ஹமாஸ் – ஃபத்தா போராட்டம் !! (கட்டுரை)

Read Time:10 Minute, 1 Second

ஹமாஸ் மேற்கொண்ட இஸ்ரேல் மீதான இந்த வார ஏவுகணை தாக்குதலின் அடிப்படையை பல அரசியல் ஆய்வாளர்கள் ஆராய்கின்ற அடிப்படையில், குறித்த ஏவுகணைத் தாக்குதலானது இஸ்ரேலுக்கு மாத்திரம் எதிரானது அல்ல, மாறாக, ஹமாஸின் உண்மையான இலக்கு மஹ்மூத் அப்பாஸின் ஆளும் பொதுஜன அரசியல் கட்சியான ஃபத்தா என்பதே ஆகும் என்பதே வெளிப்பாடு.

ஹமாஸ், ஃபத்தா ஆகிய இரண்டு பலஸ்தீனிய பிரிவினர்களுக்கும் இடையே ஒரு தசாப்த கால யுத்தம், பிரிவினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முக்கிய பணிகளில் ஒன்றாக இருபிரிவினரும் கெய்ரோவில் சமரச ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஸா நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை ஃபத்தா ஆயுதக்குழுவின் ஆதரவுடன் ஹமாஸ் இயக்கம் தொடர்ச்சியாக பேணலாம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் இராஜதந்திரிகளே கெய்ரோவில் குறித்த இந்த இணக்கப்பாடு ஏற்பட தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸா, மேற்கு பலஸ்தீனிய பிராந்தியத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதல்களுக்குப் பின்னர் தனித்தனியாக ஆட்சி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் முந்தைய ஆண்டுகளில் தம்மால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் நாடாளுமன்றத் தேர்தல்களை வென்றிருந்தது என்பதுடன், ஃபத்தா ஆயுதக்குழுக்களை குறித்த பிராந்தியத்திலிருந்து முழுமையாக அகற்றுவதன் மூலமாக தமது அதிகாரத்தை வலுப்படுத்தும் செயல்பாட்டிலும் ஈடுபட்டிருந்தது.

எனினும், கடந்த வியாழக்கிழமை எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி பேச்சுவார்த்தையாளர்கள் புதிய உடன்பாடு அமுலுக்கு வரும் டிசெம்பர் மாத காலப்பகுதியில் காஸா பிராந்தியத்தின் நிர்வாக பொறுப்புக்கள் ஃபத்தா ஆதரவுடனான ஹமாஸ் இயக்கத்துக்கு வழங்கப்படும் அதேவேளை காஸா, எகிப்துக்கு இடையிலான றஃபா எல்லை, அதனை அண்டிய பிரதேசங்களின் நிர்வாகம் ஃபத்தா இயக்கத்துக்கு வழங்கப்படுகின்றது. இது பலஸ்தீனிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஸலாஹ் அல்-பர்தாவை நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறித்த ஒப்பந்தத்தின் வலிதான தன்மையை புலப்படுத்துகின்றது.

ஹமாஸ் இயக்கமானது பலஸ்தீனிய விடுதலைக்காக போராடும் இஸ்லாமிய குழுக்களில் அதிக எண்ணிக்கையான போராளிகளை கொண்ட இயக்கமாகும். இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் என அறியப்பட்ட இக்குழு 1987 இல் பலஸ்தீனிய மேற்குக்கரை, காஸா பகுதிகளில் இஸ்ரேல் ஆட்சியாளர்களின் அத்துமீறிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக உருவானது.

ஹமாஸ் இராணுவப் பிரிவான இஜெடின் அல் கஸ்ஸம் படைப்பிரிவுகளின் தலைமையில் இஸ்ரேலுக்கு எதிரான ஓர் ஆயுதப் போராட்டத்தை நடாத்துதல், சமூக நலத்திட்டங்களை வழங்குதல் என இரட்டை நோக்கத்தை அடிப்படையாக கொண்டிருந்த இயக்கம் 2005இல் இருந்து, பலஸ்தீனிய அரசியல் செயல்முறைகளில் ஈடுபட்டிருந்தது. ஹமாஸ் இயக்கமானது அரபு உலகில் இஸ்லாமியக் குழுவாக தேர்தல் வாக்குப்பதிவு மூலம் வெற்றிபெற்றிருந்த முதலாவது அமைப்பாகும். இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, பிற மேற்கத்தேய நாடுகளின் நட்பு நாடுகளால் ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழுவாக அங்கிகரிக்கப்பட்டுள்ள அடிப்படையிலேயே மேற்கத்தேய நாடுகள் இஸ்ரேலின் காஸா, மேற்கு பலஸ்தீனிய பிராந்தியத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டு மே மாதம், ஹமாஸ் ஆட்சியாளர்கள் முதல் முறையாக தமது புதிய கொள்கை ஆவணத்தை வெளியிட்டிருந்தனர். இஸ்ரேல் அங்கிகரிக்க மறுத்த குறித்த கொள்கை ஆவணமானது 1967க்கு முன்னர் அமைந்த இடைக்கால பலஸ்தீனிய அரசை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தை பிரகடனப்படுத்தியதுடன், யூத-விரோத கொள்கையையும் தளர்த்தியிருந்தது. குறித்த கொள்கை ஆவணமானது, ஹமாஸ் தன்னை ஒரு பயங்கரவாத இயக்க பட்டியலிலிருந்து நியாயமான போராட்ட குழுவாக சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட எதுவாக கொள்கை வகுத்திருந்தது என்ற போதிலும் 1987 இல் குறித்த இயக்கமானது நிறுவப்பட்ட தேவையை ஹமாஸ் இயக்கம் தளர்த்தியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் ஃபத்தா இயக்கமானது 1950 களில் யசீர் அராபத்தால் பலஸ்தீனிய தேசியவாதத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. இது அரபாத்தின் தலைமையின் கீழ், ஆரம்பத்தில் ஒரு பலஸ்தீனிய அரசு உருவாக்கத்துக்கான இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. ஆனால் ஹமாஸ் இயக்க கோட்பாட்டுக்கு முரணாக பிற்காலத்தில் இஸ்ரேலின் உரிமையை உறுதிப்படுத்தியது. இதன் அடிப்படையில் இஸ்ரேல், அன்றைய பலஸ்தீனிய தலைவரான யசீர் அரபாத் ஆகியோர் இரு நாடுகளுக்கு இடையில் சமாதானமான முறையில் தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர். 1993இல் ஒஸ்லோவில் இஸ்ரேலுடனான முதல் இடைக்கால சமாதான உடன்படிக்கையில் அரபாத் தலைமையிலான ஃபத்தா – பலஸ்தீனிய அரசு கையெழுத்திட்டிருந்தது.

2004 ஆம் ஆண்டு அரபாத்தின் மரணம், ஃபத்தா அதன் தலைமையின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட வழிவகுத்தது. அதன் அடைப்படையில் 2006இல், பலஸ்தீனிய இயக்கமான ஹாமாஸை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருந்த ஃபத்தா இயக்கம் தோல்வியடைந்திருந்ததுடன் இதன் தொடர்ச்சியாக ஜூன் 2007 ல், இரு பிரிவுகளுக்கும் இடையில் வன்முறை மோதல்களின் பின்னர், காஸா பகுதியிலிருந்து ஹமாஸ் இயக்கத்தால் ஃபத்தா இராணுவக் குழு முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து ஃபத்தா இயக்கத்தின் தலைவராக மஹ்மூத் அப்பாஸ் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அவர் பலஸ்தீனிய அரசாங்கத்தின் தலைவராக தேர்தல் மூலம் தெரிவாகியிருந்தார். 2006ஆம் ஆண்டு தேர்தல்களில் ஹமாஸ் வெற்றியீட்டியிருந்த போதிலும் மஹ்மூத் அப்பாஸ் தனது பதவியை துறக்கவில்லை. இந்நிலையியிலேயே 2017 மே மாதம் அவர், ஹமாஸ் தலைவர் கலீத் மிஷாலுடன் சேர்ந்து, எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் தங்கள் பல வருட பிளவுகளை முடிவுக்கு கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தனர்.

எது எவ்வாறியினும் குறித்த உடன்படிக்கை மிகக்குறைவான நாட்களே அமுலில் இருந்ததுடன், சமீப வாரங்களில், ஃபத்தா, ஹமாஸுக்கு இடையில் பகை மற்றும் பரஸ்பர தூண்டுதல் அதிகரித்தும் இருந்தது. குறிப்பாக, இது காஸாவில் அண்மையில் தோல்வியுற்ற ஹமாஸ் நிர்வாகத்தை எதிர்த்து பல ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களுக்கு சென்றமை, அது தொடர்பில் ஃபத்தா மீது ஹமாஸ் குற்றம்சாட்டியமை என்பவற்றின் அடிப்படையிலேயே அண்மைய ஏவுகணை தாக்குதல் பார்க்கப்படவேண்டியதாய் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காட்டுத்தீயை அணைக்கச் சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் பலி!! (உலக செய்தி)
Next post பிரண்டையின் பயன்கள்!! (மருத்துவம்)