வேற்றுமையில் ஒற்றுமை!! (கட்டுரை)

Read Time:16 Minute, 49 Second

“சிங்கள-பௌத்த” பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராக, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தமிழ்த் தேசியம், ஈழ மண்ணில் விதைகொண்டு, வேர்விட்டது. அதனால்தான், ஏ.ஜே. வில்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள்.

“தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை” என்கிறார் ராம்சே மயர்.

சாதிகள் சேர்க்கையாக, சாதி ரீதியாகக் கட்டமைந்திருந்த தமிழ் மக்களிடையே, ‘தமிழர்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்ய பேரினவாதத் தேசியம் முயன்றதன் எதிர்விளைவாக, அதே தமிழர் என்ற தேசிய அடையாளத்தின் கீழ், தமிழ் மக்கள் ஒன்றிணைந்தமையை நாம் காணலாம்.

இது, தமிழரிடையேயான சாதி ஆதிக்கக் கட்டமைப்பிலும் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தமையை நாம் மறுக்க முடியாது. இதுபற்றி, ‘இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல்’ என்ற ஆய்வில், அம்பலவாணர் சிவராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“இலங்கைத் தமிழர்களின் அரசியல், யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலிருந்து குறிப்பிட்ட குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளதெனக் காண்கிறோம். அதாவது, சாதியில் உயர்ந்த வேளாளர்களே அரசியல் ரீதியில் பிரதானமான பதவிகளை வகித்து வந்துள்ளார்கள். இந்நிலை போர்த்துக்கேயர், டச்சுக்காரர் ஆட்சிக்காலப் பகுதிகளிலும் தொடர்ந்தது. பிரித்தானியர் ஆட்சியின்போது, இது மிகவும் தெளிவாகியது. இலங்கைத் தமிழர்களுக்குள்ளே யாழ்ப்பாணத் தமிழர்களும் அவர்களிலும் வேளாளர் சாதியமைப்பைச் சேர்ந்த, நிலவுடைமை, ஆங்கிலக் கல்வி என்பவற்றைப் பெற்றுக்கொண்டவர்களே அரசியலிலும் ஆக்கிரமிப்புச் செலுத்த முடிந்தது…….. மிகவும் அண்மைக்காலம் வரை அதாவது தமிழ்த் தீவிரவாதக் குழுக்கள், இலங்கைத் தமிழர் அரசியலைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்வரை வேளாள உயர்ந்தோர் குழாமே, இலங்கைத் தமிழர்களின், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் அரசியலை, ஆக்கிரமித்து வந்துள்ளது என்பது தெளிவாகிறது”.

தமிழ்த் தேசியம், இலங்கைத் தீவின் அரசியலில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் என்ற இனக்கூட்டத்தின் கட்டமைப்பிலும் போக்கிலும் சிந்தையிலும் கூட, மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. சாதி ரீதியின அடையாளத்தை மேவி, இனத் தேசிய அடையாளம் முன்னிறுத்தப்பட்டது. ‘தேசியம்’ (Nationality) என்ன என்ற வினாவுக்கு ‘இலங்கைத் தமிழர்’ என்று குறிப்பிடும் போக்கு வலுத்தது.

பிறப்புச் சான்றிதழில் ‘சாதி’ என்று வழங்கப்பட்ட இடத்திலும் ‘இலங்கைத் தமிழர்’ அல்லர் ‘தமிழர்’ என்று பதியப்படுவதையும் நாம் அவதானிக்கலாம்.

இவற்றால் எல்லாம், சாதிகளின் சேர்க்கை என்ற நிலையிலிருந்து, இலங்கைத் தமிழர், முழுமையான இனத் தேசமாக கட்டமைந்து விட்டார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால், ‘தமிழர்’ என்ற சமூகம் கட்டமைந்த விதம், தமிழ்த் தேசியத்தின் எழுச்சியோடு, கணிசமாக மாறியது என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியம் என்பது, ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராகத் தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த எதிர்வினைப் பாதை. பெரும்பான்மை இன-மத தேசிய எழுச்சியை, அதற்கு எதிரானதொரு தற்பாதுகாப்புத் தேசிய எழுச்சியைத் தவிர, தமிழ் மக்கள் வெவ்வேறு வகைகளில் எதிர்கொண்டிருக்க முடியும். வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும். 1976 இல் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ வரை, தமிழ்த் தலைமைகள் சிவில் தேச அடிப்படைகளுக்குள், சிறுபான்மைப் பாதுகாப்புக்காகப் பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வையே கோரியிருந்தார்கள்.

ஆகவே, தமிழ்த் தேசியம், அதன் பாலான தனியரசு என்பவை, மற்றைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி காணாததனாலேதான் தமிழ்த் தலைமைகளால் முழுமையாகச் சுவீகரிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை, அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியம், தனியரசு என்ற ரீதியில் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள் என்றால், அந்த மறுதாக்கத்தை உருவாக்கிய முதற்தாக்கம்தான், அந்த மறுதாக்கம் பிறப்பதற்கான காரணம். தாராளவாத கொள்கையாளர்களுக்கு, தமிழ்த் தேசியம் ஒவ்வாமை மிக்கதொன்றாக இருப்பது, புரிந்துகொள்ளத்தக்கதே. சிவில் தேசக்கட்டமைப்பை விரும்பும் தாராளவாதிகளுக்கு, இனத் தேசியம் என்ற கருத்தியல் கசப்பானதுதான்.

ஆனால், தமிழ் இனத்தேசியத்தை விமர்சிப்பவர்கள், அதே பேரார்வ உணர்வுடன், சிங்கள-பௌத்த, இன-மத தேசியத்தைக் கேள்விக்குட்படுத்தாது விடுவது, அவர்களது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

மறுபுறத்தில், சிந்தாந்த ரீதியலாக மேற்கத்தேய தாராளவாதிகளின் சிவில் தேச கருத்தியலுடன், இலங்கையின் இனம் மற்றும் இன-மத தேசக் கருத்தியல்கள் ஒத்தமையாததனால், தாராளவாதிகள் கருத்தியல் ரீதியில் இந்தத் தேசியங்களை நிராகரிக்கிறார்கள்.

ஆனால், இந்த இடத்தில் றாம்சே மயர், வோக்கர் கோனர் கூறும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் முக்கியமாகிறது. சுருங்கக் கூறுவதானால், தேசம் என்பது ஓர் உணர்வாகும். இறுதியாக நாம், ஒரு தேசத்தின் உறுப்பினர்களானவர்கள் உணர்ச்சிப்பெருக்குடனும் ஏகமனதாகவும் தம்மை ஒரு தேசமாக நம்புவதனால், நாம் அதைத் தேசமென்று கருதமுடியும் என்று, றாம்சே மயர் கருத்துரைக்கிறார்.

கருத்தியல் வாதப்பிரதிவாதங்களைத் தாண்டிய இந்தக் கருத்தை, ஆமோதிக்கும் வோக்கர் கோனர், அது எவ்வாறானது என்பதை விட, மக்கள் அதை எவ்வாறு நம்புகிறார்கள் என்பதே, இறுதியில் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள்.

“தமிழர்கள் ஓர் இனமாகவே இருக்கவில்லை. தமிழர்கள் பிராந்திய ரீதியில், பிரதேச ரீதியில், சாதி ரீதியில் பிரிவடைந்திருந்தார்கள். அவர்கள் வரலாற்றில் ஒருபோதும் தேசமாக இருக்கவில்லை. தமிழர்கள் என்பவர்கள், வந்தேறு குடிகள்” இப்படி எத்தனை வாதங்களை முன்வைத்தாலும், இன்றைய சூழலில், தமிழ் மக்கள் உணர்ச்சிப்பெருக்குடனும், ஏகமனதாகவும் தம்மை ஒரு தனித் தேசமாக உணர்கிறார்கள் என்றால், எந்தக் கருத்தியல்வாதமும் வரலாற்று வாதமும் எந்தத் தத்துவார்த்த நிலைப்பாடும், அந்த உணர்வை மாற்றிவிடாது.

‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மைத் தேசியவாதிகளும் மேற்கத்தேய லிபரல் தாராளவாதிகளும் வேறுபட்ட, தத்தமது கருத்தியல் காரணங்களுக்காகத் தமிழ்த் தேசத்தை, அதன் இருப்பை நிராகரிக்கிறார்கள் என்பதால், தமிழ் மக்கள் உணர்ச்சிப்பெருக்குடனும், ஏகமனதாகவும் தம்மை, ஒரு தேசமாகக் கருதும் நிதர்சனம் மாறிவிடப்போவதில்லை. தமிழ்த் தேசத்தையும் தேசியத்தையும் உணர்ந்துகொள்ள, இந்தப் புரிதல் அவசியமானது.

1956இலிருந்து, தமிழ்மக்கள் ஏகோபித்து, தமிழ்த் தேசியத்துக்கான தமது அங்கிகாரத்தையும் மக்களாணையையும் வழங்கிவந்திருக்கிறார்கள். இது, ஆறு தசாப்த காலத்துக்கும் மேலான தமிழ் மக்களின் மக்கள் விருப்பத்தைப் பறைசாற்றி நிற்கிறது. கருத்தியல் வாதங்களால், இந்த யதார்த்தத்தை, மறுத்துவிட முடியாது. இதனால்தான், திம்புக் கோட்பாடுகளின் முதல் கோட்பாடான ‘இலங்கைத் தமிழர், ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்’ என்பது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் முதன்மை மிக்கதாக இருக்கிறது.

இன்றும், இலங்கை அரசியலில் ‘இலங்கை’ எனும் சிவில் தேசிய அரசைக் கட்டமைக்கும் கனவைச் சிலர் முன்வைத்தே வருகிறார்கள். ‘நாம் யாவரும் இலங்கையர்’, ‘ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்’ போன்ற, பகட்டாரவாரப் பேச்சுகள் ஆங்காங்கே ஒலிக்கின்றன.

குறிப்பாக, மீளிணக்கப்பாடு தொடர்பான தளங்களில், இந்தப் பேச்சு அதிகம் ஒலிக்கும். ‘இலங்கை’ எனும் சிவில் தேசிய அரசைக் கட்டமைக்கும் கனவொன்றும் புதியதல்ல என்பதை, இந்தத் தொடரில் நாம் தௌிவாகப் பார்த்திருந்தோம். 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலும் இலங்கையிலிருந்த உயர்குழாம் அரசியல் தலைமைகளின் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

ஆனால், பெரும்பான்மை இன-மத தேசியமும் அதற்கு எதிரான சிறுபான்மையினரின் தற்பாதுகாப்பு இனத் தேசியமும் பல தசாப்தங்களாக வேறூன்றிய அரசில், மீண்டும் சிவில் தேசியத்தை, பகட்டாரவாரப் பேச்சும் பிரசாரமும் மட்டும் உருவாக்கிவிடாது.

மக்கள் தம்மை ஒரு தேசமாக உணராதவரை, அத்தகையதொரு தேசமொன்று உருவாகாது. சமகாலச்சூழலில் இலங்கை இன-மத, இனத் தேசியங்களிலிருந்து மீண்டும் தன்னை ஒரு சிவில் தேசமாக் கட்டமைவதற்கான அரசியல் தேவையோ, பிரக்ஞையோ காணப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை.

மாறாக, தாராளவாதிகளின் கவலைக்கு மத்தியில் இன-மத, இனத்தேசியம் இன்னும் வலுத்துக்கொண்டே இருப்பதைத் தான் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இங்கு, ‘ஒற்றுமை’ என்பதைவிட, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான், நடைமுறைக்குப் பொருத்தமான தீர்வை நோக்கிய அணுகுமுறையாக இருக்கும்.

அதாவது, மக்கள் தமக்கிடையேயான வேற்றுமைகளை மறுத்து, மேம்போக்கான ஒற்றுமையைச் சமைக்க முயற்சிப்பதைவிட, அந்த வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, அங்கிகரித்து, வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதுதான் நடைமுறைச்சாத்தியமானதும், உசிதமானதுமான அணுகுமுறையாகும்.

இந்த இடத்தில், சாதாரண மக்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும், ஜனநாயகம் என்பது, அந்த ஜனநாயக அரசாங்கத்தின் கீழ் வாழும், பெரும்பான்மை மக்கள் விருப்பத்தில் தங்கியதல்லவா? அப்படியானால், இலங்கையின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி, இலங்கை அரசு இயங்குவதில் என்ன தவறு?

சாதாரண மக்களிடமிருந்து, இது அப்பாவித்தனமான கேள்வியாகவும் அரசியல் சந்தர்ப்பவாதிகளிடம் இது வஞ்சகத்தனமாக வாதமாகவும் முன்வைக்கப்படுகிறது. ஜனநாயகம் இயங்குவதற்கும், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஜனநாயகத் தேர்தல் முறையில், பெரும்பான்மையோரது ஆதரவைப் பெற்றவர்கள் வெற்றி பெறுவதும், சட்டவாக்கத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற சட்டங்கள் நிறைவேற்றப்படுவதும் உண்மை.

ஆனால், ஜனநாயகத்தின் அடிப்படை என்பது, மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி என்பதேயன்றி, பெரும்பான்மையினரால், பெரும்பான்மையினருக்காக நடத்தப்படும் பெரும்பான்மையினராட்சி என்பதல்ல. பெரும்பான்மைப் பலம் இருப்பதால், அந்தப் பலம் கொண்டு, விரும்பிய அனைத்தையும் நடத்திவிடுவது ஜனநாயகம் அல்ல; அது பெரும்பான்மையினரின் வல்லாட்சி.

இறைமை, இலங்கை மக்களிடம் இருக்கிறது என்று இலங்கையின் அரசமைப்பு உரைக்கிறது. தேசிய-அரசுக் கட்டமைப்பிலுருவான இலங்கையின் அரசமைப்பு, இலங்கை மக்களால் ஆக்கியளிக்கப்பட்டதாக உரைக்கிறது. அப்படியானால், இங்கு இலங்கை மக்கள் எனப்படுவோர், பெரும்பான்மை மக்கள் மட்டும்தானா, அல்லது இங்குள்ள அனைவருமா என்ற கேள்வி எழுவதும் தவிர்க்கமுடியாதது.

இந்த இடத்தில்தான், தேசிய-அரசுக் கருத்தியலுக்கும், இலங்கையின் உண்மையான ஆட்சியமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளை, நாம் அவதானிக்கலாம். இலங்கையில், ஒரு ‘மக்கள்’தான் இருக்கிறார்கள் என்ற எடுகோளில்தான், இலங்கை அரசும், இலங்கை அரசமைப்பும் கட்டமைகிறது. ஆனால், யதார்த்தத்தில் ஒருமையான ‘மக்கள்’ (People) என்பதைவிட, பன்மையான ‘மக்கள்கள்’ (Peoples) இருக்கிறார்கள் என்பதுதான் முரண்பாட்டின் முதலிடம்.

அது என்ன ‘மக்கள்கள்’? இந்தக் கேள்வி மிக முக்கியமானது. குறிப்பாக, ‘சுயநிர்ணய உரிமை’ தொடர்பில், ‘மக்கள்கள்’ என்ற பதத்தை விளங்கிக்கொள்ளுதல் அத்தியாவசியமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகள் மொழியில் குழந்தைகளுக்கான புத்தகம்…!! (மகளிர் பக்கம்)
Next post முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!! (அவ்வப்போது கிளாமர்)