By 23 December 2018 0 Comments

‘காவிரி டெல்டா’வைப் புரட்டிப் போட்ட ‘கஜா’!(கட்டுரை)

‘கஜா’ப் புயல், தமிழகத்தைப் புரட்டிப் போட்டு விட்டு, பறந்து விட்டது. 63 பேருக்கு மேல், உயிர்ப் பலி வாங்கிய இந்தப் புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு,‘சுனாமி’யைப் பார்த்தது; ‘தானே’ புயலைப் பார்த்தது; ‘ஒகி’ புயலைப் பார்த்தது; ஆனால், இந்தக் ‘கஜா’ புயல் பாதிப்பு, மற்றப் புயல்களை விட வீரியமானது.

இரண்டரை இலட்சம் மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்கள், “கஜாப் புயல், உயிரை விட்டுவிட்டு, உடைமைகளை எடுத்துச் சென்று விட்டது” எனக் கூறுகிறார்கள்.

இலட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால், நான்கு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள், இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. ‘விளக்கும் இல்லை; விடியலும் இல்லை’ என்பது போல், மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, வெற்றிகரமாகச் சமாளித்த அரசு நிர்வாகம், நிவாரணப் பணிகளில் கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.

நவம்பர் 16 ஆம் திகதி, புயல் தாக்கிய நேரத்தில், அரசாங்கத்தின் முன்னேற்பாடுகள் வெற்றி பெற்று விட்டதாகவே அரசியல் கட்சிகள் கருதின.

தி.மு.க சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின், “புயலைச் சமாளிக்க, ‘மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம்’ எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் அ.தி.மு.க அரசாங்கத்தைப் பாராட்டினார்கள். ஓர் ஆக்கபூர்வமான அரசியல், தமிழகத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, ‘கஜா’ புயலால் ஏற்பட்டிருக்கிறது என்றே அனைவரும் எண்ணினர். ஆனால், புயல் தாக்கிய மறுநாளில் இருந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்த தகவல்கள், அனைவரையும் அதிர்ச்சி கொள்ள வைத்தன. இவை, அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை, முன்வைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தின. அமைச்சர்கள் சிலர், மக்களால் விரட்டி அடிக்கப்பட்டனர்; அதிகாரிகள் முற்றுகையிடப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டாலும், நிவாரணப் பொருட்களை அனுப்பினாலும், அமைச்சர்களும் அதிகாரிகளும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டாலும் மக்களின் கோபத் தீயை அணைக்க முடியவில்லை. ஏனென்றால், ஏற்பட்ட பாதிப்பு, அவ்வளவு மோசமானது. மக்களின் போராட்டம் காரணமாக, முதலமைச்சர் பழனிசாமி, ஹெலிகொப்டரில் சென்று, பார்வையிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினார்.

ஆனால், தி.மு.க தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சாலை மார்க்கமாகவே சென்று, மக்களைச் சந்தித்தார்கள். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சாலை மார்க்கமாகவே சென்று, மக்களைச் சந்தித்தார்.

சேதங்களைப் பார்வையிட்டு விட்டு, முதலமைச்சர், டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, நிவாரணப் பணிகளுக்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும் நிதியுதவி கேட்டிருக்கிறார்.

நிரந்தரச் சீரமைப்புப் பணிகளுக்கு, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மில்லியன் ரூபாயும், உடனடி நிவாரணத்துக்கு பதினையாயிரம் மில்லியன் ரூபாயும் கேட்டிருக்கிறார். ஆனால், கடந்த காலங்களில் அனர்த்தப் பாதிப்புகளுக்கு மத்திய அரசு, இவ்வளவு நிதியை ஒதுக்கியதில்லை. ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், இப்போது எடப்பாடி பழனிசாமி ஆகிய மூன்று முதலமைச்சர்களும் கேட்ட நிதி வந்தது இல்லை.

ஏனென்றால், இயற்கைப் பேரிடர்களின் போது, கொடுக்க வேண்டிய நிதி குறித்து, ‘தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்’ வழி காட்டுதல்களை வழங்கியிருக்கிறது. அந்த வழிகாட்டுதல் படிதான், மத்திய அரசாங்கம் மட்டுமல்ல, மாநில அரசாங்கம் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதேநேரத்தில், ‘கஜா’ புயல்ப் பாதிப்புகளைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோரிக்கையை, மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டால், நிதியுதவி கொஞ்சம் அதிகம் கிடைக்கும் என்பதுதான், தற்போதைய நிலைமை.

கடந்த ஏழு வருடங்களில், ‘தானே’, ‘வர்தா’, ‘ஒகி’, ‘கஜா’ப் புயல்களின் பாதிப்பு, 2015 மழை வெள்ளப் பாதிப்பு, கடும் வரட்சி என்று, பல்வேறு பேரிடர்களில் சிக்கி, உட்கட்டமைப்பைத் தமிழகம் இழந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை வந்த பேரிடரும், ஒவ்வொரு பகுதியைப் பதம் பார்த்து விட்டுச் சென்றிருக்கிறது. ‘தானே’ கடலூர் மாவட்டத்தை நிலைகுலைய வைத்தது. ‘வர்தா’ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைக் கலங்க வைத்தது. ‘ஒகி’ கன்னியாகுமரி மாவட்டத்தைத் துவம்சம் செய்தது. ‘கஜா’ புதுக்கோட்டை, திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் தாண்டவமாடி விட்டது.

2015 மழை வெள்ளமோ, சென்னை, புறநகர் மாவட்டங்களை நிலைகுலைய வைத்தது. ஆனால், இந்தப் பாதிப்புகளில் இருந்து, அரசாங்கம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை; மக்களும் பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான், இன்றைய வருத்தத்துக்குரிய செய்தி.

அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், கடந்த காலப் புயல்களுக்கும், இந்தப் புயலுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பாராட்டும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. வானிலை ஆராய்ச்சி மய்யம் விடுத்த எச்சரிக்கை, அரசாங்கத்துக்குக் கை கொடுத்தது. ஆனால், நிவாரணப் பணிகள், மறுசீரமைப்புப் பணிகளில் அரசாங்கம், இன்னும் தயார் நிலையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

புயல் பாதிப்பு இருக்கும் என்றார்களே தவிர, இவ்வளவு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதை, வானிலை ஆராய்ச்சி மய்யமும் சொல்லவில்லை; அரசாங்கத் தரப்பிலும் உணரவில்லை.

நாகபட்டினத்தை மட்டும், புயல் தாக்கி விட்டுச் செல்லும் என்று நினைத்திருந்த அரசாங்கத்துக்கு, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களையும் புரட்டிப் போட்டது அதிர்ச்சியாகி விட்டது. அதனால், வீசும் புயலால் எத்தகைய பாதிப்பு இருக்கும் என்பதை, முழுவதுமாகக் கணிக்க முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு முன்கூட்டியே கணிக்கும் வாய்ப்புகளை, வானிலை ஆராய்ச்சி மய்யம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அரசாங்க நிர்வாகம், குறிப்பாகப் பேரிடர் மேலாண்மை ஆணையம் முழு வீச்சில் பணியாற்றி, இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை, முன் கூட்டியே அடையாளம் காணும் வல்லமை பெறவேண்டும். அப்போது மட்டுமே, வானிலை ஆராய்ச்சி மய்யத்தின் எச்சரிக்கை பயனுள்ளதாக இருக்கும்.

மக்களைப் பொறுத்தவரை, பாதிப்பிலிருந்து வெளிவந்து, நிவாரணப் பணிகளுக்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும், அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் மனவோட்டத்துக்கு வர வேண்டும். ஆனால், ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுவதால், நிவாரணமும் தடைப்படுகிறது; மறுசீரமைப்புப் பணிகளும் நின்று போகின்றன. ஆகவே, பேரிடர் காலங்களில், அதை எதிர்கொள்ளும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள், நிச்சயம் தேவைப்படுகிறது.

இதுதவிர, உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெறவில்லை என்பதால், உள்ளூராட்சி அமைப்புகள் இல்லாதது, நிவாரணமும் மறுசீரமமைப்பும் மக்களைச் சென்றடைவதில் பெரும் பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது.

உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் இருந்திருந்தால், மக்களைச் சமாதானப்படுத்தும் தகுதி அவர்களுக்கு இருந்திருக்கும். ஏனென்றால், அவர்கள் எல்லாம் உள்ளூர் கிராம மக்களுடன் நடமாடுகிறவர்கள்.

ஆகவே, பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வு, வானிலை ஆராய்ச்சி மய்யம் பாதிப்பைத் துல்லியமாக எடுத்துரைக்க இயலாதது, உள்ளூராட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பது எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, ‘கஜா’ப் புயல் பாதிப்பின் கஷ்டத்தை மக்கள் சந்தித்து, கதற வேண்டிய நிலை, இந்த நான்கு மாவட்டங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்தப் புயலில், கலைஞர் கருணாநிதியின் பிறந்த வீடே, பாதிக்கப்பட்டுள்ளது.

‘காவிரி டெல்டா’ பகுதிகள், ஏற்கெனவே காவிரி நீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்டு, பின்னர், இந்த வருடத்தில் காவிரியில் வந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வரட்சியாலும் பாதிப்பு; வௌ்ளத்தாலும் பாதிப்பு. இப்போது ‘கஜா’ புயலால், ‘காவிரி டெல்டா’ மீண்டும் சூறையாடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் அடங்கிய, ‘காவிரி டெல்டா’, தமிழக பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பது மட்டும்தான், இப்போதைக்கு உண்மை.

நிரந்தரச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ‘காவிரி டெல்டா’ மீண்டும் செழிப்புடன், வழமைபோல்த் தலை தூக்குமா என்பது, மத்திய அரசாங்கம் வழங்கப் போகும் நிவாரண நிதியில்தான் இருக்கிறது.Post a Comment

Protected by WP Anti Spam