‘இறகு’ பிடுங்கும் காலம்!!(கட்டுரை)

Read Time:18 Minute, 32 Second

இரண்டு பட்டுக் கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி அரசியல் தரப்புகளுக்கு, அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

அவரவரின் பிடிவாதத்தில், அவரவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே, நமது மக்கள் பிரதிநிதிகளின் நாட்டுப் பற்றின் இலட்சணம், என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

முடிவுகளைக் கையில் வைத்துக் கொண்டுதான், அனைத்துத் தரப்புகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. “ரணிலைப் பிரதமராகக் கடைசி வரை ஏற்க மாட்டேன்” என்று ஜனாதிபதியும் “ரணிலை மட்டும்தான் பிரதமராக ஏற்போம்” என, ஐக்கிய தேசிய முன்னணியும் தீர்மானித்துக் கொண்டு நடத்தும் பேச்சுவார்த்தைகளின் முடிவில், எந்தப் ‘புண்ணியமும்’ இருக்கப் போவதில்லை.

ஆனாலும், திரும்பத் திரும்ப அதையே, அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நெருக்கடியில் சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஐக்கிய தேசிய முன்னணிக்கு, இப்போதைய நிலையில் ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்காகச் சில நிபந்தனைகளை முன்வைத்து, சம்பந்தப்பட்ட தரப்பிடம் உறுதி மொழிகளையும் பெற்றுக் கொண்டுள்ளது.

n தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும், புதிய அரசமைப்புக்கான வரைபை, பெப்ரவரி மாதம் நான்காம் திகதிக்கு முன்பு சமர்ப்பித்தல்

n வடக்கு – கிழக்கில் இதுவரையில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவித்தல்.

n தனியாரின் காணிகளைப் புதிதாக அரசாங்கம் அபகரிக்காமல் இருத்தல்.

n யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு பிரதேசங்களை, மீளக் கட்டியெழுப்புதல், அதற்கான திட்டங்களை வகுத்தல் போன்ற நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கிய பங்கைக் கொடுத்தல்

n தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சில அதிகாரங்களை வழங்குதல்.

உள்ளிட்ட கோரிக்கைகளை, ஐக்கிய தேசிய முன்னணியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து, உறுதி மொழிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார்.

மேலும், இவை தொடர்பில் எழுத்து மூலமான உடன்படிக்கையொன்றும், இரண்டு தரப்பாருக்கும் இடையில் கைச்சாத்திடப்படும் எனவும், மாவை கூறியுள்ளார்.

இது நல்லதொரு முயற்சியாகும். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பேரினக் கட்சிகள் ஒருபோதும் தாமாக முன்வந்து, தமது ‘இறகுகளை’ப் போட்டதாகச் சரித்திரம் இல்லை.

பொருத்தமான சந்தர்ப்பங்களைச் சிறுபான்மைக் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டு, பெரும்பான்மையினக் கட்சிகளின் ‘இறகுகளை’ப் பிடுங்கி எடுத்தால்தான் உண்டு. அந்தவகையில், இது ‘இறகு’ பிடுங்கும் காலம்.

பேரினவாதக் கட்சிகளின் ‘இறகு’களைப் பிடுங்கும் போது, அவற்றுக்கு வலித்தாலும், தற்போது அதை அவை காட்டிக் கொள்ளாது. அதை நன்றாகப் புரிந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவே, புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் முஸ்லிம் அரசியல் கட்சியினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ‘கண்பொத்தியாரே’ விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்களோ என்கிற அச்சம், முஸ்லிம் சமூகத்துக்குள் ஏற்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் இரண்டு முஸ்லிம் கட்சிகளும், ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றுவதற்காகக் களமிறங்கியிருப்பதன் காரணங்கள் என்ன என்பதை, ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது.

“ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவே நாங்கள் ரணில் தரப்புடன் இணைந்து நிற்கின்றோம்” என்று முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூறுகின்ற காரணங்கள், வெறும் ‘சப்பைக்கட்டு’களாகும் என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

‘முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஜனநாயகம் இல்லை என்றும், அந்தக் கட்சியின் யாப்பை அதன் தலைவர் தனக்கு ஏற்றவாறு திருத்தியமைத்துக் கொண்டுள்ளார் எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்தக் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்கள் பலர், முஸ்லிம் காங்கிரஸை விட்டும் வெளியேறியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணிக்கான ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியுள்ளமை குறித்த விமர்சனங்களை, சமூக வலைத்தளங்களில் கண்டு வருகிறோம்.

எனவே, தற்போதைய அரசியல் நெருக்கடியில் முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காக, சமூகம் சார்ந்த கோரிக்கைகளை நிபந்தனையாக முன்வைக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம் மக்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவமும் அரச இயந்திரங்களும் மிக நீண்ட காலமாக அபகரித்து வைத்திருக்கின்றன. அதேபோன்று, கல்முனை கரையோர மாவட்டம் குறித்த கோரிக்கை உள்ளது. இந்தப் ‘பலாப்பழத்தை’க் காட்டியே, மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் செய்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, புதிய அரசமைப்பில் முஸ்லிம்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் அம்சங்களை உள்ளடக்க வேண்டிய தேவையும் உள்ளது.

இப்படி, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளும் தேவைகளும் ஆயிரக்கணக்கில் இருக்கத்தக்க நிலையில், அவை எது குறித்தும், பேச வேண்டிய இந்தத் தருணத்தில் பேசாமல், ரணில் விக்கிரமசிங்கவுக்காக ‘ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுக்கும்’ வீரதீரச் செயலில், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இறங்கியிருப்பதில், நியாயங்களைக் காண முடியவில்லை.

இன்னொருபுறம், அரசியலரங்கில் எதிரும் புதிருமாக இருந்து வந்த முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும், ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றுகின்ற கோதாவில் இணைந்து கைகோர்த்திருக்கின்றமையும் எதிர்பாராத திருப்பமாகும்.

தற்போதைய நெருக்கடியில், ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றுவதுதான், மேற்படி முஸ்லிம் கட்சித் தலைவர்களின் இலக்காக இருப்பது போல் தெரிகிறது. அதற்குப் பிரதியுபகாரமாக, ரணிலிடமிருந்து முஸ்லிம் சமுகத்துக்காக, எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதுதான் இங்குள்ள பெரும் கேள்வியாகும்.

‘முகத்தாச்சினை’க்காக, ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்ற வேண்டிய தேவை, முஸ்லிம் சமூகத்துக்குக் கிடையாது. எனவே, தற்போதைய அரசியல் நிலைவரத்தை, முஸ்லிம் சமூகத்துக்காகப் பேரம் பேசும் தருணமாக, முஸ்லிம் கட்சிகள் பயன்படுத்திக் கொள்தல் அவசியமாகும். மேலும், அவ்வாறு பேசப்படும் பேரங்கள், என்ன என்பதையும் அந்தக் கட்சிகள், தமது சமுகத்துக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.

அவ்வாறின்றி, “ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவே, ரணில் தரப்புடன் நின்றோம்” என்று முஸ்லிம் கட்சிகள் கூறுகின்றமையை, முஸ்லிம் மக்கள் நம்புவார்களா என்பது கேள்குரியதாகும்.

ஏற்கெனவே, கட்சி மாறுவதற்கும், கட்சிகளுடன் தொடர்ந்தும் இருப்பதற்குமாக, பணம் கைமாற்றப்பட்டுள்ளது என்கிற செய்திகள் உலவுகின்றன. ஜனாதிபதியும் அது பற்றிக் கூறியிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது. எனவே, இவ்வாறான பழிகளிலிருந்து முஸ்லிம் கட்சிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாயின், தற்போதைய காலகட்டத்தில், மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டியுள்ளதையும் மறந்து விடலாகாது.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரப், அப்போதைய வேட்பாளர் ரணசிங்க பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்காக எதைப் பேரம்பேசிப் பெற்றுக் கொண்டார் என்பதை, இங்கு நினைவுபடுத்துததல் காலப்பொருத்தமாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், 12 சதவீதத்துக்குக்க குறையாத வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற சட்டமொன்று இருந்தது. அதற்குக் குறைவான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் கட்சிகளின் வாக்குகள் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது.

அவ்வாறானதொரு காலகட்டத்தில், பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு, 12 ஆக இருந்த அந்த வெட்டு சதவீதத்தை, ஐந்தாகக் குறைக்க வேண்டும் என, அஷ்ரப் கோரிக்கை விடுத்து, அதனை வென்றும் எடுத்தார்.

இதனால், சிறிய கட்சிகளும் சிறுபான்மைக் கட்சிகளும் அதிக நன்மை பெற்றன. அந்தக் கட்சிகள் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

அரசியலில் சமூகம் சார்ந்து எப்படிப் பேரம் பேசுவது என்பதற்கு, முஸ்லிம் அரசியலரங்கில் சொல்லப்படும் மிக முக்கிய உதாரணமாக, இன்றுவரை மேலுள்ள சம்பவம் இருந்து வருகிறது. அரசியலில் சமூகம் சார்ந்து எப்படியெல்லாம் பேர பேச முடியும் என்பதற்கும், அந்தச் சம்பவம் மூலம், அஷ்ரப் வழிகாட்டியிருக்கிறார்.

1989ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய பிரதான வேட்பாளர்களான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஆர். பிரேமதாஸ ஆகிய இருவருடனும் அஷ்ரப் அப்போது பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

அந்தப் பேச்சுக்களில் முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய தவிசாளர் சேகு இஸ்ஸதீன், அஷ்ரப்புடன் கலந்து கொண்டார் என்பதும், அவற்றில் அவரின் பாத்திரம் மிகப் பெறுமதியாக இருந்தது என்பதும் இங்கு மேலதிக தகவல்களாகும்.

இப்போது, பேரம் பேசுவற்கு மிகவும் பொருத்தமான தற்போதைய சந்தர்ப்பத்தில், அஷ்ரப் காட்டிய வழியைப் பின்பற்றுவதற்கு முஸ்லிம் கட்சிகள் ஏன் முயற்சிக்கவில்லை என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.

ஐக்கிய தேசிய முன்னணிக்குத் தமது ஆதரவை வழங்கும் பொருட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது சமூகம் சார்ந்து – பேரம் பேச முடியும்போது, முஸ்லிம் காங்கிரஸு க்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஏன் முடியாது என்கிற கேள்விக்கு இரண்டு கட்சிகளும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தற்போதைய அரசியல் நெருக்கடியில் முஸ்லிம் கட்சிகள், எந்தவொரு தரப்பின் பக்கமும் சாய்ந்து விடாமல், நடுநிலையாக இருப்பதுதான் புத்திசாலித்தனமான செயற்பாடாக இருக்கும் எனக் கூறப்படும் கருத்துகளையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

பெரும்பான்மையின கட்சிகளுக்கிடையில், அக்கட்சிகளின் அரசியல் நலன் சார்ந்து இடம்பெறுகின்ற ‘யுத்தத்’தில், முஸ்லிம் கட்சிகள் மூக்கு நுழைக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது, மேலுள்ள கருத்துகளை முன்வைப்பவர்களின் வாதமாகும்.

ஆனால், நாடாளுமன்றில் பிரதிநிதித்துவங்களைக் கொண்டுள்ள இரண்டு முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளும் இதற்கு மாறாக உள்ளன. ரணில் விக்கிரமசிங்கவுக்குச் சார்பாக, இரண்டு முஸ்லிம் கட்சிகளும் களமிறங்கியுள்ளன. ஆனால், இதற்காகச் சமூகம் சார்ந்து, அந்தக் கட்சிகள் ரணிலிடத்தில் எந்தவொரு பேரம் பேசலிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கட்சிகளின் செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து நாடாளுமன்றில் 12 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், 113 எனும் பெரும்பான்மையை நாடாளுமன்றில் காட்டுவதற்கு மஹிந்தவும், ரணிலும் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம்களின் தேவைகளை அதிகபட்சம் நிறைவேற்றுவதற்கு எந்தத் தரப்பு தயாராக உள்ளதோ, அந்தத் தரப்புக்கு மேற்படி 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆதரவை வழங்கினால் என்ன என்பது பற்றியும், இரண்டு முஸ்லிம் கட்சிகளும் சிந்திக்க வேண்டியுள்ளது.

‘ஆற்றைக் கடக்கும் வரையில்தான் அண்ணன் – தம்பி’ என்பதை, சிறுபான்மை சமூகங்களுக்கு பேரினவாதக் கட்சிகள் வரலாற்றில் பலமுறை காட்டியிருக்கின்றன.

எனவே, அதை மனதில் வைத்துக் கொண்டு, முஸ்லிம் கட்சிகள் தமது ‘சதுரங்க விளையாட்டை’ச் சமூகம் சார்ந்து ஆட வேண்டும் என்பதைத்தான், இந்தப் பத்தி அவாவி நிற்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படிப்பட்ட மனிதர்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை !(வீடியோ)
Next post நடைமுறைக்கு வரும் தனியார் மருத்துவமனை சட்டம்…பொதுமக்களுக்கு என்ன நன்மை?( மருத்துவம் )