தாக்குப் பிடிப்பாரா மைத்திரி? (கட்டுரை)

Read Time:13 Minute, 15 Second

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எப்படி வழிநடத்துவது என்று தெரியாமல், அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது குழம்பிப் போயிருக்கிறார்.

2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டார்.

சிறிசேனவின் முயற்சியால், அந்தப் பதவி அவரது கைக்கு வரவில்லை. சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரின் முயற்சியால் தான், கட்சியின் தலைமைப் பதவி மைத்திரிபால சிறிசேனவின் கைக்கு வந்தது. மிகஇலகுவாக, கட்சித் தலைமைப் பதவியைக் கைப்பற்றிய சிறிசேனவுக்கு, இப்போது, அதைத் தக்கவைப்பதில் கடுமையான சவால்கள் தோன்றியிருக்கின்றன.

மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட, மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவே, அவர் இப்போது கட்சிக்குள் தனிமைப்பட்டு நிற்கும் நிலைக்கு முக்கிய காரணம். கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி, கட்சி அமைப்பாளர்களைச் சந்தித்த சிறிசேன, அடுத்து வரும் தேர்தல்களைப் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தே, சுதந்திரக் கட்சி எதிர்கொள்ளும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை வெளியிட்டவுடனேயே, அமைப்பாளர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதனால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில், சிறிசேன, தாய்லாந்துக்குச் செல்வதற்காக அவசரமாக, இடைநடுவிலேயே புறப்பட்டுச் சென்றார். அப்போதே, அவர், கட்சியின் தலைமையகத்தை மூடி வைத்திருக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

சுதந்திரக் கட்சிக்குள் தோன்றியுள்ள அதிருப்தியாளர்கள், கட்சித் தலைமையகத்தைக் கைப்பற்றக் கூடும் என்ற அச்சத்தாலேயே அவர், தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பும் வரை கட்சித் தலைமையகத்தை மூடுவதென முடிவெடுத்திருந்தார். ஆனால், கட்சிப் பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறி சமாளித்திருந்தார் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பியதாச. இலங்கையில் எந்தவொரு கட்சியின் தலைமையகமும், விடுமுறைக்காக மூடப்பட்டதாக மக்கள் அறியவில்லை.

அவர் நாடு திரும்பியதும், கட்சித் தலைமையகம் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கட்சித் தலைமையகத்துக்குள் சந்திரிகா குமாரதுங்கவையோ, அவரது ஆதரவாளர்களையோ அனுமதிக்க வேண்டாம் என்று மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேனவை, எதிரணியின் பொதுவேட்பாளராக முன்னிறுத்தியவர் சந்திரிகா குமாரதுங்க தான். இன்று ஜனாதிபதி ஆசனத்தில் மைத்திரிபால சிறிசேன அமர்ந்திருப்பதற்கும் முக்கிய காரணம் சந்திரிகா தான். மஹிந்தவை எதிர்த்துப் போட்டியிடும் துணிச்சலையும் அவர் தான் உருவாக்கிக் கொடுத்திருந்தார். ஆனால், சந்திரிகாவே இப்போது மைத்திரிபால சிறிசேனவின் பிரதான எதிரியாக மாறியிருக்கிறார்.

மஹிந்தவும் சிறிசேனவும் இணைந்த பின்னர், சந்திரிகாவை கூட்டாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இந்தக் கட்டத்தில் தான், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், சந்திரிகா தனது அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

1977 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பின்னர், ஆட்சிக்கு வரமுடியாமல் 17 ஆண்டுகளாகத் திணறிக் கொண்டிருந்த சுதந்திரக் கட்சியை, மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வந்தவர் சந்திரிகா தான். சந்திரிகா போட்ட பாதையில் பயணித்துத் தான் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார். எனினும், மஹிந்த ஒரு கட்டத்தில், சந்திரிகாவைத் தூக்கி வீசி விட்டு, தானே சுதந்திரக் கட்சியை உச்சத்துக்குக் கொண்டு சென்றதாகத் தம்பட்டம் அடித்தார். எனினும், 2015இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும், சந்திரிகா தனது காய்நகர்த்தல்களின் மூலம், மஹிந்தவை ஓரம்கட்டினார்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், சந்திரிகா கட்சிச் செயற்பாடுகளில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. ஆனால், காலத்துக்குக் காலம் அவர் தனது, செல்வாக்கை, உறுதிப்படுத்தி வந்திருக்கிறார்.

இப்போது, மஹிந்தவுடன் சிறிசேனா கூட்டணி வைத்துக் கொண்டுள்ள நிலையில், சந்திரிகா மீண்டும் சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

மஹிந்தவுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் சிறிசேனவின் முடிவுக்கு, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு சந்திரிகாவின் ஆதரவு கிடைத்திருக்கிறது.

மைத்திரிபால சிறிசேன மீது அதிருப்தி கொண்ட சுதந்திரக் கட்சி பிரமுகர்களுடன், கொழும்பிலும், ஹம்பாந்தோட்டையிலும், நீண்ட பேச்சுகளை சந்திரிகா நடத்தியிருக்கிறார். சுதந்திரக் கட்சியில் உள்ள 21 எம்.பிக்களையும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கச் செய்வதே சந்திரிகாவின் திட்டம். இதன் மூலம், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும், முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்.

மஹிந்தவுடன் இணைந்து, சிறிசேன ஏற்படுத்திய அரசியல் குழப்பத்தால், சுதந்திரக் கட்சியினர், பதவியை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். அவர்கள், தமது செல்வாக்கை உயர்த்துவதற்கும், கட்சியைப் பாதுகாப்பதற்கும் அமைச்சுப் பதவிகள் முக்கியம் என்று கருதுகின்றனர்.

ஆனால் சிறிசேனவோ, மஹிந்தவுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறார். மஹிந்தவுடன் இணைந்து போட்டியிட்டால், தாம் திட்டமிட்டு தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சம், சுதந்திரக் கட்சியினர் மத்தியில் உள்ளது. அதைவிட, தாமரை மொட்டு சின்னத்தில் சரணாகதி நிலையும் ஏற்படும்.

இதனை விரும்பாத சுதந்திரக் கட்சியினர் தான், ஐ.தே.கவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கும் திட்டத்தில் இருக்கின்றனர். ஆனாலும், அதற்குச் சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன இடமளிக்க வேண்டும். அவர் குறுக்கே நிற்பதால் தான், இப்போது சுதந்திரக் கட்சிக்குள் பனிப்போர் உருவாகியிருக்கிறது.

சுதந்திரக் கட்சிக்குள் தோன்றியிருக்கின்ற இந்த உள்ளக முரண்பாடுகளைத் தீர்க்கும் வல்லமை, சிறிசேனவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் கட்சிகளுக்குள் இதுபோன்ற குழப்பங்கள் உருவெடுப்பது வழக்கம் தான். அதைக் கையாளுவதற்குத் தனியான திறமை, தலைமைகளுக்கு முக்கியம்.

ஐ.தே.கவைப் பொறுத்தவரையில், தலைமைத்துவப் பிரச்சினைகள் அந்தக் கட்சிக்குள் இயல்பானது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு இதுபோன்ற சவால் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர், இரண்டு தசாப்தங்களாக அதனை வெற்றிகரமாகச் சமாளித்து வந்திருக்கிறார்.

இதுபோன்ற ஆளுமை சிறிசேனவுக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. கட்சிக்குள் தோன்றியிருக்கும் பிரச்சினையை அவர் பேசித் தீர்க்கும் நிலையில் இல்லை. அவரைப் பொறுத்தவரையில், மஹிந்த தரப்பின் வழிகாட்டலுக்கு அமையவே செயற்பட்டு வருகிறார். மஹிந்தவுக்கு, சுதந்திரக் கட்சியின் ஆதரவு தேவை. சுதந்திரக் கட்சியை ஒரு கிளைக் கட்சியாக, பங்காளிக் கட்சியாக வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் மஹிந்த.

உள்ளூராட்சித் தேர்தலில், மஹிந்தவின் பொதுஜன பெரமுன அதிகளவு வாக்குகளுடன் வெற்றியைப் பெற்றபோது, சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அதைவிடக் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளன என்று நியாயப்படுத்தியவர் ஜனாதிபதி சிறிசேன.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலோ, நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களிலோ, சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்தால் தான், பொதுஜன பெரமுனவால், மேலாதிக்கம் பெறமுடியும். அதனால்தான், சிறிசேனவைக் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார் மஹிந்த.

ஆனால், மஹிந்தவின் தேவையை மைத்திரிபால சிறிசேன நிறைவேற்ற வேண்டுமானால், சுதந்திரக் கட்சியை அவர் தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும். சுதந்திரக் கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விடயத்தில், மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்து வருகிறார். இது மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரமல்ல மஹிந்தவுக்கும் கூட சிக்கலான விடயம் தான்.

மைத்திரிபால சிறிசேனவின் கையில் இருந்து சுதந்திரக் கட்சியின் அதிகாரம், ஆதிக்கம் என்பன இழக்கப்படும் போது, அது பொதுஜன பெரமுனவையும் பாதிக்கும்.

சந்திரிகா குமாரதுங்க ஐ.தே.கவைப் பலப்படுத்த முனைகிறாரோ இல்லையோ, தற்போதைய நிலையில் அவர், மைத்திரி – மஹிந்த கூட்டணியின் பலத்தை உடைக்க எத்தனிக்கிறார்.

இந்தப் பலப்பரீட்சை மைத்திரிபால சிறிசேனவுக்குச் சோதனையாக அமைந்திருக்கிறது. அவர் கட்சியின் பிளவுக்கு வழியமைப்பாரேயானால், அது அவருக்கு மேலும் அவமானங்களையே தேடித் தரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரிப்பு உணர்த்தும் அறிகுறிகள்!! (மருத்துவம்)
Next post சசிகலாவுக்கு சபரிமலை கோவிலில் அனுமதி மறுப்பு !! ( உலக செய்தி)