By 30 May 2019 0 Comments

கருக்குழாய் அடைப்பும் குழந்தையின்மையும்!! (மருத்துவம்)

பேபி ஃபேக்டரி – டாக்டர் லோகநாயகி

“கல்யாணமாகி முதல் ரெண்டு வருஷங்களுக்குக் குழந்தை இல்லை. அப்புறம் டாக்டரை பார்க்கிறதுனு முடிவெடுத்து ஒரு மகப்பேறு மருத்துவரை சந்திச்சோம். எங்க குடும்பத்துல நிறைய பேருக்கு எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னை உண்டு. எனக்கும் அது இருக்கலாமோனு ஒரு பயம். பீரியட்ஸ் நேரத்துல வலியால துடிப்பேன். அது எண்டோமெட்ரியாசிஸ்க்கான அறிகுறினு எப்பவோ படிச்ச ஞாபகம்… டாக்டரை பார்த்தப்ப நான் பயந்த மாதிரியே எனக்கு எண்டோமெட்ரியாசிஸ் இருக்கிறதா சொன்னாங்க. லேப்ராஸ்கோப்பி சர்ஜரியும் ஹிஸ்ட்ரோஸ்கோப்பியும் பண்ணினாங்க.

அதுக்குப் பிறகு எல்லாம் சரியாயிடும்னு நினைச்சிட்டிருந்த என்கிட்ட உங்களுக்கு கருக்குழாய் அடைப்பு இருக்குனு அடுத்த குண்டை தூக்கிப் போட்டாங்க டாக்டர். லேப்ராஸ்கோப்பி பண்ணும்போது அசாதாரணமான அடைப்பு இருக்கிறதா சந்தேகப் பட்டா, உடனே அதை ஹெச்.எஸ்.ஜி. (Hysterosalpingogram) பண்ணிப் பார்க்கணும்னும் கேள்விப்பட்டிருந்தேன். அதையும் அந்த டாக்டர்கிட்ட கேட்டேன்.

‘எல்லாமே உனக்குத் தெரிஞ்ச மாதிரி பேசறே… நான் டாக்டரா… நீ டாக்டரா’னு திட்டினாங்க. அது மட்டுமில்லாம, ‘உனக்கு ரெண்டு கருக்குழாய்கள்லயும் அடைப்பு இருக்கிறது உறுதி… அதனால எந்த டெஸ்ட்டும் தேவையில்லை’னும் சொன்னாங்க. குழந்தை வேணும்னா ஐ.வி.எஃப்தான் ஒரே தீர்வுனு சொன்னதை நம்பி, நாங்களும் அதுக்கு சம்மதிச்சோம். ரெண்டு முறை ஐ.வி.எஃப் முயற்சிகளும் தோல்வி. எனக்கு கொடுக்கிற ட்ரீட்மென்ட்டுல எங்கயோ தவறு நடக்கிறதா ஒரு உறுத்தல். அதனால அதுக்கு மேல அங்கே ட்ரீட்மென்ட்டை தொடர வேணாம்னு நாங்க வேற டாக்டரை பார்க்க முடிவு பண்ணினோம்.

முந்தைய ட்ரீட்மென்ட் தகவல்களை எல்லாம் பொறுமையா பார்த்த புது டாக்டர் அன்பா, அக்கறையா பேசின விதமே மனசுக்கு பெரிய ஆறுதலா இருந்தது. அதுக்கடுத்து அவங்க சொன்னதுதான் ஹைலைட்… ‘உங்களுக்கு கருக்குழாய் அடைப்பே இல்லையே… எதுக்கும் ஒரு ஹெச்.எஸ்.ஜி. எடுத்துப் பார்த்து டலாம்’னு சொன்னாங்க. அதே மாதிரி ஹெச்.எஸ்.ஜி. ரிப்போர்ட்ல கருக்குழாய் அடைப்பு இல்லைனு வந்தது. எண்டோமெட்ரியாசிஸும் இல்லைனு சொல்லி ரெண்டு மாசத்துக்கு மருந்துகள் மட்டும் கொடுத்திருக்காங்க… இயற்கையான முறையில கருத்தரிக்கும்கிற நம்பிக்கையோட காத்திட்டிருக்கோம்.

எங்களோட காத்திருப்பு அர்த்தமுள்ளதுதானா? எண்டோமெட்ரியாசிஸும், கருக்குழாய் அடைப்பும் இல்லாதபோது எனக்கு அது இருக்கிறதா டாக்டர் ஏன் பயமுறுத்தணும்? ஐ.வி.எஃப். சிகிச்சை பணம் பிடுங்கறதுக்கான வழிங்கிறதாலயா? குழந்தை வேணும்னு நினைக்கிறவங்களை என்ன வேணா சொல்லி ஏமாத்திடலாம்கிற அலட்சியமா? ஓரளவு விவரம் தெரிஞ்ச எனக்கே இந்த நிலைமைன்னா, படிப்பறிவே இல்லாத எத்தனை பெண்கள் தினம் தினம் ஏமாந்துக்கிட்டிருக்காங்க…? இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

‘பேபி ஃபேக்டரி’ பகுதியில அவசியம் என் கருத்தைப் பதிவு செய்யுங்க… என்னைப் போல இன்னொரு பெண் ஏமாறக்கூடாது…’’கோபம் கொஞ்சமும் குறையாமல் தன் அனுபவங்களை நம்மிடம் கொட்டினார் ஐ.டி துறையில் வேலை பார்க்கிற 27 வயது நந்தினி. அவரது கேள்விகளையும் குழப்பங்களையும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் சாமுண்டி சங்கரியிடம் சொன்னோம். நந்தினிக்கான விளக்கங்களைத் தருகிறார் டாக்டர் சாமுண்டி சங்கரி.

“மருத்துவத்தைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஆனால், முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்பதுதான் நிஜம். தனது நோயாளியை ஏமாற்றிப் பணம் பறிக்க நினைப்பதை தர்மத்துக்குக் கட்டுப்பட்ட எந்த மருத்துவர்களும் செய்வதில்லை. ரொம்பவும் குழம்பி இருக்கும் உங்களுக்கு சில விஷயங்களைத்
தெளிவுப்படுத்த விரும்புகிறேன். கருக்குழாய் அடைப்பைக் கண்டுபிடிக்க HSG டெஸ்டுதான் உகந்தது. அதை லேப்ராஸ்கோப்பி செய்வதன் மூலம் 100 சதவிகிதம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மாதவிலக்கின் போதான உங்கள் பிரச்னைகள் எண்டோமெட்ரியாசிஸ்க்கான அறிகுறிகள்தான். அதை உறுதி செய்யும் Gold Standard Test என்றால் அது லேப்ராஸ்கோப்பி. இரண்டாவது மருத்துவர் உங்களைப் பரிசோதித்த போது அது மறைந்திருக்கலாம். கருக்குழாய் அடைப்பும் சில நேரங்களில் லேப்ராஸ்கோப்பியில் தெரியும். HSGயில் தெரியாமல் போகலாம். அல்லது HSGயில் தெரிந்து லேப்ராஸ்கோப்பியில் மறைந்து போகலாம்.

சிலருக்கு HSG செய்யும் போது Spasm எனப்படுகிற இழுப்பின் காரணமாக அது கருக்குழாய் அடைப்பு மாதிரித் தெரியலாம். உங்கள் விஷயத்தில் முதலில் இதுதான் நடந்திருக்க வேண்டும். சினைக்குழாய் பிரச்னைகளை சரி செய்வதற்கான டியூபோபிளாஸ்டி அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டால்தான் HSG செய்ய வேண்டியது அவசியம். நேரடியாக ஐ.வி.எஃப். பரிந்துரைக்கப்பட்டால் அது தேவையில்லை. அதனால்தான் உங்களுக்கு HSG தேவையில்லை எனச் சொல்லப்பட்டிருக்கும். இப்போது உங்களுக்கு இரண்டு பிரச்னைகளுமே இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

அது மருத்துவரால் உறுதி செய்யப்பட்டிருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் 2 அல்லது 3 முறை IUI சிகிச்சையை முயற்சி செய்து பார்க்கலாம். மழலைச் செல்வம் மலர வாழ்த்துகள்!’’ என்கிற டாக்டர் சாமுண்டி சங்கரி, கருக்குழாய் அடைப்புக்கும் குழந்தையின்மைக்குமான தொடர்பு பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார்… “குழந்தையின்மைக்கான காரணங்களில் சுமார் 40 சதவிகிதப் பெண்களைப் பாதிக்கிற பிரச்னை கருக்குழாய் அடைப்பு. அப்படி என்றால் என்ன?

அது எப்படி குழந்தையின்மைக்குக் காரணமாகிறது என்பதை எல்லாம் பார்ப்பதற்கு முன், கருக்குழாயின் அமைப்பைப் பற்றியும் அதன் வேலைகளைப் பற்றியும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கருப்பைக்கும் இரண்டு கருக்குழாய்கள் உண்டு. இக் கருக்குழாய் நான்கு கூறுகளாக (Segments) பிரிக்கப்பட்டுள்ளது. அவை

1. கருப்பை உள் இருக்கும் பகுதி (Intra Mural Segment / Cornual Segment)
2. இடை இணைப்புப் பகுதி (Isthmial Segment)
3. குடுவைப் பகுதி (Ampullary Segment)
4. மருவிகள் பகுதி (Fimbrial Segment).

இதில் கருக்குழாயில் உள்ள துவாரம், கருப்பை உள்ளிருக்கும் பகுதியிலும் இடை இணைப்புப் பகுதியிலும் மிகக் குறுகியதாகவும் குடுவை பகுதியிலும் மற்றும் மருவிகள் பகுதியிலும் சற்று விரிந்தும் காணப்படும். கருக்குழாயின் துவாரம் (Lumen) அடர்ந்த உயிர்மங்கள் (Cells) உடையதாக இருக்கும். இந்த உயிர்மங்கள் சளிப்படலங்களாகவும் (Mucous membrane folds) சுரப்பிகள் கொண்டதாகவும் இருக்கிறது.

இந்த உயிர்மங்கள் பலதுக்கும் நுண்ணி மயிரிழைகள் (Cells) என்று சொல்லப்படும் சிறு மயிரிழை இணைப்பகங்கள் உண்டு. இந்த உயிர்மங்கள் சளிப்படலங்களாகவும் (Mucous membrane folds) சுரப்பிகள் கொண்டதாகவும் இருக்கும். இந்த மயிரிழைகள் எப்போதும் கருப்பையை நோக்கி அசைந்து கொண்டு இருக்கும். கருக்குழாயின் முக்கிய பணிகள்…

1. கருமுட்டையைக் கைப்பற்றுவது
2. ஆண் விந்தணுக்களை கருமுட்டையிடம் சேர்த்து கருத்தரிக்கச் செய்வது.
3. சிசு (Embryo) உருவாகிய பின் அதைப் பாதுகாத்து கருப்பைக்குள் சேர்ப்பது. கருவணுவகத்திலிருந்து (Ovary) கருமுட்டை உருவானதும் கருக்குழாயின் மருவிகள் பகுதி சினைப்பையைச் சூழ்ந்து கொள்ளும். கருமுட்டை வெளிப்படும்போது அதைக் கைப்பற்றி உள்ளிழுத்துக் கொள்ளும். இவ்வாறு கருக்குழாயை அடைந்து குடுவைப் பகுதியில் 2 3 நாள் வரை தங்கியிருந்து முழுமையான வளர்ச்சியை அடையும். ஆண் விந்துக்கள் கருமுட்டையை இப்பகுதியில்தான் கருவுறச் செய்யும் (Fertilization).

இப்படி கருவுற்ற கருமுட்டை பகுப்படைந்து சிசு ஆகிறது. 8லிருந்து 16 உயிர்மங்களாகப் (816 Cell Stage) பிரிந்து இந்தச் சிசு கருக்குழாயில் இருக்கும் மயிரிழை உயிர்மங்களின் அசைவுகளாலும் கருக்குழாய்ச்
சுவரின் தசைகளின் சுருக்கங்களாலும் கருப்பையை அடைந்து கருப்பையினுடைய படல உறையில் தன்னைப் பதித்துக் கொண்டு வளர்கிறது.

கருக்குழாயில் உண்டாகும் நோய்களும் அதன் விளைவுகளும்

கருக்குழாய் நோய்களில் முதன்மையானது நுண்கிருமிகளால் இடுப்புப் பகுதியில் (Pelvis) ஏற்படும் அழற்சி நோய்கள் (Pelvic Inflammatory Disease). இப்போது பால்வினை (Sexually Transmitted Diseases) நோய்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கிளமைடியா ட்ரக்கோமேடிஸ் (Chlamydia Tracomatis) என்கிற நுண்கிருமியும் நைசீரியா குனோரியா (Neissieria Gonnorhoea) என்கிற நுண்கிருமியும் 40 சதவிகிதம் பால்வினை நோய்களை ஏற்படுத்தி கருக்குழல் சிதைவுக்குக் காரணமாகின்றன.

மேலும் மைக்கோபேக்டீரியம் ஹோமினிஸ் (Mycobacterium Hominis), யூரோபிளாஸ்மா யூரோலைட்டிகம் (Ureaplasma Urealyticum), ஹீமோபிளஸ் இன்புளூயென்ஸா (Hemophilius Influenza) போன்ற நுண்கிருமிகளும் 23 சதவிகிதம் குழலின் சிதைவுக்குக் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. சில நேரங்களில் பல கிருமிகள் ஒன்று சேர்ந்து இந்த நோய்த் தன்மைக்குக் காரணமாகலாம். இப்படி வரக்கூடிய நோய்கள் பிறப்புறுப்பு வழியாகக் கருப்பைக் குழியை (Endometrium) அடைந்து அங்கிருந்து கருக்குழாயை அடைகிறது.

சில நேரங்களில் இந்த நுண்கிருமிகள் ரத்த நாளங்கள் (Arteries) மூலமாகவோ, ரத்தச் சிரைகள் (Veins) மூலமாகவோ அல்லது நிணநீர் (Lymph) மூலமாகவோ கருக்குழலை அடைந்து சேதத்தை ஏற்படுத்தக் கூடும். பெருங்குடலில் ஏற்படும் நோய்களும், குடல்வாலில் ஏற்படும் நோய்களும் கருக்குழலை பாதிக்கக்கூடும். சிலருக்கு கருச்சிதைவு செய்த பின்னரோ, முதல் குழந்தை பிறந்த பிறகோ அல்லது தகுந்த காரணம் இல்லாத நிலையிலும் இந்நோய் பாதிப்பு உருவாகலாம்.

பெண்கள் கருவுறாமல் இருக்க கருக்குழாயில் பொருத்தப்படும் காப்பர்டி (CuT) போன்ற சாதனங்களும் தூய்மையான நிலைகளில் போடப்படாவிட்டால் இந்நோய்கள் உருவாகலாம். மேலும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) என்று சொல்லப்படும் ரத்தக் கட்டிகளும் கருக்குழாயை பாதிக்கக்கூடும்.இந்த நுண்கிருமிகள் கருக்குழலின் உயிர்மங்களின் மயிரிழைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி சளிப்படலங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளச் செய்கிறது. மேலும், கருக்குழலின் துவாரத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருவுறாமைக்கு முக்கிய காரணமாகிறது.

மேலும் இப்படி வரக்கூடிய நோய்கள் கருக்குழாயிலிருந்து வெளிப்பட்டு கருப்பையைச் சுற்றியுள்ள வயிற்று உள்ளுறையை (Peritonium) அடைந்து கருக்குழாய் குடல்களோடு ஒட்டச் செய்து அதன் இயக்கத்தை தடுத்துவிடுகிறது. இப்படி ஏற்படக்கூடிய நோய்கள் கருக்குழலின் தசைகளில் நீர்க்கட்டுகளை (Hydrosaiphinx) ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் இவை நீர்க்கட்டிகளாகவும் இருக்கலாம். கருக்குழலின் மருவிகள் அல்லது குடுவைப் பகுதிகளை இந்நோய் அதிகம் பாதிக்கிறது.

இது கருக்குழல் துவாரத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையான அடைப்பையோ உண்டாக்கி கருக்குழலில் உள்ள தசைகளுக்கும் சளிப்படலங்களுக்கும் உயிர்மங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி கருக்குழல் வீக்கங்களுடன் காணப்படுகிறது. மிகக் கடுமையாக இந்நோய்த் தாக்கப்பட்டால் உயிர்மங்களின் மயிரிழைகள் அசையாத் தன்மையோடு அல்லது அனைத்தும் சேதமடைந்து காணப்படலாம். இப்படி கருக்குழாயின் துவாரங்களுக்கு ஏற்படும் அடைப்புகளே கருவுறாமைக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

நுண்கிருமிகளால் ஏற்படும் இடுப்புப்பகுதி நோய்களுக்கு அவ்வப்போதே தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்துவிட்டால் கருவுறாமை தன்மையின் சதவிகிதம் குறைந்துவிடும்…Post a Comment

Protected by WP Anti Spam