முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பாக இந்தோனேசியாவில் 3 கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை
இந்தோனேசியாவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 3 கிறிஸ்தவர்களுக்கு வியாழக்கிழமை இரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2000-ம் ஆண்டில் இஸ்லாமிய பள்ளி மீது துப்பாக்கி மற்றும் ஆயுதங்களால் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், 70 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவம் தொடர்பாக 3 கிறிஸ்தவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் வியாழக்கிழமை இரவு துப்பாக்கி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச் செயலுக்கு, வாடிகன் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வன்முறை: இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து, இந்தோனேசியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் வன்முறை வெடித்தது. போலீஸ் சாவடி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், சிறையை தீயிட்டுக் கொளுத்திய கிறிஸ்தவர்கள், அங்கிருந்த கைதிகள் பலரை விடுவித்தனர். சாலை மறியல் மற்றும் முஸ்லிமுக்கு சொந்தமான கடைகளில் திருட்டு போன்ற சம்பவங்களும் நடந்தன.