இந்தியாவின் முதல் இரும்பு மனுஷி !!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 45 Second

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் எழுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே சாதிக்க வேண்டும் என்ற வெறியுடனும் லட்சியத்துடனும் அந்த பாதையை நோக்கி பயணம் செய்கிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள். இதில் எத்தனையோ பேர் உதாரணமாக இருந்துள்ளனர். இந்த சாதனையாளர் பட்டியலில் இப்போது இடம் பிடித்துள்ளார் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விலோலி. 33 வயதான இவர் சர்வதேச அளவில் நடைப்பெற்ற நீச்சல், ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் பந்தயங்கள் கொண்ட டிரையத்லான் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் ‘இரும்பு மனுஷி’ என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

சென்னை, தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக வேலைப் பார்த்து வந்தவர் வினோலி. டிரையத்லான் போட்டியில் பங்கு பெறுவதற்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமூச்சாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். உலகிலேயே ஒலிம்பிக்கை காட்டிலும் மிகவும் கடுமையான மற்றும் சவாலான போட்டி டிரையத்லான். இந்த போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தில் நீச்சல், சைக்கிளிங் மற்றும் ஓட்டப்பந்தயம் மூன்றையும் முடிக்க வேண்டும். போட்டியில் மூன்றையும் முடித்து வெற்றி பெறுபவர்கள் இரும்பு மனிதர் என்ற மகுடம் சூட்டப்படுவார்கள்.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்த விளையாட்டு பரவலாக பேசப்படுவதில்லை என்பதால் அதைப் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே ‘டிரையத்லான்’ போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை இந்த போட்டியில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. சர்வதேச அளவில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடிய முதல் இந்திய பெண்ணான வினோலி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் பிறந்தது பெரம்பலூர் மாவட்டம், தொழுதூர் கிராமம். வளர்ந்தது தஞ்சை மாவட்டத்தில். அப்பா தடகள போட்டியில் தேசிய விருது பெற்றவர். தடகள பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அப்பாவை பார்த்துதான் விளையாட்டு போட்டிகள் மீது எனக்குஆர்வம் ஏற்பட்டது. பள்ளி படிக்கும் காலத்தில் நீச்சல், சைக்கிளிங், ஓட்டப்பந்தய போட்டிகளில் அதிக ஈடுபாடுடன் கலந்து கொள்வேன். கல்லூரி படிப்பை முடிச்சதும் தஞ்சாவூரில் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலைப்பார்த்தேன். அதன் பிறகு திருமணமாகி சென்னையில் செட்டிலாயிட்டேன்.

குழந்தையும் பிறந்தது. பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பெண்களின் எடை அதிகரிப்பது இயல்பு. நானும் விதிவிலக்கல்ல. அந்த சமயத்தில் தான் என் கண்ணில் அந்த விளம்பரம் தென்பட்டது. மே 2016ம் ஆண்டு என் வீட்டு வாசலில் ஒட்டியம்பாக்கத்தில் நீச்சல் பயிற்சி அளிப்பது பற்றிய விளம்பரம் பார்த்தேன். எங்க வீட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரமாக இருந்தாலும் எடையை குறைக்க வேண்டும் பேராசிரியர் வேலையில் உள்ள மனஉளைச்சலையும் போக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நீச்சல் பயிற்சியில் சேர்ந்தேன்.

முதல் நாள் நீச்சல் குளத்தில் கால் வைத்த போது தான் எனக்கு தெரிந்தது நான் இதை எவ்வளவு மிஸ் செய்து இருக்கேன்’’ என்ற வினோலி இங்கு சென்னையில் நடைப்பெற்ற டிரையத்லான் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார். ‘‘நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட போது தான் டிரையத்லான் போட்டி பற்றி எனக்கு தெரிய வந்தது. அப்பதான் இப்படி ஒரு போட்டி இருப்பதே எனக்கு தெரிந்தது. மிகவும் சவாலான போட்டி. மேலும் சென்னையில் நடைபெறுவதால் நானும் விளையாட்டாக அதில் கலந்து கொள்ள என் பெயரை பதிவு செய்தேன். பிறகு தீவிரமா பயிற்சியில் ஈடுபட ஆரம்பிச்சேன்.

என் தினம் காலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கும். காலை 3.30 மணிக்கு பள்ளிக்கரணையை சுற்றி சைக்கிளிங் செய்வேன். அந்த காலை நேரம் என்னை தனியா அனுப்ப விரும்பாமல், என் கணவரும் மகனும் காரில் உடன் வருவார்கள். குழந்தை காரில் தூங்கிடுவான். இவர் என் பின் காரை ஓட்டிக் கொண்டு வருவார். மூன்று மணி நேர பயிற்சிக்கு பிறகு வீட்டுக்கு வந்து சாப்பாடு செய்து குழந்தையை பள்ளிக்கு கிளப்பி, கணவர் அலுவலகம் செல்ல, நானும் கல்லூரிக்கு கிளம்பிடுவேன். கல்லூரி வேலை முடிந்ததும் மாலை நீச்சல் குளத்தில் பயிற்சி எடுப்பேன்.

இதன் மூலம் 2017ம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைச்சது’’ என்று சொன்னவர் இதற்காகவே தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார். ‘‘வேலையும் பார்த்துக் கொண்டு, போட்டிக்கான பயிற்சி எடுக்க முடியாது. அதனால் வேலையை ராஜினாமா செய்தேன். டிரையத்லான் போட்டியில் இதுவரை இரண்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பெண்கள் யாரும் இதுவரை கலந்து கொள்ளவில்லை. பெரும்பாலும் டிரையத்லான் போட்டி ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெறுவது வழக்கம்.

இந்திய அளவில் குஜராத்தில் நடந்த போட்டியில் முதல் இடம் பிடித்தேன். 2017ம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் இந்தியாவின் முதல் பெண்ணாக கலந்து கொண்டேன். 3.8 கி.மீ நீச்சல், 18 கி.மீ சைக்ளிங், 42 கி.மீ ஓட்டப்பந்தயம் என மூன்று போட்டியையும் இடைவிடாமல் கடக்கவேண்டும். இந்த மூன்று போட்டியையும் 16 முதல் 17 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியை 14 மணிநேரம் 53 நிமிடத்தில் நிறைவு செய்து சர்வதேச அளவில் 50வது இடத்தை பிடித்தேன்.

இந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இத்தாலியில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் 2800 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டைப் போலவே இந்தியாவில் இருந்து நான் மட்டுமே கலந்துகொண்டேன். போட்டியில் 36வது இடத்தை பிடித்து இரும்பு மனுஷி என்ற பட்டத்தை பெற்றேன். டிரையத்லான் பயிற்சி எடுப்பதன் மூலம் உடல், மனம் இரண்டையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

தன்னம்பிக்கை வளரும். இந்த போட்டியை பொறுத்தவரை உலக சாம்பியன்ஷிப் பெறவேண்டும் என்று எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எனக்கும் அந்த கனவு இருக்கிறது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவேன். எனக்கு உறுதுணையாக என் குடும்பம் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக அவர்களின் ஆதரவு இல்லாமல் என்னால் இந்த அளவிற்கு முன்னேறி இருக்க முடியாது” என்றார் நம்பிக்கையோடுஇரும்பு மனுஷி வினோலி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலிவுட் டயட்!!(மருத்துவம்)
Next post லிப்ஸ் ப்ளம்பர்!!(மகளிர் பக்கம்)