கேள்விக்குள்ளாகும் ஆளுமை !! (கட்டுரை)

Read Time:14 Minute, 29 Second

நாட்டைச் சரியான முறையில் முன்னேற்ற வேண்டுமாக இருந்தால், 18ஆவது 19ஆவது அரசமைப்புத் திருத்தங்களை இல்லாமல் ஒழிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து, இப்போது பலத்த வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி விட்டிருக்கிறது.

“எனக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், பெரிய இடைவெளி இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், இதற்குக் காரணம் 19ஆவது திருத்தச் சட்டம்தான். இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்காவிடின், கடந்த நான்கரை ஆண்டுகளில், பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்” என்று, ஜனாதிபதி கூறியிருந்தார். தனது இயலாமையை மறைப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டிருக்கின்ற இந்தக் குண்டு, எதிர்பார்க்கப்பட்டது போலவே, பரவலான எதிர்வினைகளை உருவாக்கி இருக்கிறது.

ஜனாதிபதி சிறிசேன, இதனைக் கூறுவதற்கு முன்னதாக, 19ஆவது திருத்தச் சட்டம் தன்னையும் தனது குடும்பத்தினரையும் முடக்குவதற்காகவே, அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது என்றும், அதுவே, தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு மூலகாரணம் என்றும் கூறியிருந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ. “அவருக்கு இப்போதாவது உண்மை நிலை புரிந்திருப்பது, ஆறுதல் அளிக்கிறது. 19ஆவது திருத்தச் சட்டத்தால் தான் இந்த நிலைமை” என்று கூறிய மஹிந்தவுக்கு, தனது வழிக்கு மைத்திரிபால சிறிசேன வந்து விட்டார் என்பது கொண்டாட்டம்தான்.

ஆனால், 18ஆவது திருத்தச் சட்டத்தையும் சேர்த்தே, ஒழிக்க வேண்டும் என்று தான், மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அதுவே, நாட்டில் சர்வாதிகாரத்தனமானதும் மன்னராட்சியைப் போன்றதுமான நிலையை உருவாக்கியது என்றும் கூறியிருந்தார். இதைப் பற்றிப் பேச, மஹிந்த தயாராக இல்லை.

மஹிந்த ராஜபக்‌ஷதான் 2010இல், 18ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருந்தார். ஒருவர், எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதியாகப் பதவியில் இருக்கலாம் என்ற நிலையை, அந்தச் சட்டத்திருத்தம் உருவாக்கியிருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷ, நிரந்தரமாக நாட்டை ஆட்சி செய்வதற்காக உருவாக்கப்பட்ட அந்தத் திருத்தச் சட்டமே, எல்லா தரப்புகளையும் அச்சம் கொள்ள வைத்தது. நிறைவேற்று அதிகாரப் பூதத்திடம் இருந்து, நிரந்தர விடுதலை பெற வேண்டும் என்ற ஏக்கத்தை, மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

2015இல் ஜனாதிபதி தேர்தலில், அரசமைப்பு மாற்றத்தைக் குறிப்பாக, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை முன்னிறுத்தியே, மைத்திரிபால சிறிசேன பிரசாரம் செய்தார்; மக்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்தார்.

அதற்கமையவே, 2015இல், எல்லாக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன், 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை, முற்றிலுமாக ஒழிக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மாத்திரமன்றி, பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

அப்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்த – மைத்திரி என இரண்டு அணிகள் தனித்தனியாகச் செயற்படத் தொடங்கி விட்டிருந்தன. இந்நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்காக, பல விட்டுக்கொடுப்புகளுடன், 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

18ஆவது திருத்தச் சட்டம், எவ்வாறு ராஜபக்‌ஷ குடும்பத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதோ, அதுபோலவே, 19ஆவது திருத்தச்சட்டம், ஜனாதிபதி பதவியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதற்காக மாத்திரமன்றி, ராஜபக்‌ஷ குடும்பத்தினது அரசியலுக்கும், ‘செக்’ வைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது

மஹிந்த ராஜபக்‌ஷ, மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்யப்பட்டது. அவரது மகன் நாமல் ராஜபக்‌ஷவும், இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் நிற்க முடியாத வகையில், வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டது. மஹிந்தவின் சகோதரர்களான பசில் ராஜபக்‌ஷவும், கோட்டாபய ராஜபக்‌ஷவும், அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடாமல், தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான், தனது குடும்பத்தை இலக்கு வைத்துக் கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டம் என, 19ஆவது திருத்தம் பற்றிய விசனத்தை வெளிப்படுத்தியிருந்தார் மஹிந்த.

நாடாளுமன்றத்துக்கும், பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி சிறிசேன, அண்மையில், அரசமைப்பு மீறல்களில் ஈடுபட்டார். அதனால் அவருக்கும், நாடாளுமன்றத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டது. பிரதமருடனும் முரண்பாடுகள் ஏற்பட்டன.

ஜனாதிபதி தனக்கான அதிகாரங்களையும் நாடாளுமன்றம் மற்றும் பிரதமருக்குப் பகிரப்பட்ட அதிகாரங்களையும் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான், இந்த சிக்கல் ஏற்பட்டது என்கிறார்கள் அரசமைப்பு நிபுணர்கள்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, தற்போதைய குழப்பங்களுக்கு, தன் மீது பழி போடப்படுவதை, ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அதை, அரசமைப்பின் மீது போட்டு விடப் பார்க்கிறார். ஜனாதிபதியின் இந்த முயற்சி, பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பக்கத்தில், அவருக்கு ஆதரவான ஒரு தரப்பையும் உருவாக்கி இருக்கிறது. இன்னொரு பக்கத்தில், எதிரான அணியொன்றையும் உருவாக்கி விட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவுடன், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்கள் 19ஆவது திருத்தச் சட்டத்தைக் குறைகூறி வருகின்றனர். அதுவே, நாட்டைச் சீரழித்து விட்டதாகவும் தற்போதைய நிலைக்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், 19ஆவது திருத்தச் சட்டம், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, றியர் அட்மிரல் சரத் வீரசேகர மாத்திரமே, அதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஏழு உறுப்பினர்கள் மாத்திரம், சபைக்கு வரவில்லை என்ற போதும், நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்டவர்கள் இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தார்கள்.

“அப்போது, என்னை அறிவில்லாதவன் என்றும், இனவாதி என்றும் தூற்றினார்கள். இப்போது ஜனாதிபதியே 19ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்” எனக் கிண்டலடித்துள்ளார் சரத் வீரசேகர. ஆனால், நாமும் சேர்ந்தே வாக்களித்து, 19ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தோம் என்று கைதூக்குவதற்கு, ராஜபக்‌ஷவினர் தயாராக இல்லை.

அதுபோலவே, ஜனாதிபதியும் கூட, அவ்வாறே கூறத் தொடங்கி இருக்கிறார். ஜனாதிபதியைத் தவறாக வழி நடத்தி விட்டனர்; ஏமாற்றி விட்டனர் என்று பழி போடுவதில், தயாசிறி ஜெயசேகர ஈடுபட்டிருக்கிறார். இது ஜனாதிபதியின் ஆளுமையைச் சிறுமைப்படுத்தும் செயல் என்பதை, அவர்கள் அறியவில்லை.

அதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதே, ராஜபக்‌ஷவினரின் ஒரே குறியாக இருக்கிறது. அதனை, பசில் ராஜபக்‌ஷ ஏற்கெனவே பலமுறை கூறியிருக்கிறார். தாம் ஆட்சிக்கு வந்தால், 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வருவதற்கு வழிசமைப்போம் என்று அவர் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரை உசுப்பி விட்டிருக்கிறார். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ இந்த முயற்சியில் இறங்கினாலும் அதற்கு அவரது இடதுசாரிக் கூட்டாளிகள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது,

மஹிந்தவின் ஆதரவாளரான வாசுதேவ நாணயக்கார, 19ஆவது திருத்தச் சட்டத்தால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்துக்குப் பகிரப்பட்டுள்ளது என்றும், அதனை மீண்டும் நிறைவேற்று அதிகாரத்துக்கு கொடுக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

எனவே, மஹிந்த ராஜபக்‌ஷ 19ஆவது திருத்தச் சட்டத்தில், கைவைக்க வேண்டுமாயின், பலத்த போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். தற்போதைய நிலையில், அது சாத்தியமில்லை. ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று, மஹிந்த கூறியிருக்கிறார்.

அதேவேளை, 19ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு இடமளிக்கமாட்டோம் என்று, ஐ.தே.க, ஜே.வி.பி போன்ற கட்சிகள் சூளுரைத்திருக்கின்றன. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை இலக்காக கொண்ட கட்சிகள், மீண்டும் அதை வலுப்படுத்துவது, ஆபத்து என்பதை புரிந்து கொண்டிருக்கின்றன.

19ஆவது திருத்தத்துக்குப் பின்னர், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் .இடையில் சரியான புரிதல்கள் இல்லாமையால் முரண்பாடுகள் ஏற்பட்டன என்பது உண்மையே! என்றாலும், அதற்கும் 19ஆவது திருத்தத்துக்கும் தொடர்பில்லை என்பதே இந்தக் கட்சிகளின் நிலைப்பாடு ஆகும்.

இந்தத் திருத்தச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவோ, “19ஆவது திருத்தத்தை, அதன் மூலத்தில் உள்ளவாறே நடைமுறைப்படுத்தி இருந்தால், குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது” என்று கூறியிருக்கிறார்.

19ஆவது திருத்தம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை, முழுமையாக ஒழிக்கும் நோக்கம் கொண்டது. அதற்குச் சுதந்திரக் கட்சி தயாராக இருக்கவில்லை. அதனால், ஏற்பட்ட இழுபறிகளாலேயே, அரையும் குறையுமாக அது கொண்டு வரப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியில் இருந்து விலகும்போது, தனக்குத் தேவையான அதிகாரங்கள் இருந்திருந்தால், சிறப்பாகச் செயற்பட்டிருப்பேன் என்று நியாயப்படுத்த முற்பட்டிருக்கிறார்.

அதேவேளை, இந்த 19ஆவது திருத்தம் என்பது, மக்களிடம் இருந்து அவர் பெற்ற ஆணை என்பதை அவர் மறந்து விட்டார். அவருக்கு வாக்களித்த ஆறு மில்லியன் மக்களின் ஆணையை விட, அவருக்கு நிறைவேற்று அதிகாரங்களின் மீதே குறி இருக்கிறது என்பது, இப்போது உறுதியாகி இருக்கிறது.

அந்த வகையில், 2015இல் வாக்களித்த மக்களுக்கு, ஜனாதிபதி ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார். ஜனாதிபதி தம்மை ஏமாற்றி விட்டார் என்று, தமிழ் மக்கள் கொதித்தனர். பின்னர், ஐ.தே.கவினர் கொதித்தனர். இப்போது, ஆறு மில்லியன் மக்களும் அப்படியேதான் உணருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலில் ஆறு வகை..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post 2050 இல் உலகை ஆழப்போறவர்கள் யார்****!! (வீடியோ)