By 17 January 2019 0 Comments

சிறுநீரகம்: உடலின் கழிவுத் தொழிற்சாலை!! (மருத்துவம்)

நெஞ்சில் வலி வந்தால், ‘எதுக்கும் ஒரு இசிஜி எடுத்துக்கோ… மாரடைப்பு ஏதாவது இருந்துடப் போகுது’ என அக்கறையோடு சொல்வதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். வயிற்றில் வலி வந்தால், ‘எண்டோஸ்கோப்பி பார்த்துக்கொள்வது நல்லது. அல்சராக இருக்கும்…’ என்று யோசனை சொல்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். இதுபோல் முதுகில், விலாவில் வலி வந்தால், ‘அது வாயுவாகத்தான் இருக்கும். பூண்டு சாப்பிடு, சரியாகிவிடும்’ என்றுதான் நெருங்கியவர்கள் சொல்வார்களே தவிர, ‘வயிற்றை ஸ்கேன் எடுத்து சிறுநீரகம் (Kidney) சரியா இருக்கான்னு பார்த்துக்கோ…’ என ஆத்ம நண்பர்கூட ஆலோசனை சொல்லமாட்டார்.

காரணம், நம் மக்களிடம் இதயம் மற்றும் இரைப்பையைத் தெரிந்த அளவுக்குச் சிறுநீரகம் குறித்த விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. படித்த ஆண்களுக்கே கூட சிறுநீரகம் எங்கே இருக்கிறது என்கிற விவரம் தெரியாது! சிறுநீர் வெளியேறுகிற உறுப்பைச் சுற்றி இருக்கும் விரைகளையே (Testes) சிறுநீரகங்கள் என்று கருதுபவர்கள்தான் அதிகம்!

இதயம் ஒரு பம்ப், மூளை ஒரு கம்ப்யூட்டர், நுரையீரல் ஒரு காற்று இயந்திரம் என்று வர்ணித்தால் சிறுநீரகம் ஒரு ஃபில்டர். வடிகட்டி! இது ஒரு இரட்டைப் பிறவி. இரைப்பைக்குப் பின்புறம், முதுகெலும்பின் இருபுறமும் கைக்கு அடக்கமான மாங்காய் அளவுக்குச் சிறுநீரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 150 கிராம் எடையில், 12 செ.மீ. நீளத்தில், 6 செ.மீ. அகலத்தில், 3 செ.மீ. தடிமானத்தில் அவரைவிதை வடிவத்தில் அமர்ந்துள்ளது.

ஒரு சிறுநீரகத்தை நெடுக்காக வெட்டிப் பார்த்தால் இரண்டு பகுதிகள் கண்ணுக்குத் தெரியும். குழிவான பகுதியில் ஒரு பை போன்ற அமைப்பைப் பார்க்கலாம். அதற்குப் பெயர் ‘சிறுநீரக பெல்விஸ்’ (Renal pelvis). அதையே கொஞ்சம் உற்றுப் பார்த்தால், குவிந்த பகுதியிலிருந்து அதில் நிறைய குழாய்கள் திறப்பது தெரியும். இவை ‘காலிசெஸ்’ (Calyces). சிறுநீரை உற்பத்தி செய்வதுதான் சிறுநீரகத்தின் பிரதான வேலை. எப்படிச் சாத்தியப்படுகிறது?

இது நெஃப்ரான்களின் சாமர்த்தியம். ‘நெஃப்ரான்’ (Nephron) என்றால்? சிறுநீரகத்தின் துப்புரவுப் பணியாளர்கள். மருத்துவ மொழியில் சொன்னால், சிறுநீரக முடிச்சுகள். ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஏறத்தாழ 10 லட்சம் நெஃப்ரான்கள் இருக்கின்றன. ஏராளமான முடிச்சுகளுடன் ஒரு ஃஸ்பிரிங் மாதிரி சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் இந்த நெஃப்ரான்கள் எல்லாவற்றையும் நேராக இழுத்து, இணைத்தால் ஒரு மெல்லிய டெலிபோன் கேபிள் மாதிரி ஆகிவிடும். இதன் நீளம் கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர். 12 செ.மீ. நீளமுள்ள சிறுநீரகத்துக்குள் 60 கிலோ மீட்டர் குழாயைச் சுருட்டி வைத்திருக்கும் படைப்பின் அற்புதத்தை வியக்காத மருத்துவர் இல்லை!

ஒவ்வொரு நெஃப்ரானிலும் பல பகுதிகள் உண்டு. இதன் தலைப்பகுதி ஒரு மதுக்கிண்ணம் போலிருக்கும். ‘பௌமன்ஸ் கேப்சூல்’ (Bowman’s capsule) என்பது இதன் பெயர். சிறுநீரகத்துக்கு வரும் சுத்த ரத்தக்குழாயின் (Renal artery) கிளை ஒன்று (Afferent arteriole) இதற்குள் நுழைகிறது. இது கிளைவிட்டுக் கிளைவிட்டுச் சிறிதானதும் மறுபடியும் புதிய கிளைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய குழாயாக (Efferent arteriole) உருவமெடுத்து வெளியேறுகிறது.

பின்னர் அது அசுத்த ரத்தக் குழாயாக (Renal vein) உருமாறி பொது ரத்த ஓட்டத்தில் இணைகிறது. பௌமன் கிண்ணத்திலிருந்து பாம்பின் வால்போல சிறுநீரகக்குழாய் (Renal tubule) ஒன்று கிளம்புகிறது. ஊட்டி மலைப்பாதையில் உள்ள ஹேர்பின் வளைவுகளைப் போலத்தான் இந்த சிறுநீரகக் குழாய்களும் வளைந்து வளைந்து சென்று கடைசியில் சேகரிப்புக் குழாய்களாக (Collecting tubules) மாறி, காலிசெஸ் பகுதிக்கு வந்து பெல்விஸில் திறக்கின்றன.

இங்கிருந்து ஓர் அடி நீளத்தில் இரண்டு இஞ்ச் அகலத்தில் ஒரு சிறுநீர்க்குழாய் (Ureter) புறப்படுகிறது. இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் இப்படி இரண்டு சிறுநீர்க்குழாய்கள் கிளம்பி அடிவயிற்றில் இருக்கும் சிறுநீர்ப்பையில் (Urinary bladder) வந்து சேர்கிறது. சிறுநீரகத்தில் எங்கு பார்த்தாலும் குழாய் மயம்தான். நம் படைப்பின் அடுத்த அற்புதம் இது. சரி, நெஃப்ரான்களின் வேலை என்ன? ‘ரத்தத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீர்ப்பைக்கு அனுப்புவது’ என்று ஒற்றை வரியில் அதைச் சொல்லிவிடலாம். எனினும், அதற்காக அவை படும் பாடுகளைக் கவனித்தால் வியப்பில் விழிகளை விரிப்பீர்கள்.

கழிவுகளை மறுசுழற்சி செய்கிற தொழிற்சாலையில் நடக்கும் வேலைக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வேலைகள் இங்கேயும் நடக்கின்றன. எப்படி? உடலில் ஒரு ரத்த நதி எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நிமிடத்துக்கு ஒண்ணேகால் லிட்டர் ரத்தம் சிறுநீரகத்துக்குப் போகிறது. இதிலிருந்து நிமிடத்துக்கு 125 மில்லி சிறுநீர் ஆரம்பத்தில் பிரிக்கப்படுகிறது. அதாவது ஒரு நாளில் 150 முதல் 180 லிட்டர் வரை சிறுநீர் முதலில் உற்பத்தியாகிறது. இந்தக் கட்டத்தில் நெஃப்ரான்கள் மட்டும் ஒரு ஸ்ட்ரைக் அறிவித்தால் போதும், நாள்முழுக்க நாம் ரெஸ்ட் ரூமிலேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்! ஏனெனில், இனிமேல்தான் முக்கிய வேலைகளே நடக்க வேண்டும்.

நகராட்சியில் ஏரித் தண்ணீரை ஒரு தொட்டியில் சேகரித்துப் பல கட்டங்களில் வடிகட்டி சுத்தப்படுத்துகிறார்களே… அதோடு ஒப்பிடலாம் இந்த வேலையை. ஆரம்பச் சிறுநீர் என்பது தரைத் தொட்டியில் சேகரிக்கப்பட்ட ஏரித் தண்ணீர் மாதிரி. இதில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும். நல்லவை எல்லாம் சிறுநீரில் போய்விட்டால், அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் தலைசுற்றி மயங்கிவிடுவோம்.

இதைத் தடுப்பதற்காக அடுத்த வேலையை ஆரம்பிக்கிறது நெஃப்ரான். இதனுள் சிறுநீர் பயணிக்கும் போது, அதிலுள்ள குளுக்கோஸ், அமினோ அமிலம், சோடியம், பைகார்பனேட், வைட்டமின்கள் மற்றும் தண்ணீரை தேவையான அளவுக்கு உறிஞ்சி உடலுக்கே திரும்பவும் தந்துவிடுகிறது. தேவையில்லாத யூரியா, யூரிக் அமிலம், கிரியேட்டினின் போன்ற கழிவுகளைத் தண்ணீருடன் கலந்து சிறுநீர்ப்பைக்கு அனுப்புகிறது. இதுதான் சிறுநீர்.

நெஃப்ரான்களின் வழியே ஆரம்பச் சிறுநீர் வரும்போது, உடம்புக்கு உபயோகப்படுகிற சத்துக்கள் எல்லாமே மறுபடியும் உடலுக்குக் கிடைத்து விடுவதால்தான், உடலில் அயனிகளின் அளவு சமச்சீராக இருக்கிறது; தண்ணீரின் அளவும் சரியாக இருக்கிறது. சரியான ஓல்டேஜில் கரண்ட் வந்தால்தான் பல்பு ஒழுங்காக எரியும். அது மாதிரி ரத்தம் உடம்புக்குள் ஒரே அளவாகச் சுற்றி வருவதற்கு இந்தச் சமச்சீர் அளவுகள் முக்கியம். அதனால், நெஃப்ரான்களும் சளைக்காமல் சிறுநீரை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன.

சிறுநீரகம் செய்யும் இந்தச் சீரான பணிக்கு பிட்யூட்டரி சுரக்கும் ‘வாசோபிரசின்’ மற்றும் அட்ரீனல் சுரக்கும் ‘ஆல்டோஸ்டீரோன்’ ஹார்மோன் கைகொடுக்கிறது. இப்படிச் சிறுநீரகமானது ரத்தத்தில் தேங்கும் குப்பைகளை எல்லாம் பலதடவை வடிகட்டி சிறுநீரில் வெளியேற்றுவதால், உடலில் அதிகபட்ச கழிவுகளைக் கொண்ட திரவமாக சிறுநீர் இருக்கிறது. ஓர் அறையைச் சுத்தப்படுத்த வேண்டுமானால், நிறைய தண்ணீர்விட்டு மீண்டும் மீண்டும் அலசுவோம் அல்லவா? அதுபோலத்தான் இந்த நிகழ்வும்.

அதனால்தான், ‘ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், சிறுநீரகம் எனும் கழிவுத் தொழிற்சாலை சரியாக இயங்க வேண்டுமானால், தண்ணீர் எனும் மூலப்பொருள் தாராளமாக கிடைக்க வேண்டும். அதுசரி, பகலில் நாம் அடிக்கடி பாத்ரூம் போகிறோம். அதுபோல் இரவிலும் போனால் நிம்மதியாகத் தூங்கமுடியுமா? இதற்கும் ஒரு சூப்பர் சிஸ்டம் சிறுநீரகத்தில் இருக்கிறது. மனிதப் படைப்பின் அடுத்த ஆச்சரியம் இதுதான்.

மருத்துவமனையில் குளுக்கோஸ் ட்ரிப் இறங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அதில் குளுக்கோஸ் இறங்கும் வேகத்தைக் குறைக்கவும் கூட்டவும் ஒரு ரெகுலேட்டர் இருக்கும். கிட்டத்தட்ட அதே சிஸ்டம்தான் சிறுநீரகத்திலும் இருக்கிறது. ஆனால், ரெகுலேட்டர் மட்டும் மிஸ்ஸிங். நெஃப்ரான் இயல்பாகவே பகலில் டக்… டக்கென்று வேகமாகவும், இரவில் டொக்… டொக்… டொக்… டொக்கென்று மெதுவாகவும் சிறுநீரைச் சொட்டுகிறது.

இப்படிச் சொட்டுச் சொட்டாக உற்பத்தியான சிறுநீர் ஒரு மாப்பிள்ளை அழைப்பு கார் வேகத்தில் சிறுநீர்ப்பையில் சேருகிறது. நமக்குச் சிறுநீர்ப்பை மட்டும் இல்லாவிட்டால் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். சரியாக மூடப்படாத தண்ணீர்க் குழாய் மாதிரி சிறுநீர் எந்நேரமும் சொட்டும். தாங்குவோமா? நம் படைப்பின் கூடுதல் அற்புதம் சிறுநீர்ப்பை. இரண்டு சிறுநீரகங்களுக்கும் சேர்த்து ஒரு பைதான். இதில் சுமார் அரை லிட்டர் சிறுநீர் பிடிக்கும்.

ஏரித் தண்ணீரை வடிகட்டி டவுனுக்குள் கொண்டு வந்து ஒரு மேல்நிலைத் தொட்டியில் சேகரிக்கிற மாதிரி சிறுநீர் இந்தப் பையில் சேகரிக்கப்படுகிறது. நம் தேவைக்கேற்ப தெருக்குழாய்களுக்குத் தொட்டித் தண்ணீரைத் திறந்துவிடுகிற மாதிரி, பை நிறைந்ததும் சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் வரை சிறுநீர் கழித்தால் அது நார்மல். இந்த அளவைத் தாண்டினாலோ, குறைந்தாலோ சிறுநீரகத்தில் சிக்கல் என்று அர்த்தம். என்னென்ன சிக்கல்கள்? எந்த வழியில் வருகிறது? எப்படித் தீர்க்கலாம்?

சிறுநீரகம் செய்யும் அற்புதப் பணிகள்

* உடம்பிலுள்ள கழிவுகளை அகற்றி ரத்தத்தைச் சுத்தமாக்குகிறது.
* ‘ரெனின்’, ‘ஆஞ்சியோடென்சின்’ எனும் ஹார்மோன்களைச் சுரந்து ரத்த அழுத்தத்தை ஏறவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
* உடம்பின் அமிலம், கார அளவுகளை சரிவிகிதத்தில் வைத்துக்கொள்கிறது.
* ‘எரித்ரோபயாட்டின்’ என்ற ஹார்மோனைச் சுரந்து ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
* ‘கால்சிட்ரியால்’ ஹார்மோனைச் சுரந்து எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.
* ‘புராஸ்டோகிளான்டின்’ ஹார்மோனைச் சுரந்து மூச்சுக்குழாய், ரத்தக்குழாய், குடல் திசுக்கள் போன்றவற்றின் இயக்கங்களை ஊக்குவிக்கிறது.
* ரத்தத்தில் இருக்க வேண்டிய பொருட்கள் இருக்க வேண்டிய அளவுகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியம் நிலைக்கும். இதற்கு ‘உடலின் உட்சூழல்’ (Internal environment) என்று பெயர். இதைச் சரியாக வைத்துக்கொள்வது சிறுநீரகங்களே! உதாரணத்துக்குக் குளிர்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிவதும் கோடையில் குறைவாக கழிவதும் உடலின் உட்சூழலை பராமரிக்கத்தான்.Post a Comment

Protected by WP Anti Spam