நீராலானது இவ்வுலகு!!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 47 Second

“உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன” என்று காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு – ஐ.பி.சி.சி (Intergovernmental Panel on Climate Change (IPCC)) அறிவித்துள்ளது. மனித உற்பத்தியின் காரணமாக பூமியின் வெப்பம் உயர்ந்து வருவதும், அதன் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றங்கள் நாம் அறிந்ததே.

2015 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற “உலகநாட்டு தலைவர்களின் மாநாட்டில்” உயர்ந்துவரும் பூமியின் வெப்பத்தை 1.5 டிகிரி முதல் 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் ஒத்துக்கொண்டு அதுகுறித்து தங்கள் நாடுகளின் நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது என்பது தனி கதை! 2015ம் பாரிஸ் ஒப்பந்தப்படி உலக நாடுகள் செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்த அறிவியல் அறிஞர்கள் கொண்ட மாநாடு கொரியாவில் இந்த மாதம் நடந்து முடிந்துள்ளது. இதில் எந்த அளவுகோலை ஏற்றுக்கொள்வது. 1.5 டிகிரி அல்லது 2 டிகிரி என்பதை உலகின் பல அறிவியலாளர்கள், பல்வேறு தரவுகளின் மூலம் ஆராய்ந்து பல நாட்டு பிரதிநிதிகளுடன் விவாதித்து அறிக்கை ஒற்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கை பல அதிர்ச்சி தகவல்களை கொண்டுள்ளதாக உள்ளது. இந்த அறிக்கை பல்வேறு விஷயங்களை வெளிக்கொண்டுவந்துள்ளது. பூமியின் வெப்பம் 2.0 டிகிரி அளவிற்கு உயர்ந்தால் மிகவும் மோசமான அழிவுகள் ஏற்படும் என்றும், 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தி னால் அதன் விளைவுகள் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது. ஏற்கனவே பூமியின் வெப்பம் 1.0 டிகிரி அளவிற்கு உயர்ந்துவிட்டதாகவும், இப்போது நாம் செய்துகொண்டிருக்கக்கூடிய விஷயங்கள் தொடர்ந்தால் (மாசு ஏற்படுத்துவது தொடர்ந்தால்) 0.5டிகிரி 2030 ஆம் ஆண்டிற்குள் உயர்ந்துவிடும் என்றும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.

மேலும் உலகின் தட்பவெப்ப நிலை 1.5 டிகிரி வெப்ப உயர்விற்கும், 2 டிகிரி வெப்ப உயர்விற்கும் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்றும் அறிக்கை கூறியுள்ளது. பூமியின் தட்பவெப்ப நிலை 2 டிகிரி அளவில் அதிகரிக்கும் போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. 1.5 டிகிரி அளவில் பூமியின் தட்பவெப்ப நிலை அதிகரிக்கும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை பாதியாக குறையும் என்று தற்போதைய அறிக்கை கூறுகிறது. குறிப்பாக தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படப்போகும் மக்களின் எண்ணிக்கை பாதியாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல உலகில் உணவு நெருக்கடி ஏற்படாமல் இருக்க குறைந்தபட்சம் தட்பவெப்ப மாற்றமான 1.5 டிகிரி அளவில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. உலகின் தட்பவெப்ப நிலை 2 டிகிரி அளவில் மாற்றம் நிகழ்கின்ற போது உண்டாகக் கூடிய மாற்றத்தை மனித இனம் எதிர்கொள்வது மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது. அதிலும் குறிப்பாக வெப்பத் தன்மையை நம்மால் எதிர் கொள்ள முடியாது என்று அறிக்கை கூறியுள்ளது. இப்படியாக சூழலில் மிக மாற்றம் நிகழும் போது பலர் இறக்க கூடும் என்றும் அறிக்கை கூறுகிறது.

2 டிகிரி அளவிலான காலநிலை மாற்றம் காரணமாக, பல உயிரினங்கள் அடியோடு அழிந்திட நேரிடலாம் என்றும் அறிக்கை கூறுகிறது. குறிப்பாக பூச்சிகளின் எண்ணிக்கை குறையலாம். இதன் காரணமாக மரகந்த சேர்க்கை குறையவும், உணவு உற்பத்தி குறையவும் வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறுகிறது. கடலில் உள்ள பவளப்பாறைகள் முற்றிலும் அழிந்துவிடக் கூடும். இவை தான் நமக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. மேலும் கடல் மட்டம் அதிகரிக்கக் கூடும் என்று கூறுகிறது அறிக்கை. அதோடு கடலின் அமிலத்தன்மை ஏற்கனவே அதிகரித்துள்ளது.

அதனால் கடலின் ஆக்ஸிஜன் அளவு குறைத்து வருகிறது, இந்த நிலையில் 2 டிகிரி அளவிற்கு வெப்பம் உயர்ந்தால் 30 லட்சம் டன் அளவிற்கு கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும், 1.5 டிகிரி அளவிற்கு உயர்ந்தால் பாதிக்கப்படும் அளவு பாதி குறையும் என்று அறிக்கை கூறுகிறது. ஆர்டிக்கடல், நிலத்தைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக வெப்பமாகி வருகிறது, 2 டிகிரி அளவிற்கு உயர்ந்தால் 10 வருடங்களுக்கு ஒரு முறை “பனி இல்லா” ஆர்டிக் இருக்கும் என்றும், அதுவே 1.5 டிகிரி அளவிற்கு உயர்ந்தால் 100 வருடத்திற்கு ஒருமுறைதான் “பனி இல்லா ஆர்டிக் கடல்” ஏற்படும் என்று அறிக்கை கூறுகிறது.

எனவே குறைந்த பட்சம் பூமியின் தட்பவெப்ப நிலை என்பதை 1.5 டிகிரிக்குள்ள அளவிலான மாற்றத்தை மட்டும் கொண்டு இருக்கும் அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. இப்படி பூமியின் தட்பவெப்ப நிலையை 1.5 டிகிரி அளவிலான மாற்றத்திற்குள் வைத்திருக்க உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் கூறுகிறது அறிக்கை. 2050 ஆம் ஆண்டிற்குள்ளாக அனல்மின் நிலையங்களின் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் 75% வரை புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்கள் பயன்படுத்தப்படவேண்டும்.

வெளிவரும் கார்பனை சேமித்து வைக்கக்கூடிய தொழில்நுட்பத்துடன்தான் இயற்கை வாயுக்களால் தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். 2032 ஆம் ஆண்டிற்குள் மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைட் அளவு பாதியாக குறைக்கப்பட வேண்டும். மேலும் 2050ம் ஆண்டிற்குள் அது பூஜ்யமாக இருக்கவேண்டும். காடுகள் இயற்கையாய் மனிதர்கள் வெளியிடக்கூடிய கார்பனை உள்வாங்கும் ஆற்றல் கொண்டவை, அதனால் காடுகளின் அளவுகளை பல மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் அதிகரிக்க வேண்டும்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில், காலநிலை மாற்றம் காரணமாக ஏற்கனவே பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த பல வருடங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதியில் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள் தாக்கி வருகின்றன. குறிப்பாக சூறாவளிக் காற்று, வெப்பக் காற்று, புயல் காற்று, வெள்ள பாதிப்பு எனப் பல இயற்கை சீற்றங்களை இந்தியா சந்தித்து வருகிறது. மும்பை, சென்னையை தொடர்ந்து கேரளாவில் நிகழ்ந்த வெள்ள பாதிப்பை சமீபத்திய நிகழ்வாக கூறலாம். காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் உணவு உற்பத்தியில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

மேலும் தண்ணீர் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் உலகின் தட்பவெப்ப நிலை இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும். அதுவும் தற்போதைய ஐ.பி.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் நிகழ இருக்கின்ற மாற்றங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. அதிகரிக்கும் வெப்பநிலை, பூமியின் மத்தியப் பகுதியில் உள்ள நாடுகளின் உணவு உற்பத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இதன் மாற்றம் தற்போதே தெரிய துவங்கியுள்ளது.

வெப்பம் உயர்வதால் உணவு உற்பத்தி பாதிப்பது மட்டுமல்லாமல், உற்பத்தியாகும் உணவின் ஊட்டச்சத்து குறைவாகவும் இருக்கும். குறிப்பாக சோளம், அரிசி உற்பத்தி பாதிக்கப்படும். கடந்த ஒவ்வொரு ஆண்டும் உணவு உற்பத்தியின் மகசூல் 4 முதல் 9 சதவீதம் வரை குறைந்துவருகிறது. மாறி வரும் சூழல் காரணமாக பெருவாரியான மக்கள் இடம்பெயர்ந்து செல்லக் கூடிய நிலையும் ஏற்படும். அதாவது காலநிலை மாற்றம் காரணமாக புதிய வகை அகதிகள் உருவாக இருக்கின்றனர். வெப்ப மண்டலமான இந்தியா போன்ற நாடுகளில் ஏற்பட்டு வரும் தட்பவெப்ப மாற்றம் காரணமாக புதிய வகை நோய்கள் உண்டாகலாம்.

குறிப்பாக பறவைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற புதிய வகை நோய்களும், நோய்க் கிருமிகளும் உண்டாகக் கூடும். மேலும் பல தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் பலவும் அழிவை சந்திக்க நேரிடலாம். இந்த நிலையெல்லாம் ஏற்படாமல் பூமியை காக்க நாம் பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக அரசின் கொள்கையில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியாவில் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

அரசின் எல்லா வளர்ச்சித் திட்டங்களும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டே நிறைவேற்றப்பட வேண்டும். அனல் மின் நிலை கட்டுமானங்கள் நிறுத்தப்பட வேண்டும். புதிய எரிசக்திக் கொள்கை கொண்டு வரப்பட வேண்டும். பழைய அனல் மின் நிலையங்கள் நிறுத்தப்பட வேண்டும். வாகன எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். காலநிலை மாற்றம் குறித்த அறிவியலை புரிந்துகொள்ள பல ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். அடிப்படையாக உற்பத்தியில் மிகப் பெரிய மாற்றம் வேண்டும். மக்களின் தேவை அடிப்படையிலேயே உற்பத்தி இருக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post மாயமான மலேசிய விமானம்; வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்!!(உலக செய்தி)