By 21 December 2018 0 Comments

ஐ.தே.கவுக்கும் பொதுத் தேர்தலே சாதகமானது!! (கட்டுரை)

நீண்ட கால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த, 1989ஆம் ஆண்டு முதல், 1999ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில், இந்தியாவில் ஏழு அரசாங்கங்கள் பதவிக்கு வந்தன. ஆனால், அந்த ஏழு பதவி மாற்றங்களில் ஒன்றின் போதேனும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற குழப்ப நிலை ஏற்படவில்லை; அரசமைப்பு நெருக்கடி ஏற்படவுமில்லை.

இந்திய காங்கிரஸ் கட்சி, 1989ஆம் ஆண்டு லோக் சபா (மக்களவை) தேர்தலின் போது, அறுதிப் பெரும்பான்மைப் பலம் பெறவில்லை.

எனவே, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். எனவே, ஜனதா தள் கட்சியின் தலைவர் வி.பி.சிங், பாரதிய ஜனதாக் கட்சியின் உதவியுடன் பதவிக்கு வந்து, பிரதமர் பதவியை ஏற்றார்.

ஆனால், அவருக்கு 11 மாதங்களே பதவியில் இருக்க முடிந்தது. சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, பா.ஜ.க அரசாங்கத்துக்கு வழங்கி வந்த தமது ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, வி.பி.சிங்குக்கு மக்களவையில் பெரும்பான்மையைக் காட்ட முடியாது போய்விட்டது. எனவே, அவரது ஆட்சி அத்தோடு முடிவுக்கு வந்தது. ஆனால் லோக் சபா கலைக்கப்படவில்லை.

சபையில் 46 ஆசனங்களைப் பெற்றிருந்த சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் வெளிப்புற ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார். அவருக்கு மூன்றே மாதங்கள் தான் ஆட்சியில் இருக்க முடிந்தது.

காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் வீட்டின் அருகே, அரசாங்க உளவாளிகள் நடமாடியதாகக் குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் கட்சி அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. அந்த அரசாங்கமும் கவிழந்தது.

எவரும் அரசாங்கத்தை அமைக்க முன்வராததை அடுத்து, 1991ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்நாட்டில் ஸ்ரீ பெரும்பதூரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.வி.நரசிம்ம ராவ், ஜெயலலிதாவின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவியுடன் பிரதமரானார். நல்ல வேளை, ஜெயலலிதா அவரது அரசாங்கத்தைக் கவிழ்க்காததால், அவர் தமது ஐந்தாண்டு கால ஆட்சியைப் பூர்த்தி செய்துவிட்ட பின்னர், அடுத்த பொதுத் தேர்தல் 1996ஆம் ஆண்டு நடைபெற்றது.

அதன் மூலம் பிரதமராகப் பதவியேற்ற அடல் பிகாரி வாஜ்பாய், 12 நாள்கள் மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது. 12 ஆவது நாளில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததில், அவரது ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன், தேவ கவுடாவின் ஐக்கிய முன்னணியும் சில இடதுசாரிக் கட்சிகளும் பதவிக்கு வந்தன. ஆனால், 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம், காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்துக்கான தமது ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, தேவ கவுடாவின் ஆட்சியும் கவிழ்ந்தது.

அதையடுத்து, அதே காங்கிரஸ் ஆதரவுடன், அதே ஐக்கிய முன்னணியின் ஐ.கே. குஜ்ரால் பிரதமரானார். அவரும் ஒரு வருடமேனும் பதவியில் இருக்கவில்லை.

அதற்கிடையே, ராஜீவ் காந்தி கொலைக்கான அரசியல் சதி பற்றி, விசாரணை நடத்திய ‘ஜெய்ன் ஆணைக்குழு, தமது அறிக்கையை வெளியிட்டது. புலிகளின் நடவடிக்கைகளுக்கு, தி.மு.க ஆதரவு வழங்கியதாக அந்த அறிக்கை கூறியது.

எனவே, தி.மு.க அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யுமாறு, காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. அதைக் குஜ்ரால் ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெற்றது; அரசாங்கம் கவிழ்ந்தது.

1998 ஆம் ஆண்டு பெப்ரவரி தேர்தலில், மீண்டும் பி.ஜே.பி, ஜெயலலிதாவின் ஆதரவுடன் பதவிக்கு வந்தது. அந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெர்னாண்டெஸ், புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய ஜெயலலிதா, அவரைப் பதவிநீக்கம் செய்யுமாறு கூறினார். பிரதமர் வாஜ்பாய், அதை ஏற்க மறுக்கவே, 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெயலலிதா, அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெற்றார்; அரசாங்கம் கவிழ்ந்தது.

சற்று நீண்ட கதை தான். ஆனால், இவற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற அரசமைப்பு நெருக்கடி, இந்தியாவில் ஏற்படவில்லை. காரணம் மிக எளிமையானது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டவுடன் புதிய பிரதமர் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பொன்றை எதிர்கொள்ள வேண்டும்.

எனவே, தமக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதாக வெறுமனே கூறிக் கொண்டு, குழப்பங்களை நடத்தி வாக்கெடுப்புகளை நடத்த விடாமல் இருக்க முடியாது. இது அந்த இரு நாடுகளிலும், மாநில சட்ட சபைகளுக்கும் பொருந்தும் விதி முறையாகும்.

கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததை அடுத்து, ஆரம்பத்தில் தமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதாகக் கூறிக் கொண்டு இருந்த மஹிந்த அணியினர், மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், புதிய வாதமொன்றை முன்வைக்கின்றனர்.

ஐ.தே.கவிலிருந்த சிலர், இப்போது தம்முடன் இணைந்துள்ளதால் தமது அணியே ஆகக் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட அணியென அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது சரியா என்பது சந்தேகமே.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஏழு பேரும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வியாழேந்திரனுமாக மொத்தம் ஒன்பது பேர் மஹிந்த அணியில் இணைந்தனர்.

ஆனால், அவர்களில் வசந்த சேனாநாயக்கவும் வடிவேல் சுரேஷும் மீண்டும் ஐ.தே.கவில் இணைந்துள்ளனர். அதன் பின்னர், வடிவேல் சுரேஷுக்கு, ஐ.தே.க தலைவர் ஐ.தே.கவின் தோட்டத் தொழிலாளர் சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியையும் வழங்கியுள்ளார்.

எனவே, மொத்தம் ஏழு பேர் தான், 95 பேர் கொண்ட மஹிந்த அணியில், புதிதாகச் சேர்ந்துள்ளனர். அதாவது, அவர்களது பலம் இப்போது, 102 ஆகவே உயர்ந்துள்ளது. சபாநாயகர் தவிர்ந்த 105 எம்.பிக்களைக் கொண்ட ஐ.தே.கவிலிருந்து விலகிய ஏழு பேரில், இரண்டு பேர் மீண்டும் அக்கட்சியிலேயே இணைந்தள்ளதால், அதன் பலம் 100 ஆகக் குறைந்தது.

ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து மனுஷ நாணயக்கார, ஐ.தே.க அணியில் இணைந்துள்ளார். ஐ.தே.கவின் சின்னத்திலன்றி தனியாகப் போட்டியிட்ட, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர் ஒருவரும் ஐ.தே.க அணியில் இருக்கிறார். எனவே அந்த அணியிலும் 102 பேர் உள்ளனர்.

உண்மையிலேயே, மஹிந்த அணி தான் மிகப் பெரிய அணியென ஏற்றுக் கொண்டாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது மற்றைய கட்சிகளை விடப் பெரிதாக இருப்பது என்பதல்ல. நடைமுறையில் அரசாங்கமொன்றை நடத்தக் கூடிய பலமே நாடாளுமன்றப் பெரும்பான்மை எனப்படுகிறது.

அதாவது, தாம் பதவியில் இருக்கும் காலத்தில் சட்ட மூலங்கள், பிரேரணைகள் ஆகியவற்றைச் சந்தேகமின்றி நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய அளவிலான பலமே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் என்று கருதப்படுகிறது. அதாவது, குறிப்பிட்டதோர் அணிக்குக் குறைந்த பட்சம் 113 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலேயே, அவ்வணிக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மஹிந்த அணிக்கு அந்தப் பலம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் மஹிந்தவின் நியமனத்தை எதிர்க்க, ஐ.தே.கவுடன் இணைந்தாலும் ஆட்சியமைக்க ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. எனவே, ஐ.தே.கவுக்கும் நாடாளுமன்றப் பெரும்பான்மை பலம் இல்லை. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று வாக்கெடுப்புகளின் போது, மஹிந்தவுக்குச் சபையின் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அவற்றில், கடந்த 14ஆம் திகதியும் 16ஆம் திகதியும் நிறைவேற்றப்பட்ட இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைத் தாம் ஏற்றுக் கொள்வதில்லை என, ஜனாதிபதியும் மஹிந்த அணியினரும் கூறுகின்றனர்.

ஆனால், கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்ற அலுவல்களுக்கான, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட இலத்திரனியல் வாக்கெடுப்பைச் சட்ட விரோதமானது என எவரும் இதுவரை கூறவில்லை.

அன்று, மஹிந்த அணியினர், சபாநாயகர் தலைமையிலான சபைக்குச் சமுகமளித்து இருந்தனர். பின்னர், தெரிவுக்குழுவில் தமக்குக் கூடுதல் ஆசனங்கள் வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையைச் சபாநாயகர் நிராகரிக்கவே, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்புச் செய்தனர்.

சபையிலிருந்து எவரும் வெளிநடப்புச் செய்வதால் சபை அமர்வு, சட்ட விரோதமாவதில்லை. எனவே, அன்றைய வாக்கெடுப்பை, ஜனாதிபதியோ மஹிந்த அணியோ புறக்கணிக்க முடியாது. அதேவேளை, ஆளும் கட்சியொன்று சபையிலிருந்து வெளிநடப்புச் செய்வதை, நாம் ஒருபோதும் கேட்டதில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் போது, குரல் மூல வாக்டுகெப்பு நடத்தியமையைச் சட்டவிரோதமானது அல்ல என, ஜனாதிபதி, ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையுடனான பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், எண்ணிக்கை தொடர்பிலான சர்ச்சையொன்றைத் தீர்க்க, குரல் மூல வாக்கெடுப்பை நடத்துவது நாகரிகமானதல்ல என, அவர் கூறியிருக்கிறார். அது, தர்க்க ரீதியான வாதம் தான்.

ஆனால், பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்த, சபாநாயகர் முற்பட்ட போதிலும், மஹிந்த அணியினர் அதற்கு இடமளிக்கவில்லை என்பது ஜனாதிபதிக்குத் தெரியாத விடயமல்ல. அங்குச் சபாநாயகர் அல்ல; மஹிந்த அணியினரே நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டனர்.

அரசாட்சி என்று வரும் போது, நாகரிகம் முக்கியமானது என்ற போதிலும், நாகரிகத்தை விட, சட்டத்துக்கே முதலிடம் வழங்கப்படுகிறது. சட்டப்படியே ஒரு நாடு, நிர்வகிக்கப்பட வேண்டியுள்ளது. சட்டம் வரையறுத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகரிகம் அவ்வாறில்லை.

அதேவேளை, தற்போதைய நெருக்கடியைப் பொறுத்தவரையில், ஜனாதிபதிக்கு அரசியல் நாகரிகத்தைப் பற்றிப் பேச, தார்மிக உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மஹிந்தவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பது தெளிவாக இருக்க, எந்த நாகரித்தின் அடிப்படையில், ஜனாதிபதி அவரைக் கடந்த மாதம் பிரதமராக நியமித்தார்?

மஹிந்தவுக்கு, எம்.பிக்களை விலைக்கு வாங்க வசதியாகவே, ஜனாதிபதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒக்டோபர் 27ஆம் திகதி ஒத்திவைத்தார். அது என்ன நாகரிகம்?

மஹிந்தவுக்குப் பெரும்பான்மை பலத்தைத் திரட்டிக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தே, ஜனாதிபதி நவம்பர் ஒன்பதாம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அப்போது எங்கிருந்தது அரசியல் நாகரிகம்?

இப்போது, மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையும் இல்லை; அது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று வாக்கெடுப்புகளால் நிரூபிக்கப்பட்டு விட்டது. எனவே, அவருக்கு எந்தவொரு சட்ட மூலத்தையோ, பிரேரணையையோ நிறைவேற்றிக் கொள்ளவும் முடியாது. உலகில் எந்தவொரு நாடும், ஒரு மாதமாகியும் இதுவரை அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும் இல்லை. இந்த நிலையில் அவர் என்ன செய்யலாம்?

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஏழாம் திகதி வழங்கப்படவிருக்கிறது. கலைப்பு சரியெனத் தீர்ப்பு வழங்கப்பட்டால், தற்போதைய நெருக்கடி தீர்ந்துவிடும் என யூகிக்கலாம்.

இல்லாவிட்டால், ஒன்றில் மஹிந்த மேலும் கூடுதலாகப் பணம் கொடுத்து, ஏனைய கட்சிகளிடமிருந்து எம்.பிக்களை விலைக்கு வாங்க வேண்டும். அல்லது ஏதாவது சாக்குப் போக்குக் கூறி இராஜினாமாச் செய்ய வேண்டும்.

அவர் இராஜினாமாச் செய்யாதிருத்தல் ஐ.தே.கவுக்கு நல்லது. இந்த நெருக்கடியால் மக்கள் மத்தியில், ஐ.தே.க மீது ஒரு வித அனுதாபம் ஏற்பட்டுள்ளது; அக்கட்சியின் பலவீனம் மறைக்கப்பட்டுள்ளது.

நியாயம் அவர்கள் பக்கம் இருக்கிறது என்றதொரு நிலையும் மஹிந்த அணியினர் அநாகரிகமாக ஆட்சியில் தொற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்றதோர் அபிப்பிராயமும் நிலவி வருகிறது.

மென்மேலும், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகளை நடத்தி, மஹிந்த அணியினரை அசௌகரித்துக்குள்ளாக்கவும் ஐ.தே.கவுக்கு முடிகிறது.

ஆனால், மஹிந்த இராஜினாமாச் செய்தால், ஐ.தே.கவாலும் பெரும்பான்மையைக் காட்ட முடியாமல் போகும். காட்டினாலும் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி கூறுகிறார். ரணிலுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருந்தால், அவரை நியமிக்க முடியாது என ஜனாதிபதி கூறுவது சட்ட விரோதமாகும்.

ஆனால், ஜனாதிபதி விடாப்பிடியாக அதனை வலியுறுத்தினால், சஜித் பிரேமதாஸவே தலைவராக வேண்டும் என்று தற்போது ஐ.தே.கவுக்குள் வேகமாக வளர்ந்து வரும் அபிப்பிராயம், மேலும் வலுப்பெறும். இதனால் ஐ.தே.க பிளவுபடலாம். இது மஹிந்த அணிக்கே சாதகமாகும். எனவே மஹிந்த இராஜினாமாச் செய்யும் நிலை ஏற்பட்டால், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரேரணையொன்றை நிறைவேற்றிக் கொள்வதே, ஐ.தே.கவுக்கும் சிறந்ததாகும்.

பொதுத் தேர்தலுக்குப் போகத் துடிக்கும் மஹிந்த அணியினர், அதை நிச்சயமாக ஆதரிப்பர். கட்சியைப் பிளவுபடுத்திக் கொள்வதை விட, தேர்தலுக்குப் போவதே ஐ.தே.கவுக்கு நல்லது. அவ்வாறானதொரு தேர்தலிலும் மஹிந்த அணியினர் எதிர்பார்க்கும் அளவிலான வெற்றி அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.Post a Comment

Protected by WP Anti Spam