அரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை!! (கட்டுரை)

Read Time:18 Minute, 5 Second

அரசாங்க தூதுக் குழுவின், குழுக்களின் ஜெனீவாப் பயணம், விசித்திரமானதொரு நாடகமாகவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் ஒரு தூதுக்குழுவும் ஜனாதிபதியின் சார்பில் மற்றொரு குழுவுமாக இரண்டு குழுக்கள், முன்னர் ஜெனீவா செல்லவிருந்தன. இப்போது ஒரு குழு தான், ​ஜெனீவா சென்றுள்ளது.

2015ஆம் ஆண்டு, அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கி, நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற, அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் தேவை என்கிறது.

அதேவேளை, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள், இலங்கை விடயத்தில் மற்றொரு பிரேரணையை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றவிருந்தது.

இந்த இரண்டு நிலைப்பாடுகளையும் ஒன்று சேர்த்து, இப்போது இலங்கைக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற, மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் வகையில், இலங்கையின் இணை அனுசரணையுடன், இவ்வருட மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை நிறைவேற்ற, ஐ.தே.மு அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இதைப் பிரதமர் அலுவலகமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் கடந்த ஆறாம் திகதி வெளியிட்ட கூட்டறிக்கை மூலம் அறிவித்திருந்தன.

ஆனால், ஜனாதிபதி ​இதை விரும்பவில்லை. அதற்கிடையில், மற்றொரு திட்டத்தை அவர் வகுத்தார். அதன்படி, மனித உரிமைகள் பேரவையின் இவ்வருடக் கூட்டத்துக்கு, தமது பிரதிநிதிகளை அனுப்புவதற்கு அவர் திட்டமிட்டார்.

அக்குழு, ‘இலங்கையை விட்டுவிடுங்கள்; தமது பிரச்சினைகளை, அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்’ என்று, மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுக்கவிருந்தது.

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் இந்த இரண்டு திட்டங்களும், செயலுருவம் பெற்றிருந்தால் உலகமே சிரித்திருக்கும். அதற்கிடையே, ஜனாதிபதியும் ஐ.தே.மு அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து, இரு சாராரும் ஒரு குழுவை மட்டும் அனுப்புவதெனப் பின்னர் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், ஜெனீவா செல்லும் குழு, ஜனாதிபதியின் திட்டத்தின் படியன்றி, மற்றொரு பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கும், அரசாங்கத்தின் திட்டத்தின் படியே செயற்படும்.

2015ஆம் ஆண்டு, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம், அரசாங்கத்தின் மீது விதிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றவே, அரசாங்கம் கால அவகாசம் கோருகிறது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசாங்கம், அந்தப் பொறுப்புகளை ஏன் நிறைவேற்றவில்லை, ஏன் மேலும் அவகாசம் கோருகிறது என்பது முக்கியமான கேள்விகளாகும். அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் எவை என்று பார்த்தால், இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைத்துவிடும்.

2014ஆம் ஆண்டு, ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தின் மூலம், இலங்கையில் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின் போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணையொன்று நடத்தப்பட்டது.

அரச படைகளும் புலிகளும் சாதாரண மக்களைப் பெருமளவில் கொலை செய்துள்ளதாகவும் கடத்தியிருப்பதாகவும் சாதாரண மக்களுக்கு உணவு கிடைக்கும் வழிகளுக்கு இடையூறு செய்துள்ளதாகவும் முள்ளிவாய்க்காலில் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு, இரு சாராரும் காரணமாக இருந்துள்ளதாகவும் அந்த விசாரணையின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், அது தனித்தனிச் சம்பவங்கள் தொடர்பானதொரு விசாரணையல்ல. தனித் தனிச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்து, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்பதே, 2015ஆம் ஆண்டு பிரேரணையின் மூலம், அரசாங்கம் மீது விதிக்கப்பட்ட பிரதான பொறுப்பாகும்.

உண்மையில் இது புதிய விடயமல்ல. இதுதான் 2012ஆம் ஆண்டு முதல், இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில், வருடாந்தம் நிறைவேற்றப்பட்ட சகல பிரேணைகளின் இறுதி நோக்கமாகியது.

இதை நிறைவேற்றக் கடந்த மூன்று வருடங்களில், அரசாங்கத்துக்கு இருந்த தடை என்ன? வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் ஒன்றின் மூலம், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என, 2015ஆம் ஆண்டுப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டு இருந்த போதிலும், உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் ஒன்றின் மூலம், அவற்றை விசாரிக்கக்கூடாது என, மனித உரிமைகள் பேரவை கூறவில்லை. அதற்கும் அப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளின் மூலம், இடமளிக்கப்பட்டு இருந்தது.

எனவே, அரசாங்கம் கடந்த மூன்றாண்டுகளில் இந்த விசாரணைகளை நடத்த ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அரசாங்கம், அதற்காகவென எதையுமே செய்யவில்லை. எதிர்க்காலத்திலும் அவ்வாறானதொரு விசாரணை நடைபெறுமா என்பது சந்தேகமே.

ஏனெனில், நாட்டை ஆள்வது எந்தக் கட்சியாக இருந்தாலும், அவ்வாறானதொரு விசாரணை, அரசியல் தற்கொலைக்குச் சமம் எனத் தெற்கில் பொதுவாகக் கருதப்படுகிறது.

அரச படைகளும் புலிகளும் என்ற இரு சாராரும், போரின் போது மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டள்ளதாகவே, மனித உரிமைகள் பேரவையால் 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்த் தரப்பினர் மட்டுமன்றி, அரச தரப்பினரும், படைகள் மட்டுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதைப் போல் தான், நடந்து கொள்கிறார்கள்.

எனவே, தனித் தனிச் சம்பவங்களை விசாரிக்கும் விசாரணைப் பொறிமுறையொன்றை ஊருவாக்குவது, படையினருக்கு எதிரான செயலாகவே, தமிழ் தரப்பினரும் அரச தரப்பினரும் கருதுகிறார்கள்.

இவ்வாறானதொரு விசாரணையொன்றுக்கு ஏற்பாடு செய்தால், மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர், சிங்கள மக்கள் மத்தியில் அதைப் பெரும் துரோகமாகவே எடுத்துக் காட்டுவார்கள்.

அது, தேர்தல் காலங்களில் அரசாங்கத்தை மிக மோசமாகப் பாதிக்கலாம். அதனால் தான், அரசாங்கம் இந்த விடயத்தை இழுத்தடிக்கிறது.

ஆனால், அவ்வாறானதொரு விசாரணை நடத்தாமல், சர்வதேச சமூகத்திடம் இருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்ளவும் முடியாது. இம்முறை, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.

அரசாங்கம், இவ்வாறான விசாரணையொன்றை நடத்த முன்வராததைச் சுட்டிக் காட்டும் உயர்ஸ்தானிகர், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தமது நாடுகளுக்கு வந்தால், அவர்களுக்கு எதிராக சர்வதேச கடப்பாடு என்ற அடிப்படையில், விசாரணை நடத்துமாறு மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கேட்டுள்ளார். எனவே, அரசாங்கம் பெரும் நெருக்கடியில் இருப்பதையே அது உணர்த்துகிறது.

தமிழர்களின் பிரதான அரசியல் பிரதிநிதியாக இருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதே போன்றதொரு நெருக்கடியைத் தான் எதிர்நோக்கியுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான அரசாங்கமொன்றோடு போலல்லாது, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தோடு, பல விடயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூட்டமைப்பு கருதுகிறது போலும். தமிழ், முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.
ஆனால், அரசாங்கத்துக்கு மஹிந்த தரப்பினரைப் போல், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன் போன்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள், கூட்டமைப்பு எங்கே விட்டுக் கொடுக்கிறது, எங்கே பிழை விடுகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தமிழ் மக்களுக்குக் காட்டி, அவர்கள் அரசியல் இலாபம் தேட முற்படுகிறார்கள். இது கூட்டமைப்பு எதிர்நோக்கும் நெருக்கடியாகும்.

ஒரு புறம், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதைக் கூட்டமைப்பு எதிர்க்கவில்லை.

அதேவேளை, அவ்வாறு கால அவகாசம் வழங்குவதை எதிர்த்து, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியிலும் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடியையே அது காட்டுகிறது.

மஹிந்தவின் எதிர்ப்பும் மண்டியிடுதலும்

ஐ.நா, மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இம்முறை சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரேரணைக்கு, இணை அனுசரணை வழங்காது அதை நிராகரிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில் அவர், மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளை மட்டுமன்றி, ஐ.நாவின் ஏனைய ஆலோசனைகளையும் நிராகரித்தவாறு, அந்தப் பிரேரணைகளினதும் ஆலோசனைகளினதும் சில நிபந்தனைகளை நிறைவேற்றவும் முற்பட்டார் என்பதே உண்மையாகும்.

போர்க் காலத்தில் படையினர் மனித உரிமைகளை மீறவில்லை என்பதே மஹிந்த தரப்பினரின் வெளிப்படையான நிலைப்பாடாகும். எனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, நெருக்குவாரம் அதிகரிக்கவே அவர், 2006ஆம் ஆண்டு, இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் பி.என். பகவதியின் தலைமையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, சர்வதேச நிபுணர் குழுவொன்றை நியமித்தார்.

ஆனால், இலங்கை அரசாங்கம் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அக்குழு, தமது நடவடிக்கைகளை இடைநடுவே நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டது.

2006ஆம் ஆண்டு, திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதையும் மூதூரில் பிரெஞ்சு நிறுவனமொன்றைச் சேர்ந்த 17 தொண்டர்கள் கொல்லப்பட்டதையும் அடுத்து, சர்வதேச நெருக்குதல் அதிகரிக்கவே அது போன்ற முக்கிய 15 சம்பவங்கள் தொடர்பாக ஆராய, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு குழுவை நியமித்தார். அதற்கும் அரசாங்கம் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை.

போர் முடிவடைந்து, ஒரு வாரத்தில் ஐ.நாவின் அப்போதைய செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்தார். அந்த விஜயத்தின் இறுதியில், அவரும் ஜனாதிபதி மஹிந்தவும் வெளியிட்ட கூட்டறிக்கையில், போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் விடயத்தில், பொறுப்புக் கூறல் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்பட்டது. நிர்ப்பந்தம் காரணமாகவே, கூட்டறிக்கையின் அந்த வாசகத்தை, மஹிந்த ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ஒரு வருடமாக அரசாங்கம் அதைப் பற்றி எதையும் செய்யவில்லை. எனவே, ஐ.நா செயலாளர் நாயகம், இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்க, 2010ஆம் ஆண்டு, குழுவொன்றை நியமித்தார்.
நிலைமை மோசமாகும் என நினைத்த மஹிந்த, தாமும் அதே ஆண்டில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். அதன் அறிக்கை, 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் அரசாங்கம், அதன் பரிந்துரைகளை அமுலாக்க முன்வரவில்லை.

எனவே, மனித உரிமைகள் பேரவை, இலங்கை தொடர்பான தமது முதலாவது பிரேரணையை, 2012 ஆம் ஆண்டு நிறைவேற்றியது. மஹிந்தவின் அரசாங்கம் அதை நிராகரித்தது.

ஆனால், அந்தப் பிரேணையின் மூலம் விதிக்கப்பட்டதைப் போல், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக, தேசிய நடவடிக்கைத் திட்டமொன்றை (National Action Plan) பேரவையில் சமர்ப்பித்தது.

அத்தோடு, இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ஆறு பேர் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றும் நிறுவப்பட்டது. இராணுவம், எந்தவொரு மனித உரிமை மீறலையும் செய்யவில்லை என, அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், சர்வதேச சமூகம் அதை ஏற்கவில்லை. அதன்படி, மனித உரிமைகள் பேரவையில், 2013ஆம் ஆண்டு, இலங்கை தொடர்பான இரண்டாவது பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அது, சர்வதேச விசாரணை நடத்தப்படும் என எச்சரித்தது. அப்போது மஹிந்த, காணாமற்போனோர் தொடர்பான மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவை நியமித்தார். “போரின் போது, ஒருவரும் காணாமற்போகவில்லை” என, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியிருந்த நிலையில், அந்த ஆணைக்குழுவுக்கு 19,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. அதன் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.

2014ஆம் ஆண்டு, மனித உரிமைகள் பேரவை, மூன்றாவது பிரேரணையை நிறைவேற்றி, அதன் மூலம் சர்வதேச விசாரணையொன்றை ஆரம்பித்தது. அப்போது, மஹிந்த தமது விசாரணை நடுநிலையாக நடைபெறுவதாகக் காட்ட, பரணகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க, ஆறு வெளிநாட்டு நிபுணர்களை நியமித்தார். இறுதியில், அந்த ஆணைக்குழுவின் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.

எனவே, மஹிந்தவின் எதிர்ப்பானது மண்டியிடுவதும் எதிர்ப்புமாகவே இருந்து வந்துள்ளது என்பது தெளிவாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எட்டு வழியில் இன்பம் எட்டலாம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தாய்ப்பாலும் அதன் மகத்துவமும்!! (மகளிர் பக்கம்)