By 14 January 2019 0 Comments

இரண்டாம் கட்ட ஆட்டம்!! ( கட்டுரை)

அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது.
‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம் கட்ட ஆட்டம்’ ஆரம்பித்திருக்கிறது.

ஜனாதிபதியிடம் இருந்த சில அதிகாரங்களை, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் கழற்றி எடுத்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக, ஜனாதிபதிக்கு இனி ‘எதுவும் முடியாது’ என்று நினைப்பது அப்பிராணித்தனமாகும்.

ஜனாதிபதி, இன்னும் நிறைவேற்றதிகாரம் கொண்டவராகவே இருக்கின்றார். எனவே, அந்த அதிகாரத்தின் முன்னால், சிலவேளைகளில் தவிர்க்க முடியாமல் மண்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.

டிசெம்பர் 20ஆம் திகதி, அமைச்சரவை நியமிக்கப்பட்டது. ஆனால், 28ஆம் திகதி நள்ளிரவு வரை, தத்தமது கடமைகளைச் செய்வதில் அமைச்சர்கள் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார்கள். காரணம், அமைச்சர்களுக்கான பொறுப்புகள், விடயதானங்கள், அமைச்சுகளின் கீழ் வரும் நிறுவனங்கள் எவை எனத் தெரியப்படுத்தப்படவில்லை.

வர்த்தமானி அறிவித்தல் மூலம், ஜனாதிபதிதான் அவற்றை அறிவிக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல், தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு ஜனாதிபதி சுற்றுலா சென்றிருந்தார்.

அமைச்சரவை நியமனத்தின் போதும், தனது நிறைவேற்றதிகாரத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருந்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு, பிரதமர் ரணில் கோரிக்கை விடுத்திருந்தும், ஜனாதிபதி அதைத் தட்டிக்கழித்தார்.

“அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென்றால், தன்னிடம் சரத் பொன்சேகா மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று, ஜனாதிபதி நிபந்தனை விதித்தார். சரத் பொன்சேகாவே அதை உறுதிப்படுத்தியும் இருந்தார். அரசியல் நெருக்கடியின் இரண்டாம் கட்ட ஆட்டம் அங்கிருந்துதான் ஆரம்பமானது.

ஓர் அலுவலகத்தின் தலைமைப் பதவியில் உள்ளவருடன் முரண்பட்டுக் கொண்டு, அங்கிருக்கும் ஊழியர்கள் நிம்மதியாகவும் பிரச்சினைகள் இன்றியும் கடமை செய்வதென்பதே முடியாத காரியமாக இருக்கும் போது, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைப் பகைத்துக் கொண்டு, அமைச்சர்கள் தமது நடவடிக்கைகளை இடையூறுகளின்றி, மேற்கொள்ள முடியும் என்று, எப்படி நம்பபுவது? இத்தனைக்கும், ஜனாதிபதிதான் அமைச்சரவையின் தலைவர் என்பதையும் மறந்து விடலாகாது.

அமைச்சர்களுக்கான பொறுப்புகள், விடயதானங்கள், அமைச்சுகளின் கீழ் வரும் நிறுவனங்கள் போன்றவற்றை அறிவிக்கும் வர்த்தமானியை உடனடியாக வெளியிடாமல், ஒன்பது நாள்களாக இழுத்தடித்து வந்த பிறகுதான், 28ஆம் திகதி நள்ளிரவு, அதை ஜனாதிபதி வெளியிட்டார். அதுவே, இன்னுமொரு பிரச்சினையை உருவாக்கி விட்டுள்ளது.

ஒவ்வோர் அமைச்சின் கீழும், எந்தெந்த நிறுவனங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை, ஜனாதிபதியே தீர்மானிப்பார். அதற்கிணங்க, 28ஆம் திகதி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம், சில அமைச்சர்கள் வசமுள்ள அமைச்சுகளின் கீழ், மிகக் குறைந்தளவு நிறுவனங்களே கொண்டுவரப்பட்டன.

உதாரணமாக, அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளின் கீழ், மிகச் சில நிறுவனங்களையே ஜனாதிபதி கொண்டு வந்துள்ளார். இதனால், மேற்படி அமைச்சர்கள் இருவரும், ஏமாற்றமடைந்துள்ளனர் என்று, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சின் கீழ் இருந்த அரச வங்கியை, வர்த்தமானி அறிவித்தல் மூலம், நிதியமைச்சின் கீழ் ஜனாதிபதி கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக பெரிதும் ஏமாற்றமடைந்துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்வதற்குத் தயாராகி வருவதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னொருபுறம், ஐக்கிய தேசிய முன்னணி தனித்து ஆட்சியமைத்திருப்பதால், அதன் அரசாங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் 30 பேர் வரையில்தான் அங்கம் வகிக்க முடியும். இந்த வரையறையையும் அரசமைப்பின் 19ஆவது திருத்தம்தான் செய்து வைத்திருக்கிறது.

இந்த நிலைவரமானது, ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, குழப்பகரமான அரசியல் நிலைமைகளின்போது, தனக்கு ஆதரவளித்தால் அமைச்சுப் பதவி வழங்குவதாகப் பலரிடம் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியிருந்தார் எனத் தெரியவருகிறது. ஆனாலும், அதை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

இதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தும், அதன் கூட்டணிக் கட்சிகள் இடமிருந்தும் பெரும் நெருக்கடியை, ரணில் விக்கிரமசிங்க சந்திக்கத் தொடங்கியுள்ளார்.

அரசியல் குழப்ப நிலையின் போது, தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்றை வழங்குவதாக, ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கி இருந்ததாக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால், அவருக்கு இன்னும், அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. “அமைச்சுப் பதவி கிடைக்காது விட்டால், அதிரடியான தீர்மானம் ஒன்றை எடுப்பேன்” என்றும், இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இன்னொருபுறமாக, தன்னுடன் சேர்த்து ஐ.தே.கட்சியின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸ விதானகே தெரிவித்திருக்கிறார். இந்தக் ‘குடைச்சல்’ எதிர்பாராததாகும்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியின் பக்கம் மாறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஐ.தே.கட்சியின் பக்கமாக, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவுவதற்குத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழப்பகரமான நிலைவரத்துக்குள் இருந்து கொண்டு, அரசாங்கத்தை இழுத்துச் செல்வதென்பது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலகுவாக இருக்கப் போவதில்லை. ஒரு கட்டத்தில், ‘நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவோம்’ என்கிற முடிவுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டம் வெற்றிகரமாக அமையும் போது, மேற்படி நிலைவரம் உருவாகக் கூடும்.

‘முள்ளை முள்ளால் எடுத்தல்’ என்பது அரசியலில் மிகப்பெரும் இராஜதந்திரமாகும். ஆனால், கடந்த அரசியல் நெருக்கடியில் அந்தத் தந்திரத்தைக் கையாள்வதற்கு ஜனாதிபதி தவறிவிட்டார் என்கிற விமர்சனமும் உள்ளது.

அதனால்தான், கடந்த 51 நாள் அரசியல் நெருக்கடியின்போது, சில விடயங்களில் ஜனாதிபதி தோற்றுப் போக நேர்ந்திருக்கலாம். அதை ஜனாபதிபதியும் உணராமல் இருந்திருக்க மாட்டார். ஆகவேதான், இப்போது அவரின் வியூகம் மாறியிருப்பது போல் தெரிகிறது.

அரசாங்கம் ஒன்றை, ஐக்கிய தேசியக் கட்சியினர் உருவாக்கியுள்ள போதும், அதைக் கொண்டு, உருப்படியாக எதையும் செய்ய முடியாததொரு நிலைவரம் ஏற்படுமாயின், அந்தக் கட்சியினருக்கு அது பெரும் தோல்வியாகவே அமையும்.

ஐக்கிய தேசியக் கட்சினருக்கு, அவ்வாறானதொரு தோல்வியை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே, ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டத்தைக் காண முடிகிறது.

மக்கள் எதிர்பார்ப்பவற்றை அரசாங்கம் நிறைவேற்றாமல் போகுமானால், அரசாங்கத்தைக் கொண்டு செல்லும் அரசியல் கட்சியின் மீதுதான், பொதுமக்களின் கோபம் திரும்பும்.
இதேவேளை, நாட்டில் தேர்தலொன்று விரைவில் நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடப்பதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ளது போல் தெரிகிறது. எனவே, தமது பலத்தை நிரூபிப்பதற்கான களமாக, எதிர்வரும் தேர்தலை, ஒவ்வொரு தரப்பும் பயன்படுத்தத் தொடங்கும்.

ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவும் கூட்டமைத்து, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறிகள் அதிகம் தெரிகின்றன. அப்படியொரு கூட்டணியை எதிர்கொள்வதென்பது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் சவாலாகவே அமையும்.

இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், பொதுஜன பெரமுன கட்சிதான் அதிக உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இன்னொருபுறமாக, மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் போது, தமக்குச் சாதகமானதொரு சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு, அனைத்து மாகாணங்களின் ஆளுநர் பதவிகளிலும் மாற்றங்களைச் செய்து, தனக்குச் சார்பானவர்களை ஆளுநர்களாக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கிறார் போல் தெரிகிறது. அனைத்து மாகாண ஆளுநர்களையும் இராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளையும் இந்தக் கட்டுரை எழுதப்படும்போது, வடக்கு மாகாண ஆளுநர், தனது பதவியை இராஜிநாமா செய்தமையையும் மேற்சொன்ன அனுமானங்களுடன் இணைத்துப் பார்த்தல் பொருத்தமாகும்.

நடந்து முடிந்த 51 நாள் அரசியல் நெருக்கடியின் போது, ஜனாதிபதி வகுத்த வியூகங்கள் பிழைத்துப் போனமையால் ஏற்பட்ட தோல்விகளை வைத்துக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரியின், ஒட்டுமொத்த ஆளுமையையும் அந்தத் தோல்விகளுடன் பொருத்திப் பார்த்து மதிப்பிடுதல் சரியானதல்ல.

ஆனால், ஜனாதிபதிக்கு எதிரானவர்களில் அதிகமானோர், அவரின் ஆளுமையைக் குறைத்து மதிப்பீடு செய்வதையே காண முடிகின்றது. எதிராளியின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுதல் மிகவும் ஆபத்தானதாகும்.

கடந்த 51 நாள் அரசியல் நெருக்கடியின் போது, ஜனநாயகத்துக்காக போராடியதாகக் கூறிக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமாகச் சார்ந்திருந்தவர்கள் பலரின் உண்மை முகம் எதுவெனத் தெரியத் தொடங்கியுள்ளது.

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே, ஜனநாயகத்தை முகமூடியாகப் பலர் அணிந்து கொண்ட அவலம், இப்போது அம்பலமாகியுள்ளது. இவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லையாயின், ரணிலுக்கு எதிரான முகாம்களுக்குச் செல்லவும் தயங்க மாடார்கள்.

அவ்வாறானவர்களை, வளைத்துப் பிடிக்கும் முயற்சிகளில் ஜனாதிபதி இறங்கினால், நாடாளுமன்றில் பெரும்பான்மையை இழக்கும் ஆபத்தை, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்ள நேரிடும் நிலை உருவாகலாம்.

இன்னொருபுறம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதியின் அணியிலிருந்து யாரும் தாவுவார்களா என்கிற கேள்வியும் உள்ளது. ஏனெனில், எந்தவித இலாபமும் இன்றி, யாரும் கட்சி தாவுவதற்கு முயல மாட்டார்கள். குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தாவ விரும்புவோர், அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டும் என்றுதான் அநேகமாக நிபந்தனை விதிப்பார்கள்.

ஆனால், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே நிரப்பப்பட்டு விட்டது. மறுபுறம், சுதந்திரக் கட்சியிலிருந்து அணி மாறுவோருக்கு, அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என்றும், ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அப்படிப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம், தாவுகின்றவர்களுக்கு எந்தவோர் அமைச்சுப் பதவியும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி வாய்ப்பற்ற ஒரு பக்கத்துக்கு யாரும் தாவிச் செல்வார்களா என்கிற கேள்வியும் இங்கு உள்ளது.

கூட்டிக்கழித்துப் பார்க்கையில், அரசியல் நெருக்கடி இன்னும் முடியவில்லை என்பது புரிகிறது. அதன் முதல் கட்டம் முடிந்து, இரண்டாம் கட்டம் ஆரம்பித்திருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரி, இரண்டாம் கட்டத்தை ஆடத் தொடங்கி, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகி விட்டன.Post a Comment

Protected by WP Anti Spam