By 20 January 2019 0 Comments

பேசுவது பற்றி….!! (கட்டுரை)

பேசுவது பற்றிப் பேசுவது
பேசுவது பற்றிப் பேசாமலிருப்பது
பேசாமலிருப்பது பற்றிப் பேசுவது
பேசாமலிருப்பது பற்றிப் பேசாமலிருப்பது – இவை
அனைத்தையும் நாம் பேசுவோம்
பேசாப்பொருளொன்றில்லை பராபரமே

பொங்கல் வாழ்த்துகளுடன் இந்தப் பத்தியைத் தொடங்குகிறேன்.

தமிழ்ச் சமூகம் முக்கியமாகப் பேச வேண்டியதும் அதேவேளை, பேச அஞ்சுகிற விடயங்கள் குறித்துப் பேசுவதே இப்பத்தியின் நோக்கம்.

ஒருபுறம், ஜனநாயகத் தன்மையுள்ள சமூகச் சூழல், இன்னமும் எம்மிடம் வேர்விடவில்லை. மறுபுறம், சர்வதேச சமூகம் பற்றிய, அளவுகடந்த நம்பிக்கைகள் எம்மிடம் உண்டு.

வரலாற்றில் இருந்து, நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன? எம்மை, நாம் சுயவிமர்சனம் செய்திருக்கிறோமா போன்ற கேள்விகள், போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்த நிலையிலும், பதிலளிக்கப்படாமலே உள்ளன.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் பின்புலத்தில் தேசம், தேசியம், சுயநிர்ணயம் குறித்த வாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அனைத்துத் தேசிய இனங்களின் அபிலாஷைகளையும் நியாயமாக நிறைவேற்றாமல், நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதும் நியாயமானதுமான தீர்வு எட்டப்பட முடியாது.

சுயநிர்ணய உரிமை என்பது, தமிழ் மக்களுக்கு மட்டுமேயானது அல்ல; அது, இலங்கையில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்கும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

உதாரணமாக, மலையகத் தமிழரின் அடிப்படை உரிமைகளான வீடு, காணி, தொழில் உரிமையும் தொழிற் பாதுகாப்பும், உடல்நலம், கல்வி, சமூகசேவைகள் ஆகியன, அவர்களுக்கு மறுக்கப்பட்ட சூழலையும் மறுப்பின் சமூக விளைவுகளையும் நோக்குமிடத்து, மலையகத் தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கிகரியாமையே, அவர்கள் தமது முழுமையான உரிமைகளைப் பெற அடிப்படைத் தடையாகும் என்பது புலனாகும்.

இலங்கையின் தற்போதைய தேவை யாதெனில், இலங்கையின் எல்லாத் தேசிய இனக் கூறுகளினதும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவது ஆகும்.

தேசியம் பற்றிய பலரின் புரிதல், கொலனி யுகத்தில் இருந்தவாறே பெருமளவும் உள்ளது. தேசங்களையும் தேச எல்லைகளையும் கொலனியம் எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் கொலனியத்தின் பின், தேசிய இன ஒடுக்கலும் தேசியப் பிரச்சினையையும் விருத்தியான விதத்தையும் அவற்றைக் கையாளத் தேசிய சுயநிர்ணயத்தை எவ்வாறு விரிப்பது என்பவை ஆராயப்பட வேண்டியவை.

இந்த உரையாடல், கோட்பாட்டுத் தளத்தில் மட்டுமன்றி, நடைமுறை சார்ந்த காலப் பொருத்தம் கருதியதாகவும் அமைதல் வேண்டும்.

இதேபோன்றே, சர்வதேச சமூகம் குறித்த மாயைகள் எம்மிடம் உண்டு. அனைத்தையும் சர்வதேச சமூகத்திடம் கையளித்துவிட்டு, ஒதுங்கிவிடும் மனோநிலை ஆரோக்கியமானதல்ல.

சர்வதேசச் சமூகம் தற்போது போரை விற்கிறது; போரை ஊக்குவிக்கிறது; போரை நடத்துகிறது. அதேவேளை, மனிதாபிமான உதவிகள், மனித உரிமை மீறல் கண்காணிப்பு போன்ற போர்வைகளில், தேசிய இனங்களையும் அரசாங்கங்களையும் மிரட்டிக் கட்டுப்படுத்துகிறது.

மக்களுக்கு உதவுவது போல் பாசாங்கு செய்து, நாடுகளில் சந்தை, நுகர்வு, இலாபம், இராணுவ ஆதிக்கம் போன்றவற்றை நிலைநாட்டுகிறது.

அரசியல் என்பதில், சமூக அறம் சார்ந்திருந்த காலம் மலையேறி விட்டது. ஆனால், அறம் பிழைக்கும் போது, அரசியல் சீரழிகிறது. அதை ஒரு சமூகம் பொறுக்குமாயின், அச்சமூகம் தனது அழிவுப் பாதையைத் தானே தேடுகிறது.

அழிவுப் பாதையில் பயணப்படும் சமூகம், அதற்காக வருந்தத் தொடங்கும் போது, அது, அப்பாதை வழி மீளமுடியாத் தொலைவுக்குச் சென்றிருக்கும். வரலாறு சொல்லும் இப்பாடம், விடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலையை வேண்டி நிற்கும் சமூகங்களுக்கும் பொருந்தும் என்பதை மறக்கலாகாது.

தொடர்ந்து பேசுவோம்…Post a Comment

Protected by WP Anti Spam