By 21 January 2019 0 Comments

உயிர் காக்கும் சிறுநீரகம் காப்போம்…!! (மருத்துவம்)

சிறுநீரகம்… இயற்கை நமக்கு அளித்த உடல் சுத்திகரிப்பு நிலையம். அதுவும் ஒன்றல்ல, இரண்டு! உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவுக்கு அளவில் சிறியதான சிறுநீரகத்தின் செயல்பாடு உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. நாம் குடிக்கும் தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும் உள்ள கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் போன்ற பல தாது உப்புகள் உணவு செரித்த பிறகு சிறுநீர் வழியே வெளியேறிவிடும். ஆனால், இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்கு சிரமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரக குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்பு, படிகம்போல் படிந்து, கல் போல திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரக கல். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கமாக பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் தோன்றுகிறது.

சிறுநீரக கற்களை அதன் தன்மையை பொறுத்து பல வகைகளாக பிரிக்கலாம். தக்காளியில் உள்ள ஆக்சாலிக் அமிலத்தால், ஆக்சலேட் கற்கள் உண்டாகின்றன. பால், தயிர் போன்ற‌ கால்சியம் அதிகமான உணவுகள் மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போதும் அளவுக்கு அதிகமான கால்சியம் சிறுநீரகத்தில் கற்களாக படிந்துவிடுகிறது. மேலும், அதிக மசாலா சேர்த்த உணவு, புளிப்பு சுவை, இறைச்சி, முட்டை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதை தள்ளிப்போடுவது ஆகியவை சிறுநீரக கல் தோன்றுவதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

அடிவயிற்றில் வலி, முதுகுவலி, வலி மற்றும் எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல், சில நேரங்களில் ரத்தமும் வெளியேறுதல், குறிப்பிட்ட அளவுக்கு நீரை வெளியேற்ற முடியாததால், மூட்டுகளில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படுதல், யூரியா, யூரிக் ஆசிட் போன்ற நைட்ரஜன் கழிவுகள் உடலில் தங்குவதால் அடிக்கடி வாந்தி எடுத்தல், பசியின்மை மற்றும் அசதி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்த அழுத்தம் உயருதல், மூச்சு வாங்குதல், வைட்டமின் டி உற்பத்தி குறைவதால் மூட்டுகளில் வலி ஏற்படுதல், கண்கள் வெளுத்துப் போய் ரத்தசோகை ஏற்படுதல் ேபான்றவை உருவானால் உஷாராக வேண்டும்.

வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற அளவில் உடல் எடை இருக்க வேண்டும். முறையான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். சுய மருத்துவம் மற்றும் அளவுக்கு அதிகமான மாத்திரை உட்கொள்ளுதல் கூடாது. புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் அருந்துதல் கூடாது. இவை கட்டுப்பாடு இன்றி, எல்லை மீறினால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கும். கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரைநோய், அதிக உடல் எடை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களாலும், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய சில ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை நீண்ட நாள் எடுத்துக்கொள்வதாலும் சிறிது சிறிதாக சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்துகொண்டே வந்து, 90% அளவுக்கு பாதிக்கப்பட்ட பின்னர்தான் அறிகுறிகளே வெளிப்பட துவங்கும்.

சிறுநீரகத்தை பாதுகாக்க, தக்காளி பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக உப்பு, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உப்பின் உபயோகத்தை குறைக்க வேண்டும். அதிக புரோட்டீன் உணவு உண்பதை குறைக்க வேண்டும். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழ‌ங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரக தொற்று ஏற்படுவதை தவிர்க்க, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். சிட்ரஸ் பழ வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறு போன்றவை சிறுநீரக தொற்றை குறைக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது சிறுநீரை உற்பத்தி செய்யும் திறன் குறைந்துவிடும். எனவே, அதற்கேற்ப தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.

இந்த நேரங்களில் அதிகமான தண்ணீர் குடிக்கும்போது அது, மூட்டுகளில் மட்டும் தங்காமல் நுரையீரலுக்குள் சென்று நீர்கோத்து பாதிப்பு ஏற்படுத்தும்.
சில நோயாளிகளின் சிறுநீரின் அளவு எப்போதும்போல சரியாகவே இருக்கும். ஆனால், பரிசோதனையில் பார்த்தால் கிரியாட்டினைன், யூரிக் ஆசிட் அளவுகள் உயர்ந்திருக்கும். எனவே, மூன்று மாதத்துக்கு ஒரு முறை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் சிறுநீரக செயல்பாட்டை கண்டறிய உதவும் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை அளித்தாலும், பழைய நிலைக்கு சிறுநீரகத்தை கொண்டுவர முடியாது. டையாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே நோயாளியை காப்பாற்ற முடியும். நம் உயிரை காக்கும் சிறுநீரகத்தை பாதுகாப்போம்.Post a Comment

Protected by WP Anti Spam