மருத்துவமனையால் வரும் நோய்த்தொற்று!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 32 Second

‘‘மருத்துவர்கள் நமக்கு சுகாதாரத்தை போதிப்பதாலோ, நமக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என்பதாலோ மருத்துவமனைகள் என்பவை நோய்க்கிருமிகள் அற்ற இடம் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள முடியாது. பல நோய்த்தொற்றுகள் மருத்துவமனைகள் காரணமாகவும் வரலாம். இதற்கு Hospital acquired infection என்று பெயர்’’ என்கிறார் தொற்றுநோய் சிறப்பு மருத்துவரான சுப்பிரமணியன் சுவாமிநாதன்.மருத்துவமனை நோய்த்தொற்று பற்றியும், எப்படி கவனமாக இருப்பது என்பது பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘மருத்துவமனையில் பணிபுரிகிறவர்களுக்கு Hospital acquired infection பற்றிய தெளிவு இருக்கும். ஆனால், பொதுமக்களுக்கு இதுபற்றி தெரிவதில்லை. அடிக்கடி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கோ, சிகிச்சைக்கோ செல்கிறவர்கள், நோயாளியை அழைத்துச் செல்பவர்கள் ஆகியோர் இதுபற்றி விழிப்புணர்வு பெறுவது அவசியம்.

ஒரு கர்ப்பிணி பிரசவத்துக்காக மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பிய பிறகு ஒரே மாதத்திற்குள் ஏதாவதொரு தொற்று ஏற்படலாம். அப்படி மருத்துவமனை சூழல் காரணமாக சிறிது காலத்திற்குள் ஏற்படுகிற தொற்றினை மருத்துவமனை சார்ந்த தொற்று என்று சொல்கிறோம். இதை Health care associated infection-ல் ஒரு வகை என்றே சொல்லலாம்.

ஒரு நோயாளி டயாலிசிஸ் செய்வதற்காக செல்கிறபோது அவருக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அந்த நபர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. அவர் டயாலிசிஸ் சென்டர் அல்லது ஸ்கேன் சென்டர் அல்லது மருத்துவரை பார்க்கவோ செல்லலாம். அதாவது மருத்துவத் துறையில் ஏதாவதொரு வகையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு, அது சார்ந்த நோய்த் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற உடல்நல கவனிப்பு சார்ந்த தொற்றுகளை Health care associated infection என்று சொல்கிறோம்.

நாம் சார்ந்திருக்கும் சூழல்களால் ஏற்படுகிற இருமல், சளி, நிமோனியா, சிறுநீர்த்தொற்று, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மலேரியா போன்றவற்றை Community acquired infection என்று சொல்கிறோம். இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். சாதாரணமாக, நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு அது எந்த கிருமியால் ஏற்பட்டது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். அதற்கு சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுத்து சரி செய்யலாம்.

ஆனால், அது மருத்துவமனை சார்ந்த தொற்று அல்லது உடல்நல கவனிப்பு சார்ந்த தொற்றாக இருந்தால் அது சாதாரண கிருமிகளைத் தவிர மற்ற கிருமிகளாலும் ஏற்படலாம். இவ்வகை தொற்றுகளுக்கு எதிராக சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. அதனால் இதுபோன்ற தொற்றுகளுக்கு பெரிய பெரிய ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படலாம்.

இதுபோன்ற நோய்த் தொற்றுகளுக்கு எதிரான ஆன்டிபயாடிக் மருந்துகள் பெரும்பாலும் சரியாக வேலை செய்யாமல் போய்விடுவதால் இதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளும் வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதற்கு மருந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற பயமும் இருக்கிறது.

மேலும் இதற்குரிய மருந்துகளுக்கான செலவுகள் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாக வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகமாக இருக்கிறது. இம்மருந்துகளை எவ்வளவுதான் பயன்படுத்தினாலும் உயிர்சேதம் அதிகம்.

உதாரணமாக, நாம் எலும்புமுறிவு போன்ற பிற பிரச்னைகளுக்கோ, பிரசவத்துக்கோ மருத்துவமனைக்கு செல்கிறபோது நமக்கு இதுபோன்ற தொற்றுகள் வந்தால் மேற்சொன்ன பிரச்னைகள் ஏற்படுவதோடு, அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உயிர்சேதங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பதும், கிருமிகள் அதிகமாக இருப்பதும் நோய்த் தொற்று ஏற்பட காரணமாக இருக்கிறது. Acinedobacter என்கிற கிருமி கடந்த 20 ஆண்டுகளாக ஆசிய நாடுகளில் உள்ள மருத்துவமனை சார்ந்த தொற்றுகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோன்று இந்தக் கிருமிக்கு போட்டியாக கடந்த சில ஆண்டுகளாக Klebsiella என்கிற கிருமி அதிகமாகி வருகிறது’’ என்றவரிடம், இதனை எப்படி தடுப்பது என்று கேட்டோம்…

‘‘கிருமித் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைப்பது, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவு போன்றவை அவசியம். நம் உடலில் சர்க்கரை நோய் போன்ற பிற நோய்கள் இருக்கிறபோது அதற்குரிய மருத்துவரை உரிய நேரத்தில் அணுகி உரிய மருத்துவம் மேற்கொள்வது அவசியம்.

மருத்துவமனை சார்ந்த தொற்றினைத் தடுக்க மருத்துவமனைகளை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். மருத்துவமனைகளில் கையுறைகளை பயன்படுத்துவதும், கைகளை மிகுந்த சுத்தத்துடன் வைத்துக் கொள்வதும் மிகவும் அவசியம். நமது கைகளின் மூலமாகவே இதுபோன்ற பெரும்பாலான கொடிய நோய்க்கிருமிகளால் தொற்று ஏற்படுகிறது. பொதுமக்கள் அடிக்கடி தங்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் இதுபோன்ற தொற்றுகளைத் தடுக்க முடியும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க குடும்பத்துடன் பிச்சை எடுத்த விவசாயி !! (உலக செய்தி)
Next post சீரான உடல் இயக்கத்திற்கு உடற்பயிற்சி!!(மகளிர் பக்கம்)