பிரசவ கால கால் வீக்கம்!!(மருத்துவம்)

Read Time:7 Minute, 7 Second

பிரசவ காலங்களில் கர்ப்பிணிகளுக்குக் கால்களில் வீக்கம் ஏற்படுவது சகஜம்தான். சிலருக்கு அது தானாக சரியாகிவிடும். ஆனால், கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிற எல்லா கால் வீக்கங்களையும் இப்படி இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியாது என எச்சரிக்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.

அரிதாக சிலருக்கு அது வேறு பயங்கரப் பிரச்னைகளின் விளைவாகவும் இருக்கலாம் என்கிற அவர், இது பற்றி விளக்கமாகப் பேசுகிறார்.

ஆபத்தில்லாத காரணங்கள்

கர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேலான குழந்தைகள் இருப்பதனால் எடை கூடும், வயிறு பெரிதாகும். அழுத்தமும் அதிகமாகும். இதனால் கால்கள் வீங்கலாம். வயது கடந்து தாமதமாகக் கருத்தரிக்கிற பெண்களுக்குப் பெரும்பாலும் கர்ப்ப காலம் முழுவதுமே பூரண ஓய்வே பரிந்துரைக்கப்படும். படுக்கையில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுவார்கள். அவர்களது கர்ப்பத்தைப் பத்திரமாக்க கர்ப்பப்பை வாயில் தையல் போடப்படும். கால்களின் வீக்கத்துக்கு இதுவும் ஒரு காரணமாகலாம்.

புரதச்சத்துக் குறைபாட்டின் வெளிப்பாடும் கால்களில் வீக்கமாக வெளிப்படலாம். அதனால்தான் கர்ப்ப காலத்தில் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேபோன்று ரத்தசோகை உள்ளவர்களுக்கும் இதே பிரச்னை வரலாம். கர்ப்ப காலத்தில் இந்த இரண்டு பிரச்னைகளும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். மருத்துவர் பரிந்துரைக்கும் இரும்புச்சத்து மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். உணவில் உப்பின் அளவைக் குறைத்து சாப்பிட வேண்டியதும் முக்கியம். அதிக உப்பும் இப்படி கால்களில் வீக்கத்தை அதிகரிக்கலாம். அதிக உப்பு ஆபத்தானது.

மேலே குறிப்பிட்ட காரணங்களால் ஏற்படும் கால் வீக்கத்துக்கு சரிவிகித ஊட்டமுள்ள உணவுகளும், சப்ளிமென்ட் மாத்திரைகளும், ஓய்வுமே
போதுமானவை.கால் வீக்கம் எப்போது ஆபத்தானது?

மேலே சொன்ன காரணங்கள் தவிர்த்து கால் வீக்கம் சில சமயங்களில் ஆபத்தானதாக மாறக்கூடும். அதில் முக்கியமானது Deep vein thrombosis. இது சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, சரியான சிகிச்சையளிக்கப்பட்டால் மட்டுமே குணப்படுத்தக்கூடியது.

அதென்ன டீப் வெயின் திராம்ப்போசிஸ்?

நம் உடலில் எல்லா பகுதிகளில் இருந்தும் ரத்தத்தை இதயத்துக்கு எதிர் திசையில் எடுத்துச் செல்பவை ரத்த நாளங்கள். அப்படி எடுத்துச் செல்லப்படும்போது அரிதாக சில சமயம் ரத்தம் உறைந்து போகும். அதையே டீப் வெயின் திராம்ப்போசிஸ் என்கிறோம். சுருக்கமாக DVT என்பார்கள் மருத்துவர்கள்.

அப்படி உறையும்போது கால்களின் நரம்புகள் மற்றும் இடுப்புப் பகுதியிலும்கூட இது நடக்கலாம். இந்த ரத்த உறைவானது அத்துடன் நின்றால் பரவாயில்லை. ஆனால், அது சிலருக்கு நுரையீரல் வரை பரவக்கூடும். அது உயிரையே பறிக்கிற அளவுக்கு ஆபத்தானது. கர்ப்பிணிகளை பாதிக்கிற இந்த ரத்த உறைவு பிரச்னை இந்த மாதத்தில்தான் வரும் என்று சொல்ல முடியாதபடி, அது கர்ப்பத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

யாருக்கெல்லாம் பாதிப்புகள் அதிகம்?

* வயது கடந்து கர்ப்பமானவர்கள்.
* முந்தைய கர்ப்பங்களிலும் இதே பிரச்னையை சந்தித்தவர்கள்.
* சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள்.
* அதிக உடல் பருமன் கொண்டவர்கள்.

DVT என்னவெல்லாம் செய்யும்?

கால்களிலுள்ள ரத்த நாளங்களிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் மந்தநிலை ஏற்படும். கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள், குழந்தையின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கர்ப்பப் பை விரிவடைந்து, அது இடுப்புப்பகுதியை அழுத்தும். அதன் தொடர்ச்சியாக ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகலாம்.

கணுக்கால்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். அந்த இடத்தில் உள்ள தோல் பகுதி சிவந்து போகும். வயது கடந்து திருமணமாகி கருத்தரிக்கிறவர்களுக்கு கெண்டைக்கால் தசைகளின் சுருங்கி விரியும் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, ரத்தம் உறையும். அது ரத்தத் துகள்களாக மாறி இதயம் மற்றும் நுரையீரலுக்குச் செல்லக்கூடும். அந்த நிலையில் கர்ப்பிணியின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

என்ன சிகிச்சை?

முதலில் கர்ப்பிணிகளின் கால் வீக்கம் சாதாரணமானதா அல்லது டீப் வெயின் திராம்ப்போசிஸ் பிரச்னையின் அறிகுறியா என்று பார்க்க வேண்டும். அதைப் பொறுத்துதான் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். டீப் வெயின் திராம்ப்போசிஸ் என்று உறுதி செய்தால் அதற்கான மருந்துகள் கொடுக்கப்படும்.

ரத்தம் உறைதலை அதிகரிக்காத மருந்துகள் இவை. கருவை பாதிக்குமோ என்கிற பயம் தேவையில்லை. கெண்டைக்கால் தசைகளை விரியச் செய்கிற வீனோ கம்ப்ரெஷன் என்கிற கருவியை கர்ப்பிணிகள் கால்களில் மாட்டிக்கொள்வது அவர்களுக்கு இதமளிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் நாட்டில் ஆச்சிர்யமூட்டும் 7 இடங்கள்!! (வீடியோ)
Next post புஜங்காசனம்!!(மகளிர் பக்கம்)