பாத அணியிலும் பல்வேறு விஷயங்கள்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 36 Second

மனித இனத்திற்கு நோய் வராமல் தடுக்கும், நோய் வந்தால் குணமாக்கி மீண்டும் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளும் ஓர் உன்னத மருத்துவமுறை ஆயுர்வேதம். அதற்காகவே ஆயுர்வேதம் பல நுணுக்கமான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அவை காலையில் துயில் எழுந்திருப்பது இரவில் துயில் கொள்ளும் வரை, மனிதன் கருத்தரித்ததிலிருந்து பிரசவம் தொடங்கி இறுதிநாள் வரை அடங்கும்.

ஆம்… மனிதன் அன்றாடமும் அவனுடைய வாழ்நாளில் பின்பற்ற வேண்டிய அனைத்து விஷயங்களையும் எப்படி பயன்படுத்த வேண்டும் அவற்றால் என்ன பயன் என்பதை தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி பதிவு செய்யப்பட்டவைகளில் ஒன்றுதான் செருப்பு என்ற பாத அணி.

முடி திருத்தம், வாய் கொப்பளித்தல், கண்ணிற்கு மையிடுதல், தலைப்பாகை அணிதல் என மற்ற எல்லாவற்றுக்கும் பலன்களை கூறிய ஆயுர்வேதம் பாத அணியைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. பாத அணி உபயோகிக்கும்போது கிடைக்கும் பலன்களையும், பாத அணி அணியவில்லையென்றால் அதனால் ஏற்படும் தீமைகளைப்பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளது. இதிலிருந்தே தெரியும் பாத அணியின் முக்கியத்துவம்.பாத அணிக்கு ஆயுர்வேதத்தில் பாத ரக்‌ஷா என்று பெயர். ரக்‌ஷா என்றால் பாதுகாப்பு என்றும் பொருள்.

பாதத்திற்கு பாதுகாப்பு அளிப்பதால் இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் இன்னும் ஒரு படி மேல் சென்று பாத அணி/காலணி என்று பெயர் கொடுத்து பாதத்திற்கு அணிகலனை கொடுத்து அழகைக் கொடுக்கிறது. பாதத்திற்கு செருப்பை ஓர் அணிகலனாகக் கருதுகிறது தமிழ். அதனால் இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

பாத அணி அணிவதால் ஏற்படும் பலன்களைப்பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்…

பாத அணி அணிவதினால் கண்கள் நலம் பெறும். கால் தொடர்பான நோய்கள் ஏற்படாது. (கிருமிகளாலும், சகதிகளாலும் ஏற்படும் சேற்றுப்புண் மற்றும் தோல் நோய்கள் வராமலும், கரடு, முரடான இடத்தில் நடப்பதால் காலில் வலி, கால் ஆணி போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாத அணி அணிவதால் இவைகள் ஏற்படாது.)

சூரிய ஒளியின் வெப்பத்தின் காரணமாக தரை சூடாகயிருந்தாலும், மழை மற்றும் பனியின் காரணமாக ஈரப்பதமாக இருந்தாலும் கற்கள் நிறைந்த பாதையாக இருந்தாலும் நம்மால் சுகமாக நடக்க இயலாது. பாத அணி அணிந்தால் சுகமாக நடக்கலாம்.தேஜஸ் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆயுர்வேதத்தில் ஓஜஸ் என்ற வார்த்தையினைப் பயன்படுத்துவது உண்டு.

ஓஜஸ் என்றால் உடலில் உள்ள தாதுக்களின் சாரம்சம். இது ஓர் உயிர் சக்தி. அவ்வளவு மேன்மையான ஒன்று பாத அணி அணிந்தால் ஓஜஸ் என்ற உயிர்சக்தி அதிகரிக்கும் என்பது கட்டாயம். இதனை நவீன விஞ்ஞானமும் உறுதிப்படுத்தியுள்ளது. பாதம் என்பது உடலின் கடைசி பகுதி. உடலின் ஆரம்ப பகுதியான தலை எவ்வளவு முக்கியமோ அதேபோல் உடலின் கடைசி பகுதியான பாதமும் முக்கியம்.

உடலில் உள்ள ரத்தக்குழாய்கள், எலும்புகள், நரம்புகள், தசைகள் போன்றவைகள் எல்லாம் முடிவடையும் இடம் பாதம். இவற்றை அணிகலன் இட்டு முறையாக பாதுகாத்தால் ரத்தக்குழாய் முதலானவை பாதுகாக்கப்படும். மேற்கண்டவைகள் சரியாகயிருந்தால் போதும். உயிர்சக்தி என்ற ஓஜஸ் சரியாக இருக்கும் என்பதினால் ஓஜஸை அதிகரிக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஆண்மையும் பாத அணியினைப் பயன்படுத்துவதால் பாதுகாக்கப்படும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?! ஆண்மைக்கு பல்வேறு மருந்துகளை மற்றும் உணவுகளை கேள்விப்பட்டிருக்கும் நாம் ஒரு சாதாரண பாத அணி ஆண்மையை பாதுகாப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இதற்கு காரணம் இடுப்புப் பகுதியில் இருந்து உருவாகும் நரம்புகள்( குறிப்பாக, Sciatic என்ற உடலின் மிகப்பெரிய நரம்பு) பாதங்களில் முடிவு பெறுகிறது. கரடு முரடான இடங்களில் பாத அணி இல்லாமல் நடந்தால் பாதங்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு அது ஆண்மையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவேதான் பாத அணி அணிந்தால் ஆண்மை பாதுகாக்கப்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது.

பாத அணிகள் அணியாமல் இருந்தால் ஏற்படக்கூடிய தீங்குகள் என்ன என்பதைப்பற்றி ஆயுர்வேதம் கூறும் கருத்து. எப்போதும் பாத அணிகள் அற்ற கால்களால் நடப்பது அநேக விதமான நோய்களையும் உண்டாக்கும். கண்களுக்கு கெடுதி உண்டாக்கும். மேற்கண்டவற்றில் எப்போதும் என்ற வார்த்தை மிக முக்கியத்துவம் பெறுகிறது. விரத நாட்களில் அல்லது வேறு சூழ்நிலையின் காரணமாக செருப்பு இல்லாமல் நடக்க நேரிட்டால் பக்கவிளைவோ அல்லது வேறு எந்த தொந்தரவோ ஏற்படாது என்பதை குறிப்பிடவே அழுத்தமாக எப்போதும் செருப்பு இல்லாமல் நடந்தால்தான் தீங்கு என்று ஆயுர்வேதத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில வாத நோய்களுக்கு குறிப்பாக பாத எரிச்சல், பாத வலி, இடுப்பு வலி, பாதத்தில் எலும்பு வளருதல், கால் ஆணி, பாத வெடிப்பு. மிகுந்த வலியுடன் கூடிய பாத வெடிப்பு. கணுக்கால் வலி போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக கரடு முரடான இடங்களில் நடத்தல், நீண்ட தூரம் நடத்தல் போன்றவைகள் ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட தொந்தரவுகளுக்கு முறையான சிகிச்சையும், முறையான பாத அணி அணிந்தால் மிக விரைவில் விடுபடுவோம், புதிய செருப்பால் அல்லது வேறு காரணம் கொண்டு செருப்பால் காலில் புண் ஏற்பட்டால் வேப்பிலை மஞ்சளை அரைத்துப் பூசினாலும் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் ‘தார்வாதி தைலம்’, ‘சிந்தாராதி தைலம்’ போன்ற மருந்துகளை பிரயோகப்படுத்தினாலும் செருப்பால் ஏற்பட்ட பாதப்புண் போகும்.

அடுத்து மிக முக்கியமான ஒன்று. அதுவும் இளம் பெண்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பாத அணி சம அளவு சமதளமாகயிருக்க வேண்டும். செருப்பின் முன்பகுதி தாழ்ந்தும், பின்பகுதி உயர்ந்தும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அநேக நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது. பாத அணிகள் அணியவில்லையென்றால் ஏற்படும் தீங்கில் அநேக நோய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாத அணி சமதளத்தில் இல்லாமல் இருந்தாலும் பொருந்தும்.

பல்வேறு நோய்கள் தோன்றினாலும் குறிப்பாக இடுப்பு வலி, மூட்டு வலி, கருப்பை கோளாறுகள், கணுக்கால் வலி நகத்தில் நோய் போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாத அணியை முறையாக சரியான அளவில் அணிந்து பாதத்தை பேணிக்காத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம். தலைக்கு எவ்வாறு தலைகவசம் முக்கியமோ அதேபோல் பாதத்திற்கு பாத கவசமும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி ஓராண்டுக்கு கவலை இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க…!! (மருத்துவம்)