ஹேப்பி ப்ரக்னன்ஸி: பிரசவ கால கைடு – 4!!( மகளிர் பக்கம் )

Read Time:7 Minute, 57 Second

குழந்தை பிறப்பு ஒரு வரம் என்றால் கர்ப்பம் ஒரு தவம். அதிலும் முதல் மூன்று மாதங்கள் என்பது கர்ப்ப காலத்தில் மிக முக்கியமான பருவம். கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர இந்த முதல் ட்ரைமஸ்டரின்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடுவது, வைட்டமின்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உண்பது, பயணங்களை தவிர்ப்பது, போதுமான ஓய்வு ஆகியவற்றோடு மருத்துவப் பரிசோதனைகளும் மிகவும் அவசியம். வயிற்றில் உள்ள கரு எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது, தாயின் உடல்நிலை எப்படி உள்ளது என்பவற்றை அறிய மருத்துவப் பரிசோதனைகள் உதவுகின்றன. இந்த இதழில் முதல் ட்ரைமஸ்டரின்போது செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

ரத்தப் பரிசோதனை
மேற்கொள்வதன் மூலம் தாயின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறியலாம். தாயின் ரத்த வகை என்ன, ரத்தசோகை உள்ளதா, நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு உள்ளது, மஞ்சள் காமாலை (ஹெபடைட்டிஸ் பி), ரூபெல்லா, ஹெச்.ஐ.வி போன்ற நோய் தாக்குதல்கள் ஏதும் உள்ளதா போன்றவற்றை ரத்தப் பரிசோதனை மூலம் அறியலாம். ட்ரிப்பிள் ஸ்கிரீனிங் டெஸ்ட் எனப்படும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. எனவே, முதல் மும்மாதத்தில் ரத்தப் பரிசோதனை அவசியம்.

சிறுநீர் பரிசோதனை
முதல் மும்மாதத்தில் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதும் அவசியம். காலை வெறும் வயிற்றில் சென்று இந்தப் பரிசோதனை செய்வது நல்லது. கர்ப்பமுற்றிருப்பதை உறுதிசெய்யவும், தாயின் சிறுநீரகச் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறியவும் இந்தப் பரிசோதனை அவசியம். மேலும், குளுக்கோஸ், அல்புமின் அளவு எப்படி உள்ளது என்பதையும் அறிய சிறுநீர் பரிசோதனை அவசியம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்
வயிற்றில் உள்ள கரு எந்த நிலையில் உள்ளது. கர்ப்பப்பையில் சரியாக தங்கி உள்ளதா? அதன் உடலியல் செயல்பாடுகள் ஆரோக்கியமாக உள்ளனவா? கைகள், கால்கள், தலை, மூளை ஆகியவை நன்றாக உள்ளனவா என்பனவற்றை எல்லாம் அறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது.

ஸ்கேன் என்றால் என்ன?
ஒலி அலைகளைப் பயன்படுத்தி நம் உடலின் உள் உறுப்புகளைப் பார்ப்பது ஸ்கேன். இதில், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என பலவகைகள் உள்ளன. ஆனால், கர்ப்ப காலத்தில் அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மட்டுமே செய்யப்படுகிறது. அவசியம் என்று கருதினால் மட்டுமே மருத்துவர் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க பரிந்துரைப்பார்.

ஸ்கேன் எப்படி செயல்படுகிறது?
ஒலி அலைகள் உடலுக்குள் செலுத்தப்படும் போது அவை உறுப்புகளில் மோதித் திரும்புகின்றன. கண்ணாடியில் ஒளி பட்டு திரும்பும்போது உருவம் கிடைப்பது போல, அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் ஒலி அலைகள் பெறப்பட்டு உருவம் கணிக்கப்படுகிறது.

எப்போது ஸ்கேன் எடுக்க வேண்டும்?
ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால் பொதுவாக கருவுற்ற 11-14 வாரங்களில் எடுக்கலாம். ஆனால், கருவுற்றிருப்பவர்களுக்கு வயிற்றுவலி இருந்தாலோ சிறிய அளவிலான உதிரக்கசிவு இருந்தாலோ உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். 5, 6 வாரங்களில் டேட்டிங் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ அபார்ஷன் செய்திருந்தாலோ இதற்கு முன்பான கர்ப்பத்தில் குழந்தை சரியாக கருப்பையில் அமராமல் டியூபிலேயே தங்கியிருந்தாலோ கர்ப்பம் அடைந்தவுடன் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது நல்லது. கர்ப்பம் அடையும் முன் மாதவிடாய் சுழற்சி சரியாக மாதா மாதம் வராமல் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் கர்ப்பம் அடைந்தவுடன் ஸ்கேன் எடுப்பது நல்லது.

இதன் மூலம் பிரசவ தேதியை சரியாகக் குறிக்க முடியும். சிலருக்கு வயிறு வழியாக அல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாய் இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சிலருக்கு அவர்கள் உடல்வாகு, கருவின் உடல் நிலைக்கு ஏற்ப முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம்.

சில சமயங்களில் முதல் முறை பார்க்கும்போது குழந்தையின் இதயத்துடிப்பை சரியாக கணிக்க முடியவில்லை என்றால் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டியது இருக்கும். தொடர்ந்து சிறிய அளவிலான உதிரக் கசிவு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். கர்ப்பத்தில் உள்ள சிசுவின் தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு ஆகியவற்றைப் பார்க்க முடியும். சென்ற பகுதியில் சொன்னது போல முதல் மும்மாதத்திலேயே இந்த உறுப்புகள் எல்லாம் உருவாகிவிடும்.

இதற்குப் பிறகான மாதங்களில் இவை வளர்ச்சி அடையத் தொடங்கும் என்பதால் முதல் மும்மாத ஸ்கேனிலேயே குழந்தைக்கு உடல் ஊனம் ஏதும் இருந்தாலும் கண்டறிய இயலும். முதல் மும்மாதத்தில் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (Nucheal thickness).

தோலின் தடிமன் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் குழந்தைக்கு சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நடிகர்களுக்கு வேலை இருக்காது! (சினிமா செய்தி)
Next post இரவு உணவுகளை பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்!!(அவ்வப்போது கிளாமர்)