகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணமாகியிருந்தது.

இதற்கு மத்தியில், கனடாவுக்குச் சென்றுவந்த வியாழேந்திரனைக் கூட்டமைப்பினர் கண்டுபிடிக்க முன்னரே, பிரதியமைச்சர் பதவியைப் பெற்றிருந்தார்.

அதன் பிரதிபலிப்பாக, மைத்திரி, மஹிந்த மீதான கொதிநிலை, கூட்டமைப்புக்குள் இன்னும் குறையாத நிலையிலேயே, வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துரதிர்ஷ்டவசமாக, தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர். எங்களுடைய கட்சியைக் கூறுபோடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார். இது, அவருடைய இறுதிக்கான ஆரம்பம். அவருக்குப் பகிரங்கமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களுடைய உப்பைத் தின்று வந்து, எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி, அரை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து இருக்கின்ற அந்த மோசமான செயலை செய்த ஜனாதிபதி, உங்களுக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம்? எங்களுடைய மக்களைக் கூறு போடுவதற்கா உங்களை நாங்கள் கொண்டுவந்தோம். தேர்தலிலேயே தோற்றிருந்தால், ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று சொன்னீர்களே? ஆறடி நிலத்துக்குள் போகாமல் உங்களைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா? இன்று, எங்களைப் பிரித்துப் போடுவதற்காகச் சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக மாறி இருக்கிறீர்கள். இது உங்கள் அழிவுக்கான ஆரம்பம்” என தெரிவித்தார். (ஜனாதிபதியை, ஒருமையிலேயே எம்.ஏ. சுமந்திரன் விளித்தார் என்று செய்திகள் வெளியாகின்ற போதிலும், அரசியல் நாகரிகம் கருதி, அவரது கருத்துகளில் அது மாற்றப்பட்டிருக்கிறது)

இது இவ்வாறிருக்க, தற்போது பெரும்பான்மையைக் கொண்டிருக்காதவர் என்று கருதப்படுகின்ற மஹிந்த ராஜபக்‌ஷ, இன்னொரு தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றிபெறுவார் அல்லது தனித்து ஆட்சியமைப்பார் என்ற பார்வை காணப்படும் நிலையில், அதன் காரணமாக, ஐ.தே.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கட்சி தாவி, 14ஆம் திகதிக்குள், பெரும்பான்மையை மஹிந்த பெறக்கூடிய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஜனநாயகத்தை நிறுவுவதாகத் தெரிவித்து, ரணிலுக்கு ஆதரவாகவும் மஹிந்தவுக்கான எதிர்ப்பாகவும் மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வுகளால், தமிழர்களுக்கான அபிலாஷைகளைத் தமிழ்த் தலைமைகள் எந்தளவுக்கு முன்நகர்த்தப்போகின்றன என்பது, பெரும் வினாவை எழுப்பியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நௌகாசனம்!!( மகளிர் பக்கம்)
Next post விபச்சார சுற்றுலா : கொடி கட்டிப் பறக்கும் முதல் 10 நாடுகள்!!(வீடியோ)