கர்ப்பப்பை நீக்கம் அவசியமா? (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 58 Second

ஒரு பெண்ணின் உடலில் பொக்கிஷம் போன்ற பகுதி அவளது கர்ப்பப்பை. அவளைச் சுமந்த, அவள் சுமக்கப் போகிற உயிரின் உறைவிடமான அதை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும். அவசியமோ அவசரமோ இல்லாமல் கர்ப்பப்பையை எடுத்துக் கொள்கிற இளவயதுப் பெண்களின் எண்ணிக்கை, கிராமப் புறங்களில் அதிகரித்து வருவதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் மகப்பேறு மருத்துவர் லோகநாயகி. கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய தவிர்க்க முடியாத காரணங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீர்வுகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

“மாதவிலக்கின் போது லேசான வயிற்று வலி வந்தாலோ, ரத்தப் போக்கு சற்று அதிகமானாலோகூட தானாக வலிய வந்து மருத்துவரிடம் கர்ப்பப்பையை எடுத்துவிடச் சொல்லிக் கேட்கிற பெண்களை ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் அதிகம் பார்க்கிறேன். கர்ப்பப்பையை நீக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்ட பிறகும், மருத்துவர் எச்சரித்தும்கூட, அதை எடுக்க வேண்டாமெனச் சொல்கிற மனோபாவம் நகரத்துப் பெண்களிடம் அதிகம் இருப்பதையும் பார்க்கிறேன். இந்த இரு தரப்பினருக்கும், எந்த மாதிரியான காரணங்களுக்காக கர்ப்பப்பையை அகற்றலாம் என்கிற அடிப்படை உண்மைகளை அறிந்திருக்க வேண்டும்.

சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஆரம்ப கால புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படும். கர்ப்பப்பையின் உள்பக்க லைனிங்கான எண்டோமெட்ரியம், கர்ப்பப்பை வாய், பிறப்புப் பாதை, சினைக்குழாய் போன்ற இடங்களில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தாலும் கர்ப்பப்பையை அகற்றுவதைப் பற்றி மருத்துவர் பேசுவார்.

கர்ப்பப்பையானது சிலருக்கு பந்து போல வீங்கிக் கொண்டு, கடுமையான வலியைக் கொடுக்கும். சிலருக்கு மாதவிலக்கின் போது மட்டுமின்றி, எப்போதுமே இடுப்பும் அடிவயிறும் வலிக்கும். அது அடினோமையோசிஸ் என்கிற பிரச்னையாக இருந்து, சம்பந்தப்பட்ட பெண் ஏற்கனவே குழந்தை பெற்றவர் என்றால் அவருக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். எந்தவித மருத்துவ சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாத அதீத ரத்தப் போக்கு, கர்ப்பப்பையில் கிருமித் தாக்கம் போன்றவற்றுக்கும், அந்தப் பெண்ணுக்கு குழந்தை இருக்கும் பட்சத்தில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

சிலருக்கு பிரசவத்தின் போது ஏற்படுகின்ற சிக்கல்களுக்கும் இந்த அறுவை சிகிச்சை தீர்வாக சொல்லப்படும். உதாரணத்துக்கு குழந்தையின் மாறுபட்ட நிலையின் காரணமாகவோ அல்லது முந்தைய அறுவை சிகிச்சைகளின் விளைவாகவோ கர்ப்பப்பையின் ஒரு பகுதி கிழிந்திருந்தால் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை தீர்வாக சொல்லப்படும்.

கர்ப்பப்பையின் உள்ளேயும் சினைப் பையிலும் வரக்கூடிய ரத்தக் கட்டிகள், சிகிச்சைக்குக் கட்டுப்படாத போது, குழந்தைகள் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். ஃபைப்ராய்டு எனப்படுகிற பிரச்னை இருந்தால் மாதவிலக்கின் போது வயிற்றுவலியும் ரத்தப் போக்கும் மிக அதிகமாக இருக்கும். பொதுவாக ஃபைப்ராய்டு கட்டிகள் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் குறைவு. எனவே அதற்கு பயந்து கர்ப்பப்பையை அகற்ற வேண்டாம். அது அளவில் பெரிதானாலோ, அதிக வலியையும் அதீத ரத்தப் போக்கையும் கொடுத்தாலோ கர்ப்பப்பை நீக்கம் பற்றி யோசிக்கலாம். கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையில் பல வகைகள் உள்ளன. கர்ப்பப்பை மற்றும் அதன் கழுத்துப் பகுதியான செர்விக்ைஸ எடுப்பது டோட்டல் ஹிஸ்ட்ரக்டமி.

கர்ப்பப்பையின் மேல்பகுதியை மட்டும் எடுப்பது பார்ஷியல் ஹிஸ்ட்ரக்டமி. கர்ப்பப்பை, சினைப்பை, சினைக்குழாய் என எல்லாவற்றையும் எடுப்பது டோட்டல் ஹிஸ்ட்ரக்டமி மற்றும் BSO.புற்றுநோய் வந்தவர்களுக்கு கர்ப்பப்பை, சினைப்பை, சினைக்குழாய், செர்விக்ஸ், பாதிக்கப்பட்ட நிணநீர் சுரப்பிகள், பிறப்புப் பதையின் மேல்பகுதி போன்றவற்றை எடுப்பது ரேடிக்கல் ஹிஸ்ட்ரக்டமி.

பிறப்புப் பாதை வழியே செய்கிற அறுவை சிகிச்சை வஜைனல் ஹிஸ்ட்ரக்டமி. வயிறு வழியே செய்வது அப்டாமினல் ஹிஸ்ட்ரக்டமி. கர்ப்பப்பையின் பக்க இணைப்புகளை அகற்றி, கர்ப்பப்பையை மட்டும் பிறப்புப் பாதை வழியே எடுக்கும் லேப்ராஸ்கோப்பிக் ஹிஸ்ட்ரக்டமி இப்போது ரொம்பவே லேட்டஸ்ட். அறுவை சிகிச்சை முடிந்த 2வது நாளே வீட்டுக்குப் போகலாம். கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை யின் பக்க விளைவுகள், இதர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற விஷயங்கள் அடுத்த இதழிலும் தொடரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீட்சா டயட்!! (மருத்துவம்)
Next post வடகொரியா உருவாக்கயுள்ள 7 வினோத சட்டங்கள்!! (வீடியோ)