By 29 May 2019 0 Comments

‘திக்’என்ற மனதுக்கு தீதும் வேண்டாமே! (கட்டுரை)

2020ஆம் ஆண்டுக்காக, பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பங்கள், இன்றைய தினம் (27) வெளியிடப்படுமென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பிறக்கவுள்ள புதிய ஆண்டுக்கான மாணவர் இணைப்புக்குரிய ஏற்பாடுகளும் ஆரம்பிக்கவுள்ள காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம். அதாவது, முழு ஆண்டினதும் அரையாண்டுக் காலப்பகுதியைக் கடக்கத் தயாரான நிலையில் இருக்கிறோம். ஆனால், பாடசாலைக் கல்வியில், இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள், இன்னமும் சரியாக ஆரம்பிக்கப்படாத சூழ்நிலையே, தற்போது நம் நாட்டில் காணப்படுகின்றது. அதற்குப் பிரதான காரணம், நாட்டுக்குள் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்ததான அச்சுறுத்தல் நிலைமைகளாகும்.

சிறு பராயம் என்பது, வாழ்க்கையில் காணப்படும் மிகவும் சுதந்திரமான காலகட்டமாகும். விளையாட்டுத்தனமானதும், ஆனால் மிகுந்த சவால்மிக்கதுமான காலமாகும். 6 முதல் 16 வயதுக்கிடைப்பட்டவர்களே, சிறுவர்கள் என்ற பராயத்துக்குள் அடக்கப்படுகின்றனர். இந்தப் பராயம், கல்விக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாகும். இளமையில் கல்வி, சிலையில் எழுத்தென்று, அதனால்தான் நம் முன்னோர்கள் கூறிவைத்துச் சென்றனர்.

நாளைய உலகத்தைப் பொறுப்பேற்கவுள்ள எமது எதிர்காலச் சந்ததிக்கு, கல்வியறிவை வழங்கும் பொறுப்பு, கடமை, இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதேபோன்று, சிறுவர்களுக்கான அந்தக் கல்வியுரிமையைப் பறிக்கும் உரிமை, அவர்களைப் பெற்ற பெற்றோருக்குகூட இல்லை.

இவ்வாறான கல்வியைப் போதிக்கும் பாடசாலைகள், கோவிலை விடப் புனிதமானவை. அங்கு நாம், கல்வியை மாத்திரமன்றி, நல்ல பல குணங்கள், ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொள்கிறோம். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்பது வள்ளுவர் வாக்கு. இது,ஒவ்வொரு மனிதனிடத்திலும் காணப்படும் பண்பை வலியுறுத்துகின்றது. ஒருவர் நல்லவரா, தீயவரா என்று கணிப்பது, அவரிடம் காணப்படும் குணங்களிலும் குற்றங்களிலும் எவை மிகையாக உள்ளன என்பதைப் பொறுத்தேயாகும். இவையனைத்துக்கும் ஓர் அடித்தளமாகவே, பாடசாலைக் கல்வி விளங்குகிறது.

இன்று எமது நாட்டில், ஏடு தூக்கிப் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், ஏட்டைக் கொண்டுசெல்வதிலேயே பிரச்சினையை எதிர்கொள்ளும் நிலைமை தோன்றியுள்ளது.

இதற்குக் காரணம், உயிர்த்த ஞாயிறுதினத்தன்று (21), இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து, பாடசாலைகளிலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியானமையாகும். இதனால், காலவரையறையன்றி, பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பாடசாலை வளாகங்களுக்குள் பாரிய சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, பாடசாலைகளுக்கு, முப்படையினர், பொலிஸாரின் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நடவடிக்கைகளையும் தாண்டி, எல்லாத் தினங்களிலும் தலையாய கவனஞ்செலுத்த வேண்டிய ஒரு விடயமாக, மாணவர்களின் பாதுகாப்பு விடயம் மாறிவிட்டது. இதனால், பாடசாலை நிர்வாகமும் பெற்றோரும், ஆசிரியர்களும், மாணவர்களின் பாதுகாப்பில் முழுக் கவனஞ்செலுத்த வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது, வடக்கு மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததைப் போன்றே, இன்று நாடு பூராகவுமுள்ள மாணவர்களின் நிலைமையும் கேள்விக்குறியாகிவிட்டது.

இந்த நிலைமை, பாடசாலைக்குள்ளும் மாணவர்களுக்குள்ளும், பெற்றோருக்குள்ளும் வேறு வகையிலான பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்னர், கேகாலை மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றில், வெளிப்படையான புத்தகப் பையை மாணவர்கள் கொண்டுவரவில்லை என்பது தொடர்பான பிரச்சினையொன்று எழுந்திருந்தது. இவ்வாறு, ஒருசில பாடசாலை நிர்வாகங்கள், பாடசாலை மாணவர்கள் கொண்டுவரும் புத்தகப் பைகளில் அதிகூடிய கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. கட்டாயமாக, பைக்குள் போடப்படும் அனைத்தும் வெளியில் தெரியும் வகையிலான வெளிப்படையான புத்தகப் பைகள் பயன்படுத்தப்படல் வேண்டும் என்று, மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்ற நிலைமையொன்று காணப்படுகின்றது.

இந்த வெளிப்படையான புத்தகப் பை ஒன்றின் ஆரம்ப விலை, 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை வரை, தற்போது பல கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சாதாரணமாக, நல்ல வருமானம் பெறும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு, புத்தகப் பை கிழிய, கிழிய, புதிது புதிதாக வாங்கிக்கொடுப்பர். ஆனால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் பெற்றோர், தங்களது பிள்ளையின் புத்தகப் பை, முற்றாகக் கிழிந்த பின்னரே, அதாவது, 2 அல்லது 3 வருடங்கள் கழித்தே, புதிய புத்தகப் பையை வாங்கிக்கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில், ஒருசில பாடசாலை நிர்வாகங்களால், வெளிப்படையான புத்தகப் பை கட்டாயமாக்கப்பட்டுள்ள விடயமானது, மாணவர்களையும் பெற்றோரையும், தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த வெளிப்படையான புத்தகப் பை, 6 தொடக்கம் 7 மாதங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தக் கூடிய வகையிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக, புத்தகப் பை விற்பன்னர்களின் கருத்தாக இருக்கிறது. காரணம், பாரம் தாங்கும் சக்தி, அந்தப் புத்தகப் பைகளுக்கு அவ்வளவாக இல்லை. அவ்வாறாயின், ஒரு பிள்ளைக்கு, ஒரு வருடத்துக்கு இரண்டு முறை புத்தகப் பை வாங்கவேண்டிய கட்டாய நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகின்றனர். இதுவே, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை, ஒரு குடும்பத்தில் அதிகமாக இருந்தால், புத்தகப்பைக்கு என்றே, வேறாக பணம் ஒதுக்க வேண்டி ஏற்படும் அல்லவா? இதனை அடிப்படையாக வைத்து, சில வியாபார நிறுவனங்கள், உடனடியாகப் பல வெளிப்படைப் புத்தகப்பைகளைத் தயாரித்து முன்னின்று விநியோகித்துவருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள், சிரமத்திலிருக்கும் மாணவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கும் வியாபார வங்குரோத்துத்தனம் என்று பலரும் விமர்சித்துவருகின்றனர்.

மறுபுறம், பாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு பாடசாலைக்கும் இரண்டு அல்லது மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதைத் தவிர, ஒவ்வொரு நாளும் மாணவர்களின் புத்தகப்பைகளைப் பரிசோதிப்பதற்கென்று, ஒருதொகுதி பெற்றோரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர, பாடசாலை ஆசிரியர்களும், இதற்கான பங்களிப்பை நல்கி வருகின்றனர்.

இது, சில பாடசாலைகளில், கட்டாயமாகப் பெற்றோர் நின்று, பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவேண்டுமென்று நிர்பந்திக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எல்லாப் பெற்றோருக்கும் எவ்வகையில் சாத்தியப்படுமென்று கூறலாகாது. காரணம், தாய், தந்தை இருவருமே பணிக்குச் செல்லும் குடும்பங்கள் இருக்கின்றன. தவிர, கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் இருக்கின்றனர். இவ்வாறானவர்கள், பாடசாலைப் பாதுகாப்புக் கடமைகளில் எவ்வாறு ஈடுபடுவார்கள் என்ற கேள்வியும் சிக்கலும் தோன்றியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், பாடசாலைகளுக்குப் பாதுகாப்புக் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தரப்பினரின் பணி என்னவென்பது கேள்வியே.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, “விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர், பாடசாலைகள் அனைத்தும் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எமது இராணுவ அதிகாரிகள், தற்போது அனைத்துப் பாடசாலைகளிலும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலையின் அளவைக்கொண்டும் நுழைவாயில்களின் எண்ணிக்கையைக் கொண்டும், பாடசாலைக்கு பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் உள்ளன. கடமையில் ஈடுபடும் இராணுவ அதிகாரிகள், மாணவர்களின் புத்தகப் பையை, ஆசிரியர்கள், பெற்றோருடன் ஒன்றிணைந்து, சோதனை செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாடசாலையின் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும், பாதுகாப்பு விடயம் குறித்து நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். இந்நிலையில், பாடசாலை அதிபரின் தலைமையின் கீழ், இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இது சரியான ஒரு நிலைமைக்கு வரும்வரை,இந்த இராணுவச் சோதனை நிறுத்தப்பட மாட்டாது” என்று கூறினார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பெற்றோர் ஒருவர், “பாடசாலைக்கு அருகிலோ நுழைவாயிலுக்கோ, எங்களால் செல்ல முடியாது. முகாமில் இருப்பவர்களைப் பார்ப்பதற்காக கயிறு கட்டப்பட்டிருப்பதைப் போன்றே, கயிறுக்கு வெளியே பெற்றோர் நிற்க வேண்டும். பிள்ளைகள், பெற்றோருடன் மாத்திரமே அனுப்பப்படுவர். மாணவர்களின் புத்தகப் பைகளைப் பரிசோதிப்பதற்கு, பெற்றோரும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில், தினசரி வேலைக்குச் செல்லும் பெற்றோரால் பங்குபற்ற முடிவதில்லை. பெற்றோரிடம் மாத்திரமே பிள்ளைகள் ஒப்படைக்கப்படுவதால், பாடசாலை முடியும் நேரத்தில் தாயோ தந்தையோ, பாடசாலைக்குச் செல்லவேண்டியுள்ளது. தவிர, பாடசாலை வாகனங்களில் வரும் மாணவர்கள், வாகன சாரதியிடமே ஒப்படைக்கப்படுகின்றனர்.

“எனது பிள்ளையின் கல்வி நிலை குறித்துக் கேட்பதற்குக் கூட, ஆசிரியர்களைச் சந்திக்க முடிவதில்லை. முன்னர், எப்போதும் ஆசிரியர்களைச் சந்திக்க முடியும். ஆனால், தற்போது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டது. அத்தோடு, பிள்ளைகளை அழைத்துச்செல்ல வரும் பெற்றோர், ஓரிடத்தில் கும்பலாக நிற்கவேண்டியுள்ளது. இவ்வாறு இருக்கையில், பெற்றோரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பது சந்தோஷம்தான்” என்று கூறினார்.

இது தொடர்பாக, சில அதிபர்களும் கருத்துத் தெரிவித்தனர். “வெளிப்படையான புத்தகப் பை கொள்வனவு செய்யுமாறு நாம் வற்புறுத்தவில்லை. ஆனால், முடிந்தவர்கள் கொள்வனவு செய்யுமாறே நாம் கோரியுள்ளோம். அல்லாவிடின், வெளிப்படையான கோப்புகளுக்குள், கொப்பிகளை வைத்துக்கொண்டுவருமாறு கோரியுள்ளோம். பல மாணவர்கள் அவ்வாறே வருகின்றனர். பெண்கள் பாடசாலையில், அவர்களுடைய புத்தகப் பைகளை, காவலில் இருக்கும் ஆண் இராணுவ அதிகாரிகளால் பரிசோதிக்க முடியாது. மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில், பெற்றோரும் ஆசிரியர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தாலும், இதற்கு முன்னர் பாடசாலைக்கு வந்த மாணவர்களுக்கும் இப்போதும் வரும் மாணவர்களுக்கும் இடையில் வித்தியாசமுண்டு. முன்னர் இருந்த சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் அவர்கள் இழந்துவிட்டனர்” என்று அதிபரொருவர் தெரிவித்தார்.

மேலும், “வெளிப்ப​ைடயான புத்தகப்பைகளைக் கொண்டு வர முடியுமா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, மாணவர்களின் பாதுகாப்பு நலன்கருதி, அரசாங்கம் என்ன கூறினாலும் நாம் அதைச் செய்வோம். இவையனைத்தும் சாதாரணமான விடயமே. இதை, ஊடகங்களே பெரிதாக்கி விடுகின்றன” என்று கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றின் அதிபர் கூறினார்.

இதற்கிடையில், பல சுவாரஷ்யமான விடயங்களையும் மாணவர்கள் கேலியாகக் கூறி வருகின்றனர். “காலையில் பாடசாலைக்குச் செல்லும்போது, ஆயுதப்பொருள்கள் அல்லது உலோகப் பொருள்கள் உள்ளனவா என்று பரீட்சிக்கும் ஒரு சிறிய கருவியை வைத்து, இராணுவ அதிகாரிகள் பரிசோதிப்பர். இதன்போது, ஒரு மாணவியின் பையிலிருந்து, க்கீ.. க்கீ.. என்ற சத்தம் கேட்டது. என்னவென்று இராணுவ அதிகாரி பையை வாங்கி பரிசோதித்த போது, பையிலிருந்து கத்தரிக்கோல் ஒன்று வந்தது. பின்னர், ஒரு மாணவியின் உடலை, அந்தக் கருவியைக் கொண்டு பரிசோதித்தபோது, மீண்டும் க்கீ.. க்கீ என்று கேட்டது. இராணுவ அதிகாரி அது என்னவென்று கேட்டபோது, சீருடை பட்டியில் குத்தியிருந்த சட்டைப் பின் என்று, அந்த மாணவி, பின்​ைனக் கழற்றிக் காட்டினாள்” என்று மாணவர்கள் கேலியாகக் கூறினர்.

இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, மகளிர் பாடசாலைகளில் கடமையில் இருக்கும் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் அலட்டல் தாங்க முடியவில்லையாம். பாடசாலை முடிந்த பின்னர், கும்பலாக வரும் மாணவிகளுக்கு நடுவில் இருக்கும் அழகான மாணவிகளைப் பார்த்து, அதோ மேரி வருகிறார், அதோ மோனாலிசா வருகிறார் என்று கிண்டலும் செய்கின்றனராம். இவ்வாறான செயற்பாடுகளும் நிகழ்வுகளும் நம் யாருக்கும் புதிதல்ல; இவை நிர்வாகத்தின் தவறு; பாடசாலையின் தவறு; அதிகாரிகளின் தவறு என்று சுட்டிக்காட்ட முடியாத நிலையே காணப்ப டுகின்றது.

கல்வியமைச்சால் விடுக்கப்படும் பணிப்புரைகளுக்கு ஏற்றால் போன்று, பல பாடசாலைகள் செயற்படாமையும் பணிப்புரைகளுக்கு மேலதிகமாக செயற்படுவதும் தற்போது ஒரு பிரச்சினையாக மாறி வருகின்றது. அது மாத்திரமல்லாது, பௌத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் பாடசாலைகளில், வெவ்வேறான வகையிலான கட்டுப்பாடுகளே தற்போது நடைமுறையில் உள்ளன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,“பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறி, மாணவர்கள் புத்தகப் பைகளைக் கொண்டுவருவதைத் தவிர்க்குமாறும் அல்லாவிடின், வேறு வகையிலான புத்தகப்பைகளைக் கொள்வனவு செய்யுமாறு வற்புறுத்தப்படுவதாக, பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தவிர, பாதுகாப்பு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படுவதாகக் கூறி, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

“எவ்வாறாயினும், கல்வி அமைச்சினால், அவ்வாறான எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை. அதற்கான அனுமதிகளும் வழங்கப்படவில்லை. மாணவர்கள், பெற்றோர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் வகையில் எவரேனும் அல்லது எந்தவொரு குழுவினரேனும் நடவடிக்கை எடுப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்கவுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

“பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர் உட்பட, அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும், பெரும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில், ஒருசிலரின் தேவையற்ற நடவடிக்கைகளால், சிற்சில பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

“இவ்வாறாக, பெற்றோர் மற்றும் மாணவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்காமலிக்க, உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, இவ்வாறான சம்பவங்கள் மீளவும் இடம்பெறுமாயின், 1988 என்ற, கல்வி அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொண்டு அறிவிக்க முடியும்” என்று, அமைச்சர் கூறினார்.

பாதுகாப்பு என்பது,ஒரு தீது நடக்காமல் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான முன்னேற்பாடாகும். அது, கெடுபிடிகளுக்கு மத்தியில்தான் மேற்கொள்ளப்படுமாயின், அவ்வாறான முன்னேற்பாட்டினால் எந்தப் பயனும் இல்லை. இதை, அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து செயற்படுவதே சாலச்சிறந்தது.Post a Comment

Protected by WP Anti Spam