By 18 January 2019 0 Comments

புதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!! (கட்டுரை)

இலங்கையில் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது பற்றி மீண்டும் கருத்துப் பரிமாற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பை, இனிமேலும் திருத்திக் கொண்டிருக்காமல் புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை, 2015இல் பதவிக்கு வந்த அரசாங்கம் மேற்கொண்டது.

இதன்படி, உத்தேச அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை, கடந்த 2016ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான சாதக பாதகங்கள் ஆராயப்பட்ட நிலையில், பின்வந்த அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால், புதிய அரசமைப்பை வரையும் பணிகள் தாமதமடைந்திருந்தன.

இந்நிலையில், இப்போது மீண்டும் அதுபற்றிய கருத்தாடல்கள் பொது அரங்கில் முன்வைக்கப்படுகின்றன.

இன்னுமோர் அரசமைப்பை உடனே கொண்டு வரவேண்டும் என்று, தமிழ்த் தேசியம் முயல்கின்றது. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், “மூவின மக்களும் ஒற்றுமையுடனும் சமஉரிமைகளுடனும் வாழ, புதிய அரசமைப்புத் தேவை” என்று கூறியிருக்கின்றார்.

அரசாங்கம், புதிய அரசமைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ள போதும் அல்லது, அவ்வாறு வெளியில் காட்டிக் கொள்கின்ற போதிலும் கூட, எதிர்பார்த்தது போல, சிங்களத் தேசியம் கடும் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கி இருக்கின்றது.

பிக்கு ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதற்கு மேலதிகமாக, முக்கிய இரு பௌத்த பீடங்கள் ‘இன்னுமோர் அரசமைப்புத் தேவையில்லை’ என்ற தொனியில் அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதியிருக்கின்றன.

சிங்களப் பெருந்தேசியமும், தமிழ்த்தேசியமும் உத்தேச அரசமைப்புப் பற்றி இவ்வாறான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க, இரண்டு மில்லியன் மக்களை உள்ளடக்கிய முஸ்லிம் தேசியத்தின் நிலைப்பாடு என்னவென்பதை, முஸ்லிம்கள் தமக்குள் பேசி வருகின்ற சமகாலத்தில், அதுகுறித்துப் பொதுவெளியிலும் கூறிவருகின்றனர்.

சுருங்கக் கூறின், எந்த அரசமைப்பு என்றாலும் சிங்கள, தமிழ்ச் சமூகங்களோடு சௌஜன்யத்தோடும் தமக்குரித்தான உரிமைகளோடும் வாழவே, முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

தம்முடைய அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக உத்தேச அரசமைப்பு அமையுமாக இருந்தால், அதை முஸ்லிம்கள் வரவேற்பார்கள். அதேநேரத்தில், அது எவ்விதத்திலும் தமது உரிமைகள், அபிலாஷைகள், விருப்பங்களுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றால், அதை எதிர்ப்பதற்கு முஸ்லிம் சமூகம் முன்னிற்கும்; முன்னிற்கவும் வேண்டும். அதுதான் சமூகப் பொறுப்பும் கூட.

அந்த வகையில், இடைக்கால அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட ‘ஏக்கிய ராஜிய’, ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ என்ற சொற்பிரயோகங்கள், அதனூடகவோ வேறு வழிகளிலோ வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான சாத்தியங்கள் பற்றி, முஸ்லிம் சிவில் சமூகமும் செயற்பாட்டாளர்களும் தற்போது விரிவான கருத்தாடல்களை முன்வைத்து வருகின்றனர்.

அரசமைப்பு மறுசீரமைப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில், தமிழில் ‘ஒருமித்த நாடு’ என்றும், சிங்களத்தில் ‘ஏகிய ராஜிய’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் பொருத்தமான ஆங்கிலச் சொல் (யுனைட்டரி ஸ்டேட்) குறிப்பிடப்படாமல் அதிலும் சிங்களச் சொல்லே ஆங்கில எழுத்துருவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கவனிப்புக்குரியது.

நிபுணர்குழு அறிக்கையில், மேற்குறித்த சொற்கள் அவ்விதம் மொழிபெயர்ப்புக் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது தமிழர்களைத் திருப்திப்படுத்த ஒரு சொல்லும், சிங்கள மக்கள் குழப்பமடையாமல் இருக்க இன்னுமொரு சொல்லும் சர்வதேசத்தை எதிர்கொள்வதற்காக இன்னுமொரு மயக்கமான சொற்றொடரும்ப யன்படுத்தப்பட்டிருக்கின்றதா என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது.

எனவே, இடைக்கால அறிக்கையிலுள்ள இவ்விரு வார்த்தைகளும் மாகாணங்கள் இணைப்பு முன்மொழிவுகளுமே இக் குழப்பங்களுக்கு அடிப்படைக் காரணங்களாகி உள்ளன எனலாம்.

இந்தச் சொல்லின் உள்ளர்த்தம் குறித்த ஐயப்பாடு சிங்கள, முஸ்லிம் சமூகங்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன், தமிழ்த் தரப்பிலும் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இதோ, அரசாங்கம் தனிநாடு கொடுக்கப் போகின்றது என்ற வீச்சில், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன், “விரைவில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை ரணில், தாரை வார்த்துவிடுவார்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க, சுமந்திரன் எம்.பி போன்றோர், இவை இரண்டும் ஒன்றல்ல என்ற கருத்தைச் சொல்லி வருகின்றனர். ‘ஏக்கிய ராஜிய’ என்ற சொல், ‘ஒருமித்த நாடு’ என்றுதான் பொருள்படும் என்று, இரு தினங்களுக்கு முன்பும் அவர் கூறியிருக்கின்றார். அதாவது, அது ‘ஒற்றையாட்சி’ எனக் கூறப்படுவதை மறுதலிக்கும் விதமாக, அவரது கருத்து அமைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த போது, “நாடு ஒற்றையாட்சி என்ற தன்மையில் இருந்து மாறுபடாது” என்று குறிப்பிட்டுள்ளமை, இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான பின்னணியில், புதிய அரசமைப்பின் ஊடாக, சமஷ்டியின் இலட்சணங்களை ஏற்படுத்தியோ அல்லது அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டின் உப பிரிவு இரண்டின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவோ வடக்கையும் கிழக்கையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதுபற்றிய எதிர்ப்பலைகள் மேலெழத் தொடங்கி இருக்கின்றன.

தமிழர்கள் வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என்றும் இணைந்த வடகிழக்கில் இனப் பிரச்சினைத் தீர்வுத்திட்டம் கிடைக்க வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தளவுக்கு நியாயங்கள் இருக்கின்றனவோ, அவற்றை இணைக்கக் கூடாது என்பதற்கு முஸ்லிம்கள் தரப்பிலும் அந்தளவுக்கு பலமான நியாயங்களும் காரணங்களும் உள்ளன. இதனை இரு தரப்பும் நேரிய மனதுடன் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 1988இல் இணைக்கப்பட்டன. இங்கு வாழும் மக்களின் குறிப்பாக, முஸ்லிம்களின் விருப்பறியாது செய்யப்பட்ட இவ்விணைப்பை எம்.எச்.எம்.அஷ்ரப் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கிகரிக்கவில்லை.

இவ்விணைப்பு, தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், நிரந்தரமாக இணைப்பதாயின் பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்று நடத்த வேண்டியுமிருந்தது. ஆனால், பொதுஜன விருப்பறியாமலேயே தற்காலிகமான இணைப்பு, சுமார் 19 வருடங்கள் நிலையான இணைப்பாக இருந்தது. இந்நிலையில், மூன்று தனிநபர்கள் தொடுத்த வழக்குக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, 2007 ஆம் ஆண்டு, வடகிழக்கு மாகாணமானது, தனித்தனி மாகாணங்களாக வடக்கு, கிழக்கு எனப் பிரிக்கப்பட்டன.

இரு மாகாணங்களும் இணைந்திருந்த அதிக காலத்தில், மாகாண சபை ஆட்சி இயங்குநிலையில் இருக்கவில்லை. அத்துடன், முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுத இயக்கங்களால் பெரும் துன்பங்களை அனுபவித்ததும் இக்காலப் பகுதியில்தான். இவ்வாறான அனுபவங்களோடு, ஒப்பிடுகையில் தனியான கிழக்கு மாகாண சபையில் யார் முதலமைச்சராக, ஆளுநராக இருந்தாலும்…. ஒப்பீட்டளவில் அது முஸ்லிம்களுக்கு அனுகூலமானது என்றே அவர்கள் உணர்கின்றனர்.

எனவே, மீண்டும் இணைக்கப்படுவதற்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எந்தத் தேவைப்பாடோ விருப்பமோ இல்லை.

இவ்விணைப்பு இடம்பெற்றால், தமிழர்களுக்கு நிழல் அதிகாரமாவது கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. தமது கனவு கொஞ்சமேனும் நிறைவேறியதாக தமிழ் தேசியம் நினைக்கலாம்.

ஆனால், முஸ்லிம்களுக்கு என்ன பயன் இருக்கின்றது என எந்தத் தமிழ்த் தலைமையும் சொல்லவில்லை. கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்ட சர்ச்சை வரை, முஸ்லிம்களின் மனங்களை வெல்வதற்கான முன்னெடுப்புகளையும் தமிழ்த் தரப்பு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

வடக்கும் கிழக்கும் இணைந்து, அதில் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கினால், தமிழ் தேசியத்தின் அதிகார மேலாதிக்கம் அதிகரிக்கும் என்றும், தாங்கள் அதன்மூலம் பல நெருக்குவாரங்கள், பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், தமது இன விகிதாசாரம் குறையும் என்றும் முஸ்லிம்கள் எண்ணுவது தப்பென்று யாரும் கூற முடியாது.

அதேநேரம், வடக்கும் கிழக்கும் தனித்தனியாக இருப்பதே சிறந்தது என்று பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் கருதுகின்றனர். தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும் இணைக்கப்படக் கூடாது என்கின்றனர்.

மாகாணங்களின் இணைப்பு விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்காத முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழர்களின் அபிலாஷைகளுக்குக் குறுக்கே நிற்கப் போவதில்லை என்றும், வடக்கும் கிழக்கும் இணையாது என்றும் முரண்நகை கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்.

எது எவ்வாறாயினும், தமிழர்களின் அபிலாஷைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது போலவே, அந்தத் தீர்வு குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகளின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால் மாத்திரமே, அது நிரந்தரத் தீர்வாக அமையும்.
நிபுணர்குழு அறிக்கையின் முன்மொழிவுகள்

அரசமைப்பு மறுசீரமைப்புக்கான நிபுணர்குழு அறிக்கையின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டின் 2ஆம் உப பிரிவு கீழ்வருமாறு கூறுகின்றது.

மாகாணங்களை இணைத்தல் தொடர்பான ஏற்பாடுகளுக்கு வழிப்படுத்தும் குழுவின் மேலதிக பரிசீலனை தேவைப்படுகின்றது. பின்வரும் தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன:

•இரண்டு அல்லது அதிகமான மாகாணங்களைத் தனிஅலகாக உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் உரிய மாகாண சபைகளில் மக்கள் தீர்ப்பொன்றும் தேவைப்படுத்தப்படும் என்ற மேலதிக தேவையுடன், வைத்திருக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டது.

•இணைப்புக்கு அரசமைப்பு ஏற்பாடு செய்யலாகாது.

•வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தனியொரு மாகாணமாக புதிய அரசமைப்பு அங்கிகரிக்கும்.

முஸ்லிம் கட்சித் தலைமைகளின் கருத்து

அதாவுல்லா

மாகாண சபை முறைமையே தவறானது என்ற நிலைப்பாட்டிலேயே தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லா இருக்கின்றார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்த அவர், இப்போது மீண்டும் இணைக்கப்படவே கூடாது என்று பகிரங்கமாகவே கூறி வருகின்றார்.

பல சர்வதேச சக்திகள் கிழக்கில் இருக்கின்ற வளங்களைச் சூறையாட நினைப்பதாகக் குறிப்பிடும் அவர், யாருடைய தேவைக்காகவும் மாகாணங்களை இணைத்தால், அதற்கெதிராகத் தமது கட்சி செயற்படும் என்றும் கூறியுள்ளார்.

ரிஷாட்

வடக்குடன் கிழக்கு இணைக்கப்படுவது ஒருவகையில் வடக்கு முஸ்லிம்களுக்குப் பலமாக அமையலாம் என்றாலும் கூட, வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என்றே மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உறுதியாகக் கூறி வருகின்றார்.

இடைக்கால அறிக்கைக்காகப் பின்னிணைப்பாகச் சமர்ப்பித்த முன்மொழிவுகளிலும் அக்கட்சி இவ்விடயத்தை அழுத்தமாக உரைத்திருக்கின்றது.

ஹக்கீம்

இவ்விரு மாகாணங்களும் இணைப்பது தொடர்பில் மு.கா தலைவர் ​ரவூப் ஹக்கீம் வெளியிட்டு வரும் பிடிகொடுக்காத விதத்திலான கருத்துகள் அவருடைய நிலைப்பாடு தொடர்பாகப் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.

வடக்குடன் கிழக்கு இணைப்பது தொடர்பிலோ பிரிப்பது தொடர்பிலோ மு.கா எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளாது. அவ்வாறு இணைக்கப்படுவதாயின் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக வேண்டும் என்ற கொள்கையில் இருந்து மு.கா ஒருபோதும் மாறாது என்று சில காலத்துக்கு முன்னர் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அண்மையில் அவர் வெளியிட்ட சில கருத்துகள் இணைப்புக்கு ஹக்கீம் ஆதரவளிக்கப் போகின்றார் என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த சூழலில், அண்மையில் மத்திய மாகாணத்தில் உரையாற்றிய மு.கா தலைவர், வடக்கையும் கிழக்கையும் இணைத்து, தனியான நிர்வாக அலகை உருவாக்கப் போவதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை எனக் கூறியிருக்கின்றார்.Post a Comment

Protected by WP Anti Spam