By 29 November 2018 0 Comments

கசக்கும் செடி தரும் இனிப்பான பலன்! ( மருத்துவம் )

நிலவேம்பு ஸ்பெஷல்

டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று பீதி கிளம்பும்போதெல்லாம் நிலவேம்பு பற்றிய பேச்சும் வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது நிலவேம்பு. காய்ச்சலைத் தடுக்கும், குணப்படுத்தும் மருந்தாக இருப்பதுடன் வேறு பல நன்மைகளைச் செய்யும் திறனும் கொண்டது நிலவேம்பு என்று புகழ்கிறார்கள் மாற்று மருத்துவர்கள். நிலவேம்புக்கு ஏன் இந்த மவுசு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படையான தகவல்கள் மீண்டும் உங்கள் நினைவுக்காக…

* செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் அதிக நோய்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த இக்கட்டான காலத்தில் நோய்கள் வராமல் தடுக்கும் திறன் கொண்டதாகவும், வந்த பிறகு விரட்டும் ஆற்றல் கொண்டதாகவும் இரண்டு வேலைகளை செய்கிறது நிலவேம்பு.

* நிலவேம்பு என்பது மரம் அல்ல; 2 அடி உயரம் வரை வளரும் ஒரு செடி வகை. Andrographis Paniculata என்பது இதன் தாவரவியல் பெயர்.

* ஈரமில்லாத நிழற்பகுதியில் நன்கு விளையக் கூடியது. திருநெல்வேலி, தென் தமிழ் மாவட்டங்கள், ஆந்திர தேசத்தின் வடபகுதி ஆகிய இடங்களில் மிகுந்து காணப்படுகிறது. இது ஐப்பசி மாதத்தில் பூக்கும் தன்மையுடையது.

* இன்றைக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் கொசுக்களால் பரவும் 30 வகையான நோய்களைத் தடுக்கும் வல்லமை கொண்டது நிலவேம்பு என்பதை ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

* நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பினை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. 9 கூட்டுமருந்துகளும் கலந்த மருந்தினையே சித்த மருத்துவர்கள் நிலவேம்பு கஷாயமாக கொடுக்கிறார்கள்.

* இப்போது நிலவேம்பு குடிநீரை எல்லா இடங்களிலுமே தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள். இருந்தாலும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் நிலவேம்பு குடிநீரை பருகுவது இன்னும் சிறப்பு. ஏனெனில், தன்னார்வலர்கள் வழங்கும் குடிநீரில் 9 வகை கூட்டு மருந்துகள் கலந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு.

*அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவப் பிரிவு, தமிழ்நாடு அரசின் டாம்ப்கால், சென்னை அடையாறு பகுதியில் செயல்படும் சித்த மருத்துவர்களின் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் நிலவேம்பு கிடைக்கும். காதிபவன், சித்த மருந்துக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் போன்றவற்றிலும் நிலவேம்பு கிடைக்கிறது.

* கைப்பிடி அளவு நிலவேம்புப் பொடியை 500 மி.லி. தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, 2 ஏலக்காய், 2 கிராம்பு போன்றவற்றையும் வாசனைக்காக சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெல்லம் என ஏதாவது இனிப்பு சேர்த்துக் கொள்ளலாம். அது பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். (வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதுவே ஆரோக்கியத்துக்கு உகந்தது.) காய்ச்சியபிறகு, 13 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் 15 மிலியும், பெரியவர்கள் 30 மிலியும் சாப்பிடலாம்.

* எந்த விஷக்காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீருக்குக் கட்டுப்பட்டுவிடும். காய்ச்சலின்போது உடலில் இருக்கும் வைரஸையும் முழுமையாக அழித்துவிடுவதால் காய்ச்சலுடன் மூட்டுவலியும் காணாமல் போய்விடும்.

* நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. காய்ச்சலுக்காக ஏற்கெனவெ ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், நிலவேம்பு குடிநீரும் எடுத்துக் கொள்வது உங்களுடைய ஆரோக்கியத்தை விரைவில் உறுதி செய்து நோயிலிருந்து விடுதலை தரும். காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வும் சரியாகிவிடும்.

* ‘வாத மிகுதியால் ஏற்பட்ட காய்ச்சல், தலை நீரேற்றம், உடல்வலி ஆகியன போகும். பல்வேறு வகையான காய்ச்சலோடு அது தொடர்பான தொல்லைகளையும் காத தூரம் ஓட்டிவிடும். மேலும் பித்த மேலீட்டால் உண்டான மயக்கம் அகன்று தெளிவு ஏற்படும். அறிவுக்கூர்மை உண்டாகும்’ என்று நிலவேம்பு பற்றி அகத்தியர் பாடியிருக்கிறார்.

* குழந்தைகளின் வயிறு தொடர்பான கோளாறுகள், மண்ணீரல் வீக்கம், சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்றுநோய்கள் ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது நிலவேம்பு.

* நிலவேம்பு மனித சமூகத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் எச்.ஐ.வி. என்ற மூன்றெழுத்தால் குறிப்பிடப் பெறும் மிக மோசமான உடலையும் உள்ளத்தையும் கெடுத்து உயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பால்வினை நோய்க்கு பலமான எதிரியாகச் செயல்பட்டு எதிர்த்து நின்று போராடி குணம் தரவல்லது.

* டெங்கு காய்ச்சல் மனித உடலில் உள்ள தட்டணுக்களை குறைத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கிறது. நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு மண்டலத்தை காத்து உடலிலுள்ள நீர்சத்து குறைபாட்டை சரிசெய்து உடலை காக்கிறது.

* பொதுவாக நாம் பயன்படுத்தும் நிலவேம்பு குடிநீர் Hydrophilic extract என்ற நீர்ம வடிவத்தில் வைரஸ் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. உடலின் செயல்பாடுகள் மாறாமல் நோயிலிருந்து காத்து உடலை நல்ல நிலையில் வைப்பது இதன் சிறப்பம்சம்.

* நிலவேம்பினால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு என்பதெல்லாம் எந்தவித ஆதாரமும் இல்லாத வதந்திதான். நிலவேம்புக்கு தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் கிளப்பும் வீண்வம்பு அது. அரசு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்த பிறகே நிலவேம்பினை பரிந்துரை செய்துள்ளது.

இத்துடன் சர்வதேச அளவிலான 40-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் இந்திய அரசின் தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளும் உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் அச்சமின்றி பொதுமக்கள் நிலவேம்பு குடிநீரைப் பயன்படுத்தலாம்.

* டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் 7 நாட்களும், வரும்முன் காக்க விரும்புகிறவர்கள் 3 நாட்களுக்கும் நிலவேம்பு குடிநீர் அருந்தினால் போதும். நிலவேம்பு குடிநீர் அருந்துவதுடன் காய்ச்சல் வந்தவருக்கு பூரண ஓய்வும் வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam