By 12 February 2019 0 Comments

வரப்போறா நெல்லைப் போல… யார் இவ..!!(மகளிர் பக்கம்)

குழந்தை வளர்ப்பு ஒரு கலை. குழந்தைகள் வளர்ப்பில் அழகிய சிக்கலே எந்த நேரத்தில் அவர்களைத் தோளில் சுமக்க வேண்டும், எப்போது அவர்கள் விரல் பிடித்து நடக்க வேண்டும், எப்போது வழிகாட்டியாக முன்னே நடந்து செல்ல வேண்டும், எப்போது அவர்களை முன்னே நடக்கவிட்டுப் பின்னால் நாம் செல்ல வேண்டும் என்பதில் இருக்கிறது.

கோவைக்கு மிக அருகே பன்னீர்மடையில் தங்களுக்குச் சொந்தமான நான்கரை ஏக்கர் நிலத்தில் இயற்கை சூழலுக்கு நடுவே, பாரம்பரியம் மாறாத இயற்கை விவசாயத்துடன் நடைபோட்டு, தங்களின் கால்நடை வளர்ப்புகளான கோழி, வாத்து, முயல், நாய், கழுதை, ஆடு, மாடு போன்றவை தங்களைப் பின்தொடரும் சூட்சுமத்தை உணர்ந்தவர்களாய்.. மாலைப் பொழுதை இன்பமாக்கி சூழலியலோடு இணைந்து வாழ்கின்றனர் அக்காவும் தம்பியுமான வர்ஷா மற்றும் பாவேஷ்.

உலகத்தரம் வாய்ந்த இன்டர் நேஷனல் பள்ளி ஒன்றில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில், வர்ஷா 6ம் வகுப்பும், பாவேஷ் 1ம் வகுப்பும் படிக்கிறார்கள். மண்ணின் பாரம்பரியத்தையும், முதுகெலும்பாய் இருக்கும் விவசாயத்தையும் நேசிக்கும் இக்குழந்தைகள் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியதுமே, களத்தில் இறங்குவது தங்கள் விவசாய நிலங்களில்தான். தங்கள் வளர்ப்பு கால்நடைகளோடு மரம், செடி கொடிகளுக்கு நடுவில் நீர் பாய்ச்ச, செடிகளைக் களைய, கால்நடைகளுக்கு தீவனமிட, தண்ணீர்காட்ட என இருவரும் மகிழ்ச்சியாய் நண்பர்கள் இணைய சூழலியல் சார்ந்து வலம் வரும் காட்சி பார்க்கவே ஆச்சரியம் தருகிறது.

நகர்ப்புறத்து மாணவர்களின் பெரும்பாலான நேரம் தொலைக்காட்சியிலும், வீடியோ விளையாட்டுகளிலும், மாலைநேர சிறப்பு வகுப்புகளிலும் கழிகிறது. கிராமப்புறங்களைத் தவிர்த்து சிறுவர்கள் தெருக்களில் விளையாடுவதும் அரிதாகிவிட்டது. புளுவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் குழந்தைகளைப் பறிகொடுக்கும் நிலையும் சில நேரங்களில் கண்கூடு. இவர்கள் வெளி உலக அனுபவமற்றவர்களாய், ஒரு சில குழந்தைகள் கேட்டட் கம்யூனிட்டியாய் தனித்து விடப்படுகிறார்கள்.

உலகமயமாக்கலுக்கு முன்பு பள்ளிக்குச் செல்வது, கல்வியிலும் ஆட்டம் பாட்டம் விளையாட்டு, வீடு திரும்பியதும் மாலை உணவு, புழுதி நிரம்பிய தெருக்களில் விளையாட்டு, கொஞ்ச நேரம் படிப்பு பிறகு உறக்கம் என்று இருந்த குழந்தைகள் வாழ்க்கை இன்று நிறையவே மாறியுள்ளது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பாரம்பரிய உணவில் தொடங்கி, குழந்தைகளைக் கண்டித்து வளர்ப்பது, கதை சொல்லி தூங்க வைப்பது என குழந்தை வளர்ப்பின் பெரும் பகுதியினை செய்துவந்தார்கள்.

இன்று தனது பிள்ளை நிறைய மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணம், ஆரம்ப பாடசாலையில் இருந்தே பெற்றோருக்கு ஆரம்பிக்கிறது. இதர விஷயங்களில் தம் குழந்தைகள் கவனம் செல்வதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை. பாடம், படிப்பு, டியூஷன், மனப்பாடம், மதிப்பெண், இதுபோதும் என்கிற மனநிலையில் பெற் றோர் உள்ளனர்.

உளவியல் ரீதியாகவும் வெற்றி தோல்விகளைச் சரிசமமாகப் பாவிக்கும் மனநிலை குறைந்து, தோல்வியைக் கண்டால் குழந்தைகள் ஓடி ஒளிகின்றனர். இதை சமூக சீர்கேடாக பார்க்கிறோமே தவிர வீட்டில் இருந்து துவங்குகிறது என்பதை நாம் அறிவதில்லை.எல்லா குழந்தைகளும் ஒன்று, எல்லோர் உளவியலும் ஒன்று. என்றாலும் குழந்தை களின் உணர்வு அனுபவமே அக்குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி. அதுவே குழந்தையின் கற்றல் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.



Post a Comment

Protected by WP Anti Spam