ஈராக்கில் 2 மாதத்தில் 6,600 பேர் படுகொலை – ஐ.நா.!
அமெரிக்கா உள்ளிட்ட நேசப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக்கில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த சித்ரவதைகளிலும், தாக்குதல்களிலும், தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல்களிலும் உயிரிழந்த அப்பாவிகளின் எண்ணிக்கை 6,600 பேர் என்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது! ஈராக்கில் மனித உரிமைகள் மீறல் குறித்து ஆய்வு செய்த ஐ.நா. உதவி அமைப்பு, ஜூலை மாதத்தில் 3,600 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 3,000க்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா உள்ளிட்ட நேசப்படைகளின் முகாம்களில் பரவலாக சித்ரவதை நடைபெறுவது பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ள யுனாமி என்றழைக்கப்படும் ஐ.நா.வின் உதவி அமைப்பு, அந்நாட்டில் அரசு அமைப்புகளால் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடியவில்லை என்றும், அவைகளால் பொது மக்களுக்கு போதுமான பாதுகாப்பை அளிக்க இயலவில்லை என்றும் கூறியுள்ளது.
ஈராக்கில் ஒவ்வொரு நாளும் மனித உரிமை மீறல்கள் அச்சமளிக்கும் வகையில் அபரிதமாக நடந்து வருகிறது. பயங்கரவாத தாக்குதல்கள், தீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சி, குற்ற கும்பல்களின் ஆதிக்கம், பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கை என்று இவை எல்லாவற்றிற்கும் பலியாகிக் கொண்டிருப்பது அப்பாவி மனித உயிர்களே என்று கூறியுள்ள யுனாமி, சித்ரவதையால் கொல்லப்பட்டுக் கிடக்கும் உடல்கள் நூற்றுக்கணக்கில் ஆங்காங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
இதுமட்டுமின்றி, பெண்களை மானபங்கப்படுத்தும் பாலியல் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாகவும் யுனாமி கவலை தெரிவித்துள்ளது.