வடக்கு, கிழக்குப் போராட்டங்களில் பீரங்கிப் படையணியினரின் பங்களிப்பு மகத்தானது – -பிரிகேடியர் ஜகத்
ஊடகவியலாளர் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன். எனினும் ஒரு யுத்த களம் எவ்வாறு இருக்கும் என்பதை ஊடகவியலாளர்கள் நேரடியாக அறிந்து கொள்வதற்கு இதுவொரு வாய்ப்பாக அமைந்து விட்டது என பீரங்கிப் படையணித் தளபதி பிரிகேடியர் ஜகத் ரபுக்பொத்த தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் இன்றைய உண்மை நிலையை தெளிவுபடுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தினால் அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, போர் நடவடிக்கைகளில் பீரங்கித் தாக்குதல்கள் முக்கிய இடத்தை வகித்துள்ளதாக வரலாற்று ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று வடக்கில் படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதல் நடவடிக்கைகளில் பீரங்கித் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகளின் முக்கிய தளங்களைத் தகர்த்து அவர்களைப் பின்வாங்கச் செய்ய முடிந்தது.
மாவிலாறு, கட்டைப்பரிச்சான் மற்றும் சம்பூர்ப் பிரதேசங்களை மீட்பதற்காகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ். தீபகற்பத்தைப் பாதுகாப்பதற்கும் இப்பீரங்கிப் படையணி முக்கிய பங்கு வகித்தது. ஆகஸ்ட் 11 ஆம் திகதி முதல் இன்று வரைக்கும் பீரங்கிப் படையினர் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் யாழ். மண்ணில் பீரங்கி குண்டுகளுடன் இரவு பகலாகப் போராடி வருகின்றனர். இவர்களது வீரத் தியாகத்தை இலங்கை மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட பயங்கரவாதிகளில் 90 சதவீதமானோரை கொன்ரொழித்தவர்கள் இந்தப் பீரங்கிப் படையினரே. பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து எமது நாட்டை விடுவித்து மக்கள் நிம்மதியுடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்காக தமது குடும்பத்தினரையும் உறவினர்களையும் மறந்து வடக்கில் வீரத்தியாகம் புரியும் பீரங்கிப் படையணி வீரர்களின் தியாகம் போற்றத்தக்கதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.