உடன்கட்டை ஏறிய 95 வயது மூதாட்டி!
மத்திய பிரதேச மாநிலம் சதார்பூர் அருகே 95 வயது மூதாட்டி தனது கணவரின் சிதையில் குதித்து உடன்கட்டை ஏறியுள்ளார். இம்மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் தனது கணவரின் சிதைக்கு வைக்கப்பட்ட தீயில் குதித்து உடன்கட்டை ஏறினார். இந்நிலையில் மீண்டும் ஒரு உடன்கட்டை சம்பவம் நடந்துள்ளது.
ம.பி. மாநிலம் சதார்பூர் அருகே உள்ள பானியானி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்புத். இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது மரணத்தால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி குரியா, தனது கணவருடன் சேர்ந்து உடன்கட்டை ஏறப் போவதாக தெரிவித்தார்.
ஆனால் பாட்டி எதையோ பேசுகிறார் என்று யாரும கண்டுகொள்ளவில்லை. இந் நிலையில் ராஜ்புத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த குரியா, திடீரென தீயில் பாய்ந்து எரிந்து போனார்.
சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவாகவில்லை. குரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.