By 26 February 2019 0 Comments

இது மினரல் வாட்டர் அல்ல!! (மருத்துவம்)

தூய்மையான தண்ணீர் என்பது ஒரு முழுமையான உணவு. அதில் இதை சேர்த்து, அதை எடுத்து, ஒன்றை அதிகப்படுத்தி, மற்றொன்றைக் குறைத்து நம் கைவரிசையைக் காட்ட ஆரம்பிக்கும்போது, தண்ணீர் அதன் தூய்மையையும், நம் உடலுக்கு இயற்கையாக அளிக்கக் கூடிய நற்பலன்களையும் இழந்துவிடுகிறது.

தாகத்தை தணிக்கும் நீர் நல்ல ஆரோக்கியமான பலன்களை தராவிட்டால்கூட பரவாயில்லை. கேடு விளைவிக்காமல் இருப்பது அவசியமல்லவா? கேன் வாட்டர் பயன்பாடு போல பாட்டில் வாட்டர் பயன்பாடும் சமீபகாலமாக பலமடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த பாட்டில் வாட்டர் பற்றி கொஞ்சம் அலசுவோம்…

ஏதோ ஒரு நீர் நிலையிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பல்வேறு வகையான சுத்திகரிப்பு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்பட்டு பின்னர் சந்தைக்கு வருகிறது. அதுவே நாம் குடிக்கும் Packaged drinking water… அதாவது, பாட்டில் வாட்டர்.

பாட்டில் வாட்டர் புழக்கத்தில் வந்த காலத்திலிருந்து அதை மினரல் வாட்டர் என்றே அழைத்து பழக்கப்பட்டு விட்டோம். உண்மையில் மினரல் வாட்டர் வேறு, பாட்டில் வேறு. எந்த பாட்டில் வாட்டர் கம்பெனியும் எங்களுடையது மினரல் வாட்டர் அல்ல என்று பகிரங்கமாக சாமானிய மக்கள் புரிந்துகொள்ளும்படி எந்த அறிக்கையும் விட்டதில்லை.

வெறும் ‘பேக்கேஜ்டு வாட்டர்’ என்ற முத்திரையோடு இருந்த பாட்டில் வாட்டர், சமீப காலமாக ‘With added minerals’ என்ற கேப்ஷனையும் சேர்த்துக் கொண்டது. அதற்காக மினரல் வாட்டரில் இருப்பதைப் போல அத்தனை மினரல்களையும் சேர்த்துவிடாமல் கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் என்ற வரிசையில் ஏதாவது இரண்டு அல்லது மூன்று கனிமங்களைச் சேர்த்திருப்பதாக பாட்டிலில் ஒட்டியுள்ளன வாட்டர் கம்பெனிகள்.

பாட்டில் நீர் பல நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. கார்பன் ஃபில்டர் வழியாக சுத்தப்படுத்தப்படும் நீரில் க்ளோரின், ரசாயன பொருட்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியும் அசுத்தங்கள் யாவும் நீக்கப்படுகின்றன.

ஓசோன் மற்றும் புற ஊதா கதிர் சுத்திகரிப்பில் நீரில் உள்ள கிருமிகள் அனைத்தும் கொல்லப்படுகின்றன. தலைகீழ் சவ்வூடு பரவல் வழியாகவும் சில பாட்டில் வாட்டர் கம்பெனிகள் தங்கள் தண்ணீரை சுத்தப்படுத்துவதாக தெரிவிக்கின்றன.

ஆனால், எல்லா நிறுவனங்களிலும் தண்ணீர் சுத்திகரிப்பு முறைகள் அனைத்து நிலைகளிலும் ஒரே சீரான கண்டிப்புடன் கண்காணிக்கப்படுவதில்லை. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தரக் கட்டுப்பாடு என்பது அவரவர் வசதிக்கேற்ப மாறுபடுவதுதான். உண்மையிலே சுத்தமான ஆரோக்கியமான நீரைதான் மக்கள் பருகிகுறார்கள் என்பதற்கு ஏற்ற தரக்கட்டுப்பாடு இங்கு இல்லை என சொல்லாம். பாட்டிலில் அடைக்கப்
படும் தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பது அந்தந்த கம்பெனிகளுக்கே வெளிச்சம்.

இந்த மினரல்ஸ் பாசாங்குகளையெல்லாம் தாண்டி பாட்டில் வாட்டரில் பல கெடுதல்கள் இருக்கின்றன. அதில் முதல் பிரச்னையே பாட்டில்தான்… அதாவது ப்ளாஸ்டிக். ப்ளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள ரசாயனப் பொருட்கள் பற்றிய கவலை எப்போதாவதுதான் தலை தூக்கும்.

தண்ணீர் தரமானதா, தூய்மையானதா என்று பார்க்கிறோமேயொழிய பாட்டில் பற்றி பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. மேலும் ‘ஒரு முறை’ உபயோகத்திற்கான ‘யூஸ் அண்ட் த்ரோ’ பொருட்களை பல முறை உபயோகிப்பதும் நம்மிடம் இருக்கும் ஆரோக்கியக் கேடான ஒரு பழக்கம்.

பாட்டில் சூடாகிப்போனால் ப்ளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரில் கலக்க வாய்ப்புண்டு. அதனால், Food grade வகையைச் சார்ந்த ப்ளாஸ்ட்டிக்கா, மறு உபயோகம் செய்யக்கூடியதா என்பதை தெரிந்து பயன்படுத்த வேண்டும். ப்ளாஸ்டிக்கே வேண்டாம் என்று புத்திசாலித்தனமாக மறுப்பவர்களுக்கு கண்ணாடி குடுவைகள்தான் ஆகச்சிறந்த மாற்று. பயணங்களின்போது கடைகளில் பாட்டில் வாட்டர் வாங்காமல் வீட்டிலிருந்தே தண்ணீர் கொண்டு செல்வது அதைவிட சிறந்த மாற்று.

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பாட்டில் தயாரிக்கத் தேவையான கச்சா பொருள் பற்றி நாம் என்றுமே யோசித்திருக்க மாட்டோம். ப்ளாஸ்டிக் பாட்டில்களைத் தயாரிக்க க்ரூட் ஆயில் தேவைப்படுகிறது.

தண்ணீரைச் சுத்திகரிக்கவும் எண்ணெய் தேவை. ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தண்ணீர் அடைக்கப்பட்டு நாம் இருக்கும் இடத்துக்கே வந்து சேர மறுபடியும் ஆயில்(பெட்ரோலோ, டீசலோ) தேவை. தண்ணீருக்கும் எண்ணெய்க்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தாலும், நாம் பருகும் பாட்டில் தண்ணீருக்கும் எண்ணெய்க்கும் இதுபோல நெருங்கிய தொடர்புண்டு.

ஆக, ஒரு பாட்டில் தண்ணீருக்கு பல இயற்கை வளங்களை இழக்க வேண்டியுள்ளது. ஆக, பாட்டில் வாட்டரை நாம் உபயோகிப்பதன் மூலம் நம் உடலைக் கெடுத்துக் கொள்வதுடன் பூமியின் வளத்தையும் சுரண்டி மறுபடி பூமியையே குப்பை மேடாக்குகிறோம்.

இந்தியாவில் நல்ல குடிநீர் என்பது இன்று வரை பெரும் கனவாகவே இருக்கிறது. நம் சுற்றுப்புறத்தையும் இயற்கை வளங்களையும் சரியான முறையில் பராமரிக்காமல், இருந்த நீர் நிலைகளையும் நிலத்தடி நீரையும் மாசு படிய விட்டுவிட்டு இன்று கேன் வாட்டரின் பின்னாலும், பாட்டில் வாட்டரின் பின்னாலும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இயற்கை அளித்துள்ள நீர் ஆதாரங்களை சரியான முறையில் பராமரித்தால் நல்ல குடிநீர் என்ற கனவு எதிர்காலத்தில் சாத்தியமாகும்.மாறுவோம்… மாற்றுவோம்!Post a Comment

Protected by WP Anti Spam