இன்று திருப்பம் நிகழுமா? (கட்டுரை)

Read Time:13 Minute, 50 Second

2007ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் நான்காவது வரவுசெலவுத் திட்டம் எதிர்நோக்கியதை ஒத்த சவால்களை, இன்றைய அரசாங்கமும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது.
2008ஆம் ஆண்டுக்கான அந்த வரவுசெலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில், வெற்றிபெற முடியுமா என்ற கேள்வி அப்போது எழுந்திருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை, உச்சக்கட்டத்துக்கு நகர்த்தும் வகையில், பாதுகாப்புக்கான நிதி, அதிகளவு ஒதுக்கீடுகளுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது அந்த வரவுசெலவுத் திட்டம். போர் வரவு செலவுத் திட்டமாகவே அது வர்ணிக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், அப்போது பலமான நிலையில் இருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து தெரிவாகியிருந்த 105 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 39 பேர் ஜே.வி.பியைச் சேரந்தவர்களாக இருந்தனர்.

அதைவிட, மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்துக்குள் இருந்து அநுர பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறி இருந்தார்கள். அவர்கள் பலமானதோர் அணியாக மாறுகின்ற சூழலும் உருவாகி இருந்தது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஐ.தே.கவைச் சேர்ந்த கருஜெயசூரிய உள்ளிட்ட 18 உறுப்பினர்களைத் தமது பக்கத்துக்கு இழுத்து, அரசாங்கத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ.

அந்த வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு, அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால், அதற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்திருந்தன.

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்த, உள்ளிட்ட பல கட்சிகள், வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எச்சரித்துக் கொண்டிருந்தன. ஆளும்கட்சியைச் சேர்ந்த பலரும், வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கலாம் என்ற சூழலும் காணப்பட்டது.

அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாடாளுமன்றத்தில் 22 ஆசனங்கள் இருந்தன. இதுவும் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு கடுமையான சவாலாக இருந்தது.

வரவுசெலவுத் திட்ட இறுதிக்கட்ட வாக்கெடுப்பில், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தோற்கடிக்கப்படும் விளிம்புக்குக் கூடச் சென்றிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், போரை முன்னெடுக்கும் அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி, ஜே.வி.பி தமது முடிவை மாற்றிக் கொண்டது.

வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதில்லை என்று ஜே.வி.பி உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் எடுத்த முடிவால், அந்தக் கட்சியின் 38 உறுப்பினர்களும், விஜேதாஸ ராஜபக்‌ஷவும் வாக்களிக்காமல் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈழவேந்தன், அரியநேந்திரன், தங்கேஸ்வரி கதிராமர், ஜெயானந்தமூர்த்தி ஆகியோருடன் அநுர பண்டாரநாயக்கவும் சபைக்கு வராமல் ஒதுங்கியிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை, துணை ஆயுதக்குழுவினர் கடத்தி வைத்திருந்து, அவர்களைக் கொலை செய்து விடப் போவதாக அச்சுறுத்தி, அவர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டிருந்தனர்.

ஜே.வி.பியின் நந்தன குணதிலகவையும் உடுவே தம்மாலோக தேரர், புத்திரசிகாமணி போன்ற சுயேச்சை உறுப்பினர்களையும் தமது பக்கம் வளைத்துப் போட்டு, பல்வேறு தகிடு தத்தங்களையும் செய்து, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், 2008ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை, 114 வாக்குகளுடன் நிறைவேற்றியிருந்தது.

அப்போது, ஜே.வி.பி மிகப் பலமான சக்தியாக, அரசாங்கத்தைக் கவிழ்க்கக் கூடிய பலத்துடன் இருந்த போதும், போரைக் காரணம் காட்டி, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தைக் காப்பாற்றியிருந்தது.

அதற்குப் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் ஒருபோதும், வரவுசெலவுத் திட்ட நெருக்கடிகளைச் சந்தித்ததில்லை. ஏனைய கட்சிகளை மிரட்டி, தன்பக்கம் இழுத்துக் கொண்டு, பெரும்பான்மையைப் பெற்றிருந்தது.

ஆனால், அதே மஹிந்த ராஜபக்‌ஷவால் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக, கட்சிகளை ஒன்று திரட்டவோ, ஒருங்கிணைக்கவோ முடியாதிருக்கிறது.

கிட்டத்தட்ட 2007ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்புக்கு ஒப்பாக நிலை தான், இப்போதும் இருக்கிறது.

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 47 மேலதிக வாக்குகளைப் பெற்றிருந்த அரசாங்கம், இன்று நடக்கப் போகும் இறுதி வாக்கெடுப்பின் போது, பெரும்பான்மையை நிரூபிக்குமா என்ற கேள்வி நிலவுகிறது.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு போதிய பெரும்பான்மை பலம் இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரது ஆதரவுடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவிலும் தான், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி, அரசியல் சூழ்ச்சிக்குப் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியுடனான, அரசியல் கூட்டை முறித்துக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அதற்குப் பின்னர் சரியான முடிவை எடுக்க முடியாமல் திணறுகின்ற நிலையில் இருக்கிறது.

“ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை, வரவுசெலவுத் திட்டத்தில் தோற்கடிப்போம்” என்று மார்தட்டிய மஹிந்த ராஜபக்‌ஷவால், இரண்டாவது வாசிப்பின் போது, அதற்கு எதிராக 76 வாக்குகளைத் தான் திரட்டிக் கொள்ள முடிந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் இந்த வரவுசெலவுத் திட்டம், அதற்கு முக்கியமானது. இதில் தோற்கடிக்கப்பட்டால், அரசாங்கம் கவிழ்ந்து விடும். ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், ஆட்சி கவிழ்ந்தால், அது ஐ.தே.கவுக்குப் பாதகமாக அமைந்து விடும்.

அதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்புக்கும் இது முக்கியமானது. இதில் அரசாங்கத்தை தோற்கடித்து, ஆட்சியைப் பிடித்து விட்டால், ஜனாதிபதி தேர்தலில் இலகுவாக வெற்றியைப் பெற்று விடலாம்.

ஆனால், சிக்கல் என்னவென்றால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல், குறுக்கு வழியில் கைப்பற்றிய ஆட்சியை, மஹிந்த ராஜபக்‌ஷ இழந்து விட்டார்.

எனவே, இந்த வரவுசெலவுத் திட்டத்தைத் தோற்கடித்து, ஆட்சியைப் பிடிப்பது, அவர்களுக்கு இலகுவான காரியமில்லை.

2007ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை வெற்றி கொள்வதற்கு சாம, பேத, தான, தண்ட வழிகளைக் கையாண்ட மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, இம்முறை அவ்வாறான வழிகளைக் கையாளுவதற்கு, அதிகாரம் கையில் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மாத்திரம், ஐ.தே.க அரசாங்கத்துக்கு இருக்கிறது என்றில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் பலரும் அதற்குச் சாதகமான நிலையில் இருக்கிறார்கள்.

ஒக்ரோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் நெருக்கி வந்த போதும், ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது.

வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்காமல் ஒதுங்கியமை மஹிந்த ராஜபக்‌ஷவை கடும் சினத்துக்கு உள்ளாக்கி இருந்தது. அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் வாய்ப்பு, சுதந்திரக் கட்சியால் பறிபோய் விட்டதாக அவர் அப்போது கூறியிருந்தார்.

அதைவிட, இன்று நடக்கப்போகும் வரவுசெலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களிக்காது போனால், சுதந்திரக் கட்சியுடனான கூட்டணியில் பின்னடைவு ஏற்படும் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரித்திருக்கிறார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில் ஐ.தே.கவைக் காப்பாற்ற முனைகிறதா என்பதை விட, மஹிந்த ராஜபக்‌ஷவின் பிடிக்குள் முழுமையாகச் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கப் போராடுவதாகவே தெரிகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முறித்துக் கொண்டால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அடையப் போகும் நட்டத்தை விட, பொதுஜன பெரமுன அடையப் போகும் நட்டமே அதிகமாக இருக்கும்.

இன்று நாடாளுமன்றத்தில், நடக்கப்போகும் வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்காது. கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் வேண்டுமானால் குத்துக்கரணம் அடிக்கலாம். ஆனால், பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களிக்கலாம்.

அதுபோலவே, அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், ஆதரவு அளிக்க வாய்ப்புகள் உள்ளன.

இத்தகைய நிலையில், வரவுசெலவுத் தி்ட்டத்தை தோற்கடிக்க சுதந்திரக் கட்சியின் ஆதரவை மஹிந்த ராஜபக்‌ஷ பெற்றுக் கொண்டாலும் அது ஆட்சியைக் கவிழ்க்க உதவாது.

இன்றைய வரவுசெலவுத் திட்ட வாக்களிப்பு என்பது, ஐ.தே.க அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் கூட முக்கியமானது, ஏனென்றால், ஐ.தே.க அரசாங்கத்துக்கு எதிரான அவர்களின் வியூகம், எதிர்காலக் கூட்டணி என்பன சரிப்பட்டு வருமா என்பதை முடிவு செய்யக் கூடிய நாளாக இன்றைய நாள் அமையக் கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி நியாயம் கிடைக்கும்; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரப் பாடல்!!!
Next post குத்தாட்டம் போட்ட ‘குடிமகன்’!! (வீடியோ)