By 7 February 2019 0 Comments

செல்லுலாய்ட் பெண்கள்!! (மகளிர் பக்கம்)

திராவிடப் பரம்பரையின் சொத்து சந்திரகாந்தா

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர், தஞ்சைத் தரணியின் கலைக் குடும்பம் தந்த வாரிசு, 1950களின் இறுதியில் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர்.நன்கு நடனம் ஆடக்கூடிய நாட்டியத் தாரகை, இசையையும் கற்றுத் தேர்ந்தவர், அப்போதைய அரசியல் பிரபலங்களுடன் நாடகங்களிலும் பின்னர் திரையுலகிலும் ஜொலித்த கலைமணி. உண்மையில் இவரைத்தான் காவிரி தந்த கலைச்செல்வி என்று திரையுலகும் கலைத்துறையும் கொண்டாடி இருக்க வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதி வாய்ந்த ஒரு அற்புதமான நடிகை சந்திரகாந்தா.

ஐந்தாவதாய் பிறந்த அதிர்ஷ்டக்காரப் பெண்

கீழத்தஞ்சையில் சீர்காழி அருகிலுள்ள திருமயிலாடி கிராமம் லட்சுமி காந்தம் பிறந்த ஊர்; ஆம், அதுதான் அவருக்குப் பெற்றோர் வைத்த இயற்பெயர். டி.என்.குஞ்சிதபாதம் பிள்ளை டி.ஆர்.ராமாமிர்தம் தம்பதியரின் ஏழு குழந்தைகளில் ஐந்தாவதாக பிறந்த அதிர்ஷ்டசாலி இவர். தஞ்சைப் பகுதியின் கிராமங்களில் ஐந்தாவதாக பெண்குழந்தை பிறந்தால் குடும்பம் வளம் பெறும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தாங்கள் பெற்றெடுத்த மகள் லட்சுமி காந்தத்தின் மீது ஆழமாகவும் வைத்திருந்தனர். இவ்வளவுக்கும் தீவிரமாக திராவிட இயக்கத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுதலும் குடும்பத்தாருக்கு இருந்தது.

நடனம் பெற்றுத் தந்த அறிமுகமும் நாடக வாய்ப்பும்

பள்ளிப் பருவத்திலேயே புகழ்பெற்ற நட்டுவனார் கே.என். தண்டாயுதபாணி பிள்ளையிடம் முறைப்படி நடனம் கற்றுக் கொண்டவர் லட்சுமி காந்தம். மற்றொரு பேர் சொல்லும் நட்சத்திரமான நடிகை வைஜெயந்தி மாலாவுக்கும் அவர்தான் நாட்டியம் கற்பித்த குரு. ஒருமுறை பள்ளி விடுமுறையில் சென்னையில் உள்ள தன் மூத்த சகோதரி வத்சலாவின் வீட்டுக்கு தன் சகோதரன் சண்முக சுந்தரத்துடன் வந்திருந்தார். (அந்தச் சகோதரனும் பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்று நடிகரானவர். ஆனால், சந்திரகாந்தா அளவுக்கு உயரவில்லை.) ஒவ்வொரு முறை அக்காள் வீட்டுக்குச் சென்றிருந்தாலும், இம்முறை சென்றது லட்சுமி காந்தத்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. எப்போதும் தவறாமல் நடனம் ஆடுவதும் பயிற்சி செய்வதும் லட்சுமி காந்தத்தின் வழக்கம்.

அக்காளின் கணவர் எஸ்.எஸ்.பி.லிங்கம் என்ற வேதாசலம், சி.என்.அண்ணாதுரையின் நெருக்கமான நண்பர். ஒருவிதத்தில் உறவினரும் கூட. அதனால் சென்னை வரும் போதெல்லாம், வேதாசலத்தின் ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் தங்குவதையும் அண்ணா வழக்கமாகக் கொண்டிருந்தார். வேதாசலம் வீட்டில் தங்கியிருக்கும் அண்ணாதுரையைப் பார்ப்பதற்காக நண்பர்கள் வருவதும் வழக்கம். அப்படி ஒருமுறை அண்ணாவைப் பார்ப்பதற்காக ‘நடிப்பிசைப் புலவர்’ கே.ஆர். ராமசாமி வந்திருந்தார். 1940களிலிருந்தே நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்துப் பெரும் புகழ் பெற்ற நடிகர் அவர். அண்ணாவின் ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ திரைப்படங்களிலும் கே.ஆர். ராமசாமி தான் நாயகன். அத்துடன் தனது ‘கிருஷ்ணன் நாடக சபா’ மூலம் சமூக சீர்திருத்த நாடகங்களையும் பட்டிதொட்டி எங்கும் நடத்தி, திராவிட இயக்கத்துக்குப் பங்களிப்பு செய்தவர். இவரது நாடகக் குழுவுக்காக அண்ணாவும் ஏராளமான நாடகங்களை எழுதிக்கொண்டிருந்தார். அப்படித்தான் இம்முறையும் அண்ணாவைப் பார்ப்பதற்காக கே.ஆர்.ஆர். வந்திருந்தார்.

நட்டுவாங்கம் செய்யும் ஒலியும் இனிமையான சலங்கை ஒலியும் வீட்டுக்குள்ளிருந்து வருவதைக் கேட்டு ஆர்வ மிகுதியால் ஒலி வந்த அறைக்குள் நுழைந்தார். 14 அல்லது 15 வயதே நிரம்பிய அழகிய இளம் பெண் ஒருவர் அந்த அறையில் நடனப் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். வேற்றாள் அறைக்குள் நுழைந்தது பற்றியெல்லாம் எந்த அலட்டலும் கொள்ளாமல் தன் ஆட்டத்தின் மீது மட்டுமே கவனம் குவித்திருந்தார் லட்சுமி காந்தம். நடனத்தின் மீது அவருக்குள்ள பற்றும், பிற மனிதர்களைக் கண்டு கூச்சப்படாத தன்மையும் கண்டு வியந்தார் கே.ஆர்.ராமசாமி. நடனத்தை முடித்து, குருவுக்கு வணக்கம் செலுத்திய பின்னர், கே.ஆர்.ராமசாமியை நோக்கி கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். இந்தச் செய்கை மேலும் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘நான் யாரென்று தெரியுமா?’ என்று தன் கேள்வியை முடிக்கும் முன்னதாக, “நீங்கள் யாரென்று கூட அறிந்து கொள்ளாதவளா நான்?” எதிர்த்தரப்பிலிருந்து பதில் வந்து விழுந்தது. நடனத்திறன், தெளிவான தமிழ் உச்சரிப்பு, பயம் கொள்ளாத தன்மை அனைத்தும் ஈர்க்க, தன் நாடகத்தில் நாயகியாக நடிக்க வைப்பதென்ற முடிவை அந்தக் கணத்தில் எடுத்து விட்டார் கே.ஆர்.ராமசாமி.

சந்திரகாந்தா ஆன லட்சுமி காந்தம்

கே.ஆர்.ராமசாமியின் ‘கிருஷ்ணன் நாடக சபா’ வின் பிரச்சார நாடகங்களின் மூலம் பதினைந்து வயதில் காலூன்றத் தொடங்கி சிறந்த நடிகை என்ற பெயரையும் சம்பாதித்துக் கொண்டிருந்தார் லட்சுமி காந்தம். நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் ஒரு நாடகத்தில் சந்திரா என்ற பிரதானமான பாத்திரமேற்று நடித்துக் கொண்டிருந்தார்., பார்வையாளர்கள் அனைவர் மனதிலும் சந்திராவாகவே பதிந்து போனார். நாடகத்தின் முடிவில் கலைஞர்களை வாழ்த்தியும் பாராட்டியும் பேசிய நெடுஞ்செழியன், ‘இந்நாடகத்தில் சந்திராவாக மிகச் சிறப்பாக நடித்த லட்சுமி காந்தம் நாடத்துறைக்கும் கலைத் துறைக்கும் கிடைத்த பெறும் பொக்கிஷம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்’ என்று பேசினார். அதைத் தொடர்ந்து அசல் பெயரை மாற்றி, ‘சந்திரகாந்தா’ என்ற புதிய பெயரைச் சூட்டினார் கே.ஆர்.ஆர். திரையுலகிலும் அதே பெயரில் புகழ் பெற்று இறுதி வரை சந்திரகாந்தாவாகவே வாழ்ந்து மறைந்தார்.

நாயகியாகத் திரையில் அறிமுகம்

1958ல் வெளியான ‘மாய மனிதன்’ திரைப்படம் தமிழுக்கு ஒரு புதிய முயற்சி. ஆங்கிலத்தில் ‘இன்விசிபிள் மேன்’ என எடுக்கப்பட்ட படத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர் டி.பி.சுந்தரம். ஸ்ரீராம் நாயகனாக நடித்த இப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் சந்திரகாந்தா. ஸ்ரீராமைச் சுற்றிச் சுற்றி வந்து பூங்காவுக்குள் அவர் போடும் துள்ளாட்டமும் ஆங்கில மெட்டில் அமைந்த,‘கண்ணா கண்ணா வாராய் ராதை என்னைப் பாராய்ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய்?’ என்ற பாடல் ஜிக்கியின் குழைவான குரலில் காலம் கடந்தும் ஒலித்து சந்திரகாந்தாவை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் டி.கோவிந்த ராஜு நாயுடு. (இவரது மகன் டி.ஜி.லிங்கப் பாவும் இசையமைப்பாளரானவர்.) தந்தையுமாவார். ‘மாய மனிதன்’ இந்தியிலும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று கிஷோர்குமார் நடிப்பில் 60களில் வெளிவந்தது.

வீதியில் வந்த தங்கரதமும் நான் உன்னைச் சேர்ந்த செல்வமும்

இயக்குநர் ஸ்ரீதரின் ‘கலைக்கோவில்’ ஒரு இசைக்காவியம். திறமை வாய்ந்த நடிகர்கள், ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பிரதிபலித்த கதையம்சம் கொண்ட படம். முழுதும் மென்மையாக வருடிச் சென்ற சிட்டிபாபுவின் வீணை நாதம், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையரின் இசைக்கோவையில் உருவான அத்தனை பாடல்களும் தேன் சொட்டும் ரகம். பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் என்றும் இனிக்கும் ‘தங்கரதம் வந்தது வீதியிலே..’ எவர்க்ரீன் பாடல். இந்தப் பாடலுடன் ‘நான் உன்னைச் சேர்ந்த செல்வம்’ என முத்துராமனுடன் இரு டூயட் பாடல்கள். கதாநாயகியாக நடித்தவர் சந்திரகாந்தா. பெண்களின் ஏகோபித்த வரவேற்பு அவருக்குக் கிடைத்தது, அதற்குக் காரணம் அவருடைய நடிப்பு மட்டுமல்ல, கதையின் நாயகனுக்கு இரு நாயகிகள். கண்ணகி சந்திரகாந்தா, மாதவி ராஜஸ்ரீ. இந்த உளவியலும் பெண்கள் அனுதாபத்தை சந்திரகாந்தாவுக்குப் பெற்றுத் தந்தது.

‘சிவாஜிக்கு ஜோடி சந்திரகாந்தா’!

சிவாஜி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் ‘ப’ வரிசைப் படங்களின் இயக்குநர் பீம்சிங் இயக்கிய ‘பந்த பாசம்’. இப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் எனஇரு நாயகர்கள்; நடிகையர் திலகம் சாவித்திரி, தேவிகா இரு நாயகியர். ஆனால், கதைப்படி நாயகன் சிவாஜியை மணந்து கொள்பவர் மாற்றுத் திறனாளிப் பெண்ணாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வீட்டுக்குள் வளைய வரும் வசதி படைத்த கௌரி என்ற பாத்திரம். இப்படம் வெளிவந்த 60களில் சந்திரகாந்தாவை விட சாவித்திரியும், தேவிகாவும் மிகப் புகழ் வாய்ந்த நடிகைகள். அப்படியிருக்க கதையின் போக்கு சந்திரகாந்தாவை நாயகன் சிவாஜிக்குத் துணையாக்குகிறது.

அப்படியானால், கண்டிப்பாக இந்தப் பாத்திரம் பலி கொள்ளப்படும் என்ற எண்ணத்தைத் திரைக்கதை நமக்குள் தோற்றுவித்து விடும். ஆம்! படத்தின் இறுதியில் கௌரி தற்கொலை செய்து கொள்ள, நாயகன் சிவாஜி, தான் முன்னரே காதலித்த தேவிகாவை மணந்து கொள்ள படம் சுபம். அதுவும் மனைவி இறந்த மிகச் சில நாட்களுக்குள் காதலியை மணக்கிறார் நெஞ்சில் ஈரமே இல்லாத மனிதராக. புதுமுக நடிகைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பெரும்பாலும் இப்படியானவையே. இப்படத்தில் அரை மணி நேரம் மட்டுமே சந்திரகாந்தா தோன்றுவார். ஆனால், அந்த நாளைய பத்திரிகை விமர்சனங்கள் குறிப்பிட்டதோ ‘சிவாஜிக்கு ஜோடி சந்திரகாந்தா’!

தட்டிப் போன எம்.ஜி.ஆரின் நாயகி வாய்ப்பு

கே.சங்கர் இயக்க, எம்.ஜி.ஆர். நாயகனாக நடிப்பதென்று முடிவான படம் ‘இது சத்தியம்’. ஆனால், எம்.ஜி.ஆர். இந்தப் படத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள எம்.ஜி.ஆருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கை நழுவிப் போனது. பின்னர் அசோகன் நாயகனாக மாறினார். சந்திரகாந்தா பாடி நடித்த ’சரவணப் பொய்கையில் நீராடி’ பாடல் பெரும் ஹிட் ஆனது. எம்.ஜி.சக்கரபாணியின் சொந்தத் தயாரிப்பில் அவர் இயக்கிய ‘அரசக் கட்டளை’ படத்தில் சரோஜா தேவி, ஜெயலலிதா என இரு கதாநாயகிகளுடன் மூன்றாவதாக சந்திரகாந்தாவும் குமரி நாட்டு இளவரசி மாங்கனியாக படத்தில் இடம் பெறுவார். இப்படத்திலும் அசோகன் இவரது இணை.

தான் மனமார விரும்பும் எதிரி நாட்டு இளவரசன் வில்லாளன் மீது காதல் கொண்டு அவனை அடைவதற்காக, அண்ணன் உதவியை எதிர்பார்ப்பதும், அந்த அண்ணனே தன் காதலனை தங்கள் அரண்மனைக்குள் பாதுகாப்புக் கைதியாக வைத்திருப்பது கண்டு கோபம் கொண்டாலும், அனைத்தையும் தனக்காகவும் தன் விருப்பத்துக்காகவும் செய்கிறார் என்பதை அறிந்து அண்ணன் மீது பாசம் கொள்ளும் தங்கையாகவும் நடித்திருப்பார். எம்.ஜி.ஆரைத் தவிர அந்த அண்ணன் வேறு யாராக இருக்க முடியும்? ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் படம் முழுதும் வந்தாலும், எம்.ஜி.ஆரை மணந்து கொள்ள விரும்பினாலும், வழக்கம் போல் ஜெயலலிதாவே கதாநாயகி. படத்தின் இறுதியில், சந்திரகாந்தா வில்லி என்பது தெரிய வரும். அதிலும், ஜெயலலிதாவைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு வில்லத்தனம் செய்வதுடன், அவருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் கொடிய மனம் கொண்ட வில்லி.

இளைய ஜமீன்தாரரின் காதலி

பொம்மை தயாரித்து விற்கும் குடும்பத்தில் இரு அண்ணன்களுக்கு செல்லத் தங்கையாக ‘முரடன் முத்து’ படத்தில் நடித்திருப்பார். இயக்குநர் பி.ஆர்.பந்துலு மூத்த அண்ணன்; சிவாஜி கணேசன் இளைய அண்ணன். முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைய அண்ணன் மூத்தவருடன் கோபித்துக்கொண்டு தங்கையையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஊரை விட்டுப் போய், தன் தங்கையை அவள் விரும்பிய இளைய ஜமீன்தாருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து, மீண்டும் அண்ணன் குடும்பத்தாருடன் சேர்வதற்குள் ஏகப்பட்ட வளைவு நெளிவுகளுடன் கூடிய திரைக்கதை. நல்ல கதையம்சத்தைக் கொண்டிருந்தபோதும் இப்படம் சரியாகப் போகவில்லை. சந்திர காந்தாவின் காதலராக, இளைய ஜமீன்தாராக பிரேம் நசீர் நடித்திருந்தார். ஆனால், அற்புதமான பல பாடல்களைக் கொண்ட படம். பிரதான நாயகி தேவிகா.

அய்யங்கார் குடும்பமும் அரிஜன முன்னேற்றமும்

70களில் இவர் நடித்த ‘நத்தையில் முத்து’ படம் பற்றி அதிகம் பேசப்படவேயில்லை. தஞ்சை மாவட்டத்தின் அக்ரஹாரத்து இளைஞன் ஒருவன், தங்கள் வீட்டுப் பண்ணையாளான ஹரிஜனப் பெண்ணை மணந்துகொண்டு சேரியில் குடியேறுவதும், அதன் பின் உள்ள சாதியச் சிக்கல்களும், மூர்க்கமாக அதை எதிர்க்கும் சாஸ்திரோக்தமான அய்யங்கார் குடும்பத்தின் பெண், பின்னர் அரிஜனப் பெண்ணையே மருமகளாக்கிக் கொள்ளும் ஒரு குடும்பத்தைப் பிரதிபலித்தது படம். 70களில் அம்பேத்கரின் கருத்துகள், அரிஜன முன்னேற்றம் பற்றியெல்லாம் இப்படம் மிக விரிவாகப் பேசியது. பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டதற்குப் பின், சேரிப்பெண் மடிசார் கட்டிக்கொண்டு அக்ரஹாரத்து மருமகளாகக் குடியேறுவாள்.

கற்பனைதான் எவ்வளவு சுகமானது. இன்றளவும் இடைநிலைச் சாதியினர் தலித்துகளைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் ஆணவப் படுகொலைக்கு இரு தரப்புமோ அல்லது தலித் ஆணோ, பெண்ணோ பலியிடப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் 70களில் இப்படியான ஒரு கதையைப் படமாக்குவதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். சந்திரகாந்தா சாதி எதிர்ப்புக் கருத்துகளைப் புரட்சிகரமாக இல்லாமல், போகிற போக்கில் மிக இயல்பாகப் பேசுவார். இளம் வயதில் கணவனை இழந்து, மொட்டையடித்து முக்காடு போட்டுக் கொண்டிருக்கும் பெண்ணாக (கொச்சை மொழியில் சொல்வதென்றால் மொட்டைப் பாப்பாத்தி) வீட்டுக்குள் இருக்கும் பத்து மாமி கதாபாத்திரம் இவருக்காகவே உருவாக்கப்பட்டதோ என்று தோன்றும். கூடைக்குள் மீனைப் போட்டுக்கொண்டு வரும் கதாநாயகி(கே.ஆர். விஜயா), தன் தாத்தா மார்க்கெட்டிலிருந்து காய்கறிக் கூடைகள் ஏற்றி வரும் வண்டியில் மீன் கூடையையும் சேர்த்து வைத்துவிட்டுப் பேச்சு வாக்கில் மறந்து விடுவார்.

காய்கறிக் கூடைகளின் மீதே ஜலம் தெளித்து, ‘ஆத்துக்குள்’ கொண்டு போய் வைக்கும் அலமு மாமி (எஸ்.வரலட்சுமி) கூடைகளை ஒவ்வொன்றாகத் திறந்து, கூடைக்குள் இருக்கும் காய்கறிகளின் மீதும் ஜலம் தெளித்துத் தீட்டுக் கழிக்க, ஒரு கூடையைத் திறந்தவுடன் விறால் மீன் துள்ளிக் குதித்துப் பாய, அலறியடித்து பத்து மாமியை (சந்திரகாந்தா) அழைப்பாள். பத்து மாமி, தரையில் துள்ளித் திரியும் மீனைப் பார்த்து, மண்டியிட்டு பெருமாளின் மச்சாவதாரம் என்று வணங்குவாள். (விறால் மீன் மட்டும் தண்ணீரை விட்டு வெளியே வந்த பிறகும், நீண்ட நேரம் உயிருடன் இருக்கும்).

அலமு அவளைக் கடிந்து கொள்வதுடன், அதைத் தூக்கி வெளியில் போட அரிஜன ஆட்களை வீட்டுக்குள் அழைக்கும்படி கூறுவாள். ‘அய்யங்கராத்துக்குள்ள அரிஜனங்கள் உள்ளே வரலாமோ?’‘ஆபத்துக்குப் பாவமில்லேடி’ ‘ஆபத்து வந்தாலொழிய நம்மவா அரிஜனங்கங்களை ஆத்துக்குள் விடுவளோ’ என்று சந்திரகாந்தா வசனம் பேசுவார். படம் நெடுக இப்படியான காட்சிகளும் வசனங்களும் ஏராளம் உண்டு. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை, வசனம் எழுதி இயக்கிய இப்படம் கே.ஆர்.விஜயாவின் நூறாவது படமும் கூட. திராவிட இயக்கக் குடும்பத்தில் பிறந்து, திராவிட இயக்க நாடகங்களில் ஊறித் திளைத்த சந்திரகாந்தா, திரைப்படத்திலும் அம்மாதிரியான கருத்துகளை ஓரளவுக்காவது பேசி நடித்த படம் என்றால் இந்தப் படம் ஒன்றைத்தான் குறிப்பிட முடியும்.

திறமைகளின் ஊற்று

சந்திரகாந்தா நல்ல இசை ஞானம் கொண்டவர். சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் இவருக்கு இசை கற்பித்த குரு. அந்த நாள் பிரபலங்கள் பலரும் அவரிடம் இசை பயின்றவர்கள். 60களின் இறுதியில் முற்றிலும் திரைத்துறையை விட்டு விலகியவர், செங்கல்பட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தீபா என்று ஒரே ஒரு பெண் வாரிசு அவர்களுக்கு. ‘சிவகாமி கலை மன்றம்’ என்ற நாடகக் குழுவின் மூலம் பல நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார். 1976ல் ஐந்து பெண்களைக் கதாநாயகிகளாக்கி ‘மருமகள் வந்தாள்’ நாடகத்தை இயக்கினார். எம்.ஜி.ஆர். தலைமையில் இந்த நாடகம் நடத்தப்பட்டது.

கதாநாயகியாக அதிகம் நடிக்கவில்லை என்றாலும், இரண்டாவது நாயகி, குணச்சித்திர நடிகை, வில்லத்தனம் என எதிலும் அவர் குறை வைக்கவில்லை. பொதுவாக அப்போதைய முன்னணி நாயகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன் இவர்களுடன் சந்திரகாந்தா நடித்திருந்தபோதும் அவரால் பிரதான நாயகியாகத் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது சோகம்தான். ஆனாலும், தான் நடித்த படங்களில் எல்லாம் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படக்கூடிய வகையில் தன் அபாரமான நடிப்பாற்றலால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர்.

பொதுவாக நாடகத்துறையிலிருந்து திரைக்கு வந்து நாயகியான நடிகையர் பலர் உண்டு. 1950களிலேயே அதற்கு சிறந்த உதாரணம் நடிகை எம்.என்.ராஜம். அதேபோல 1958ல் நாடகத் துறையிலிருந்து திரைக்கு வந்து நகைச்சுவை நடிகையாக உருமாறி தன் வாழ்நாள் முழுதும் நடித்து சாதித்தவர் ஆச்சி மனோரமா. இவர்களோடு ஒப்பிடும்போது சந்திரகாந்தாவும் தோற்றப் பொலிவிலோ நடிப்பிலோ நடனத்திலோ எந்தத் திறமையிலும் குறைந்தவர் அல்ல. 35 படங்களுக்கு மேல் அவர் நடிக்கவில்லை. ஆனால் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் அத்தனையும் சிறப்பானவையே. ஆனாலும், அவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் ஏன் கிடைக்கவில்லை என்பது பெரும் கேள்விக்குறி. உடல்நலக் குறைவால் சந்திரகாந்தா 17.1..1989ல் காலமானார்.

சந்திரகாந்தா நடித்த திரைப்படங்கள்

மாய மனிதன், விஜயபுரி வீரன், பந்தபாசம், சவுக்கடி சந்திரகாந்தா, கலைக்கோவில், முரடன் முத்து, முத்து மண்டபம், இது சத்தியம், அம்மா எங்கே?, அரச கட்டளை, தாயின் மேல் ஆணை, எதையும் தாங்கும் இதயம், நினைப்பதற்கு நேரமில்லை, தெய்வத் திருமகள், துளசி மாடம், ராமன் தேடிய சீதை, நத்தையில் முத்து.Post a Comment

Protected by WP Anti Spam