இந்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை: ‘கிஷான் அரசா’ ‘கோர்ப்பரேட் அரசா’? (கட்டுரை)

Read Time:13 Minute, 31 Second

பட்ஜட்டுகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்று கூறுவது போல், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையின், கடைசி பட்ஜட் பரபரப்பின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது.

‘கோர்ப்பரேட் அரசாங்கம்’ எதிர் ‘ஏழைகளின் அரசாங்கம்’ என்ற போட்டிக்கு இடையில் சிக்கிக் கொண்ட மத்திய அரசாங்கம், ஏதாவது ஒரு வகையில், இது ஏழைகளின் அரசாங்கம்தான் என்ற செய்தியைத் தெரிவிக்க முற்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில சலுகைகள், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

‘இரண்டு ஹெக்டேயர் நிலத்துக்கு குறைவாக வைத்துள்ள விவசாயிகளுக்கு, வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற அறிவிப்பும் ‘வருடத்துக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வருமானம் உள்ள தனி நபர்கள், வருமான வரி கட்டத் தேவையில்லை’ என்பதும் மிக முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.

டெல்லியில் அமையப் போகும் ஆட்சியை, விவசாயிகள் தீர்மானிப்பார்கள் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பு; கடந்த காலங்களில் அவ்வாறு நடந்தும் இருக்கிறது. அதனால்தான் “விவசாயக் கடன்கள் தள்ளுபடி” என்ற கோரிக்கையை, அனைத்து எதிர்க்கட்சிகளுமே முன்வைத்துப் போராடி வந்தன.

பல மாநில விவசாயிகளும் டெல்லியை முகாமிட்டுப் பேரணிகள் நடத்தினார்கள். நாடாளுமன்றத்திலும் பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் இந்தக் கடன் தள்ளுபடிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த போதுதான், மத்திய அரசாங்கம் பெருமளவில் கடன்களைத் தள்ளுபடி செய்தது. குறிப்பாக, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது.

அதற்கு முன்னோடியாக இருந்தது, 2006இல் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, விவசாயிகளுக்கான ஏழாயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்ததுதான். இதன் பிறகு, பல முக்கிய அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், ‘விவசாயிகளின் கடன் தள்ளுபடி’ என்பது வாக்குறுதியாக இடம்பெறுவதைப் பார்க்கலாம். விவசாயிகளுக்கான வாக்குறுதிகள் இல்லாமல், எந்தவோர் அரசியல் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் இந்தியாவில் வெளிவந்ததில்லை.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, போராட்டங்கள் களை கட்டின. குறிப்பாக, தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற விவசாயிகள், நிர்வாணப் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.அனைத்து மாநில விவசாயிகளுமே, டெல்லியில் பிரமாண்டமான பேரணிகளை நடத்தினார்கள். ஆனால், அத்தனை நேரங்களிலும், மத்திய அரசாங்கம் “விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது, மாநில அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய முடிவு. மத்திய அரசாங்கம் கடன் தள்ளுபடி செய்ய முடியாது” என்றே வெளிப்படையாக அறிவித்து வந்தது.

ஆனால், மத்தியில் உள்ள பிரதமரை, விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஷ்கர் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள்தான். இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியிலிருந்து, பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தோல்விக்கு, விவசாயிகள் ஒட்டுமொத்தமாக பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களித்ததே காரணம் என்று கூறத் தொடங்கினர். பா.ஜ.கவுக்குள் உள்ள முக்கியத் தலைவர்கள், “விவசாயிகள் பிரச்சினையில் பா.ஜ.க இப்படி முரண்பட்ட நிலை எடுப்பது, 2019 பொதுத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று பா.ஜ.க தலைமைக்குப் புரிய வைத்தனர்.

அதுதவிர, இந்த மூன்று மாநிலங்களிலும் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியின் அரசாங்கங்கள், அடுத்தடுத்து விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து, ‘காங்கிரஸ் விவசாயிகளின் நண்பன்’ என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டது. ஆனால், ‘பா.ஜ.க விவசாயிகளின் விரோதி’ என்ற தோற்றுப்பாட்டை, இந்த மூன்று சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வெளிவந்த ஒரு மாத காலத்துக்குள் படுவேகமாக ஏற்படுத்தி விட்டன.

மாநில அரசாங்கம் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யும் போது, மத்திய அரசாங்கத்துக்கு என்ன கஷ்டம் என்ற கேள்வி எழுந்தது. இதன் தாக்கம்தான், இப்போது வந்துள்ள விவசாயிகளுக்கு வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒரு விவசாயிக்கு மாதத்துக்கு 500 ரூபாய் கிடைக்கும். ஆனால், அந்தப் பலனைப் பெற அந்த விவசாயி, இரண்டு ஹெக்டேயர் நிலத்துக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும்.

இன்னொரு திட்டம், ‘ஐந்து இலட்சம் வருட வருமானம் பெறுவோர் வருமான வரிகட்டத் தேவையில்லை’ என்ற சலுகை. இது பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் 2014ஆம் வருடம் சொல்லப்பட்ட வாக்குறுதி.

2014 தேர்தலின் போது, பிரதமர் மோடிக்குப் பக்கபலமாக நின்ற வாக்காளர்கள் இந்தச் சலுகையை எதிர்பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்த அறிவிப்பின் மூலம், நடுத்தர மக்கள் பயனடைவார்கள். இதற்கும், அந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான் மிக முக்கிய காரணமாகும்.

இந்த வரிச்சலுகை, பா.ஜ.க பொறுப்பேற்ற முதல் ஆண்டின் நிதி நிலை அறிக்கையிலேயே இடம்பெறும் என்று, சம்பளம் வாங்குவோரும், தனிநபர் வருமானம் பெறுவோரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இதனுடன் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் சேர்ந்து கொண்டது. இவை அனைத்தும் ‘ஒருங்கிணைந்த தலைவலியாக’ மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஷ்கர் மாநில தேர்தல்களில் எதிரொலித்தது.

ஆகவே, சட்டமன்றத் தேர்தல் தந்த தோல்வி, மத்திய பா,ஜ.க அரசாங்கத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தி, ஏழை விவசாயிகள் பலனடையும் வகையில் அறிவிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

மக்களவைத் தேர்தலுக்கு எஞ்சியிருப்பது இன்னும் இரண்டு மாதங்களேயாகும். இந்த அறிவிப்புகளை, “தேர்தல் கால அறிவிப்புகள்” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. அதில் நியாயம் இல்லை என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது. அதேபோல், “ஏழைகளுக்கும், விவசாயிகளுக்குமான அறிவிப்பு” என்று பா.ஜ.க கூறுகிறது.

அதுமட்டுமல்ல, உடல்நலக்குறைவு காரணமாக, அமெரிக்காவில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி சிகிச்சை பெற்று வர, இடைக்கால நிதி மந்திரியாக இருக்கும் பியூஷ் கோயல், இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, இந்த அறிவிப்புகள் மூலம், ‘இது ஏழைகளின் அரசாங்கம்’ என்ற தோற்றத்தை, ஏற்படுத்த முற்பட்டிருக்கிறார். அதையும் தவறு என்று கூறிட முடியாது.

ஏனென்றால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் ஒரு ‘கோர்ப்பரேட் அரசாங்கம்’ என்று, கடந்த நான்கு வருடங்களாக ராகுல் காந்தியும் எதிர்க்கட்சிகளும் கூறி வந்தனர். இலட்சம் கோடிகளை, ‘கோர்ப்பரேட்’ கம்பெனிகளின் வராக்கடன்களாகத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசாங்கம், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன் என்ற கேள்வி, அனல் பறக்கும் விதத்தில் எழுந்தது.

ஆகவே, அந்த அனலை அணைக்க, ஐந்தாவது வருடத்தில், ‘எங்கள் அரசாங்கம் ஏழைகளின் அரசாங்கம்’ என்பதை முன்னிறுத்த, பிரதமர் நரேந்திர மோடி முயன்றிருப்பதன் அறிகுறியே, இந்த பட்ஜட் அறிவிப்புகள் என்றால் மிகையாகாது.

அந்தவகையில், 2019 மக்களவைத் தேர்தலைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்ப, பா.ஜ.க அரசாங்கத்தின் கையில் கிடைத்துள்ள கடைசி ஆயுதம் இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை. அதை நிதியமைச்சர் பியூஷ் கோயல், மிகச் சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார் என்றே கருத இடமுள்ளது. இவற்றை எளிதில், தேர்தல் கால அறிவிப்புகள் என்று குற்றம் சொல்லலாம். ஆனால், ஆட்சியில் இருந்த எந்த கட்சியும் இதுபோன்ற கடைசி நேர அறிவிப்புகளை, வெளியிடுவதில் சளைத்தவை அல்ல என்பதுதான் உண்மை.

அதேசமயத்தில், ‘கிஷான் அரசாங்கம்’, ‘ஏழைகளின் அரசாங்கம் என்ற எண்ணத்தை மாற்ற, கடைசி நிமிட முயற்சியாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு கடந்த ஐந்து வருடங்களாக இருந்த ‘கோர்ப்பரேட் அரசாங்கம்’ என்ற முத்திரை மாறுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. அப்படி மாறி விடக்கூடாது என்பதில், எதிர்க்கட்சிகள் குறியாகச் செயல்படுகின்றன.அதை முன்வைத்து, வாட்ட சாட்டமான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், வாக்காளரோ ஐந்தாவது வருடத்தில் வெளிவந்துள்ள ‘தேர்தல் திருவிழா’ போன்ற இந்த அறிவிப்புகளைப் பார்த்து விட்டு, சிரிப்பதா, சிந்திப்பதா என்ற முணுமுணுப்பில் இருக்கிறார்கள்.

இந்த அறிவிப்புகள், தேர்தலுக்கு முன்பு, பணமாக விவசாயிகளின் கைகளைச் சென்றடையுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனென்றால், இது அறிவிப்புகள்தான். இதைச் செயல்படுத்த, இனிமேல்தான் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ‘கிஷான் அரசாங்கமா’, ‘கோர்ப்பரேட் அரசாங்கமா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வதற்காக, வாக்குப் பெட்டியை உற்று நோக்கத் தயாராகி விட்டார்கள் என்பதுதான் இப்போதைய நிலைப்பாடு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)