வாழ்வென்பது பெருங்கனவு! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 55 Second

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்… சித்த மருத்துவர் ஜனனி. மனிதன் உணவின்றி 30 நாட்களும், நீரின்றி மூன்று நாட்களும், காற்றின்றி மூன்று நிமிடமும் உயிர் வாழலாம். ஆனால் நம்பிக்கையின்றி மூன்று நொடி கூட வாழ இயலாது. வாழ்க்கையில் துயரங்கள் வலிமையானது. ஆனால் அதை விட வலிமையானது வாழ்க்கையை நடத்திச் செல்லும் நம்முடைய கனவு, அதுவும் பெருங்கனவு. உலகில் மிகவும் சக்தி வாய்ந்தது நம்முடைய ஆழ்மனது தான். அதில் நாம் எதை விதைக்கிறோமோ அதையே தான் அறுவடை செய்வோம். புதுடெல்லி ராஷ்ட்ரபதி பவனில் உள்ள ஆயுஷ் நிறுவனத்தில் சித்த மருத்துவ ஆலோசகராக பணிபுரியும் ஜனனி தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ‘‘எல்லோருக்குமே ஒரு கனவு இருப்பது போல் என் ஆழ் மனதில் பதிந்ததுதான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற என் எண்ணம். அதற்கு காரணம் என் தந்தை.

எனது தந்தை கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வந்தார். அவருக்கு ஜோதிடத்தின் மேல் அளவு கடந்த நம்பிக்கை உண்டு. நான் பிறந்த நாளன்று ஜோதிடர் ஒருவர் நான் மருத்துவர் ஆவேன் என்று சொன்னதை என் தந்தை மனதில் மட்டும் அல்ல என் மனதிலும் ஆழமாக பதிந்தது. பள்ளிப் பருவம் முழுவதும் பாடசாலை, அதனை தொடர்ந்து ஹிந்தி பயிற்சி, கைப் பந்து, தடகள பயிற்சி என அப்படியே சென்றது. ஒரே பெண் குழந்தை என்பதால் எனக்கு அதிக செல்லம், சுதந்திரம் சற்று கூடவே கிடைத்தது. எனது அப்பாவும் தினம் ஒரு முறையாவது நான் மருத்துவர் ஆவது பற்றி என்னிடமோ, அம்மாவிடமோ அல்லது தன் நண்பர்களிடமோ பேசி தன்னுடைய கனவு நனவானது போல் அகம் மகிழ்வார். என் அம்மாவின் கனவோ நான் நன்றாக சாப்பிட வேண்டும், தூங்க வேண்டும், மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அம்மா என்னை சின்ன வயசில் இருந்தே ஊட்டி ஊட்டி தான் வளர்த்தாங்கன்னு தான் சொல்லணும். அதன் விளைவு நான் சிறுவயதிலேயே கொஞ்சம் பருமனாகவே இருந்தேன்.

நாட்கள் இப்படியே நகர்ந்தது. என்னுடைய 12ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வந்தது. அன்று எனக்கும் என் அப்பாவுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருப்பது என்று எங்களுக்கு தெரியாது. ரொம்பவே சந்தோஷத்தோடு தான் மதிப்பெண்ணை பார்க்க போனோம். காரணம் நான் தேர்வு நன்றாக எழுதி இருந்தேன். அதனால் மதிப்பெண்ணும் நான் எண்ணியது போல வரும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் நான் எதிர்பார்த்தது போல் என் மதிப்பெண் இல்லை. சற்று குறைவாக தான் இருந்தது. அதனால் எனக்கு மருத்துவ படிப்புக்கான சீட் கிடைக்கவில்லை. என்னுடைய 12 வருட நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்து போனது. எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. நன்றாக தானே தேர்வு எழுதினேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் என வருத்தமாக இருந்தது. உண்மையான உழைப்பும், நம்பிக்கையும், நமது ஆழ் மனமும் நம்மை கைவிடாது.

சில அதிசயங்களை நிகழ்த்தும். அந்த அதிசயம் என் வாழ்வில் நடந்தது. எம்.பி. பி.எஸ் தான் டாக்டர் பட்டம் என்றில்லை. சித்த மருத்துவமும் மருத்துவ துறை தான். அதனால் நான் சித்த மருத்துவத்தை எடுத்து படித்தேன்’’ என்றவரின் வாழ்வில் ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் என்பது உண்மையானது.
‘‘சில சமயம் நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றால் அதை விட சிறப்பான ஒன்றை கடவுள் நமக்கு தரவிருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிச்சேன். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் போது அப்படி ஒரு மகிழ்ச்சி, மனதில் பட்டாம்பூச்சி பறக்க கண்டேன். சித்த மருத்துவம் சேர்ந்தாச்சு பிறகென்ன என்று ஸ்டைலாக குதிரைவால், காற்றில் துப்பட்டாவை பறக்க விட்டுக் கொண்டு கழுத்தில் ஸ்டெதெஸ்கோப் அணிந்து சென்றதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருது. நான் அப்படி சென்றால் விட்டுவிடுவார்களா சீனியர்கள்… வறுத்து எடுத்துட்டாங்க.

மறுநாளிலிருந்து வழிய வழிய எண்ணெய் தேய்த்து, இரண்டு பக்கம் துப்பட்டாவை பின் செய்து குனிந்த தலை நிமிராமல் கல்லூரிக்கு சென்றேன். அதே பழக்கம் ஐந்தரை ஆண்டுகள் தொடர்ந்தது. அந்த சமயம் தேசிய சித்த மருத்துவமனை தாம்பரத்தில் தொடங்கப்பட்டது. பட்ட மேற்படிப்பிற்காக விண்ணப்பம் வாங்க சென்றிருந்த போது அதன் உள் கட்டமைப்பு, புறநோயாளி பிரிவு, பெண்கள் விடுதி என்ற அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த காட்சி என்னுள் ஆழமாக பதிந்தது. எம்.டி படித்தால் இங்கு தான் படிக்க ணும்ன்னு முடிவு செய்தேன். தினமும் காலை எழுந்ததும் 5 நிமிடம் நான் அந்த கல்லூரியில் படிப்பது போலவும், புறநோயாளி பிரிவில் நோயாளியை பார்ப்பது போலவும், விடுதியில் தூங்குவது போல விழித்துக்கொண்டே கனவு காண்பேன். என்னுடைய கனவும் பலித்தது. அங்கு பட்ட மேற்படிப்பு படிக்கும் போது வடநாடு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

சுற்றுலாவில் தில்லியில் குடியரசு தலைவர் மாளிகை வெளியே புகைப்படம் எடுத்த போது, இங்கு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என மனதுக்குள் கற்பனை செய்து பார்த்தேன்’’ என்றவரின் அந்த கனவும் பலித்தது. ‘‘சுற்றுலா முடிந்து சென்னை திரும்பியதும் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது. இதற்கிடையில் பட்டப்படிப்பும் முடிச்சேன். அன்பான கணவர், அழகான பெண் குழந்தை என ஒரு வருடம் குழந்தை பராமரிப்பில் மூழ்கிப் போனேன். அதனால் உதவி மருத்துவ அலுவலருக்கான தேர்வில் என்னால் சரியாக செயல்பட முடியவில்லை. அதனால் நான் சற்று மனம் தளர்ந்து போனேன். இதற்கிடையில் ஒருநாள் வாட்ஸ் அப்பில் குடியரசு தலைவர் மாளிகையில் சித்தமருத்துவ ஆலோசகருக்கான அறிவிப்பும், நேர்முகத்தேர்வுக்கான தேதி பற்றி விவரம் வந்தது. பழைய கனவு துளிர்விட ஆரம்பித்தது. அது தற்காலிக பணி என்பதால் வீட்டில் தயங்கினர்.

கடவுளுக்கு அடுத்து குரு என்பார்கள். எனது வாழ்க்கையில் என் பாக்கியம் எனக்கு அமைந்த ஆசிரியர்கள் ஷண்முகப்ரியா, கிறிஸ்டியன், இலசேகரன் ராமமூர்த்தி, தாமோதரன்ஆகியோர். அவர்கள் தான் என்னை ஊக்கப்படுத்தி நேர்முகத் தேர்விற்கு செல்ல விமான சீட்டை அவர்கள் செலவில் எடுத்துத் தந்தார்கள். ஒரு வழியாக குடியரசு தலைவர் மாளிகையில் ஆயுஷ் வெல்னஸ் மருத்துவமனையில் சித்தமருத்துவ ஆலோசகரானேன். வேலைக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது கணவர் சுரேஷ் நாங்கள் காதலித்த நாளிலிருந்து இன்று வரை எனது கனவுகளுக்கு துணையாக நிற்கிறார். சிறுவயதில் ஹிந்தி படித்ததால், ஹிந்தி சரளமாக பேச முடிந்தது. குடியரசு தலைவர் மாளிகையில் வேலை செய்வதால் நல்ல பெயரும் புகழும் கிடைத்தது.

ஆனால் வாழ்க்கையில் அதையும் தாண்டி சொந்த ஊரில் பெற்றோருடன் இருக்கவேண்டும், எனது மகளும் தாத்தா, பாட்டி என சொந்தங்களுடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது. எனது கணவரின் வியாபாரமும் சொந்த ஊரில் அமைந்துவிட்டதால். எனது கனவை கொஞ்சம் விட்டுக் கொடுத்து, தில்லியில் இருந்து அடுத்த மாதம் சொந்த ஊரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர இருக்கிறேன் புதிய கனவுகளோடு…’’ என்றார் ஜனனி. நம் ஆழ் மனதில் என்ன விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம். ஒவ்வொரு நிமிடமும் நம் மனதில் விதைக்கும் எண்ணங்களும் நாம் செய்யும் முதலீடுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங்!! ( வீடியோ)
Next post “பொம்பளை தானே” என பிரேமலதாவை கிழி கிழி கிழியென கிழித்த இளம்பெண்! ( வீடியோ)