By 16 January 2019 0 Comments

கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும்!! ( கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்தச் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதில்லை; எதிர்வினை ஆற்றியதுமில்லை. ஆனால், அண்மையில் கூட்டமைப்பின் உருவாக்கமே விடுதலைப் புலிகளுடனான ‘டீலின்’ அடிப்படையிலானது என்று கே. சயந்தன் தெரிவித்த கருத்தொன்று, யாழ். மய்யவாத அரசியல் அரங்கில், பேசு பொருளாகி இருக்கின்றது.

அரசியலில், கூட்டுகளும் கூட்டணிகளும் புரிந்துணர்வு, இணக்கப்பாடு, இலாபம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே உருவாகி வருகின்றன. அது, இன விடுதலை, உரிமை மீட்பு உள்ளிட்ட அறம் சார் இலக்குகளைக் கொண்டதாகவோ, தேர்தல் வெற்றி போன்ற குறுகிய இலாபங்களைக் கொண்டாதாகவோ கூட அமையலாம்.

தமிழ்த் தேசிய அரசியலில் உருவான இருபெரும் கூட்டுகளான தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, மேற்சொன்ன அடிப்படைகளில் உருவான கூட்டுகளேயாகும்.

அவை, ஒட்டுமொத்தமாக அறம் சார் இலக்குகளை மாத்திரம் கொண்டு உருவாகிய அமைப்புகள் அல்ல. அவை, குறுகிய இலாப நோக்கங்களைக் கருத்தில் கொண்டும், தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளாகும். அல்லது, அதில் பங்கெடுத்த தரப்புகளில் சில, அவற்றின் போக்கில் இணைந்தவையாகும்.

அப்படியான தருணத்தில், அந்தக் கூட்டுகளின் உருவாக்கத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு தரப்புக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் அவை தொடர்பில் ஒவ்வொரு கதை இருக்கும். அந்தக் கதைகளில் சில புள்ளிகள் வெளியில் உரையாடப்படக் கூடியவையாகவும், இன்னும் சில புள்ளிகள் வெளியில் பேச முடியாதவைகளாகவும் இருக்கும். அது, அந்தக் காலத்து அரசியலின் போக்கு, கள யதார்த்தம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அமையலாம்.

கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று, 2015ஆம் ஆண்டு, தொலைக்காட்சி விவாதமொன்றில் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.

நெறியாளர் அந்தக் கேள்வியை, வெவ்வேறு கோணத்தில் கேட்ட போதும், கூட்டமைப்புக்கும் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அவர் அடித்துக் கூறினார். ஒருகட்டத்தில், தொடர்பு இருந்தது பற்றித் தனக்குத் தெரியாது என்றார். ஆனால், இதே சம்பந்தனால், 2009களுக்கு முன்னர், இவ்வாறான கருத்தொன்றைப் பேசியிருக்கவே முடியாது.

அந்தக் களமும் காலமும் அவரை அனுமதித்தும் இருக்காது. 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் தான் ஏன் போட்டியிட வேண்டும் என்று விடுதலைப் புலிகளுடனான சந்திப்பின்போது, 30 நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் உரையாற்றிய சம்பந்தன், புலிகளுடனான தொடர்பு பற்றித் தனக்குத் தெரியாது என்று, புலிகளின் காலத்துக்குப் பின்னர் கூறியிருக்கிறார்.

சம்பந்தன் கூறுவது அப்பட்டமான பொய் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும். அதுபோல, தமிழ் மக்களுக்குக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய வெளிப்படையான உண்மைகளும் தெரியும். அதை யாரும் எந்தக் காரணத்தாலும் மறுத்தாலும், மறைத்தாலும் அவை எடுபட்டுவிடாது.

தமிழ்த் தேசிய அரசியலில், ஜனநாயக விழுமியங்கள் என்பது, எப்போதுமே காலில் போட்டு மிதிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. அது, சுதந்திரத்துக்கு முந்தையை இலங்கையில் தொடங்கிய சாபக்கேடு.

அருணாச்சலம் மகாதேவாவை, துரோகி என்று சொல்லிக் கொண்டு, அரசியல் அரங்கில் சம்மணமிட்டு உட்கார்ந்த ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை, அதே துரோகி வாதத்தால், தமிழரசுக் கட்சி தோற்கடித்தது வரலாறு.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்து, தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வநாயகம் தோற்றுவிக்கும் போது, அப்போது பலமாக இருந்த காங்கிரஸிடமிருந்து எதிர்கொண்ட தாக்குதல்கள், நெருக்கடிகள் ஜனநாயக விழுமியங்கள் சார்ந்தவை அல்ல.

தமிழரசுக் கூட்டங்களில், குடிகாரக் குண்டர்களை இறக்கி, ரவுடித்தனம் பண்ணியது முதல், பாம்புகளை எறிந்து மக்களை விரட்டியது வரை, காங்கிரஸ்காரர்களில் ஜனநாயக விழுமியம் பல்லிளித்த வரலாற்றைத் தமிழ் மக்கள் கண்டு வந்திருக்கின்றார்கள்.

காங்கிரஸின் ரவுடித்தனங்களில் இருந்து தப்பித்துப் பிழைத்து, வெற்றிக் கொடி நாட்டிய தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத்துக்கு முரணான நடவடிக்கைகளை ஏனைய கட்சிகள் மீது பிரயோகித்தது வரலாறு.

குறிப்பாக, அ.அமிர்தலிங்கம், தமிழரசு இளைஞர்களைக் கொண்டு, அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விழுமியங்களுக்கு அப்பாலான நடவடிக்கைகளே, ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிப் பாதையில், சகோதரப் படுகொலைகளுக்கு விதை போட்டது. ஏனெனில், துரோகி வாதத்தை வைத்துக் கொண்டு, யாரைப் பலி எடுத்தாலும், அது, அறம் சார்ந்த ஒன்றாக, அதைக் கொண்டாட்டமாக ஒப்புவிக்கும், குறு அரசியலை யாழ். மய்யவாத அரங்கு திறந்தது.

அது, அமிர்தலிங்கத்தையும் பலி எடுத்தது. அந்த மனநிலையின் கட்டங்களை, இன்றைக்குச் சமூக ஊடகங்களில், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக எழுதப்படும் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் பலரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது தொடர்பில் கேள்வி எழுப்பினால், ஒட்டுமொத்தமாக மூளைச் சலவை செய்யப்பட்ட மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள்.

தமிழரசுக் கட்சி உருவாக்கத்துக்கு எதிராக, காங்கிரஸ்காரர்கள் அயோக்கியத்தனங்களைப் புரிந்த போதும், காலம் இருதரப்பையும் ஒன்றாக இயங்கும் சூழலை உருவாக்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், தமிழ்த் தேசிய அரசியலைத் தாங்கிப் பிடிக்கும் போக்கில் மாத்திரம் உருவான ஒன்றல்ல. அவற்றுக்கு, காங்கிரஸ் – தமிழரசு முக்கியஸ்தர்களின் தேர்தல் தோல்விகளும் காரணமாக இருந்திருக்கின்றன.

அதுபோலவே, கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னாலும், பல காரணங்கள் உண்டு. தமிழ்த் தேசிய விடுதலை அரங்கின் ஏக வாரிசுகள் தாங்களே என்கிற நிலையைப் புலிகள் அடைந்துவிட்ட பின்னர், தேர்தல் அரசியல்வாதிகளை அவர்கள் அரங்குக்குள் அனுமதித்ததில்லை. மக்களும் ஊடகங்களும் கூட, அதைப் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை.

ஆனால், அந்த நிலையையும் காலம் மாற்றியது. கூட்டமைப்பின் உருவாக்கம் புலிகளுக்கும் அவசியமான ஒன்றாக இருந்தது. ஜனநாயக முகமொன்று புலிகளுக்குத் தேவை, என்பதை புலிகளின் வெளி ஆலோசகர்களாக இயங்கிய பலரும் திரும்பத் திரும்பக் கூறி வந்தனர்.

அத்தோடு, புலிகளைப் பகைத்துக் கொண்டு, தேர்தல் வெற்றிகளையோ, எதிர்கால இருப்பையோ பலப்படுத்த முடியாது என்பதை, தேர்தல் அரசியலுக்குள் வந்துவிட்ட முன்னாள் ஆயுத இயக்கங்களும் கூட்டணியும் காங்கிரஸும் புரிந்துகொண்டே இணக்கப்பாட்டுக்கு வந்தன.

புளொட் அமைப்பை, உள்வாங்குவது தொடர்பில், புலிகள் ஆதரவு தெரிவித்த நிலை காணப்பட்டது. அதற்கான பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும், ஆரம்பப் பேச்சுகளிலிருந்தே புளொட் விலகிவிட்டது. இது, வெளிப்படையாகத் தெரியும் செய்தி.

ஆனால், இதன்பின்னால், ஒவ்வொரு கட்சிக்குள், புலிகளின் ஒவ்வொரு பிரிவுக்கும்கூட ஒவ்வொரு இலக்கு கூட்டமைப்பை உருவாக்குவது சார்ந்து இருந்தது. அவை, தொடர்பில் ஆயிரத்தெட்டுக் கதைகள் எழுதப்பட வேண்டியிருக்கின்றன. ஒவ்வொரு கதைகளும் ஏதோவொரு புள்ளியில் வேண்டுமானால் சந்திக்கலாம்.

ஆயுதப் போராட்டத்தை நோக்கி, கூட்டணி (தமிழரசுக் கட்சி) தமிழ் இளைஞர்களைத் தள்ளிய போதிலும், அதன்பால் எந்தவித அக்கறையையும் காட்டாதவர் சம்பந்தன். அவர் என்றைக்குமே, ஆயுதப் போராட்ட நிலைக்கு எதிராகவே நின்றார்.

அவரே, விடுதலைப் புலிகளை ஏக தலைமையாக, ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் கட்டம் ஏன் உருவானது என்கிற கேள்வி எழுகின்றது. அதுபோல, யாழ்ப்பாணத்தையே அறியாதவர்கள் எல்லாம், வாகனத்தில் இருந்து இறங்காமலேயே, தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றது, கூட்டமைப்பு என்கிற அமைப்பு, புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டதன் பின்னராக நிகழ்ந்ததுதான். இல்லையென்றால், கூட்டமைப்பு என்கிற கூட்டுமில்லை. அதில் போட்டியிடுவதற்கு ஆட்களும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

விடுதலைப் புலிகளின் முடிவின் பின்னராக கூட்டமைப்பு என்பது, இயங்கு நிலையில் தமிழரசுக் கட்சியே. (2009க்குப் முன்னரான கூட்டமைப்பும், அதன் பின்னராக கூட்டமைப்பும் அதன் தலைமைத்துவம், போக்கு, களம் உள்ளிட்ட அனைத்திலும் மாற்றங்களைக் கொண்ட அமைப்பு.) அதனை, மக்களும் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள்.

அதன் போக்கையே, சம்பந்தன் அடிக்கடி பிரதிபலித்தும் வந்திருக்கின்றார். அவர், ஆயுதப் போராட்டத்துக்கு எதிரான மனநிலையோடு எழுந்துவந்த ஒருவர், ஆயுதப் போராட்ட வீழ்ச்சியொன்றின் பின்னராக தன்னுடைய கட்சியைப் பலப்படுத்த நினைக்கிறார். அதன்போக்கில், கடந்த காலத்தில் பேச மறுத்த உண்மைகளை, இப்போது தமிழரசுக்கட்சியினர், பேச விளைகிறார்கள். சயந்தனின் பேச்சும் அதனை நோக்கியதே.Post a Comment

Protected by WP Anti Spam