By 19 February 2019 0 Comments

அதிகாரப் பரவலாக்கலும் பிரதமரும்!! (கட்டுரை)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வட மாகாணத்துக்கான தமது நான்கு நாள் விஜயத்தின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படவிருக்கும் பல அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றிக் கூறினார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், பலாலி விமான நிலையத்தை, இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்தல், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய நகரங்களை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையொன்றை நிர்மாணித்தல் போன்ற பலவற்றைப் பற்றி, அவர் அந்த விஜயத்தின் போது குறிப்பிட்டார்.

இவை அனைத்தும், மத்திய அரசாங்கத்தின் கீழ் நடைபெறவிருக்கும் அபிவிருத்திப் பணிகளாகும். எனவே, சில தமிழ் அரசியல்வாதிகள் இவற்றை எதிர்க்கவும் கூடும். ஏனெனில், மகாவலி நீரை, இரணைமடுக் குளத்துக்கு வழங்கி, அதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாக, இரணைமடுக் குளத்திலிருந்து நீர் வழங்கும் யோசனையை, அண்மையில் ஓர் அரசியல்வாதி எதிர்த்திருந்தார். அதன் மூலம், வடமாகாணம் இரணைமடுக் குளத்தை இழந்துவிடும் என்பதே அவரது வாதமாகும்.

தற்போது மகாவலியிலிருந்தோ, வேறு எங்கிருந்தோ நீரைப் பெறாத நிலையில், இரணைமடுக் குளத்தில் இருந்து, யாழ்ப்பாணத்துக்கு நீர் வழங்குவதைச் சிலர் எதிர்க்கின்றனர்.

வன்னிப் பகுதியில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்பதே அவர்களின் வாதமாகும். அதற்காக மகாவலி நீரைப் பெற்று, யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் வழங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டால், அதனால் இரணைமடுக் குளம், மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இந்த அடிப்படையில் அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சர்வதேச விமான நிலையங்கள் போன்றவற்றாலும் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் வட மாகாணத்துக்குள் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது; அதற்காக அவ்வாறான திட்டங்களை எதிர்க்கவும் முடியாது.

ஒரு புறம், இவ்வாறு மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் வட மாகாணத்தில் அதிகரிக்கும் வகையிலான திட்டங்களை அறிவித்த பிரதமர், இதே விஜயத்தின் போது, அதிகாரப் பரவலாக்கலைப் பற்றியும் முக்கிய கருத்தொன்றை வெளியிட்டு இருந்தார்.

“பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் பயன்படுத்தப்படாத நிலையில், மேலும் அதிகாரங்களைப் பரவலாக்குவது அர்த்தமற்றது” என, அவர் கூறியதாக, ‘டெய்லி மிரர்’ பத்திரிகை, செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த அரசியல் கருத்தோடு, அவர் மற்றொரு முக்கிய அரசியல் கருத்தையும் இந்த விஜயத்தின் போது வெளியிட்டு இருந்தார். அதாவது, “கடந்த காலத்தை மறப்போம், மன்னிப்போம்” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த இரண்டாவது அரசியல் கருத்து, இப்போது சர்ச்சையாகி உள்ளது. தெற்கில் எவரும் அதை விமர்சிக்காவிட்டாலும், சில தமிழ் அரசியல் தலைவர்கள், ஏற்கெனவே அதைப் பற்றிப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூற்றின் மூலம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போர்க் குற்றங்கள் இடம்பெற்றதை ஏற்றுக் கொள்கிறார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார்.

ஆனால், அதிகாரப் பரவலாக்கலைப் பற்றி பிரதமர் தெரிவித்த கருத்து, அதாவது “கூடுதல் அதிகாரங்களைப் பெறுவதற்குமுன், இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால், மேலும் அதிகாரங்களை வழங்குவதில் அர்த்தம் இல்லை” என்ற கருத்துத் தொடர்பாக, எந்தவோர் ஆட்சேபனையும் தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

உண்மையிலேயே, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக, பிரதமர் வெளியிட்ட கருத்து, வடமாகாணத்துக்கு மட்டுமல்லாது, நாட்டில் ஏனைய மாகாண சபைகளுக்கும் பொருந்தும். அந்த மாகாண சபைகளும் மாதத்துக்கு இரண்டு நாள் கூடிக் கலைவதைத் தவிர, வேறு எதையும் செய்வதாகத் தெரியவில்லை.

அந்த இரண்டு நாள்களிலும் அரசியல் காரணங்களை மய்யமாக வைத்து, ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதைத் தவிர, மாகாணத்தின் அபிவிருத்திக்காகத் திட்டங்களை முன்வைத்து, அவற்றை விவாதித்து நிறைவேற்றும் நோக்கம் எவருக்காவது இருப்பதாகத் தெரியவில்லை.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் போதாது எனத் தமிழ்க் கட்சிகள், அமைப்புகள் கூறி வந்த போதிலும், மாகாண சபைகளுக்கு, இந்த அளவிலாவது அதிகாரம் பரவலாக்கப்பட்டமை மிக இலகுவாக இடம்பெற்றதொன்றல்ல; அது, நீண்ட காலப் போராட்டம் ஒன்றின் விளைவாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த உடனேயே அந்தப் போராட்டமும் ஆரம்பமானது எனலாம். அதற்கு முன்னரும் அதற்கான கருத்துகள் ஆங்காங்கே வெளியிடப்பட்டு வந்துள்ளது.

1957ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவோடு, அப்போதைய தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கைச்சாத்திட்ட ‘பண்டா-செல்வா ஒப்பந்தம்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் ஒப்பந்தம், அந்தப் போராட்டத்தின் முக்கிய சந்தர்ப்பம் ஒன்றாகும்.

அந்த ஒப்பந்தம் மூலம், பிராந்திய சபைகள் என்ற எண்ணக்கரு முன்வைக்கப்பட்டது. அதுவே, முதல் முதலில் இலங்கையில் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் திட்டமாகும்.

அதையடுத்து, 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றதை அடுத்து, தமிழ்க் கட்சிகளின் பேரம் பேசும் பலம், இல்லாமல் போய்விட்டது.

இந்தநிலையில், மேலும் பலமான கோரிக்கையொன்று அவசியமாகவே அதன் விளைவாக, தமிழீழக் கோரிக்கை உருவாகியது. தமிழீழத்துக்கான போராட்டம், இந்தியாவையும் பாதிக்கவே, இந்தியாவும் இலங்கை விடயத்தில் தலையிட்டு, தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது.

அத்தோடு, இந்தியா, தமிழீழத்துக்காகப் போராடிய குழுக்களுக்கு ஆயுதங்கள், ஆயுதப்பயிற்சி, பணம் ஆகியவற்றை வழங்கிய போதும் இந்தியா, இலங்கையில் தனித் தமிழ் நாட்டை ஆதரிக்கவில்லை.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசாங்கத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவே, இந்திய அரசாங்கம் அவ்வாறான உதவிகளை அந்தக் குழுக்களுக்கு வழங்கியது. எனினும், மாகாண சபை முறை என்பது, இந்தியத் தலையீட்டின் நேரடி விளைவாகும். ஏனெனில், அது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமே சாத்தியமாகியது.

மாகாண சபை முறையை ஆரம்பத்தில், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பைத் தவிர்ந்த சகல தமிழ் அரசியல் கடசிகளும் ஆயுதக் குழுக்களும் ஏற்றுக் கொண்டன. ஆனால், புலிகள் அதை நிராகரிக்கவே அந்தக் கட்சிகளும் குழுக்களும் புதிய தீர்வுத் திட்டங்களைத் தேட ஆரம்பித்தன; அது நிறைவேறவில்லை. இனியும் எந்தளவுக்கு அது நிறைவேறும் என்பதும் கேள்விக்குறியே.

அதிகாரப் பரவலாக்கல் பற்றிய பிரதமரின் கூற்றும் அந்தச் சந்தேகத்தையே வலுப்பெறச் செய்கிறது. வழங்கப்பட்ட அதிகாரங்கள் பாவிக்கப்படாவிட்டால், மேலும் அதிகாரங்கள் வழங்குவது அர்த்தமற்றது என்னும் போது, மேலும் அதிகாரங்களை எதிர்ப்பார்க்கக் கூடாது என்ற செய்தியே வழங்கப்படுகிறது.

உண்மையிலேயே, தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தயாரித்து வரும் புதிய அரசமைப்பில், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகப் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியங்கள் தென்படவில்லை.

எல்லோரும் தற்போது செயற்படும் அதிகாரப் பரவலாக்கல் முறையை, எவ்வாறு அழைக்கலாம் என்ற விடயத்தில் தான் கவனம் செலுத்தி வருகின்றனர். சிலர், அது ஒற்றையாட்சியாக இருக்க வேண்டும் என்றும், வேறு சிலர் அது ஒருமித்த நாடு என்று அழைக்கப்பட வேண்டும் என்றும், மற்றும் சிலர் அது சமஷ்டி என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், நடைமுறையில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படப் போவதில்லை.

மாகாண சபைகள் அதிகாரங்களை பயன்படுத்துகின்றனவா?

மாகாண சபைகளைப் பலர் ‘வெள்ளை யானைகள்’ என்றே அழைக்கின்றனர்.

அவற்றுக்காகச் செலவளிக்கப்படும் பணத்தால், எவ்வித பயனும் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும். மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்த்தால், அது, ஏறத்தாழப் பொருத்தமான கருத்தாகவே தெரிகிறது.

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளைத் தவிர்ந்த ஏனைய மாகாண சபைகளுக்காக, சுமார் எட்டு முறை தேர்தல்கள் நடத்தப்பட்டு, அச்சபைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 30 ஆண்டு காலத்தில் அவை நிறைவேற்றிய சட்டமூலங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், அவை இவ்வளவு காலமும் என்ன செய்தன என்று கேட்கவே தோன்றுகிறது.

அவற்றில் அநேகமாகப் பல பிரேரணைகள், நிறைவேற்றப்பட்ட போதிலும் அவை மாகாணத்தின் அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்படுபவை அல்ல. அவை பெரும்பாலும், அந்த மாகாண சபைகளின் அன்றாடப் பணிகளைத் தொடர்வதற்கான பிரேரணைகள், ஏனைய கட்சிகளைத் தாக்கும் நோக்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன்வைக்கும் பிரேரணைகளாகவே இருக்கின்றன.
தென்பகுதியில் பெரும்பாலான மாகாண சபைகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்கள் பலர் இருக்கின்றனர்.

எனவே, அரசியல்வாதிகள் தமது பிள்ளைகளுக்குப் பயிற்சி வழங்கும் பாசறையாகவே மாகாண சபைகளைப் பாவிக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பயிற்சி என்றாலும், அது அறிவுபூர்வமான பயிற்சியல்ல என்பதை மாகாண சபை உறுப்பினர்களின் நடத்தை காட்டுகிறது. அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே தான் நடந்து கொள்கிறார்கள்.

தென்பகுதிக்கு அதிகாரப் பரவலாக்கலின் பெறுமதி விளங்காமல் இருக்கலாம்; ஆனால், அதிகாரப் பரவலாக்கலுக்காகக் கடுமையாகப் போராடிய வடக்கு, கிழக்கு மக்களும் அரசியல்வாதிகளும் அதன் பெறுமதியை உணரவில்லை என்றால், அது மிகவும் மோசமான நிலைமையாகும்.

அப்பகுதி அரசியல்வாதிகளும், மாகாண சபைகளைத் தமது மக்களின் நலன்களுக்காகப் பாவித்தார்களா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த வருடம் ஜூலை மாதம், ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை, வடமாகாண சபையின் நடவடிக்கைகளைப் பற்றி, மிகவும் பாரதூரமானதொரு செய்தியை வெளியிட்டு இருந்தது.

அதன்படி, வடமாகாண சபை, கடந்த ஐந்தாண்டு காலத்தில், 415 பிரேரணைகளை நிறைவேற்றியிருக்கிறது. அதாவது, அச்சபை கூடிய ஒவ்வொரு நாளிலும் தலா ஏழு பிரேரணைகளை நிறைவேற்றியிருக்கிறது.

ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, மாகாண சபையின் அதிகாரத்துக்கு உட்பட்டவையல்ல என்றும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நிறைவேற்றப்பட்ட சில பிரேரணைகள் அரசியல் காரணங்கள் தொடர்பானவை ஆகும். அதன் காரணமாகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பின் தள்ளப்பட்டுள்ளன.

அரசியல் பிரச்சினைகளை, அவர்கள் அரசியல் கட்சிகள் மட்டத்தில் கையாண்டு இருக்கலாம். மாகாண சபையை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பாவித்திருக்கலாம்.

அதற்காக, மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை எனக் கூற முடியாது. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம், மாகாண சபைகளுக்கு ஓரளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரங்கள், அந்தத் திருத்தத்தில் ஒரு பட்டியலாகவே (மாகாண சபைப் பட்டியல்) வழங்கப்பட்டுள்ளன.

கல்வி, உள்ளூராட்சி, வீடமைப்பு, சமூக சேவைகள், சிறுவர் பராமரிப்பு, நன்னடத்தை, அகதிகள், மறுவாழ்வு, விவசாயம், கிராம அபிவிருத்தி, சுகாதாரம், சந்தைகள், கூட்டுறவுத்துறை, நீர்ப்பாசனம், கால் நடை அபிவிருத்தி போன்றவை தொடர்பான ஓரளவு அதிகாரங்கள் மாகாண சபை பட்டியலின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பொலிஸ், காணி அதிகாரங்களும் அந்தப் பட்டியலில் இருந்த போதிலும் அவற்றை முறையாக வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில், கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு ஜனாதிபதியும் கையெழுத்திடாததால் அந்த அதிகாரங்கள் மாகாண சபைகளால் பாவிக்க முடியாதுள்ளன.

ஆனால், அதற்காகப் பயன்படுத்த முடிந்த அதிகாரங்களையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமா?
எனவே, பிரதமர் கூறுவதைப் போல், இருக்கும் அதிகாரங்களையாவது பயன்படுத்தாமல் இருப்பது, மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதல்ல.Post a Comment

Protected by WP Anti Spam