பரிஸ் தேவாலயத் தீவிபத்து: செல்வம் இங்கே கொட்டிக் கிடக்கிறது!! (கட்டுரை)

Read Time:13 Minute, 20 Second

உலகின் எங்கோ ஒரு மூலையில், இந்தக்கணம் பட்டினியால் குழந்தையொன்று இறக்கிறது. அதே கணத்தில், உலகின் மிகப்பெரிய பணக்காரர், ஐந்தரை இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான தொகையைச் சம்பாதிக்கிறார்.

உலகம் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் நேர்மையாகவும் நியாயமாகவும் நீதியாகவும் நடக்கிறது என்று நம்புபவர்கள், நம்பவைக்கப்பட்டுள்ளவர்கள் இந்தத் தரவை, ஒருதடவை ஆழமாக யோசிக்க வேண்டும்.

உலகில் பட்டினியால் வாடும் இலட்சக்கணக்கானோர், இல்லாமையால் வாடவில்லை; எங்களது இயலாமையால் வாடுகிறார்கள். இந்த உண்மை, எங்களுக்கு உறைப்பதில்லை. ஆனால், அண்மைய சம்பவம், இதை மீண்டுமொருமுறை சுட்டிக்காட்டி நிற்கின்றது.

எரிந்த தேவாலயமும் சேர்ந்த செல்வமும்

கடந்தவாரம், பிரான்ஸின் தலைநகர் பரிஸில் உள்ள 850 ஆண்டுகள் பழைமையான, ‘நோத்ரே டாம் தேவாலயம்’ தீக்கிரையாகியது. ஐரோப்பாவின் முக்கியமானதொரு வரலாற்று நினைவுச்சின்னம், தீயில் எரிந்ததைப் பார்த்து, உலகளாவிய ரீதியில், மில்லியன் கணக்கானவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

தேவாலயத்தின் மேற்கூரையை முற்றாக அழித்த நெருப்பு, கோபுர உச்சியைத் தாண்டி, நீண்டு வளர்ந்து, பற்றி எரிந்தது. 13ஆம் நூற்றாண்டுக்குரிய கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின; தேவாலயம் கிட்டத்தட்ட முழுமையாகச் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், இதைப் புனரமைப்பதற்கு நிதியுதவிகள் கோரப்பட்ட நிலையில், 24 மணித்தியாலத்துக்குள் ஒரு பில்லியன் யூரோவுக்கு அதிகமான தொகை, பிரான்ஸ் செல்வந்தர்களால் உறுதியளிக்கப்பட்டது.

“உலகில் செல்வம் இல்லை; வறுமையையும் ஏழ்மையையும் கட்டுப்படுத்துவது மிகக் கடினமாக இருக்கிறது” என்று, ஐக்கிய நாடுகள் முதல் உலக வங்கி வரை எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், ஒரே நாளில் ஒரு தேவாலயத்தைத் திருத்த, பிரான்ஸ் செல்வந்தர்களால் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கக் கூடியதாக இருக்கிறது.

இதேவேளை, செல்வந்தர்களால் வழங்கப்படும் இத்தொகைக்கு 75சதவீதம் வரை வரிவிலக்கு அளிப்பதாக, பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மேலதிகமாக, இத்தேவாலயமானது தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டால் வழங்கப்படும் தொகைக்கு, 90சதவீதம் வரை வரிவிலக்கு அளிக்கவியலும் என்று அறிவித்துள்ளது.

இது பிரான்ஸில் பாரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே, பிரான்ஸ் தொழிலாளர்களால் ‘செல்வந்தர்களின் ஜனாதிபதி’ என, நகைக்கப்படுகின்ற பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், பதவியேற்றது முதல், வரிவிலக்குகள் மூலம் செல்வந்தர்களின் செல்லப்பிள்ளையாகியுள்ளார்.

பிரான்ஸின் பில்லியனர்களில் ஒருவரான பேர்னார்ட் ஆர்னல்ட், வரிவிலக்குகளின் விளைவால் கடந்தாண்டு மட்டும் 22 பில்லியன் யூரோக்களைச் செல்வமாகச் சேர்த்துள்ளார்.

தேவாலயத்துக்கு வழங்கப்படும் வரிவிலக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மஞ்சள் மேற்சட்டைப் போராட்டக்காரர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பெருமிதங்களை விட, மக்களது அன்றாட வாழ்க்கையும் அவர்களது எதிர்கால வாழ்வுமே முக்கியமானது என, அவர்கள் போராடுகிறார்கள். இது முக்கியமான செய்தியொன்றைச் சொல்கிறது.

ஏற்றத் தாழ்வுகள் ஏன் நிலவுகின்றன?

ஒருபுறம் ஊதிய உயர்வுக்காக மக்கள் போராடுகையில், செல்வம் எவ்வாறு ஒரு சிலரின் கைகளிலேயே குவிகிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் உலகமயமாதலின் எல்லையற்ற பரவுகையும் உலகெங்கும் உழைக்கும் மக்களை எல்லையற்றுச் சுரண்டவும் அவர்களது உரிமைகளை மறுக்கவும் வழியமைத்துள்ளன.

சமூக உற்பத்தி முறைகளிலும் உற்பத்தி உறவுகளிலும் பெரும் மாற்றங்களை முதலாளித்துவம் இயலுமாக்கியதால், தொழிலாளி தனது உழைப்பாற்றலை மட்டுமே விற்கும் நிலையில், தொழிலாளிக்கும் உற்பத்திப் பண்டத்துக்கும் இடையிலான முழுமையான நேரடி உறவை, முதலாளித்துவ உற்பத்தி முறை மறுதலித்தது.

இவ்வாறு, முதலாளித்துவம், உழைப்பின் அந்நியமாதலுடன் சேர்ந்து, உருவாகி வளர்ந்துள்ளது. தொழிலாளியின் உழைப்பு, ஒரு பண்டத்துக்குச் சேர்க்கும் பெறுமதி, தொழிலாளியை அடைவதில்லை. தொழிலாளிக்கு வழங்கும் ஊதியத்துக்கும் அப்பெறுமதிக்கும் இடையிலான வேறுபாடு, இலாபமாக்கப்பட்டு அதன் பெரும் பகுதி, முதலாளித்துவ மூலதனத்துக்குத் திரளுகிறது.

இவ்வாறு, இன்று ஏகாதிபத்தியமாக வளர்ந்துள்ள முதலாளித்துவம், தொழிலாளர் உரிமைகளைத் தேச அரசுகளின் துணையோடு மறுத்து வருகிறது. ஏனெனில், தேச அரசுகளின் விருத்தி, முதலாளித்துவத்தின் விருத்தியுடன் நெருங்கிப் பிணைந்துள்ளது.

எனவே, முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறியதை அடுத்து, பன்னாட்டு முலதனம், தேச எல்லைகளைத் தாண்டி, இன்று ஏகாதிபத்தியம், தனது உலகமயமாதற்ச் செய்நிரலூடு, உலக ஆதிக்கத்தை வேண்டுகையில், தொழிலாளர் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு, அவர்கள் சுரண்டப்படுவதற்குத் தேச அரசுகள் நேரடியாகத் துணை போகின்றன.

தனது மண்ணில் மட்டற்ற சுரண்டல், தொழிலாளர் கிளர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடிய நிலையில், சுரண்டலின் சுமை, பின்தங்கிய நாடுகளின்மேல் ஏற்றப்படுகிறது. அத்துடன், காலப்போக்கில், முதலாளித்துவ இலாப நோக்கு, முதலாளித்துவ உற்பத்தியைத் தனது தேச எல்லைகளுக்கு வெளியே கொண்டுசெல்லக் கட்டாயப்படுத்துகிறது. இது மூலதனத்தின் இடப்பெயர்வாகிறது.

அவ்வாறே, தனது மண்ணில் உருவாகும் சேவைத் தொழில்களுக்கு வேண்டிய உழைப்பை, மலிவாகப் பெறப் பின்தங்கிய நாடுகளிலிருந்து மலிவான உழைப்பாற்றலை, மூலதனம் இடம் பெயர்க்கிறது. வறுமை, பஞ்சம், போர் என்பன, இதற்கு மிக உதவுகின்றன. இதன் விளைவுகளையே இன்று இலங்கையில், நாம் காண்கிறோம்.

பிரான்ஸில் நடைபெறும் நிகழ்வுகள், செல்வம் மிக்கவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி, எவ்வளவு அதிகரித்து உள்ளது என்பதைக் காட்டுவதற்கான குறிகாட்டி ஆகும்.

இதைக் கடந்தமாதம் வெளியான ‘இலங்கை: பொருளாதாரத்தின் நிலை 2018’ என்ற அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது. கடந்த 15 ஆண்டுகளில், வறுமை குறைவடைந்து வந்துள்ள அதேவேளை, வறுமையானது நகர்ப்புறங்களை விட, கிராமப் புறங்களில் பலமடங்கு அதிகரித்துள்ளது.

அதேவேளை, கிராமப்புறங்களில் உள்ள வறுமையை விட, இருமடங்கு வறுமை, மலையகத்தில் நிலவுகிறது. இவ்வாறு தான் அபிவிருத்தி கணக்கிடப்பட்டு, வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகின்றன.

அடுத்தது என்ன?

இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகெங்கும் இதுதான் நடக்கிறது. இன்று, மேற்குலக நாடுகளை உலுக்கும் போராட்டங்களின் பின்னணி இதுதான். இவ்வாண்டு இதன் பின்னணியிலேயே, அடுத்தவாரம் மே தினம் வருகிறது.

இன்று, ‘மே தினத்தைத் தக்கவைப்பதும், தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடுதலும்’ எனும் இரு சவால்கள் எம்முன்னே உள்ளன. தேசிய இன முரண்பாட்டால், இனரீதியாகப் பிளவுபட்டுள்ள இலங்கைத் தொழிலாளர் வர்க்கம், ஐக்கியப்பட எந்தவொரு வாய்ப்பையும் வழங்கக்கூடாது என்பதில், இலங்கையின் ஆளும் வர்க்கம், மிக உறுதியாகவே இருக்கிறது.

அதற்கெதிராக, உழைக்கும் மக்களை இன வேறுபாடுகள் அற்று, தொழிலாளர்கள் என்ற குடையின் கீழ் ஒன்றிணைப்பதே எம்முன்னுள்ள முக்கிய பணி.

மூன்றாமுலக நாடுகளின் உற்பத்தித் துறைகளும் விவசாயமும் சிறுகைத்தொழில்களும் திறந்த பொருளாதாரத்தால் விழுங்கப்பட்டுள்ளன. அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குவதில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் முன்னிற்கின்றன.

விலையுயர்வால் பாதிக்கப்படுகிறவர்கள் சாதாரண உழைக்கும் மக்களே. அதில் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் இல்லை. இந்நிலைமை, உழைக்கும் மக்களுக்கே நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் கொண்டு வந்து இல்லாமை, போதாமை, வறுமை, பசி, போஷாக்கின்மை, சுகாதார வசதியின்மை, கல்வியின்மை போன்றவற்றை நிரந்தரமாக்க வழிவகுக்கிறது.

அவற்றுக்கு எதிராகச் சில தன்னெழுச்சியான எதிர்ப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துவந்த போதிலும், அவை ஒருங்கிணைக்கப்படவில்லை. அவை தேர்தல் அரசியலுக்கானவையாக நோக்கப்படுகின்றன.

அதைத் தாண்டி, மக்கள், அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளும் வெகுஜன அரசியலுக்கான அணிதிரட்டலுக்கு அவை கொண்டு செல்லப்பட வேண்டும். அதைச் செய்வதன் மூலமே, உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் நடைமுறையில் உள்ள உரிமைகளைத் தக்க வைக்கவும் முடியும்.

இன, மொழி, மத வேறுபாடுகளைக் கடந்து உழைக்கும் மக்கள் என்ற வகையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காகப் பொதுத்தளத்தில் ஒன்றிணைந்து போராடுவதற்கான வாய்ப்பைத் தரும் தொழிலாளர் தினமானது, மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் அனைத்து மக்களுக்கும் வெவ்வேறு விதங்களில் மறுக்கப்படுவதைப் பரந்தநோக்கத்தில் காணும் வாய்ப்பை, நமக்கு வழங்குகிறது.

அத்தகைய சூழலில், அனைத்து மக்களையும் அணிதிரட்டிப் போராடுவதற்கான வாய்ப்பாக அதனை நாம் மாற்றவேண்டும். இக் காலப்பகுதியே அதற்கான அரசியல் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நித்யாவின் அந்தரங்க லீலைகளை வெளியிட்ட பாலாஜி வைரலாகும் வீடியோ!! ( வீடியோ)
Next post சிவராத்திரி இரவில் நடந்ததை புட்டு புட்டு வைத்த சீரியல் நடிகை நீலிமா!! ( வீடியோ)